ஜோன்ஸ் குரான் இயக்கத்தில் 2015இல் வந்த படம்.
ஒரு மரக்கூண்டு, அதன்மீது தார்ப்பாய், சுமார் நாற்பது பேர் அந்த வண்டிக்குள், பார்த்தவுடனே தெரிகிறது புலம்பெயர்பவர்கள். கூண்டு ஆடி ஆடி விரைகிறது. மெல்ல நிற்கிறது. இப்போது காமிரா வெளியே வருகிறது. அது பெரிய லாரி அல்ல! ஒரு பிக்கப் ட்ரக்!
இப்போது காமிரா சற்று தொலைவுக்கு நகர திரையெங்கும் விரிகிறது மணல்வெளி. பரந்த பாலைவனத்தின் நடுவே நிற்கிறது பழுதான அந்த பிக்கப் ட்ரக்.
இப்போது பிக்கப்பின் பின் கதவைத் திறந்து யாரும் மெக்கானிக் இருக்கிறீர்களா என்கிறார் பயண ஏற்பாட்டாளர். கதநாயகன் இறங்கி போனேட்டை பிரித்துப் பார்த்துவிட்டு இனி தேறாது என்கிறான். செய்தி பரவி ஆளுக்கு ஒரு பெரும் தண்ணீர் கேன் ஒன்றை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பிகிறார்கள்.
டிசர்டோ என்கிற ஸ்பானிய மொழிவார்த்தைக்கு பாலைவனம் என்பதே பொருள். எத்தனையோ பாலைவனங்கள் திரையில் விரிந்திருகின்றன. ஆனால் இந்தத் படத்தில் கிலியூட்டும் மணல் மலைகளும் காற்றறித்த தூண்களும் இருக்கும் பாலை உண்மையிலேயே புதுசு.
ஒருவழியாய் அமெரிக்க எல்லையை அடைகிறது இந்தக் குழு. மெல்ல அமெரிக்காவை நோக்கி முன்னேறுகிறது. உடல் வலு உள்ளவர்கள் முன்னே விரைய கடும் பயணத்துக்கு பழக்கமில்லா சிலர் சுணங்கி பின்தங்க கதாநாயகன் பின் தங்கும் குழுவை முன்நடத்துகிறான்.
அமெரிக்கப் பகுதியில் ஆளில்லா பாலைக்காட்டுப் பகுதிகளில் திரிகிறது இன்னொரு பிக்கப் ட்ரக். ட்ரக்கில் பட்டொளி வீசிப் பறக்கும் கண்பிடரெட்களின் கொடியே பல செய்திகளைச் சொல்லிவிடுகிறது. அதன் ஓட்டுனர் ஜெப்ரி டீன் மோர்கன், ஒரு பாட்டில் சரக்கை எடுத்து ராவாக அடித்துவிட்டு அசுசுவரஸ்யமாக வண்டியைச் செலுத்துகிறான்.
ஒரு திருப்பத்தில் ட்ரக்கை நிறுத்த அவனுடைய நாய் இறங்கி ஓடுகிறது. ஓட்டுனர் எதிர்புரத்தில் மெல்ல இறங்கி நெளித்துவிட்டு வண்டியில் ஏறப்போகையில் மெல்ல குறைக்கிறது நாய். என்ன என்று பார்த்தவனுக்கு அகதிகள் கண்ணில் படுகிறார்கள்.
அவசரமாய்த் திரும்பி வண்டியில் இருக்கும் தொலைநோக்கி பொருத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வாகாய் ஒரு மேட்டில் ஏறிக்கொண்டு ஓடும் மெக்சிகன்கண்களை குறிவைக்கிறான். முதலில் சென்று கொண்டிருக்கும் மெக்சிகன் உடலின் இடது புரம் குண்டடிபட்டு சாகிறான். அவன் விழுந்ததைப் பார்த்ததும் அமெரிக்கன் சொல்வதுதான் ஹைலைட். “வெல்கம் டூ தா லான்ட் ஆப் ப்ரீ”.
குழந்தைகள், பெண்கள் என்ற ஓரவஞ்சனைகள் ஏதும் இல்லாமல் அத்துணைப்பேரையும் சுட்டுத்தள்ளிவிடுகிறான். பாலையின் நடுவே இரத்தப் பூக்களாக கிடக்கின்றன உடல்கள். சுடப்பட்டது மனிதம்தான் என்பதை உணர்த்துகிறது காட்சி.
இது அத்துணையும் பின்தங்கி வந்த குழுவினர் பார்த்து உறைந்துபோய் இருக்கிறார்கள். ஐந்து பேர்கொண்ட அந்தக் குழுவில் நன்கு ஓட முடியும் நிலையில் இருக்கும் ஒருவன் தாமதமே இன்றி எழுந்து மெக்சிகோவை நோக்கி திரும்பி ஓடுகிறான். வேறு வழியே இல்லாமல் அவனைத் தொடர்ந்து ஓடுகிறார்கள் நான்கு பேரும். நாய் இப்போது இவர்களையும் பார்த்து குலைக்கிறது. நான்கு கால் நாயை ஏவுகிறது இரண்டுகால் நாய்.
வெகு விரைவிலேயே தடிமானாக இருக்கும் ஒருவனை கடித்துக் குதறி, அவனது குரல் வலையைக் கவ்விக்கொண்டு இருக்கும் தனது செல்ல நாயைப் பார்த்து ஒருகணம் உறைந்து நிற்கிறான் அமெரிக்கன். எச்சரிக்கையான தொலைவில் நின்றுகொண்டு நாய்க்குரிய பயிற்சி ஊதலை எடுத்து ஊதுகிறான். ஊதலின் ஓசை நாயைச் சிலிர்க்கச் செய்து அதன் வால்வரை நிமிர்கிறது! (நாயையும் நடிக்கச் செய்திருக்கிறார்கள்!). தன்னுடைய முதல் பலியை அப்படியே விட்டுவிட்டு அடுத்த குறிகளை நோக்கி ஓடுகிறது நாய்.
அவர்கள் ஓடும் திசையில் தன்னுடைய ட்ரக்கை செலுத்த முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்கன் நாயிடம் பொறுப்பை விட்டுவிட்டு ஒரு மேப்பை எடுத்து எந்த இடத்தில் அவர்களை மடக்கலாம் என்பதைப் பார்க்கிறான்.
கொஞ்சம் கூட ஈவு இறக்கம் இல்லாமல் மனித வேட்டையில் ஈடுபடும் அவன் எதோ காட்டு விலங்குகளைச் சுடுவது போல மனித உயிர்களைச் சுட்டுத் தீர்க்கிறான்.
இறுதியில் கதாநாயகன் கேட்கிறான் டேய் நீ மனுசனாடா. ஒரு ட்ரக் நிறைய வந்த மெக்சிகன்கள் இப்போது கதாநாயகன் மற்றும் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடும் பெண் என்று சுருங்கிய நிலையில் தொலைவில் ஒளிரும் அமெரிக்க காவல் துறை வாகனங்களை நோக்கி அந்தப் பெண்ணை முதுகில் சுமந்து போகிறான் நாயகன்.
சொல்லனா வலியுடன், நாடுகள் அவற்றின் குடிகள்மீது ஏற்றிவைத்திருக்கும் பீடுகளின் கோரமான இன்னொரு முகத்தை படம் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறது.
எந்த ஒரு காரணமுமின்றி மெக்ஸிகன்களை கொன்றுதீர்க்கும் வில்லன் கதாபாத்திரம் தட்டையானது என்றாலும் அந்தப் பாத்திரம் செய்யும் சிலீரிட வைக்கும் கொடூரச் செயல்கள் படத்தின் செய்தி.
மனிதர்கள் இயங்குவதற்கு அவர்களுக்கு சில காரணங்கள் தேவைப்படுகிறது. நல்ல காரணங்கள், நல்ல தத்துவங்கள், நல்ல நோக்கங்கள் நல்ல மனிதர்களை உலகுக்கு அடையாளப்படுத்துகிறது. எதிர்மறை நோக்கங்கள், நம்பிக்கைகள், போலிப்பீடுகள், இனவாதம், நிறவாதம், மதவாதம் போன்றவை மனிதர்களை கொடூர மிருகங்களாக்குகின்றன என்பதை திரையில் வெகு அழுத்தமாக சொல்லிருக்கும் படம்.
வில்லனின் கொடூரங்கள் நமது போலித்தனமான பீடுகளின் வரலாற்று பக்கங்களின் ரெபாரன்ஸ்மட்டுமே. உண்மையில் நம்மில் கொஞ்சம் மீதம் இருக்கும் கொடூரத்தின் என்லார்ஜட் ஜெராக்ஸ்தான் வில்லன்.
படம் விமர்சகர்களால் கொண்டாடப்படாவிட்டாலும் வெகு அழுத்தமான படம். வில்லனின் தட்டைத்தனமான கதாபாத்திரம்தான் அவர்கள் காண்டுக்கு காரணம். உண்மையில் வெகு தட்டையாக இருக்கும் சமூகம் குறித்து அறியாத கலைவிமர்சகர்கள் அவர்கள். மூவாயிரம் பேரை கொன்றவரை இந்தியாவின் அடயாளமாக மாற்றிப் பார்த்த பெருமைக்கு உரிய நமது சமூகம் குறித்து கலை விமர்சகர்களுக்கு தெரியாததில் வியப்பேதும் இல்லை.
தொடர்வோம்.
அன்பன்
மது
விமர்சனம் வழக்கம் போல் அருமை. பார்க்க வேண்டும்
ReplyDeleteநன்றி தோழர்
Deleteபார்க்கும் ஆவலைத் தூண்டிய படம். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி தோழர்
Delete