மாற்றத்தின் முகங்கள் faces of change

மாற்றங்களை முன்னெடுக்கும் நம்பிக்கை மனிதர்கள்

முதல் பகுதியைப் படிக்க 

அரசுப் பணிக்கு வரும் பெரும்பாலானோர் ஊதியக் கணக்கிலும், ஓய்வூதிய கனவுகளிலுமே வருகிறார்கள். அவர்களிலும் ஒரு பிரிவினர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை செம்மையுற செய்து தங்கள் பணி எல்லைகளை தாமே விரிவு செய்து கேள்விக்குறிகளை ஆச்சர்யக்குறிகளாக மாற்றுகிறார்கள்.



ஒரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் என்ன செய்ய வேண்டும்?

அவரது பணியை ஒழுங்காக பார்த்தாலே போதுமே. இப்படித்தானே பல உயர் அலுவலர்கள் இருக்கிறார்கள்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புதுகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக ஒருவர் பணியாற்றினார்.

தமிழகத்தின் முதல் முதலாக தன்னார்வ பயிலும் வட்டம் என்பதை உருவாக்கி செயல்படுத்தினார்.

கீழ இரண்டாம் வீதியில் ஒரு பிராமணர் வீட்டின் மாடியில் முதல் முதலாக தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டது. முதல் கூட்டத்தில் பதினான்காவது கையொப்பம் எனது.

நண்பர் ஹபீப் நத்தருடன் சென்றிருந்தேன்.

மூத்த சகோ திரு.பழனிவேலு பொறுப்பாக இருந்து நடத்தினார்.

சில வாரங்களுக்கு பின்னர் தன்னார்வ பயிலும் வட்டம் வேறு இடத்திற்கு மாற (முதல் முதலில் இடம் தந்த பிராமணருக்கு அவர் இல்லத்தினர் நெருக்கடி தந்துவிட்டனர், கண்டவா எல்லாம் வரா பாணியில்)

தன்னார்வ பயிலும் வட்டம் என்பது போட்டித் தேர்வுகளுக்கு பட்டதாரிகளை தயார் செய்யும் அமைப்பே. முழுக்க முழுக்க தன்னர்வலர்களின் நிதியிலேயே செயல்படும் அமைப்பு.

இதை உருவாக்கி தன்னார்வலர்களை இனம் கண்டு பெரும் இயக்கமாக மாற்றியது திரு. சுரேஷ் குமார் அவர்கள்தான்.

இதை சொல்கிற பொழுது எழும் நன்றிப் பெருக்கு எளிதில் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

ஏன் ?

என்னுடைய நண்பர்களில் பலர் இப்போது அரசுப் பணியில்.

திரு.சுரேஷ் வருமான வரித்துறை அலுவலர், திரு. செந்தில் மாநிலச் செயலக அலுவலர், அண்ணன் பழனிவேலு வங்கி ஊழியர், சகோ நாகராஜ் வங்கி ஊழியர்.

என்னுடைய வட்டத்தில் மட்டும் இத்துணைப் பேர் வாழ்வை செம்மைப்படுத்தி அவர்களுக்கான சமூக அந்தஸ்தை உருவாக்கித் தந்தது புதுகை ஸ்டெடி சர்கிள்தான்.


இன்னும் ஒரு தம்பி கொஞ்சம் ஸ்பெசல்.

பழனியப்பா உணவகத்தில் பில் வசூல் கவுண்டரில் பணியில் இருந்தவாறே பயின்றவன். கருவூலத் துறையில் பணி, இன்று மாவட்ட துணை கருவூல அலுவலர்.

கருவூலத்தில் இலஞ்சம் மறுக்கும் சிலரில் ஒருவன்.

இலஞ்ச மறுப்பிற்காவே பல இன்னல்களைச் சந்தித்தவன்.

இதை விட அற்புதமாக கடந்த தலைமுறையில் பணியில் இருந்த நேர்மையாளர்களைக் குறித்து எனக்கு அறிமுகம் செய்தவன்.

எந்த பொருளாதாரப் பின்புலமும் இன்றி,  சவாலான சூழல்களில் வாழ சபிக்கப்பட்டிருக்கும் இளம் நெஞ்சகளின் ஒரே ஆறுதல் புதுகை ஸ்டடி சர்கிள்தான்.

அய்யா சுரேஷ் அவர்கள் ஏற்றி வைத்த சிறு சுடரை அணையாமல் காத்து இன்றுவரை தன்னர்வத்துடன் செயல்படும் பெரும் படை ஸ்டடி  சர்கிளின் பலம்.

திரு.சுரேஷ் குமார் அவர்கள் தனது சொந்த வாழ்வின் சோகங்களை மீறித்தான் இத்துணைப் பணிகளையும் செய்தார் என்பது என்போன்றவர்களுக்கு உன்னதமான முன்மாதிரி.

தற்போது இவர் மீது சொல்லான மதிப்பு வைத்திருக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரின் அன்புக் கட்டளையை ஏற்று அதே பல்கலைக் கழகத்தின் வேலை வாய்ப்பு வழிகாட்டிப் பிரிவின் அலுவலராக  பணியாற்றுகிறார்.

இருளில் சுடரேற்றும் மனிதர்களின் சாதனைகள்  தொடரும்


அன்பன்
மது

பிகு: என்னதான் ஸ்டடி சர்கிளின் முன்னோடி உறுப்பினராக இருந்தாலும், போட்டித் தேர்வுகளுக்கு நான் தயாராகவில்லை.  ஆசிரியருக்கு படித்திருக்கிறோம் ஆசிரியராக மட்டுமே பணி செய்ய வேண்டும் என்கிற மனநிலை மட்டுமே காரணம்.

பின்னர் ஆசிரியர்களும் போட்டித் தேர்வுகள் எழுதினால்தான் பணி என்கிற பொழுது எழுதினேன், ஐந்து டி.ஆர்.பி தேர்வுகள், நான்கிலும் தேர்ச்சி, நிலைத்தது என்னவோ நான்காவது டி.ஆர்.பி தேர்வில் கிடைத்த பணிதான்!

ஆக அப்பவே நண்பர்களோடு பணிக்குப் போயிருந்தால் தேர்வுநிலை  பெற்றிருக்கலாமே என்கிற வருத்தமெல்லாம் இல்லை.

நாம் டிசைன் அப்படி. 

Comments

  1. திரு.சுரேஷ் குமார் போன்று பலரும் எந்தவித சுயநலமைன்றி சைலண்டாக சாதனை செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் அப்படிப்பட்டவர்களை பெருமைபடுத்தி தங்கள் தளம்மூலம் நாலுபேர் அறிய செய்தமைக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யாவை அவரால் பலன் பெற்ற வளம் பெற்ற எத்தனையோ இளம் நெஞ்சங்கள் அறியும் ...

      நம்மவர்களுக்கும் தெரியட்டும் என்றுதான் பகிர்ந்தேன்

      Delete
  2. நல்லதொரு மனிதரைக் குறித்து இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க னன்றி. இவரைப்போன்று எத்தனையோ பேர் திரைமறைவில் சாதனைகள் செய்து வருகிறார்கள். தெரியும் போது எல்லோரும் அறிய பகிர்வது சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் நிறைய நல்ல இதயங்கள் இருக்கின்றன

      Delete
  3. இதுவே இன்று வணிகமாகி வரும் நிலையில் திரு.சுரேஷ்குமார் அவர்களின் தொண்டு மிகவும் பாராட்டத் தக்கது :)

    ReplyDelete

Post a Comment

வருக வருக