அப்பா
திரைப்படமா குறும்படமா என்ற குழப்பத்தை ஏற்படுத்திய துவக்கம். மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற மனைவியை வற்புறுத்தும் காட்சியோடு துவங்குகிறது படம். தனித்து சிந்திக்கும் தயாளனுக்கு (சமுத்திரக்கனியே), பிறக்கும் குழந்தையை எப்படி அவர் வளர்க்கிறார் என்பதே படம். ஆனால் கட்ஷாட்டில் அவப்போது சிங்கப் பெருமாள் (தம்பி ராமையா) பேசும் ரகளையான எசப்பாட்டு வசனங்கள் ரசிக்க முடிந்தாலும் கொஞ்சம் துருத்தல்தான்.
கிட்நாவில் நடிக்கவிருந்த தன்சிகா கபாலிக்காக பறக்க காத்திருக்கும் நேரத்தை ஒரு அருமையான ப(பா)டமாக்கியிருக்கிறார் சமுத்திரக் கனி.
பெண் குழந்தையைக் கொண்டாடும் ஆனந்த யாழ் ராமின் தங்க மீன்கள் என்றால் அப்பா ஆண் குழந்தைகளின் பின்புலத்தில் விரிந்திருக்கிறது.
மெசேஜ் சொல்வது திரைப்படங்களின் வேலையல்ல. அவை வெற்றுப் பொழுதுபோக்கு என்று கருதும் தயாரிப்பாளர்கள் ஒருபோதும் இம்மாதிரி படங்களை எடுக்கத்துணிய மாட்டார்கள். இதுதான் விசயம் தயாரிப்பாளர் வேறுயாருமல்ல இயக்குனரேதான்!
சாட்டை படத்தின் பொழுதே சமுத்திரக்கனிக்கு இந்தத் திரைப்படக் கரு கிடைத்திருக்க வேண்டும். திடீர் படம் என்றாலும் வெற்றிப் படம்தான். இரவு இரண்டாம் காட்சிக்கு குடும்பம் குடும்பமாக திரையரங்கை நிறைக்கிறார்கள்.
என்ன சொல்கிறது படம்?
நெய்வேலி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் தயாளன் தனது குழந்தையை அழுத்தம் குறைந்த கற்றலில் இனிமையுள்ள பள்ளியில் சேர்க்க விரும்ப மனைவி கையை அறுத்துக் கொண்டு மிரட்டி தனியார் பள்ளியில் சேர்க்க வைக்கிறார்.
அந்தப் பள்ளியின் முதல் பெற்றோர் கூட்டத்திலேயே விவாதித்து பொறி கிளப்புகிறார் தயாளன். வேறே என்ன டி.சி வழங்கப்படுகிறது. அதன் பின்னர் அவனது ஒவ்வொரு அசைவிலும் அவனைக் கவனித்து வழிநடத்துகிறார் தயாளன்.
மனைவி - இதற்காக கோவித்துக் கொண்டு தயாளனைப் பிரிகிறார் மனைவி. பல்வேறு சாதனைகளுக்கு பிறகு மகனே அம்மாவை அழைத்து வருகிறார்.
ஆமா சிங்கப் பெருமாளின் குழந்தை என்ன ஆனான் என்று கேட்போருக்காக. அதீத அழுத்தங்களுக்கு உட்படும் அவன் தற்கொலை செய்துகொள்கிறான்.
நிறைகள்
முதலில் இப்படி ஒரு விசயத்தை திரையில் கொண்டுவர முடியும் என்று சிந்தித்தற்காவே இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து.
மிகக் கூர்மையான வசனங்கள். பல இடங்களில் மனசில் பசை போட்டு ஒட்டிக் கொள்கின்றன.
எவண்டா கீழ பார்க்கிறான்? எல்லாம் மேலேதான் பார்கிறீங்க? படத்தின் நகைச்சுவை வசனமாக இருந்தாலும் வாவ்.
மிக நீண்ட நாட்கள் கழித்து வசனங்கள் இடைவிடாத கைதட்டலைப் பெறுகிறதைப் பார்க்க முடிகிறது.
நம்ம மக்களின் ரசனையாகட்டும், எதிர்வினையாகட்டும் எல்லாமே அதீதமாகத்தான் இருக்குமோ?
முதல் காட்சியில் பாத்திரத்தை தூக்கிப் போட்டு ரகளை கட்டும் சமுத்திரக் கனியின் மனைவிக்கு எனது பின் இருக்கைக்காரர் கொடுத்த அர்ச்சனை எழுத முடியாதது!
ஒரு கதாபாத்திரம், திரைக் காட்சி என்ற சூழலையெல்லாம் தாண்டி படதிற்குள்ளேயே சென்றுவிட்டார் அந்த செந்தமிழர்.
சமூக பிரச்னைகளைப் பற்றி பேசி ஒரு கருத்தினை உருவாக்க முனையும் படம் அதீதமாக மெசேஜ் சொல்லியே நம்மை காலி செய்துவிடும் என்ற கருத்தை உடைகின்றது வசனங்களுக்கு எழும் கைதட்டல்கள்.
முதல் பாதி முழுதும் வசனங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அபரிமிதம்! மூன்று அல்லாது இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை கைதட்டல்களால் அரங்கு அதிர்கிறது.
ஆக பொதுமக்களை பாதிக்கும் எந்த ஒரு பிரச்னையையும் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் வெற்றி பெறலாம் என்கிற விசயமும் நமக்குப் புரிகிறது.
திரை அறிவு உள்ளோர் நண்பர் செல்வா, திரைத்துறையில் உள்ள கோபிநாத் போன்ற நண்பர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் இது ஒரு உலக சினிமாவாக வந்திருக்குமே என்று ஆதங்கப்பட, ரசிகர்களோ திரைநுட்ப விசயங்களில் எல்லாம் புகுந்து குறைகளை சொல்லாமல் படத்தை வெற்றிப் படமாக்கி விட்டனர்!
சமூகத்தை அழுத்தும் ஒரு காரணியை சொல்லும் விதத்தில் சொன்னால் ரசிப்பார்கள் என்கிற விசயம் மீண்டும் ஒருமுறை நிருபணமாகியிருக்கிறது.
திருநங்கைகளுக்கு நியாயம் செய்கிற காட்சி, அவ்வளவு அழுத்தமான இடத்தில் வசனங்கள் ஏதும் இல்லாதது கொஞ்சம் துருத்தல்தான்.
காட்சிகளில் ஆங்காங்கே தெரியும் நூல் தலைப்புகளும், தயக்கமே இல்லாமல் பிரேமில் வரும் அம்பேத்கர் படமும் நல்ல முன்னெடுப்பு.
அப்பா கருத்துப் படம்... கட்டாயம் பார்க்கலாம்.
ஓவரா அட்வைஸ் மழை பொழிவார்கள் என்ற பயம் இல்லாமல்!
ஆங்கிலத்தில் எனது பெருவிருப்புக்குரிய ராபின் வில்லியம்ஸின் டெட் பொயட் சொசைட்டி என்கிற திரைப்படம் அப்பாவை நினைவு படுத்தினாலும் அது இன்னும் அழுத்தமாக மாணவர்களின் சுய தேர்வுகளுக்கு மரியாதை செய்ய சொல்லும். ஆனால் அப்பா நமது சமூகத்தின் நோய்மைக்கிட்ட முதல் உதவி. முழு மருத்தவம் பல்வேறு காரணிகளைக் கொண்டது. ஆட்சியாளர்களின் சமூகப் பொறுப்புணர்வு, சமூகத்தின் போலிப்பீடு தகர்த்தல், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முழுமையான கற்றல்நோக்கிய நகர்வு, அரசுப் பள்ளி கட்டமைப்பில் வெள்ளமாக பாயவேண்டிய நிதி என பல்வேறு காரணிகள் கொண்டது முழு மருத்துவம்.
பொதுவெளியில் இப்படி துணிச்சலாக மாற்றுக் கருத்தை வைப்பது பாராட்டுக்குரிய விசயம். அது வெற்றி பெற்றிருப்பது ஆகப் பெரும் ஆறுதல்.
அன்பன்
மது
எழுத்தாளர் ஏகாம்பரம் என்ன சொல்கிறார் ?
ReplyDelete//ஒரு இயக்குனர், தானே கதை, திரைக்கதையை எழுதி, தயாரித்து,நடிக்கவும் செய்து வெற்றி பெற்றதெல்லாம் டி.ராஜேந்தர் காலத்தோடு முடிந்து போனதென்ற என் கருத்தை தகர்த்தெறியும் விதமாக வெளிவந்திருக்கும் படம் 'அப்பா'.
வெறும் 34 நாட்களில் இப்படத்தை எடுத்து முடித்திருக்கும் சமுத்திரக்கனி அவர்கள் முதலில் சில இயக்குனர்களை இப்படத்திற்காக அணுகி, அது இயலாமல் போய்விட்டதற்காக இப்போது மகிழலாம்.
ஏனென்றால் இவரைத் தவிர இன்னொருவர் இப்படத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்க முடியாது.
சமுத்திரக்கனி தனது மகனை பள்ளியில் சேர்க்க முற்பட்டபோது கிடைத்த சொந்த அனுபவங்களை தற்காலக் கல்வி முறையோடு உரிய பதத்தில் வடித்துக் கொடுத்திருக்கிறார்.
இன்னும் 12 மொழிகளில் இப்படத்தை வெளியிட வேண்டி தெலுங்கில் நாகார்ஜூனாவோடும்,வெங்கடேசோடும் பேச ஆரம்பித்துவிட்டாராம்.
'சாட்டை' படத்தில் வரும் தயாளன் பெயரையே தனக்கு இப்படத்திலும் சூட்டிக் கொண்டு,கல்வியின் பெயரால் அன்றாடம் நடக்கும் கொள்ளைகளையும் அதைச் செய்யும் கல்வித் தந்தையரையும் தோலுரித்துக் காட்டியிருக்கும் சமுத்திரக்கனிக்கு இப்படத்திற்காக ஏதாவது வடிவில் ஒரு விருது கிடைப்பது நிச்சயம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களும்,அவர் சார்ந்திருக்கும் சங்கங்களும் "ஆசிரியர்,மாணவர்,கல்வி முறை"-இவை குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்பார்களாயின், அனைவரும் ஒன்றிணைந்து இவரை பாராட்டி, 'சாட்டை'படத்தின் போதே செய்ய மறந்ததற்கான பிராயச்சித்தத்தை தேடிக் கொள்ளலாம்.
சாதி,மத நல்லிணக்கம் -குறித்தெல்லாம் நீட்டி முழக்காமல் இவற்றை சில வார்த்தைகள்,காட்சிகள்,பொருட்கள்,கதாப்பாத்திரங்களை குறியீடாக படம் முழுக்க தெளித்து பரவசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
இப்படம் பார்த்த போது நண்பர் Manikandan Arumugam அவர்களின் நினைப்பு மனசுக்குள் வராமலில்லை. ஏன்? சொல்கிறேன்....
#அப்பா_1//
நன்றி கஸ்தூரி சார் :-)
Deleteபோற்றுதலுக்கு உரிய படம்
ReplyDeleteயதார்த்தத்தை கொஞ்சம் மிகையாக சொன்னால் நமக்கு பிடித்து விடும். தோனி சாட்டை வரிசையில் அப்பாவுக்கே முதலிடம் பிரகாஷ் ராஜ் அப்பாவாக நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் அவரது மிகை நடிப்பு எரிச்சலூட்டக் கூடும். இப்பாத்திரம்சமுத்திரகனியைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டார்.
ReplyDeleteவீட்டிலேயே பிரசவம் பார்ப்பது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. அரசு மருத்துவ மனைக்குத்த்தான் செல்வேன் என்று சொல்லி இருக்கலாம்.
நல்லதொரு பகிர்வு. பார்க்க நினைத்திருக்கும் படம்.
ReplyDeleteலாப நோக்கத்திற்காக அல்லாமல் நல்லதொரு செய்தியை இந்த ஜனங்கள் மத்தியில் விதைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக படம் எடுத்த சமுத்திரக்கனியை வெகுவாக பாராட்டலாம்.
ReplyDeleteஇது போன்ற ஆயிரமாயிரம் கதைகள் மனிதர்களிடமே நிறையக் கொட்டிக் கிடக்குது . கிளறுவதற்கு சமுத்திரக்கனி போன்ற அக்கறையாளர்கள் தேவை. உங்கள் பதிவு அவர்களை தூண்டட்டும் !
அப்பா.... பேசம்படும் படமாக வந்திருக்கிறது...
ReplyDeleteஇன்னும் பார்க்கவில்லை மதுசார்...
அருமையாக எழுதியிருக்கீங்க...
எழுத்தாளர் ஏகாம்பரம் இன்னம் சொல்கிறார்
ReplyDelete//ஓர் அசாதாரணமான சிந்தனையுள்ள படைப்பாளியால் மட்டுமே 'அப்பா' போன்ற திரைப்படத்தை தர முடியும்.
100 ஆண்டுகளான பின்னும், இதே நேர்த்தியோடோ அல்லது இதையும் தாண்டியோ ஒரு திரைப்படத்தை யாராவது தந்துவிட முடியுமா?
-என சவால் விடக் கூடிய வகையில் அமைந்துள்ளது அப்பா திரைப்படம்.
இத்திரைப்படம் குறித்து, ஒரு முழு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் அளவிற்கான தகவல்கள் அடங்கியுள்ளன என முழுமையாக நம்பலாம்.
இத் திரை இலக்கியத்தில் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ள சில குறியீடுகளை முதலிலும், அதன் பின்னர் சில குறைகளையும் அலசுவோம்.
முதலாவதாக இப்படத்தில் குறியீடுகளாக காட்டப்பட்டுள்ள நூல்கள்.
1. சதுரங்கக் குதிரைகள்
- சமுத்திரக்கனி, பதின்ம வயதிலுள்ள தனது மகன் மனதிலுள்ள 'அழுக்கை' நீக்க, அவன் பேச, பழகத் தயங்கும் ஒரு மாணவியை தனது வீட்டு தோட்டத்திற்கு அழைத்து வந்து காபி போட்டுக் கொடுத்து மகனுடன் அமர வைத்து நட்போடு பேச வைப்பார். இது மிகவும் சவாலான காட்சியமைப்பு தான்.
ஆனால் அதில் வெற்றி அடையும் தருவாயில், அதாவது, தனது மகன் தவறான எண்ணத்தோடு அந்த மாணவியோடு பழகுவதை தடுத்துவிட்டதாகவோ அல்லது இனக்கவர்ச்சியின் பொருளை புரிய வைத்துவிட்டதாகவும் பெருமிதத்தோடு அவர் எண்ணும் தருவாயில் இப்புத்தகம் அவர் கரங்களில் தவழும்.
சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற ஒரு இந்தி நாவல் இது. கிரிராஸ் கிஷோர் எழுதிய இந் நூலை மு.ஞானம் அவர்கள் மொழிபெயர்த்திருப்பார்.
2. தழும்புகள்
இப்படத்தில் உடல் வளர்ச்சி குன்றிய, பள்ளியின் முறைசார் கல்வியில் முற்றிலும் ஆர்வமில்லாத, வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுக்கிற காரணத்தால் உதவித் தலைமையாசிரியரால் பத்தாம் வகுப்புப் படிப்பிலிருந்து பாதியில் நீக்கப்படுகிற ஆனால்,
"மனிதனை நாய் பாதுகாத்தால் அது கிராமம்.
நாயை மனிதன் பாதுகாத்தால் அது நகரம்" - என்பது போல விடைத்தாளில் எழுதி சிவப்பு மையால் அடிக்கப்பட்டு 'பூஜ்ஜியம்' மதிப்பெண் வாங்குகிற மயில் வாகனனது சிறு சிறு கவிதைகளை பெற்று திருத்தி தொகுத்து, கம்ப்யூட்டரில் டைப் செய்து,ப்ரின்டரிலிருந்து வெளிவரும் தாள்களை ஒரு நூலில் செருகி பத்திரப்படுத்தி மூடுவார் சமுத்திரக்கனி. அந்த நூலின் பெயர் 'தழும்புகள்'. எழுதியவர் அறிஞர் அண்ணா.
3. சாதி ஒழிப்பு
சமுத்திரக்கனியின் மகன் வெற்றீஸ்வரனின் நண்பன் ஒரு மாணவியின் மீது 'இனக்கவர்ச்சி' கொண்டிருப்பான் (காதல் அல்ல வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தான் என்பதை இறுதியில் தெளிவாக ஒரு காட்சியில் விளக்கியிருப்பார் இயக்குனர்). அவளுக்கு தந்தை இல்லை. வீடு அம்பேத்கர் நகரில் இருக்கும். 'பெரிய இடமான' தம்பி ராமையாவின் மகன் இவளுக்கு 'ஐ லவ் யூ' எழுதிய கடிதத்தை தர முற்பட, தம்பி ராமையா அதை பார்த்து, மாணவிதான், தன் மகனுக்கு இந்த துண்டுச் சீட்டை தர முற்பட்டாள் என தவறாக எண்ணி, அவள் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து திரும்பியபின் வரும் காட்சி இது.
அந்த துண்டு சீட்டை மகனின் நண்பர்களோடு அமர்ந்து எடுத்து பார்க்கும் பின்புலத்தில் இருக்கும் புத்தகம் 'சாதி ஒழிப்பு'. எழுதியவர் அண்ணல் அம்பேத்கர்.
4. யார் உயரம்? :
படத்தில், உருவத்தில் சிறிதான, கவிதைத் திறன் மிக்க மாணவர் மயில்வாகனன், கவிஞர்கள் யுகபாரதி மற்றும் பா.விஜய் முன்னிலையில் வெளியிடும் நூலின் பெயர், "யார் உயரம்?"
"உருவு கொண்டு எள்ளாமை வேண்டும்" -என்ற வரிகளுக்கு வலுவூட்டும் விதமாக உதவித் தலைமையாசிரியர் 'அணைகாத்தானின்' மனைவி சில வரிகளைச் சொன்னாலும், இப்புத்தகத்தின் தலைப்பு, மாற்றுத் திறனாளி அல்லது தன்ன்னம்பிக்கை குறைந்த மாணவர்களுக்கு நிச்சயமாக ஒரு உந்து சக்தியாகவே இருக்கப் போகிறது.
#அப்பா_2//