மனுஷ்ய புத்திரன் குறித்து ஒரு பெண் கவிஞர் 3

சிற்றன்ன வாசல் இலக்கிய சந்திப்பு நிறுவனம் நிகழ்த்திய மனுஷ்ய புத்திரனின் கவிதைக் கொண்டாட்ட நிகழ்வுகளின் அனுபவப் பகிர்வு பாகம் மூன்று.

ஏற்கனவே எழுதப்பட்ட பாகங்களை படித்துவிட்டு வந்தாலே தொடரலாம். 

தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை குறித்து எள்முனையளவும் அலட்டிக்கொள்ளாத மனுஷ்ய புத்திரன் கவிதை எனது மதம் என்று துவங்கினார். 

கவிதைகளுக்காக இயங்கும் தற்கொலைப்படையின் ரகசிய செயல்பாட்டாளர்கள் என அவர் பங்கேற்பாளர்களை குறிபிட்டார். 

கம்பனை அவமானப்படுத்திய சமூகம், பாரதியை அவமானப்படுத்திய சமூகத்தில்  கவிஞர்கள் அவமானப்படுத்தப் படுவதோன்றும் புதிதில்லை எனவும் சொன்னார். 

அவரது படைப்புலகின் பின்னணி குறித்தும் சொன்னார். 

தத்துவங்களை முறையாகப் பயின்றதால் அவற்றின் சாரம் அவர் கவிதைகளில் வருவது இயல்பாக இருக்கிறது என்றும், அவரது எந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தாலும் அது சமகால ஐரோப்பிய கவிதைகளோடு உரையாடும் என்றும் சொன்னார். 

நான் மனுஷ்ஸின் கவிதைகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய கவிதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். 

மனுஷ் என்ற கவிஞர்மீது எனக்கு மரியாதை உண்டு, காரணம் எனது மனைவி அவரது கவிதைகளின் உயரம் குறித்து அழுத்தமாக பேசியிருக்கிறார். அதீதத்தின் ருசி குறித்து அவர் ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார். 

தேர்ந்த ரசனைக்காரர் என்பதால் அவரது நிலைப்பாட்டை என்னுடையதாக எடுத்துக்கொண்டேன். 

எனவே தன் கவிதைகளைக் குறித்தும் தன் படைப்புலகின் பின்னணி குறித்தும் மனுஷ் பேசியது ஒரு தகவலாகவே உள்ளே இறங்கியது. 

எனக்கு அவரது மேடை மொழியும், தன் ஆற்றல் குறித்த ஆழமான புரிதல் வெளிப்பட்ட பேசும் பிடித்துத்தான் இருந்தது. 

தன்னை வெறுப்புடன் சைத்தான் என்று குறிப்பிட்ட ஒரு பெண் கவிஞரின் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் இருந்து எவ்வளவு அமைதியாக அவர் பேசினார் எனபதுதான் ஹைலைட்.

பேச்சின் ஊடாக ராசி அவர்களின் பேச்சை குறிப்பிட்டு ஒரு படைப்பாளியை அணுக வேண்டிய விதத்தை அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டாதாக குறிப்பிட்டார். 

ராசி குறித்து அவர் பேசியபொழுது மூன்று முறை நான் கைகளைத்தட்ட வேண்டியதாயிற்று.

ராசியின் ஆழமான விமர்சனத்தைக் கேட்ட பிறகும் அப்பெண்மணி எப்படி புதுகைக் காரர்களுக்கு பேசத்தெரியவில்லை என்று சொன்னார் என்பது குழப்பமாகவே இருந்தது. 

மனுஷ் கொண்டாட்டம் என்று தெரிந்துதானே வந்தார், வந்த இடத்தில் எதிர்க்கோணத்தில் இருந்து பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது?

புதுகைக்காரர்கள் எப்போதும் அடுத்தவர் மனதை அநாகரிகமாக புண்படுதியதில்லையே?

பல கிலோ மீட்டர்கள் பயணித்து வந்தது முதன்மை விருந்தினர் குறித்து எதிர்மறையாகப் பேசுவதற்குதானா? 

ஏன் இப்படி ஒரு ஆணியைப்  பிடுங்க ஆசைப்பட்டார்? 

அதோடு இல்லாமல் மனுஷ் தான் எழுதிய கேச புராணம் கவிதையைப் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே பொங்கும் கோபத்தோடு மேடையைவிட்டு இறங்கிப் போன நாகரீகத்தை எங்கே கற்றுக் கொண்டார்?

அதோடு இல்லமல் புதுகைக்காரர்கள் வாசிப்பதே இல்லை போல என்று ஒரு குண்டை தூக்கிப் போடவேண்டிய அவசியம் என்ன?

சித்தென்ன வாசல் குழுவின் வயதில் இளைய உறுப்பினரைக் கூப்பிட்டு என்ன என்ன வாசித்திருக்கிறீர் என்று அம்மணி கேட்டிருந்தாலே டரியல் ஆகியிருப்பாரே. 

வெறி பிடித்தமாதிரி படிக்கும் குழு அது. 

சகோ கீதா சொன்னது போல இப்படியும் சில பெண்கள் இருப்பார்கள் அவர்களை நாம் பொறுத்துக்கொண்டுதான் போக வேண்டும். 

சித்தென்னவாசல் இலக்கிய சந்திப்பின் மூன்றாவது நிகழ்வு இது. 

பல விசயங்களைத் புரிந்துகொள்ள உதவியது. 


இது யார் சார்ந்தும் எழுதப்பட்ட பதிவு அல்ல. 

மனுஷ்ய புத்திரனைச் சார்ந்து இருப்பது போல இருந்தாலும், நிகழ்வின் நோக்கமே மனுஷ் கொண்டாட்டம்  என்கிறபொழுது எடுத்துக் கொண்ட நிலைப்பாடு அது. 

மற்றபடி இந்த இலக்கியக் குழுவின் ஒருங்கிணைப்பில் இன்னும் பல நிகழ்வுகள் நல்லபடி நடக்க வேண்டும். 

நான்கு விமர்சனங்களும், ஏற்புரையும் இருந்தால் மட்டுமே நிகழ்வு சிறக்கும். 

இதை விடுத்தது மொய் நோட்டில் மொய் எழுதுவது போல அனைவரும் பேச மேடை ஏறினார்கள் என்றால் அடுத்த நிகழ்வுக்கு  பனிரெண்டு மணிக்குப் போனாலே போதும் என்று சிலரும், ஒன்பதுக்கு போய் பத்துக்கு திரும்பிவிடலாம் என்று சிலரும் முடிவெடுத்துவிடுவார்கள். 



நிகழ்வின் நீளம் ரொம்பவே படுத்திவைத்தது. 

வர வர வீதி நிகழ்வுகளும் நீண்டு கொண்டே போகின்றன. 


அல்லது.
இனி மதிய உணவு ஏற்பாடுகளையும் இவர்கள் சேர்த்தே செய்வது நலம்.


அன்பன் 
மது 


Comments