ஒளி வலியான கதை

ஒரு அரசுப் பள்ளியில் இப்படி விழாவை நடத்த முடியுமா என்ன ?
புதுகையின் ஆற்றல் மிகு ஆளுமை ஒன்று இப்போது நம்முடன் இல்லை.

இழந்தோம் குருநாதசுந்தரத்தை என்பதை இன்னமுமே நம்ப முடியவில்லை.

இதுபோன்ற சமயங்களில் நடப்பது கனவா என்கிற மனதின் பெருமூச்சும் நம்பாமையும் கூடவே வருமே,  அப்படிதான் நண்பர்கள் இருக்கிறோம்.



ஒரு விபத்தின் பின்னர் திருச்சி மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சையில் இருந்த குரு மீண்டும் நம்மைப் பாராமலே பிரிந்துவிட்டார்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குறுவளப் பயிற்சியில்தான் அவர் அறிமுகமானார். முதல் உரையாடலே இலக்கணம் குறித்துதான்.

நாமிநேடிவ் கேஸ், அக்யூசேட்டிவ் கேஸ் பற்றி சில வாக்கியங்கள் விளக்கினார். முதல் அறிமுகத்திலேயே அவர் மீது ஒரு பயம் கலந்த மரியாதை உருவான தருணம் அது.

அவர் தமிழ் ஆசிரியர், ஆனால் அவர் விளக்கியது ஆங்கில இலக்கணத்தை!

பல ஆண்டுகளுக்குப் பிறகு வள ஆசிரியர்களின் சந்திப்பில் மீண்டும் சந்தித்தோம். உரையாடல்கள் இன்னும் பசுமையாக நினைவில்  இருக்கிறது. இப்படியே தொடர்சந்திப்பில் நெருங்கி வந்தார் குரு. அவருக்கு என்ன நினைத்து குரு என்று பெயர் வைத்தார்கள் என்று  தெரியாது ஆனால் குரு அவர் பெயருக்கு இரநூறு மடங்கு பொருள் சேர்த்தவர்.

மேடைகளில் முழங்கும், கவிதை எழுதும் பெரும் மாணவ அணியொன்றை ஆண்டுதோறும் தயார் செய்தவர்.

புதுகை கல்வித் துறையின் ஆணைக்கு ஏற்ப இருபத்தி நான்கு மணிநேரத்திற்கும் அதிகமாகவே உழைத்தவர்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் ஒரு வராலற்றுப் புதின ஆசிரியரைக் கேட்டார்கள்

நீங்கள் செருக்குடன் இருப்பதாகச் சொல்கிறார்களே

சிங்கத்தின் பிடரிமயிர் தவறு என்றால் நான் செருக்கோடு இருப்பது தவறுதான் என்றார் அவர்.

நிபுணத்துவம் இருக்கும் இடத்தில் சிங்கத்தின் பிடரி முடி போல செருக்கு இருப்பதை பலமுறை ரசித்திருக்கிறேன்.

குருவின் ஆளுமை பிடரியையும்தான்.

ஒரு விசயத்தை கையில் எடுத்து வாதாடினால் பேசாமல் கேட்டுக்கொண்டு இருப்பதே மரியாதை. மிகச் சரியான  தரவுகளுடனும் அறத்துடனும் பேசுபவர் குரு.

புதுகை தமிழாசிரியர் கழகத்தின் ஆற்றல் ஊற்றாக இருந்தவர்.  தமிழாசிரியர்கள் வெறும் ஒற்றெழுத்தை பிடித்துக் கொண்டு தொங்க மட்டுமே செய்வார்கள், பள்ளியில் நடக்கும் பிரச்னைகள் பலவற்றுக்கும் ஊற்றாக இருப்பார்கள் என்கிற வெற்று விமர்சனங்களை வெடித்துத் தகர்த்தவர் அவர்.

பள்ளியின் அத்துணை பணிகளையும் கணிப்பொறிமயமாக்கியவர், அவரது கணிப்பொறி அறிவு ஐ.டி பொறியாளர்களுக்கு நிகரானது.

தணியாத ஆர்வத்துடன் கற்றுகொண்டே இருந்தார் அவர். புதுகைக்கு கணிப்பொறி பயன்பாட்டு ஆசிரிய விருது நிச்சயம் என்றுதான்  நினைத்திருந்தோம்.

குரு தன்னளவு திறனுடைய சக ஆசிரியர்களை அறிமுகம் செய்துவைத்திருந்தார். தமிழ் பாடத்திற்கான மாநில வள ஆசிரியர்

திரு.ராஜ்மோகன் அப்படித்தான் எனக்கு அறிமுகமானார். குரு புதுகை மாவட்டத்தின் கற்றல் தொழில் நுட்ப பயன்பாட்டின் முன்னோடி.

பள்ளியின் கால அட்டவனை முதல் சம்பளப் பட்டியல் வரை இவரது விரல்களின் நர்த்தனத்தில்தான்.

பிராமண குலத்தில் வந்திருந்தாலும் குரு ஒரு இடதுசாரி சிந்தனையாளர். இன்னும் சில உரையாடல்களில் என்னையும் அவர் அணிக்கு இழுத்திருப்பார். செயல்களில் அறமும் சிந்தனையில் சிவப்பும்  குருவின் தனித்த  அடையாளங்கள்.

சும்மா கரும்பலகையில் தமிழ் என்று எழுதி பயிற்றுவித்ததில்லை குரு, அன்னையின் அமுதாய் தமிழை  ஊட்டியவர் அவர். வகுப்புக்கு  வராத மாணவர்களை அலைபேசியில் அழைத்து வரவைத்து அவர்களை தேர்ச்சியுறவும் செய்தவர்.

முழுத்தேர்ச்சி தனது முகத்தின் மீசை என்ற உணர்வு அவருக்கு இருந்தது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதத்தை பாதிக்கும் பாடங்களில் முதன்மையானது தமிழ் என்பது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் அந்த  கசப்பை இனிப்பாக மாற்ற அவர் சிந்திய வியர்வையை  நண்பர்கள் அறிவோம். கிலி தரும் உழைப்பு அது. மிகுந்த கவனத்துடனும் கனிவுடனும்தான் அதைச் செய்தார்.


பல சிறுகதைகளை எழுதியவர், கட்டுரைகள் கனநேரத்தில் தயாராகும், கட்செவிக் குழுக்களில் கவிதையோ போட்டோஷாப் செய்யப்பட்டு
ஆர்ப்பரித்துப் பாயும்.


வீதி களத்தின் ஆற்றல் மிகு ஆளுமைகளில் ஒருவர், கடந்த கூட்டத்தில் பூமணியின் அஞ்ஞாடியை வெகு நுட்பமாக விமர்சித்தது  இன்னும் நினைவில் இருக்கிறது.

மிக ஆழமாக வாசிக்கும், வாசித்ததை நேர்த்தியாக சொல்லும் ஆற்றல் குருவின் சிறப்பு.

இடது சாரி சிந்தனைகளில் மிக உறுதியாக  இருந்தவர், படைப்புத் தளத்தில் விரைவோடு செயல்பட்டவர்,  நல்லதோர் குரு, உற்ற  நண்பன், இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பன், பொறுப்பான குடும்பத் தலைவன் என்கிற தன்னுடைய பணிகளில் எந்த குறையும் வைத்துக் கொண்டதில்லை குருநாதசுந்தரம்.

கடந்த பதினொன்றில் ஒரு விபத்தில் கீழே விழுந்தவர் எழவே இல்லை. விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

மிகச் சரியாக தீபாவளி அன்றே, விழாவை தூக்கிக் கடாசிவிட்டு இவரது இறுதிமரியாதைக்கு திரண்ட, கலங்கிப் போய்க்கதறி அழுத ஆசிரியர்கள் பல நூறு  பேர்.

கல்வி அதிகாரிகள், சங்கப் பொறுப்பாளர்கள், பணியாளர்கள், இயக்கத் தோழர்கள், இலக்கியவாதிகள்  என பெரும் கூட்டம் ஒன்று மௌனமாய் கூடி விடைதந்தது குருவிற்கு.

பொருமல்கள்

ஐ.சி.யூ உள்ளே யாரும் போகனும்னு அடம் பிடிக்காதீங்க என்று நிர்வாகம் கூறிய பொழுதுகூட அவர்கள் மீது இருந்த நம்பகத் தன்மை காரணமாக அதையே திருப்பிச் சொன்னார்கள் நண்பர்கள்.

ஆனால் போக வேண்டும் என்று அடம் பிடித்த நண்பர்கள்தான் சரி, என்பது இப்போது புரிகிறது.

நீண்ட நாட்கள் ஐ.சி.யூ வில் இருந்தவரை நன்றாக இருக்கிறார் என்று கூறி, பிசியோதெரப்பி தருகிறோம் என்று நம்பிக்கையை வளர்த்து

மிகச் சரியாக தீபாவளி அன்று எடுத்துக்கொண்டு போகலாம் என்று கையை விரித்துவிட்டது மருத்துவமனை  நிர்வாகம்.

செய்தி வந்த உடன் எனக்கு சொன்ன அரும்புகள் மலரட்டும் பாண்டியன் கதற கொஞ்சம் இரு என்று குருவின் நண்பர் துரைக்கு அழைத்துக் கேட்டால்  நிலவன் அண்ணா, திருப்பதி அய்யா, சுந்தர் அண்ணா எல்லோரும் திருச்சிக்கு போயாச்சு இங்கே கொஞ்சம் வேலை இருக்கு வா என்றார்.

நேரே போய் புதுகையின் குழந்தைகள் மருத்துவர் ராம்தாஸ்  அவர்களைப் பார்த்தோம், உரிய பணிகளை பட்டியலிட்டு, உயர் அலுவலர்களை அழைத்துச் சொல்லி, அவரது காரை அனுப்ப புதுகை காவலர் ஒருவர்  உடன் வர பணிகள் துரிதமாக நடந்தன.

கவிஞர் தங்கம் மூர்த்தி செய்தி வந்ததில் இருந்தே பொது  மருத்துவமனையில்தான் இருந்தார்,  அவருடன் சுழற்சங்க நிர்வாகிகளும்
பணிகளைச் செய்துகொண்டுஇருந்தனர்.

இந்த இழப்பையும், வலியையும் இன்னும் நண்பர்கள் கடக்கவில்லை எனவே பேசவோ எழுதவே இன்னுமும் சக்தியற்று இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது.

இருப்பினும் பதிவர்களுக்கு செய்தியை சொல்ல வேண்டும் என்பதற்காக வலிந்து எழுதப்பட்டது இந்தக் கட்டுரை.

பிரியமானவர்கள் அகாலமாய்ப் பிரிகிற பொழுது கொஞ்சம் நாமும் தானே செத்துப் போகிறோம்.


Comments

  1. திருச்சி காவேரி மருத்துவ மனையில், ஐ.சி.யூ உள்ளே சென்று பார்த்தேன் ஐயா,அருகில் இருந்த செவிலியர்,இப்பொழுது பரவாயில்லை, தேறி வருகிறார் என்றார்.அதுதான் கடைசி முறையாக நண்பரைப் பார்ப்பது என்று அறியாமலே திரும்பி வந்திருக்கிறேன்.
    வாட்ஸ்அப் செய்திகளை திபாவளி அன்று இரவுதான் பார்த்தேன்,மனம் பதை பதைத்துப் போனது. அன்று மதியம் செய்தியை அறிந்திருப்பேனேயானால், கடைசியார் ஒரு முறை நண்பரைப் பார்க்க, புதுக்கோட்டைக்கு வந்திருப்பேன்.
    ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  2. அவருடன் பழகிய சில மணித்துளிகள் நினைவில் இருந்து அகலாமல்......

    அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.....

    ReplyDelete
  3. துயர் பகிருவோம்

    ReplyDelete
  4. நான் அறியாதவர் அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  5. சுகமாகி வருகிறார் என்ற செய்திகள் வந்துகொண்டிருந்தபோது இடிபோன்ற இச்செய்தி வேதனையளித்தது. ஆழ்ந்தஇரங்கல்கள்.

    ReplyDelete
  6. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  7. யாரென்று தெரியாவிடினும் உங்களின் கதறல் கலந்த பதிவு திருவாளர் அமரர் குரு அவர்களின் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது. நல்லவர்களின் மேல் கடவுள் மிகவும் பிரியம் கொண்டு அழைத்துக் கொள்கிறானோ என அவன் மேல் கோபமே உண்டாகிறது. இலக்கிய உலகத்திற்கு அல்லாது மாணவ சமுதாயத்திற்கே இவர் பேரிழப்பாகிறார். அன்னாரின் ஆத்மா அமைதி கொள்ளட்டும்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக