அச்சம் என்பது மடமையடா -ராஜசுந்தர்ராஜன் பார்வையில்

விமர்சனம் - ராஜ சுந்தர்ராஜன்

___________________________
கே. பாலச்சந்தர் புதுமையாக அணுகுவதில் ஆசைப்பட்ட ஓர் இயக்குநர். “புன்னகை” படத்தில் ஒரு ‘ரேப்’ ஸீன் உண்டு. அதைப் புதுமையாகச் செய்துகாட்ட விரும்பினார். கதாநாயகி மாராப்பு நழுவ, “ஆணையிட்டேன் நெருங்காதே!” என்று வில்லனை விரல்நீட்டி எச்சரித்துப் பாடுவார். அப்படியும் அவன் நெருங்க, இவள் நொறுங்க...

அதேபோல சீரியஸான ஒரு கட்டத்தில் (ரேப் இல்லை), இந்தப் படத்தில், ஒரு பாட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன். இடைவேளைக்கு சற்று முந்தி வரும் பாட்டு. ஆனால்...
படம்தொடங்கி அரைமணி நேரத்துக்கு வெறும் தொணதொணப்பு. வாயால் விவரித்து கதைசொல்கிற மழுங்கல்-கத்தி. அப்புறம் ஆரம்பிக்கிறது ‘பைக்’ சுற்றுலா. அதில் நாம் எதிர்பார்க்கிறபடி அனைத்தும் அப்படிஅப்படியே நடக்கிறது. என்றாலும் மோசமில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுமேல் பாட்டாக போட்டு தொய்வு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.

இப்படியே போய் இந்த நாயகனுக்கும் நாயகிக்கும் தங்களுடைய குணம்/மனச் சிக்கல் காரணமாக முரண்பாடுகள் தோன்றி கதை நகர்ந்தால் இது ஓர் அகத்திணைப் படமாக அமைய வாய்ப்புண்டு (எ.டு. “விண்ணைத்தாண்டி வருவாயா?”); அல்லாமல் வில்லனை உள்ளே நுழைத்தால், இது இரண்டும்கெட்டானாகிப் போகக்கூடிய ஆபத்துண்டு (எ.டு. “பச்சைக்கிளி முத்துச்சரம்”) என்று யோசித்தவாறு படம்பார்த்தேன். அப்போது சரக்குந்து ஒன்று இடைவெட்டி இடைவெட்டிக் காண்பிக்கப்பட்டது. ‘கெடுத்தாண்டா கௌதமு!’ என்று எரிச்சல்பட்ட அக்கணம் அதுவும் நிகழ்ந்தது: அந்தப் பாட்டு!

அடடா! அடடா!!

அவ்வளவுதான். அதோடு, ‘வரும் ஆனால் வராது,’ என்றே உட்கார்த்திவிட்டார்கள். வாயால் கதைசொல்கிற அதே மழுங்கல்-கத்தி மீண்டும். பொலீஸ்காரனைக் கொல்லக்கூடாது என்கிற நீதிநெறி. விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டரில் தமிழ்ப்பட முன்னணி நடிகர்களில் ஐவரின் படம் வைத்திருந்தார்கள். அதில், இப்போது, இரண்டு மூத்த ஸ்டார்களைத் தூக்கிவிட்டார்கள். அவர்களில் ஒருவரின் பெயர் இதில் சிம்புவுக்கு. அதில் மர்மம் வேறு. யப்போவ்!

“அச்சம் என்பது மடமையடா” என்றது யார்? கண்ணதாசனா? ||அஞ்சுவது அஞ்சாமை பேதைமை|| என்றது? திருவள்ளுவர்? கண்ணதாசன்பாடலின்

அடுத்த அடி?

பணப்புழக்கம் இல்லாத நாள் இதில் படம்பார்க்கப் போனேன்; துருப்பிடித்த கத்திக்கு கழுத்து ஈந்த திராவிடன் ஆனேன்.

Comments

  1. ஹா.... ஹா... நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி சார்!

    ReplyDelete
  3. நன்றிங்க! என் பெயர் ராஜசுந்தரராஜன். எண்கணிதத்தின்படி அப்படித்தான் பெயரிட்டார் பிரமிள். :)))

    ReplyDelete
  4. நான் தியேட்டரில் படம் பார்ப்பதை நிறுத்தி வருடங்களாகி விட்டன! இந்தப் படத்தில் ஒரு பாடல் (ஏதோ வானிலை மாறுது) நன்றாக இருப்பதாகத் தோன்றியது.

    ReplyDelete
  5. படம் ரொம்பவே..சரி விடுங்க...அதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்லை எங்க ஊர்ல இப்படிப்பட்ட படம் எல்லாம் வருது...நல்ல படங்கள் புதுமுகங்கள் நடிப்பதால்...காக்காமுட்டை போன்ற படங்கள் என்றால் வருவதே இல்லை.

    ReplyDelete

Post a Comment

வருக வருக