ஜோக்கர் திரை விமர்சனம்

ஆக்கம் : ராஜா  சுந்தர்ராஜன் அவர்கள்
தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர், வெகு நுட்பமான பார்வை, ஆழமான மொழி ஆளுமை இவரிடம் நான் வியக்கும் பண்புகளில்  மிகச்சில.

ராஜா  சுந்தர்ராஜன் முகநூல் 

இனி திரைப்படம் அவர் பார்வையில்


ஜோக்கர்
____________
யார்? நானா, நீங்களா?


அரசியல் ஆதாயம் தேற்றாத ஆளென்றால் நானும்தான்; நீங்களும்தான். ஆனால், ஜனநாயகமுறையில் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் எவர்களோ அவர்களே முழுக்கத் தகுதியானவர்கள். அதாவது, இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள். இது புரிந்தாலும், விட்டு வெளியேற முடியாமல், பிறகும் கோமாளிகளாகவே தொடர்கிறார்கள் அவர்கள்.

படத்தின் கருத்தாக்கம் இதுதான்.

படத்தில், ‘இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள்’ என்று எங்கும் சொல்லப்படுவதில்லை. ஆனால் உணர்த்தப்படுகிறது. “கிடைக்க வேண்டியது நமக்குக் கிடைக்கலைன்னா நாமே எடுத்துக்கணும்.” என்றொரு வசனம் வருகிறது. கம்யூனிஸக் கொள்கைதான், ஆனால் அது எந்த இடம்பொழுதில் வைத்து இங்கே உணர்த்தப்படுகிறது? ஒரு பிரியாணிப் பொட்டலம் & ‘டாஸ்மாக்’ குவார்ட்டருக்கு ஆசைப்பட்டு அரசியல் ஆள்க்கூட்டம் காண்பிக்கப் போயிருந்த இடத்தில், ‘குவார்ட்டர்’ தீர்ந்துவிட்டது என்றவுடன் நாயகனுக்கு வழிகாட்டியாக வருபவர் (பவா செல்லத்துரை, புதுமுகம் என்று எண்ணப்படாத வகைக்கு நன்றாகவே நடித்திருக்கிறார்) முண்டியடித்து ஒரு குப்பியைக் கைப்பற்றி வருகிற பொழுதில். அதாவது, தேர்தல் கேளிக்கூத்துகளுக்கு இடையிலொரு கம்யூனிஸச் சொலவம். இந்தியக் கம்யூனிஸம்.

“நாமதானே தேர்ந்தெடுத்தோம், நாமளே அவர்களைப் பதவியிறக்க முடியாதா?” என்றும் வினவப்படுகிறது. இதுவும் கம்யூனிஸக் கொள்கைதான். அதாவது, ‘தேர்ந்தெடுக்கப்பட்டவரை திருப்பியழைத்தல்.’ ஆனால் செங்கொடி அரசின் கம்யூன்களில்கூட இது நடைமுறைப் பட்டதா, உரப்பில்லை. என்றால் இந்திய அரசியலில் எப்படி?

அப்படி, ஒரு ஜனநாயக சமத்துவச் சிக்கல் இது. தீர்வு?

இப்படி நான் எழுதிக்கொண்டு போவது அச்சலாத்தியாக இருக்கிறது அல்லவா? அதேதான். பொழுதுபோக்கு அம்சங்கள் இப்படத்தில் அவ்வளவாக இல்லை. அதாவது வீம்புக்குச் செருகப்படவில்லை. "நான் மலாலா" போன்ற புத்தகங்கள் காண்பிக்கப்படுவதும் கதையோடு ஒட்டி இயல்பாக இருக்கிறது.
வீம்புக்குச் செருகி, கொஞ்சமே கொஞ்சம் சமுதாயப் பிரச்சனைகளைப் பேசுகிற படங்களும் இங்கே வருவதுண்மை. இயக்குநர்கள் சங்கர், முருகதாஸ் முதலியோர் எடுத்துக்காட்டு. ‘பாரீஸ் நகரத்து விலைமகளிர்கூட தத்துவம் பேசுவர்,’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் கழறவேண்டியது, அதுபாட்டுக்கு, கழன்றிருக்கும். மேற்படி இயக்குநர்களின் படம்பார்த்து முடிகையில் அப்படியோர் உணர்வு நிச்சயம். அதை ஒரு தேநீர் அல்லது ‘டாஸ்மாக்’ சரக்கால் சமன்செய்து நமது அன்றாட அலுவல்களில் தலைகொடுப்போம்.

“ஜோக்கர்” படத்தில் அப்படியொரு தீர்வும் இல்லை. தீர்வில்லாத சூழலிலும், ‘எம் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று கிளம்புகிறார்கள் தோழர்கள். அவர்கள்மீது இரக்கமே தோன்றுகிறது. அன்னதொரு கையறவுக் கட்டத்தில், நம் மீதும்.

இப்படத்தின் சத்தியநிலை இதுதான்.

நாயகி அறிமுகத்திற்குப் பிறகுதான் படம் வேகமெடுக்கிறது என்றாலும், நமக்கும் சமுதாய அக்கறை உண்டென்றால், படத்தை ரசிக்கமுடியும். யுவகிருஷ்ணா, அதிஷா, சாரு நிவேதிதா என்று சில வலைத்தளப் பெயர்களும் உதிர்க்கப்படுவதால் இப்படம் இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் எதிரானதொரு பகடிதான் என்று கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

அவரவர் கைமணல்.  

Comments

  1. நன்றி, நண்பரே!

    ReplyDelete
  2. வித்தியாசமான அதே நேரத்தில் நச்செனச் சொல்லிச் செல்லும் விமர்சனம்...
    பகிர்வுக்கு நன்றி மது சார்...

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம்.
    த ம 2

    ReplyDelete
  4. அருமை
    தொடருங்கள்

    ReplyDelete
  5. விமர்சனம் தெளிவான நிலையை எடுத்துரைத்தது. நன்றி.

    ReplyDelete
  6. படத்தை விமர்சனம் செய்த மாதிரி தெரியவில்லை ,அவருடைய எதிர்பார்ப்பை சொன்ன மாதிரி இருக்கு :)

    ReplyDelete
  7. இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் எதிரானதொரு பகடிதான் புரிகிறது என்றாலும் ரசிக்கும்படி இருக்கிறது. நன்றி மது.

    ReplyDelete
  8. வித்யாசமாக இருக்கிறது விமர்சனம். நல்லதொரு விமர்சனம். பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  9. முதலாளித்துவ நாட்டில் கம்யூனிசத்தின் ஞானம் பிறக்க இந்த படம் உதவி செய்யும்.

    ReplyDelete
  10. நல்ல ஒரு அரசியல் படம்

    ReplyDelete

Post a Comment

வருக வருக