Shikshanachya Aaicha Gho - திரை விமர்சனம் - சிவாவின் பார்வையில்

கலகல வகுப்பறை சிவா  ஒரு முன்மாதிரி ஆசிரியர். விகடன் தேர்ந்தெடுத்த அறம் செய விரும்பு ஆளுமைகளில் ஒருவர். தொடர்ந்து கல்வி மேம்பாடுகளுக்காக பதிவிடும் செயற்பாட்டாளர். தனது பள்ளியை தனியார் நிதி உதவி மூலமே ஒரு அற்புதப்பள்ளியாக மாற்றிய உன்னத ஆசிரியர் இவரது பார்வையில் ஓரு திரைப்படம்....
அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றின் ஆசிரியராகஇருக்கும் சிவா, தனது பள்ளியின் ஒலி ஒளி கட்டமைப்பை நிர்வாகமே தந்து ஊக்குவித்ததாகவும், ஏனைய செலவுகளை தாமும் தமது நண்பர்களும்  சமாளிப்பதாகவும் சொல்கிறார்.
இவரது முகநூல்கணக்கு




இந்தியாவின் மொழி என்று பலரும் சொல்லிக்கொள்ளும் இந்தி மொழிப் படங்களை உருவாக்கும் பாலிவுட் மகராஷ்டிரா மாநிலத் தலைநகரான மும்பையை மையமாகக் கொண்டது.
எனினும் தமது தாய்மொழியான மராத்தியில் உலகத்தரமான திரைப்படங்களை அதிக அளவில் உருவாக்குகின்றனர்.
உலக அளவில் பல்வேறு விருதுகளைக் குவிப்பவையாகவும் மராத்திப் படங்கள் இருக்கின்றன.
கல்வி, குழந்தைகள் சார்ந்த அற்புதமான பல படங்கள் மராத்தி மொழியில் உள்ளன.

Shikshanachya Aaicha Gho
இந்தியக் குழந்தைகள் போன ஜென்மத்துல நிச்சயமா கொடுமையான பாவம் செஞ்சிருக்காங்க. அதனாலதான் குழந்தைப்பருவத்துல சிறைத்தண்டனையை பள்ளியில் அனுபவிக்கிறாங்க. உடலால் மனதால் குழந்தைகள் அனுபவிக்கும் அழுத்தத்துக்கு முன்னாடி உலகின் சகலவிதமான தண்டனைகளும் ஒண்ணுமில்லாம ஆகிடும். என்ற முன்னோட்டத்துடன் மராத்தி மொழியில் வெளியான படம் Shikshanachya Aaicha Gho. கேவலமான கல்விமுறை என்று அர்த்தம் கொள்ளலாம்.

கிரிக்கெட்டில் ஆர்வமிக்க மகன் ஸ்ரீநிவாஸ். பாடத்தில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என வற்புறுத்தும் தந்தை ரானே. தனிப்படிப்பு, அடி, திட்டு என்று மனமுடையும் சிறுவன் தந்தையை எதிர்த்துப்பேசுகிறான். கோபத்தில் தந்தை அடிக்க எதிர்பாரா விபத்தாகத் தலையில் அடிபட்டுக் கோமா நிலையை அடைகிறான்.
மனம் வருந்தும் தந்தை கல்வி முறையின் சீரழிவுகளைப் பற்றிக் காத்திரமான கேள்விகளை எழுப்புகிறார்.
ஒரு 400பக்க நோட்டுல எல்லாப் பாடத்தையும் எழுதுனா என்ன? தனித்தனியா பெரிய பெரிய நோட்டுகள். புத்தகம் என சுமைதூக்கிகளாகக் குழந்தைகள்.
வருஷக் கடைசில நிறையப் பக்கம் மிச்சமாகுது. அடுத்த வருடம் புது நோட்டு.

இப்படியான ரானேவின் கேள்விகள் மீடியா மூலம் பிரபலமாகின்றன. இறுதியில் முதலமைச்சரை அதிரடியாகச் சந்திக்கிறார்.முதல்வரிடம் தனது கருத்துக்களைக் கூறுகிறார்.
ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் வேறுபாட்டை உருவாக்குறோம். 1,2,3 இப்படின்னு வரிசையா ரேங்க். முதல் ஐந்து ரேங்க் வாங்குறவங்க அறிவாளி. 40 ஆவது ரேங்க் வாங்குகிறவன் முட்டாளா? எப்படி இதுமாதிரி தரப்படுத்துகிறீர்கள்? 40ஆவது மாணவன் ஒருசிறந்த ஓவியனா, பாடகனா இசைக்கலைஞனா இருக்கலாமே!
குழந்தைகளிடையே போட்டியை நீங்களே உருவாக்குறீங்க. அப்புறம் பெத்தவங்களும் சேந்துக்கிறாங்க. முதல் 5 அல்லது 10பேருக்குள்ள வரணும்னு பிள்ளைகளை அழுத்துறாங்க. சிறப்பு வகுப்பு, பயிற்சி வகுப்பு, வியாபாரம் எல்லாமே ஆரம்பமாகுது.

நீங்க கல்வியை பெரிய வியாபாரமா ஆக்கிட்டீங்க.

என் நண்பன் ஒரு சிற்பியா ஆகணும்னு ஆசைப்பட்டான். அறிவியல் பாடத்தில் பெயிலாயிட்டான். நுண்கலைக் கல்லூரியில் சேர முடியல. அறிவியல் பாடத்தில் பாஸாக மூன்று வருஷம் மார்ச் அக்டோபர்னு மாத்தி மாத்தி அறிவியல் தேர்வை எழுதினான். அறிவியல் அவனோட வாழ்வில் மூன்று வருஷங்களை வீணாக்கிடுச்சு. சிற்பக்கலை கற்க, அறிவியல் பாடத்தால் என்ன பயன்? பெயிலாக்கும் உரிமையை யார் கொடுத்தார்கள்? தனது எதிர்காலத்தை முடிவு செய்யும் உரிமை குழந்தைகளுக்கு இல்லையா?
பாபரோட மனைவி பெயர் என்ன? கம்போடியாவில் என்ன தாது கிடைக்கிறது? இது மாதிரியான வரலாறு, புவியியல் எதற்கு? வரலாறு, புவியியல் சொல்லிக்கொடுங்க. தேர்வு வைக்காதீங்க. ஆர்வத்தை ஏற்படுத்தினால் போதும். உயர் கல்வியில் அந்தப் பாடத்தை விரிவாகப் படிக்கட்டும்.

தான் விரும்பிய துறையில் வெற்றி பெற்றவங்க பலர். அவுங்களுக்கு அதுமாதிரியான வாய்ப்பு கிடைச்சது. மாணவர்களின் திறமையைக் கண்டுபிடிங்க. அவங்க எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கொடுங்க. பெயிலாக்காதீங்க. மராத்தி படிக்க விரும்பும் ஒருத்தனை கணக்கில் தேறியே தீரவேண்டும் என்று ஏன் வற்புறுத்த வேண்டும்?
குழந்தைகள் மீதான அழுத்தத்தைக் குறைங்க. வெளிநாடுகள் போல கற்க வழி செய்யுங்க. கல்வியை மகிழ்ச்சியானதாக மாற்றுங்க.
தொடர்ந்து கல்விமுறையில் மாற்றங்கள் குறித்துப் பேசலாம் என முதல்வர் உறுதியளிக்கிறார்.

ரானேயின் பேச்சை அனைவரும் பாராட்டுகிறார்கள். ஸ்ரீக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெறுகிறது. அவன் விழிக்கிறான்.
ஸ்ரீ கிரிக்கெட் விளையாட்டில் பிரகாசிக்கிறான். அனைவரும் மகிழ்கின்றனர்.

கல்விமுறையை சற்று ஆபாசமாகத் திட்டுவது போன்ற மொழியில் தலைப்பு என்ற எதிர்ப்பைச் சமாளித்து 2010ஆம் ஆண்டில் வெளியான படம் Shikshanachya Aaicha Gho.
கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் மகேஷ் மஞ்ரேக்கர்.

கல்விமுறை மீது காத்திரமான கேள்விகளை எழுப்புகிறது படம்.

குழந்தைப் பருவம் முழுதும் அழுத்தமும் போட்டியும் நிறைந்த கல்விமுறையால் மானிடப் பண்புகளை வளர்க்கத் தவறிவிட்டோம். மனிதம் தழைக்கப் படைப்பாளர்கள், கலைஞர்கள் தேவை. பணம் சம்பாதிப்பது மட்டுமே கல்வி அல்ல. என்று பல்வேறு உரையாடல்களின் தொடக்கப்புள்ளியாக இப்படத்தைக் கொண்டாடலாம்.
இதே கதையை தமிழ், தெலுங்கில் ‘தோனி’ என்ற பெயரில் பிரகாஷ் ராஜ் படமாக எடுத்தார்.

மூலப் படத்தில் இருக்கும் நேரடியான அழுத்தமான பல கேள்விகளைத் தவிர்த்து சில குறிப்பிட்ட கேள்விகளுடன் உருவாக்கப்பட்டது தோனி. பலரும் பாராட்டினாலும் மூலப்படம் அளவிற்கு மனதுள் காத்திரமான கேள்விகளை ‘தோனி’ உருவாக்கவில்லை.

Comments

  1. நல்ல விமர்சனம். அப்போதே தோனியின் மூலம் இதுதான் என்று தெரிந்து பார்த்தேன். ஆனால் மராத்தியில், மொழிபெயர்ப்பு வசனங்கள் இல்லாமல்...என்னதான் என் உறவினர் அர்த்தம் சொன்னாலும் ....முழுவதும் ரசிக்க முடியவில்லை

    கீதா

    ReplyDelete
  2. உண்மைதான் . ' தோனி ' உள்ளத்தைத் தொடவில்லை . உள்ளதையும் சரியாக சொல்லவில்லை . கமர்சியல் நோக்கமும் கலந்ததால் அதிகம் பேசப்படவுமில்லை. நமது இந்திய கல்வி முறை பற்றி இன்னும் அழுத்தமாக சொல்லும் படம் எடுக்கப்படவில்லையோ என நினைத்தேன். Shikshanachya Aaicha Gho என்ற மராத்தி படம் இருப்பது இப்போதுதான் தெரிகிறது.

    ReplyDelete
  3. நல்லதொரு அறிமுகம்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக