டாக்டர் ஸ்ட்ரேஞ்

ராஜசுந்தர்ராஜன் பார்வையில்

ஒரு மருத்துவர்தான். மூளை நரம்பியல் மருத்துவர். முனைவர் (Ph.D) பட்டம் பெற்றவர்களும் ‘டாக்டர்’களே. ஏன் கருணாநிதி, ஜெயலலிதாகூட ‘டாக்டர்’தாம். ஆனால் ஒரு மருத்துவர் தன்னிடம் வைத்தியத்துக்கு வந்த கொடூரனைக்கூட வேண்டுமென்றே கொல்லமாட்டார். ஒரு விஞ்ஞானி அல்லது பிற அறிஞர்கட்கு அது கட்டாயமில்லை.



உலகைக் காக்கவந்த ஒரு கருணாமூர்த்தியாக ஐக்கிய அமெரிக்கா (US) தன்னை உருவகித்து, உலக மூளைகளைச் சலவைசெய்கிற மும்முரத்தில் இருக்கிறது. கூடவே, கொலைத்தொழிலும் செய்கிறது. இந்தக் கொலைகளை எப்படியாக்கும் நியாயப்படுத்துவது? ‘உயிர்களைக் காப்பாற்றுவேன்’ என்று உறுதிமொழி எடுத்த ஒரு மருத்துவரே கொலைசெய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கினால்...? அவர்தான் டாக்டர் ஸ்ட்ரேஞ். விநோதன் என்பதற்கு இலக்கணம் கண்டாகிவிட்டதா?
அடுத்து, The Ancient One. இதில் வைதீகம், பௌத்தம் எல்லாம் கலந்துகட்டி அடிக்கப்படுகிறது. இவ்வளவு நெடுங்காலம் குருபீடத்தில் இருந்தது போதும்; நீயாகவே ஒதுங்கித் தொலை! இனிமேல் ஐக்கிய அமெரிக்காவாகிய நாங்களே தலை.
இதுதான் கதை.
நேப்பாளத்தில், ஒரு மடாலய நூலகத்தில், ஒரு புத்தகத்தின் சில பக்கங்களைத் திருடுகிற காட்சியில் படம் தொடங்குகிறது. திருடுகிறவன் கேசிலியஸ். ‘த ஏன்சியன்ட் ஒன்’னின் முன்னாள் சிஷ்யன். “கிழக்கத்திய நாடுகள் பெண்தன்மையும் மேற்கத்திய நாடுகள் ஆண்தன்மையும் கொண்டவை,” என்றொரு மூளைச்சலவைக் கோட்பாடும் உலகில் உலவுகிறது என்று அறிந்தவர்க்கு, இப் படத்தில், ‘த ஏன்சியன்ட் ஒன்’ ஒரு பெண் என வார்க்கப்பட்டதன் காரணம் புரியும். படம், அப்படி ஒரு குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையிலான சண்டையில் தொடங்கி, அதில் சிஷ்யன் கெலிப்பதாக, அல்லது கிழக்குக்கும் கிரேக்கத்துக்குமான போட்டியில் கிரேக்கத்தின் கை ஓங்குவதாக நிறுவப்படுகிறது.
நியூயார்க்கில், ஒரு நோயாளியின் மூளைக்குள் புதைந்துபோன ஒரு புல்லட்டை நீக்குகிற காட்சியில் டாக்டர் ஸ்ட்ரேஞ், “டாக்டர் நிக், உங்கள் கைக்கடிகாரத்தை மறையுங்கள்!” என்பார் அல்லவா? அந்த இடத்தில் உணர்த்தப்படுகிறது கதையின் தத்துவ/விஞ்ஞானச் சரடு.
உலகிலேயே, அதிர்வென்பதே இல்லாத இடம் எது தெரியுமா? அதிர்வு என்றாலே அது காலம்தான் இல்லையா? ஆக, காலமே இல்லாத இலக்குதான் எது? கருப்பைக்குள், விந்தணுவும் கருமுட்டையும் கூடுமே அந்த இலக்குதான் அது.
அதாவது, காலம் அழிவோடு தொடர்புள்ளது என்றும் காலமில்லாத இடம் சாவுக்கு அப்பாற்பட்டது என்றும் காண்பிக்கப்படுகிறது. அது சரிதான், ஆனால் காலமற்ற ஒன்றை இருண்மை ஆற்றலோடு (dark power) ஏன் தொடர்புறுத்த வேண்டும்?
ஒரு விபத்தில். டாக்டருக்கு கைவிளங்காமல் போய்விடுகிறது. அதைக் குணப்படுத்தி மீள நேப்பாளத்துக்கு வருகிறார். வந்த இடத்தில், உடம்புக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் உண்டென்று அறிய வருகிறார். குணமாகி, விரும்பினால் வீடு திரும்பலாம். ஆனால் உலகுபுரந்தருதல் (காப்பாற்றுதல், காவலிருத்தல்) தனது கடன் என்று களத்தில் நிற்க முடிவெடுக்கிறார்.
உடம்புக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் மோதிக்கொள்வது என்றாலே மாயாஜாலப் படம்தானே? நெருப்புவளையம் உருவாக்கி கண்டம்விட்டுக்கண்டம் பாய்தல், ஆடிப்பிம்ப பரிமாணம் தோற்றி காலவெளியை வளைத்தல் எனக் கண்கொள்ளாக் காட்சிகள் ஏராளம். 3D வேறு, சொல்லவேண்டுமா?
நவீன விட்டலாச்சார்யா படம் இதன் நம்பகத் தன்மைக்காக, ஒன்றுக்கு மிஞ்சிய பிரபஞ்சங்கள் என்னும் கற்பிதமும் இடைக்கிடையே மருத்துவமனை விஞ்ஞானமும் என இடைவெட்டிக் காண்பிக்கப் படுவது சுவைகூட்டுகிறது.
படத்தின் மிகச்சுவையான விசயம் என்னவென்றால் அதன் தீர்வுதான். நாயகனின் உறுதுணையாக கடைசிவரை வருகிற மோர்டோ (கறுப்பினத்தவர்) எடுக்கிற முடிவுதான் அது. இங்குதான், இந்த சுயவிமர்சனத்தால்தான், இயக்குநர் கலைஞராகிறார்.

Comments

  1. தங்களது விமர்சனம் கதையின் முக்கிய விடயங்களை சொல்லியது ஆவலை தூண்டுகின்றது தோழரே...
    த.ம.2

    ReplyDelete
  2. படம் பார்க்க தோணுது...

    ReplyDelete
    Replies
    1. புதுகை வரவில்லை படம் பாப்போம்...டொராண்ட்ஸ் ஏதும் கிடைத்தால்தான் உண்டு
      வருகைக்கு நன்றி

      Delete
  3. ஒரு படத்தின் பின்னால் இவ்வளவு அரசியல் இருக்கிறதா :)

    ReplyDelete
  4. முதல் பத்தி எனக்கு ப்ரான்கெஸ்டன் திரைப்படத்தை நினைவூட்டியது. விமர்சனம் அருமை.

    ReplyDelete
  5. பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எங்கள் ஊரில் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்....உங்கள் விமர்சனம் பார்த்து...வந்தால் கண்டிப்பாகப் பார்ப்பேன் . நன்றி மது

    ReplyDelete
  6. Madhu sir, I think humour was the only thing missing in this movie with such a profound theme. But your excellent review spices- up the movie with much needed humour to make us crave to see the movie. But I feel we cannot rule out anything as fictitious with Uncle Sam. The so called Saviour of the world is doing everything to sneak into our personal details and rule our mind (?)

    ReplyDelete

Post a Comment

வருக வருக