தி இத்தாலியன் ஜாப் 1969

படம் துவங்குவதே ஒரு அழகிய மலைப்பாதையில்தான். ஆல்ப்ஸ் மலைத்தொடரின் சாலைகளில் விரையும் சொகுசுக்காரை துரத்தும் காமிரா ஒருகணம் என்னைத் திகைக்க வைத்தது!



என்னப்பா இது அறுபத்தி ஒன்பதில் வந்த படமா?

நீங்கள்  பார்த்தாலும் நம்புவது கடினம். கிரேட் செயின்ட் பெர்னாட் பாஸ் என்கிற மலைப் பாதையாம் அது. ஒரு தபா டிரைவ் செய்ய வேண்டிய பாதை. 

படத்தின் கதை அறுபத்தி  ஒன்பதுக்கு கொஞ்சம் அதிகம்தான். பிரிட்டிஷ் கும்பல் ஒன்று இத்தாலியில் இருக்கும் நான்கு  மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை திருட திட்டமிடுகிறது. 

மைக்கேல் கேய்ண் இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறார்! பாட்மேன் படங்களில் பட்லராக வந்து கம்பீர முத்திரை பதிக்கும் கிழவரை நினைவில் இருக்கிறதா? அவரேதான். அறுபத்தி ஒன்பதில் தலை ப்ளேபாய்! 

படத்தில் விலாவலிக்க சிரிக்கவைக்கும் காட்சிகள் கூட சீரியஸாகவே வரும்! மைக்கேல் சிறையில் இருந்து விடுதலை பெற்றபின்னர் மீண்டும் சிறைக்குள் திருட்டுத்தனமாக நுழைவது அப்படிப்பட்ட காட்சிகளில் ஒன்று. 

சிறைக்குள் இருந்தாலும் தன்னுடைய குற்ற சாம்ராஜ்யத்தை ஆளும் பிரிட்ஜர்(நோயல் கவார்ட்), அவர் காட்டும் சிரிப்பூட்டும் கறார்தன்மை! உள்ளே இருந்தே வெளியில் இருப்பவரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கிளைமாக்சில் தங்கத்தை ஆட்டையைப் போட்டாச்சு என்றவுடன் ஜெயிலில் படிகளில் நடனமாடி இறங்கிவருவது என தனது கதா பாத்திரத்தை வெகு அழுத்தமாக பதியவைத்திருக்கிறார் இவர். 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் முதலில் இந்த குற்ற திட்டத்திற்கு பணம் தர மறுக்கும் இவர் பின்னர் தருகிறார். எது அவரது மனதை மாற்றியது?
சிறையில் பேப்பர் பார்க்கிறார். ஒரு செய்தியின் மூலம் பியட் நிறுவனம் தனது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சீனாவில் துவக்க இருப்பதை அறிகிறார். சினத்தில் கூப்புடுறா கெய்னை குடுடா பணத்தை என அதிரடிகிறார். வில்லனுக்கு கூட ஒரு நியாயம்?

அசந்து போகவைக்கும் கதை, காமிரா இவற்றுடன்  அப்போதே இத்தாலியன் போக்குவரத்து கட்டுப்பாடு கணிப்பொறிகளின் மூலம் நடத்தப் பட்டதை அறிகிற பொழுது எழும் அதிர்ச்சி எனக்கு மட்டும் தானா?

ஹாக்கர்(இவர் ஒரு வினோதமான பால் ஈர்ப்புடன் இருப்பதாக காட்டியிருப்பார்கள்), டிரைவர்கள், ஒரு அழகிய பெண், பல சொகுசு கார்கள், கொண்ட ஒரு பெரும் கும்பல் திருட்டில் ஈடுபட்டு அதை வெற்றிகரமாக முடிப்பதை ரசிக்கும் விதத்தில் தந்திருகிறார்கள்.

இத்தாலியின் அத்துணை சந்து பொந்துகளையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.

இன்றைய ஓஷன் படங்கள் வரிசைக்கு பிள்ளையார் சுழி இந்தப் படமாக இருக்கலாம். 

ஓபன் எண்டிங்காக அந்தரத்தில் முடியும் படம் ஓர் பல்கலைக் கழக விவாதப் பொருளாக இருந்திருகிறது! 

தங்கம் ஏற்றிய ட்ரக் தடுமாறி முன்சக்கரங்கள் மலைப் பாதையிலும் பின் சக்கரங்கள் அதல பாதாளத்தை நோக்கியும் இருக்கும் காட்சி அதுவம் கெய்ண் ஒரு அடி எடுத்து வைத்தால் தங்கக் குவியலும் ஒரு அடி நகர்வது நிச்சயம் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு நகர்த்தியிருக்கும். 

படம் ஒரு அதிரி புதிரி வெற்றிப் படம். இன்று திரைக்கு வந்தால் கூட நன்றாக போகும் சாத்தியம் உண்டு. 

வாய்பிருந்தால் தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.

அன்பன் 
மது 


Comments

  1. நல்லதொரு அறிமுகம். பார்க்க முயல்கிறேன்.

    ReplyDelete
  2. அறிமுகத்திற்கு நன்றி. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் பார்ப்பேன்.

    ReplyDelete
  3. இந்தப் படம் பார்த்ததில்லை. நல்ல விமர்சனத்துடன் அறிமுகம். பார்க்க வேண்டும்

    ReplyDelete

Post a Comment

வருக வருக