பைரவா - ராஜ சுந்தர்ராஜன் அவர்களின் பார்வையில்

திரு.ராஜ சுந்தர்ராஜன்  அவர்களின் பார்வையில்




நாயகன் விஜய் அழகா இருக்கிறார். ~கிறான் என்று சொல்லப்பட வேண்டும்போல் அப்படியொரு செல்ல அழகு! ஒப்பனைக் கலைஞரைப் பாராட்டவேண்டும் என்றாலும் விஜய்யின் இயல்பான உடல்வாகுதான் காரணம். இக்கட்டு (crisis) சண்டைகாட்சி/ விரட்டலில் அவர் தன் சட்டையைக் கழற்றிவீசி மேலுடம்பைக் காட்டுகிறாரே, ஆறடுக்கு எட்டடுக்கு தசைக்கட்டுகள் இல்லை; ஒரு வடிவான சமவெளி அது. வயிறு துருத்தாத அப்படியோர் ’யோகா’ உடம்பு சிவனுக்கானது. ஆமாவா இல்லையா என்றறிய மும்பை ‘எலிஃபன்ட்டா’ குகைச்சிற்பங்களைப் போய்ப் பார்க்கவேண்டும்.
(ஆர்வக் கோளாறினால் ஹிந்துத்துவர்கள் அங்கங்கே நாட்டி வைத்திருக்கும் உயரஉயரமான சிவ விக்ரகங்கள், ’சிவன் ஒரு யோகி’ என்னும் தத்துவத்திற்கு ஒவ்வா உயர்வுநவிற்சிகள்.)
சிவனுடைய பிறிதொரு வடிவம்தான் ’பைரவர்’ என்கிறார்கள். அதில் நாயோடு நிற்பார்.

1978-இல் எனது வாகன முதல்விபத்து, அது தூத்துக்குடி ’ஸ்பிக்’ தொழிற்சாலைக்குள், டைம் ஆஃபீஸ் தாண்டியவுடன் நேர்ந்தது. ஸ்கூட்டர் தனியாக நாங்கள் தனியாக விழுந்தெழுந்து உயிர்பிழைத்தோம். வலமிருந்து இடமாகப் பாய்ந்த நாய் ஒன்று கதறியோடும் வகைக்கு அதன்மேல் மோதிவிட்டோம். எனது ‘கம்யூனிஸ்ட்’ நிலைபாடு மாறியதற்கும் அது ஒரு குறியீடாகலாம்: ’வலமிருந்து இடம்பாய்ந்த நாய்; அது காரணம் விபத்து’.
நாய் குறுக்கே பாய்ந்ததால் பைரவரைப் போய் வழிபடவேண்டும் என்றார்கள். போனேன் இல்லை. பின்னாள், ரெம்பரெம்பப் பின்னாளில், சென்னை வடபழனிச் சிவன்கோவிலில் அவரைக் கண்டேன். வெளிப்பிரகாரம் சுற்றிவர, கடைசியாக இருக்கும் தெய்வமே பைரவர். தலித் சாமியாக இருந்திருப்பார் போலும்! அப்படித்தான் கற்பித்துக்கொண்டேன். வெளியே இருந்த அவரை சுற்றுச்சுவருக்கு உள்ளே கொண்டுவந்து, இதுதான் உனக்கான இடம் என்று இருத்தினாற்போல இருந்தது அது.

“அப்பனே, இப்படி ஒதுக்கிவைக்கப்பட்ட கடவுள் நீ என்று தெரிந்திருந்தால் தூத்துக்குடிச் சிவன்கோவில் தேடியே வந்து தொழுதிருப்பேனே? மாப்புத்தரவேண்டும்!”

சிவனுக்கு முன் நிலைமொழிப் புணர்ச்சியில், ‘ச்’ வலிமிக எழுதுகிறேன் அல்லவா, இது திருநெல்வேலி வழக்கு. படத்தின் நாயகியோ திருநெல்வேலிப் பக்கம். அவள் வசனங்களில் ‘ச’ அதற்கே உரித்தான அழுத்தத்தோடு வரும். அவளும்தான். தன் சக மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு வழக்குப் பதிகிறவள் அவள்தானே?

நாயகனை அறிமுகப் படுத்துகையில் அவன் கண்களைக் காண்பித்து, முகம்காண்பித்து, முழுஉடல் காண்பிக்கப்படுகிறது. நாயகியை, அவள் கால்காண்பித்து, மேல்காண்பித்து, முகம், முழுஉடல் காண்பிக்கப் படுகிறது. இப்படிக் காண்பித்தால், கேசாதிபாத பாதாதிகேச இலக்கணப்படி, அவன் மனிதனாகிறான்; அவள் தெய்வமாகிறாள். இதில் இயக்குநர்க்குத் தெளிவில்லை போலும்! அல்லது அவள்தான் தெய்வமோ? மனிதனாகிய அவனைக்கொண்டு தன் காரியத்தை முடித்தாளோ?

இடைவேளையில், ஓர் இளைஞன் தன் நண்பனிடம் சொல்கிறான், “மச்சி, சத்தியமா போரே அடிக்கலடா!”

சொன்னவன் என்னைப்போல அஜித் ரசிகனாகவும் இருக்கலாம். ஆனால் அவன் சொன்னது உண்மை. உண்மையில், என் வயதுப்படி, நான் எம்.ஜி.ஆர். ரசிகன். பின்னொருக்கால், ரஜினி ரசிகன் போல பாவித்திருக்கிறேன் ஒரு காதலுக்காய் (அவள் ரஜினி ரசிகை); பின்னும் பின்னாளில், ஒரு கிழவியின் வாய்வார்த்தை கேட்டு (அவளது கண் அறுவைச்சிகிச்சை மொத்தச் செலவையும் ஏற்றுக்கொண்டாராம்) அஜித் ரசிகரானேன். ஆகவே, இங்கே நான் சொல்வதெல்லாம் சமநிலை என்றே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

’பால்கனியில் ஒரு பெண்’ என்றொரு காட்சி வருகிறது. இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் ஆகச்சிறந்தவர் என்று மதிக்கப்படுகிற சு. வேணுகோபால் தனது ஒரு குறுநாவலுக்கு “பால்கனிகள்” என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தில் வரும் பால்கனிக் காட்சியில், அவளின் ’நெஞ்சமெல்லாம் வண்ணம் புதுவண்ணம்’ அதை நிறுவிக் காட்டுகிறது. இப்படியான நகைச்சுவைக் காட்சிகள்;

இடைவேளைக்குப் பின் நாயகன் வில்லனை மிரட்டி நாயகியின் வீட்டுக்கு மின்சாரம் வாங்குகையில், தொலைக்காட்சிப் பெட்டியில் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு உதவும் பாடற்காட்சி என இப்படி இயக்குநர் வணிக வாய்பாடு தெரிந்தவராகவே தெரிகிறார்.
தெலுங்கின் உயரமான ஜகபதிபாபு, இப்போதெல்லாம், தமிழ் மலையாளப் படங்களிலும் வில்லனாய் வந்து தூள்கிளப்புகிறார். இதிலும். கிரிஷ் உத்தமன், வாய்ப்பு கொஞ்சமே என்றாலும், ஒரு பொலீஸ்காரராய் நியாயம் செய்திருக்கிறார்.

படம் தொடங்குவதற்கு முன், திரையரங்கு முற்றத்தில், “என் பிரியமே” என்று நெஞ்செழுத்துப் பொறித்த, விஜய் படம்போட்ட, ‘T’ சட்டை அணிந்த பெண்கள் பலரைக் கண்டேன். அதிலொருத்தி, பதின்மூன்று பதினான்கு வயதிருக்கலாம், ஒரு நிலையில் நில்லாது, ’கேட்’ வாசலில் தூள்கிளப்பிக்கொண்டிருந்த பறையோசைக்கு ஏற்ப உடலசைவு கொண்டிருந்தாள். ஒரு பிரியமான மகளை அல்லது மருமகளைப் பார்ப்பதுபோல் அவளை உன்னித்திருந்தேன் நானும். ஒரு நோட்டுப் புத்தகத்துக்கு உள்ளிருந்து 50 அல்லது 60 டிக்கெட்டுகளை, ஆடிக்கொண்டே, எடுத்தாள் அவள். ரசிகர் மன்றத்து ஆள் போலும்.

ஒரு சுடர் (star) நடித்த படத்துக்குப் போனால் இப்படித்தான் அது திருவிழாக் கோலமாய் இருக்கிறது. பாலாபிஷேகம் நடந்த சுவரொட்டிகள் ஒன்றில் வாசகம், “’தனா’வாய் இரு! அல்லது ’பில்லா’வாய் இரு! ஆனால் ’பைரவா’ முன்னாடி பயப்படு!” என்று கண்டிருந்தது. எனக்குச் சிரிப்புதான், ஆனால் அந்தப் போஸ்டரில் ஆட்டம் ஓயாத அந்தச் சிறு பெண்ணுடைய முகப்படமும் இருந்தது. வெற்றிக்கு வேறன்ன வேண்டும்?

மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கு (நான் எம்.ஜி.ஆர். ரசிகன் என்றாலும்) எம்.ஜி.ஆர். பெயர், பொறியியல் பல்கலைக் கழகத்துக்கு அண்ணா பெயர் பொருந்தவில்லையே என்று எண்ணுகிறவன் நான். இந்தப் படத்தில், ஒரு கல்லூரி நிர்வாகிக்கு அதற்குரிய தகுதி வேண்டும் என்கிறார்கள். கல்வியில் இல்லை என்றாலும், பண்பில் அது அவசியம் என்றே எனக்கும் தோன்றுகிறது.

“வரலாம் வரலாம் வா! வரலாம் வரலாம் வா!” என்பது இப் படத்தின் சண்டைக் காட்சிகளில் வரும் பின்புல இசை. “பார்க்கலாம் பார்க்கலாம் போ! பார்க்கலாம் பார்க்கலாம் போ! என்பது எனது பரிந்துரை.

Comments

  1. முகநூலில் வாசித்தேன்...
    படம் பார்க்கலாம் ரகம்தான்...
    விஜய் படங்களுக்கே உரிய அதே பாணி...


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. திரு ராஜ சிந்தர்ராஜனின் விமர்சனம் செம சுவாரஸ்யம்! படத்தைவிட அவர் எழுதும் விமர்சனங்கள் அருமை!!! இறுதிவரி நகைச்சுவையுடன் என்றும் இடையில் பல இடங்களில் சிறுநகை வரவழைக்கும் விதத்தில் ரசிக்கும்படியான விமர்சனம்! பகிர்வுக்கு மிக்க நன்றி மது.

    கீதா

    ReplyDelete
  3. உள்ளே இருப்பது குப்பை . ஆனால் அதைப் போட்டு வைத்திருக்கும் தொட்டி அழகு என்பது போல இருக்கிறது இவரது விமர்சனம். அழகு விமர்சனம்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக