ஷெர்லாக் ஹோல்ம்ஸ் ஜேம்ஸ் பாண்டாகிறார்



ஆசிரியப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த பொழுது பேரா.ஜம்புநாதன் அவர்கள் தம்பி மூணு வருஷம் ஆங்கில இலக்கியம் படிச்சுட்டுதானே வந்தீங்க?



உங்க நினைவில் இருக்கும் ஒரே ஒரு கவிதைவரியை மட்டுமே சொல்லுங்க என்ற போது திணறிப்போனேன்.

ஒட்டுமொத்த மாணவ அணிக்கும் சேர்த்தே வினவப்பட்ட கேள்வி என்பதால் பதிலில்லா மௌனம் சுட்டது.

படீர் என்றது நண்பர்  மாரியப்ப பிள்ளையின் குரல் "If winter comes can spring be far behind"

எத்துனை இரவுகளை, எத்துனை வலி மிகுந்த தருணங்களை இந்த வரியைப் பிடித்துக்கொண்டு கடந்து வந்திருப்பேன். ஆனால் திடுமென கேட்கப்படும் பொழுது பெக்க பெக்க என்று விழித்தது இன்னும் கொஞ்சம் வெட்கத்தைதந்தது.

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை ரயிலில் போகும் பொழுது எதிர் இருக்கைப் பயணி தன்னுடைய நாவலைப் படித்துக் கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறார்.

நாவலை வாசித்து முடித்த அந்த மனிதர் ரயில் சன்னல் வழியே அதைத்தூக்கி எறிய, அன்றோடு மாத நாவல் எழுதும் பழக்கத்தை நிறுத்தினார் என்று ஒரு செய்தி உண்டு.

ஆம், வாசிப்பின் ஒரு வரியாவது ஒரு சம்பவமாவது வாழ்நாள் முழுதும் நினைவில் இல்லாவிட்டால் எழுதுவதில் என்ன பொருள் இருக்கிறது?

கவிதை என்பது வாசிப்பவர் மனதில் ஒரு அசைவையாவது ஏற்படுத்த வேண்டும்.

இந்த பின்புலங்களோடுதான், இந்த அடிப்படையில்தான் நான் படைப்புகளை நெருங்குகிறேன்.

சச்சின் ஆனந்த விகடன் மூலம் தமிழகம் அறிந்த கவிஞர். சச்சினின் படைப்புகள் தொடர்ந்து ஆ.வியில் வந்துகொண்டே இருக்கின்றன.

பாரதியின் புதிய சொல், புதிய  பொருள் போன்ற தரவுகள் அப்படியே சச்சினின் கவிதைகளில் இருப்பதைக் காணலாம்..

எம்.எஸ்.வேர்டும் எம்.எஸ். எக்சலும் என்கிற கவிதையில் புதிதாக கணிப்பொறி பழகும் கடந்த தலைமுறை அரசுப் பணியாளர்களின் பணிச்சூழல் சவால்களை படம்பிடிதிருந்தாலும், கவிதை தனது தளத்தையும் தாண்டி விரிகிறது.

வாழ்வின் எதிர்பாரத் திருப்பங்களில் சிக்கிக்கொள்கிற பொழுது இரண்டையும் கூட்டி வைத்துவிட்டு பேண்டை நனைத்துக் கொள்கிற சிலரை நான் சந்தித்திருக்கிறேன்.

கவிதையின் கடைசி வரிகள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

//தலையெழுத்து
இவர்களுடன்தான் வாழவேண்டியிருக்கிறது //

குறைகளோடு இருப்பவர்களை அன்ப்ரன்ட் செய்யத் துவங்கினால் அதில் கடைசிப் பெயர் நமதாகத்தான் இருக்கும் என்பது போல வாழ்வின் எளிய உண்மையை பகர்கிறது இந்தக் கவிதை.

தான் செதுக்கிய அம்மனின் சிற்பத்தின் மீது மையல் கொண்டு தேர்க்காலில் மரித்துப்போகும் பொன்னையா ஆசாரி தொட்டிருக்கும் உயரம் அபாரம்.

இந்தக் கவிதையின் கடைசி வரிகள்
//ஊழின் மீது பழி போட்டு
உலகு நடத்தும் அம்பாள்
விரல் நடுங்க வீற்றிருந்தாள் கண்மூடியபடி!//

செக்ஸி ஷாட் என்றதும் பதறும் செல்கடை சித்தப்பு குறித்த அர்த்த மயக்கம், உவமைக்கு கட்டுப்படாத பெண் ஒருத்தி குறித்த கவிதை என ஆங்காங்கெ யுனிவர்சல் ஆடியன்ஸ் கவிதைகள் இருந்தாலும் தொகுப்பில் பல கவிதைகள் மிக அழுத்தமாக காமம் பேசுகின்றன.

இரவின் நிறமப்பிய குளம் என்கிற வரி ஒரு வாவ்.

இரவில் தீரும் பாசிகள் பகலில் குளம் நிறைப்பதாக சொல்கிற கவிதை வெறும் பாசிக் குளத்தை மட்டுமே குறிப்பதல்ல.


//இப்போது நாங்கள்
கோபுரங்களுக்குள் அமர்ந்து
சதவீதக்கனவில் மிதந்தபடி
ஒவ்வொரு செங்கலாக உருவிக்கொண்டிருக்கிறோம்
சரியத் தயாராகின்றன கோபுரங்கள்//

என்கிறது ஒரு இனிய சொல் எனும் கவிதை.

உண்மையில் நான் சச்சினிடம் இருந்து எதிர்பார்ப்பது இதுபோன்ற கவிதைகளைத்தான்.

ஆனால் சச்சின் இப்போதுதான் முப்பதுகளில் இருக்கிறார். இந்தவயதுக்கே உரிய காதலும், காமமும் வழியும் கவிதைகளை எழுதித்தீர்த்த பின்னரே சமூகக் கவிதைகள் வரலாம் என முடிவுகட்டும் முன்னரே பொன்மகளே தேவியம்மா என அன்றாடம் பெண்கள் எதிர்கொள்ளும் பார்வை வன்முறையை காத்திரமாய்ப் பதிவு செய்து அதிரடிகிறார் கவிஞர்.

நேற்று போன நதி இன்று இல்லை என்பது போல சச்சினின் இந்த தொகுப்பு வாழ்வைப் போலவே இருக்கிறது. பக்கங்கள்  புரட்டப்பட புரட்டப்பட கருப்பொருட்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன!

காதல், காமம், மனப்பிறழ்வு காதல், அரசியல் நையாண்டி, எல்லாம் தெரிந்த செல்கடை சித்தப்புக்களை, ஆதிக்கலை தரும் போதையை, முத்தங்களைப் பறக்கவிட்டு குட்டைப் பாவாடையோடு ஆடும் தாயின் ஆட்டத்திற்கு தவில் வாசிக்கும் மகனை, மகன் வயதில் இருக்கும் பயணியின் அருகே அமரத்தயங்கும் பெண்களை பற்றிய கவிதைகள்  எனத் தொகுப்புக்குள் கவர் ஆகியிருக்கும் கருப்பொருட்கள் மிரட்டுகின்றன.

சமூகக் கவிதைகள் என்றால் சமூகக்கவிதைகள் மட்டுமே தொகுப்பை நிறைக்கவேண்டும் என ஒரே ஒரு கருப்பொருளை மட்டுமே வைத்துக்கொண்டு தொகுப்பை உருவாக்கும் போக்கில் இருந்து சச்சின் அனாயாசமாக வேறுபடுகிறார்.

தொகுப்பின் எழுபத்தி ஏழு பக்கங்களுக்குள் அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை என்கிற அளவிற்கு வெரைட்டி விருந்து !

தோழர் தனிக்கொடி அவர்கள் சொன்னது போல சச்சினின் மொழி ஆளுமை, இலக்கியச் செழுமையும் நம்மை மிரட்டுகின்றது.

ஆனால் பாரதி சொன்ன ஓரிரு வருடங்கள் மட்டுமே வாசிப்பு பழக்கம் உள்ளோருக்கு புரிகிறது போல எழுதவேண்டும் என்கிற வழிகாட்டலை சச்சின் முயன்றால்  அவரது புலமையின் வீச்சின் வெளி இன்னும் விரியும்.

சம கால கவிதைப் போக்குகளை, மாறிவரும் மொழிப் நடையை உணர விரும்புவோர்  தவறவிடாமல் படிக்கவேண்டிய தொகுப்புஇது.

படித்தவுடன் தூக்கிப் போட்டுவிடும் தொகுப்பு அல்ல, பத்திரப்படுத்தவேண்டிய தொகுப்பு!

வாழ்த்துகள் சச்சின்

சந்திப்போம்

அன்பன்
மது

Comments

  1. ---- "If winter comes can spring be far behind"------

    ஆங்கிலக் கவிதை என்றாலே நினைவுக்கு வரும் சில வரிகளில் இது ஒன்று. ஷெல்லியின் மகத்துவம்.

    ("I gave commands;)Then all smiles stopped together."

    This would have been my choice. It is said it is a novel in five words.

    ReplyDelete
  2. வணக்கம்.

    விமர்சனம் கவிதைத்தொகுப்பின் அணிந்துரைக்கான தகுதி உடையது.

    உங்களின் அனுபவம் போல் எனக்கும் நிகழ்ந்தது. தெரிந்த பாடலொன்றைச் சொல்லுமாறு அனைவரும் பணிக்கப்பட்டோம்.

    என் முறை வந்ததும் நான் சொல்லி முடித்தவுடன் வகுப்பறைவிட்டு வெளியேறச் சொன்னார் அப்பேராசிரியர்.
    அப்பாடல்,
    “சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
    வெற்றம் பலம்தேடி விட்டோமே-நித்தம்
    பிறந்தஇடம் தேடுதே பேதைமட நெஞ்சம்
    கறந்தஇடம் நாடுதே கண்

    என்னும் பட்டினத்தான் பாட்டு.

    தம

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. மாத நாவலில் சுஜாதா தன் முத்திரையைப் பதித்து இருந்தால் எறியப் பட்டிருக்காதே :)

    ReplyDelete
  4. நல்லதோர் அறிமுகம். நன்றி மது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக