மதுரை வரலாறு என்ன ?

இடமிருந்து வலம் ஸ்ரீ, சேது, முருகன்
விதைக்கலாமின் ஆரம்ப நாட்களில் ஒரு ஆக்கர் (துளையிடும் கருவியைத்) தேடி மதுரையை அலசினோம். அந்தப் பயணத்தின் பொழுது ஸ்ரீயின் நண்பர் சேதுவை சந்தித்தோம். மதுரை தெருக்களில் அனாதையாக  அலையும் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு  சிகிச்சையும் உணவும் அளிப்பவர் அவர். சுரபி என்கிற அறக்கட்டளையை இதற்காகவே நிறுவியிருக்கிறார்.

பதிவு  அவர் குறித்து அல்ல.  நாங்கள் அவருடன் பயணித்த நேரத்தில் விரிந்தது ஒரு  உரையாடல். மதுரையின் சிறப்புகள் குறித்து அவரது ஆசிரியர் ஒருவர் ஆய்வில் இருப்பதாகவும் மதுரை வரலாறு குறித்த தெளிவான தரவுகள் எதுவுமே இல்லை எனவும் குறிப்பிட்டார்.

அப்படி அவர் பேசிய பொழுது பேச்சு வழக்கில் இருந்த ஒரு கதையை பகிர்ந்து கொண்டார்.

மதுரையை ஒரு பெண் ஆயிரம் ஆண்டுகள் ஆண்டுவந்ததாகவும், அவரது உடல் பச்சை நிறத்தில் இருந்ததாகவும் பின்னர் அவர் விசமிட்டு அழிக்கப்பட்டதாகவும் ஒரு கதையை சொன்னார்.

ஆயிரம் ஆண்டுகள் ஒரு பெண் உயிர்வாழ முடியுமா என்ன.

ஏற்கனவே அருணனின் நூல்கள் வாயிலாக மன்னன் திருமலைக்கு டிக்கட் கொடுத்த விவரமும், ஹரிச்சந்திரன் பொன்னிற உடலோடு சொர்க்கம் புகுந்த கதையையும் வாசித்த அனுபவம் இருந்ததால் மெல்ல எனது டியூப் லைட் எரிய ஆரம்பித்தது.

மீண்டும் சேதுவிடம் கேட்டேன். ஆயிரம் ஆண்டுகள் ஒரு உயிர்வாழ்தல் சாத்தியமா?  வீட்டில் சர்வ அலங்கார பூஷிதையாய் கருமாரியை வணங்கும் சேது முடியுமே சார் என்றுதான் சொன்னார்!

விசயம் அப்படி அல்ல. பேச்சுவழக்கில் இருக்கும் ஒரு கதையை சரியான கோணத்தில் அணுகினால் சில விசயங்கள் புரியும். மாபெரும் உருசேர்ப்பு புதிரின் சில கட்டங்களையாவது சேர்க்க முடியும்.

ஆயிரம்  ஆண்டு வாழ்ந்த பச்சை உடல் அரசி என்பது தெளிவாக ஒரு விசயத்தை சொல்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பெண்கள்தான் ஆண்டிருக்கிறார்கள் மதுரையை! நடுவில் ஏதோ அரசியல் சமூக மாற்றங்களின் விளைவாக அந்த அரசியின் ஆட்சியும் பரம்பரையும் அழித்தொழிக்கபட்டிருக்கிறது.

மதுரையில்  பெண்கள் ஆட்சி முறை முடிவுக்கு வந்து, ஆணாதிக்க சிந்தனைகள்  வலுப்பெற்ற காலம் இதுதான்.

மேலும் தமிழ் சமூகம் தாய்வழிச் சமூகம் என்பதற்கும் இது ஒரு முக்கிய  வாய்மொழி ஆவணமாகிறது.

விவாதத்தின் இறுதியில் சேதுவின் முகத்தில் பரவின பல்வேறு உணர்வுகள் வரைதாளில் ஈர்க்கப்பட்ட வண்ணங்கள் போல.

மதுரை குறித்து புதுகையின் ஞானாலயா பி.கே அவர்கள் சொன்னதும் நினைவில் மோதுகிறது.

அது அடுத்து...

அன்பன்
மது 

Comments

  1. மதுரை குறித்து சுருக்கமான அதே சமயம் நறுக்கான செய்திகளை அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  2. தமிழ் சமூகம் தாய்வழிச் சமூகம் என்பதற்கும் இது ஒரு முக்கிய வாய்மொழி ஆவணமாகிறது.

    தொடர்கிறேன் நண்பரே

    ReplyDelete
  3. அட! அழகாகச் சிந்தித்துள்ளீர்கள்! கதைகள் பலவற்றிலும் இப்படி ஆவணங்கள் ஒளிந்திருக்கும் தான். அடுத்து நீங்கள் சொல்லப் போவதை அறிய காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. மதுரையின் சிறப்புகள் பற்றி நீங்கள் கேள்விபடும் போது மதுரைத்தமிழன் பற்றி ஏதும் வரலாற்றில் உள்ளதா? ஹீஹீ

    ReplyDelete
  5. நல்லதொரு ஆரம்பம் தொடர்கிறேன் தோழரே..
    த.ம. 2

    ReplyDelete
  6. தாய் வழி சமூகம் பற்றி சில கட்டுரைகள் படித்திருக்கிறேன்..... மதுரை பற்றிய தகவல்கள் மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.....

    ReplyDelete
  7. மதுரைக்காரன் எனக்கு தெரியாத தகவல்கள் நிறைய உண்டு . அதில் இதுவும் ஒன்று. சமீபமாக மதுரையில் நடக்கும் தொல்லியல் ஆராய்ச்சியில் உலகத்தின் பழமையான நகரங்களில் மதுரையும் ஒரு என்பதற்கான சான்றுகள் நிறைய கிடைத்துள்ளன. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவலுக்கு ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதை உங்கள் மதுரை நண்பர்களை விசாரிக்கச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  8. அருமையான பார்வை, இன்றும் ஷில்லாங் பகுதிகளில் வாழும் சமூகம் தாய் வழி சமூகமாகத்தான் வாழ்கிறது. பெண்கள்தான் வேலைக்கு செல்கிறார்கள், அனைத்து நிர்வாகங்களும் செய்கிறார்கள். பெண்களை பாதுகாக்கும், பெண்களை முன்னிலைப்படுத்தும் சமூகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக