பல நூறு ஆண்டுகள் இருள் ஒரு சின்ன சுடரொளியில் விலகிவிடும் |
மாற்றத்தின் முகங்கள்
அறுபது தசாப்தங்களாக வளரும் என்று காத்திருக்கும் இந்த தேசத்தின் குடிமகனுக்கு ஒரு ஏக்கம் இருக்க கூடும். எப்போதான் என் நாடு வளரும் என்பதே அது.
எந்த திசையில் வளர வேண்டுமோ அதில் தொடர் தளர்வுகளை சந்திக்கும் நாம் எதிர்திசையில் எக்குத் தப்பாக வளர்கிறோம்.
லஞ்சம், ஊழல், பொறுப்பின்மை, கள்ள மவுனம் மற்றும் சாதியம் என எத்துனை காரணிகள் நமது வளர்ச்சியை சிதைக்கின்றன, நினைத்தால் மலைக்க வைக்கும் பெரும் பட்டியல் அது.
இருட்டில் மருண்டு அழும் குழந்தைபோலத்தான் இன்று பலர் இருக்கிறார்கள். சிலர் குறல் எழுப்புகிறார்கள், சிலர் நமக்கேன் வம்பு என பொழப்பை பார்க்க பிரிகிறார்கள். இன்னும் சிலர் ஈனர்கள் பிரச்னையா நம்ம சாதிப் பயலுக்கு ஏதும் பாதிப்பா என்று மட்டுமே பார்க்கிறார்கள்.
இவ்வளவு நம்பிக்கை தகர்க்கும் காரணிகள் இருந்தும் சிலர் சுடர் விடுகிறார்கள். மழை மனிதர்களாக அவர்களது பணி எல்லைகளை விரிவு செய்கிறார்கள். நசிந்து போன இதயங்களுக்கு அவர்கள் சக்தியளிக்கிறார்கள்.
அவர்கள் பணியைத்தானே செய்தார்கள் என்கிற ஒரு எளிமையான ஆனால் குரூரமான கேள்வியுடன் பெரும்பான்மை மக்கள் அவர்களை கடந்து போகிறார்கள்.
ஆனால் தங்கள் பணி எல்லைகளைத் தாண்டி சமூக மேம்பாட்டிற்கு உழைத்த யாரையும் நாம் கொண்டாடுவதே இல்லை. அதுக்குத்தானே சம்பளம் என்கிற நக்கலான கேள்வியே போதுமானதாக இருக்கிறது பலருக்கு.
புதுகையில் பயின்று புதுகையில் வளர்ந்து அதன் ஒவ்வொரு வீதியையும் சந்தையும் அறிந்த எனக்கு சில பெயர்கள் முக்கியமானவையாகத் தெரிகின்றன.
கல்லூரிப் பருவத்தில் காதுக்கு வந்த செய்திகளைத் தொகுத்து பார்த்த பொழுது ஒரு அதிகாரி நட்சத்திரமாக மின்னினார்.
அவர் அப்போதைய புதுகை ஆட்சியர் திரு. சந்திரசேகரன், பின் நாட்களில் மாநில தேர்தல் ஆணையராக பணியாற்றியவர்.
ஏன் இவர் நினைவில் என்போருக்கு
புதுகை மண்ணின் நிலமுகவரிகளில் ஒன்று புதுக்குளம், ஒரு சதுரக் கிமியில் விரிந்திருக்கும் இந்தக் குளம் ஒருகாலத்தில் புதுகை நகருக்கு குடிநீர் வழங்கியது.
நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது வீட்டிற்கு தெரியாமல் பியர் அருந்திய மாணவர்கள் உடல் வாடை குறையவும், கொஞ்சம் தெளிவாக பேச முடிகிற வரை தங்கிப் போகும் இடம்!
இரவு ஏழு மணிக்கு பணிஓய்வு பெற்ற இருபது பெரியவர்கள் பேசிக் களிக்கும் இடம். மற்றபடி ஒரு ஈ காக்கை இருக்காது.
அப்படி இருந்த புதுக்குளம் தனது அடையாளத்தை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தது! புத்துயிர் பெற்று சிறிய பூங்காவும், நீரூற்றும், படகும் மிதக்க ஆரம்பித்தது.
இன்று புதுகைவாழ் மக்களின் எளிய மாலை நேரச் சந்திப்பிடம். எத்துணைக் குடும்பங்கள், குழந்தைகள் குதுகலிக்கின்றனர் அங்கே...
இதற்கான பிரமாண்டமான முதல் முயற்சியை எடுத்தவர் திரு சந்திரசேகரன் இ.ஆ.பா. தொடர்ந்து கடைக்குடி ஹோல்ஸ்வொர்த் அணைக்கட்டையும் பராமரிக்க முடிவு செய்தவர் அதற்கான பணிகளை முன்னெடுக்கும் பொழுது பணிமாறுதல் பெற்றுவிட்டார்.
கொடும் வெயில் வாட்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் புதுக்குளத்தின் காற்று என்னைத் தழுவும் பொழுதெல்லாம் என் மனம் மறக்காமல் சொல்லும் ஒரு பெயர் உண்டு என்றால் அது திரு.சந்திரசேகரன் அவர்களின் பெயர்தான்.
முகங்களின் தரிசனம் தொடரும்
அன்பன்
மது.
அற்புதமான மனிதர்களின் முகங்கள் அறிமுகம் தொடரட்டும் தோழரே..
ReplyDeleteத.ம. 1
நன்றிகள் தோழர்
Deleteநற்காரியம் செய்தவரை நினைவூட்டும் முறை நன்று.
ReplyDeleteநன்றிகள் அய்யா
Deleteமிக மிக அருமையான தகவல், பகிர்வு!முதல் தரிசனம் கிடைத்தாயிற்று. வாழ்க திரு சந்திரசேகர் அவர்களின் பணி! வாழ்த்துகளும்! முகங்களின் தரிசனத்திற்குக் காத்திருக்கின்றோம்.
ReplyDeleteநன்றிகள் தோழர்
Deleteநல்ல மனிதர்கள் பற்றிய தகவல்கள் தொடரட்டும். வாழ்த்துகள் மது.
ReplyDeleteநல்ல மனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி! தகவலும் சிறப்பு! நன்றி!
ReplyDeleteநன்றிகள் தோழர்
Deleteபுதுக்கோட்டை மக்கள் மனதில் இடம் பிடித்த ஒருவரை, நினவு கூர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றிகள் அய்யா
Delete