இன்றைய தமிழ் இந்துவில் அதன் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பள்ளிக் கல்வித் துறையில் உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் என்பதாக அய்ந்து அம்சங்களைச் சொல்கிறார். எத்தனையோ மாற்றங்கள் தேவையிருந்தாலும் இவரைப் பொறுத்த வரையில் இந்த அய்ந்து அம்சங்களையும் போர்க்கால அடிப்படையில் சீர் படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. இன்று நாம் பார்ப்பதை விட வேறெந்த மாற்றம் நிகழ்ந்தாலும் - நிகழ்த்தப் பட்டாலும் - அது தேவைப் படக் கூடிய ஒன்றுதான்.
தி ஹிந்து போன்ற பொதுவெளியில் செல்வாக்கு பெற்றுள்ள தினசரிகள் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரிப்பதும், விவாதங்களை முன்னெடுப்பதும் மிகவும் அவசியம். பள்ளிக் கல்வித் துறையின் நிலை அதன் அனைத்து பரிமாணங்களுடன் அத்தனை தரப்பு மக்களிடமும் கொண்டு போகப்பட வேண்டியது அதனுடைய எதிர்காலத்திற்கு இன்றியமையாதது.
ஆங்கில மொழியைக் கற்பிப்பது குறித்தும் சமஸ் தன்னுடைய கருத்தை கவலை தொனிக்க வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆங்கிலமே தெரியாத ஒரு நடிகை சினிமா உலகத்திற்குள் நுழைந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவே சரளமாக ஆங்கிலம் பேசுவதை எத்தைகைய பயிற்சி உறுதி செய்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறார். நல்ல கேள்விதான். கிராமப் பள்ளிக்கூடத்திலும், அப்பள்ளியின் தொடர்ச்சியாக அருகாமையில் இருக்கும் பைசாவிற்கு உதவாத கலைக் கல்லூரியிலோ / பொறியியற் கல்லூரியிலோ படித்து பெங்களூருவிற்கு BPO அலுவலகம் ஒன்றில் பணியாற்றப் போன ஆறு மாதங்களுக்குள் பையன்கள் - பெண்டுகள் எப்படி ஆங்கிலம் பேச முடிகிறதோ அப்படித்தான் அந்த நடிகையும் பேசியிருக்க வேண்டும்.
அப்படியானால், பள்ளிக்கூடத்தில் பனிரெண்டு வருடங்கள் தங்கியிருக்கும் மாணவன் ஆங்கிலம் பேச முடியாமல் போவதெப்படி?
பள்ளிக் கல்வித் துறையில் எத்தனை உயர் அதிகாரிகள் இருக்கிறார்களோ, அத்தனை பதில்கள் இந்தக் கேள்விக்கு இருக்கின்றன. தங்களை ஆங்கிலம் கற்றல் - கற்பித்தல் துறையில் ஒரு expert-ஆக நினைத்துக் கொள்வதால் எந்த உயர் அலுவலரும் இந்தப் பிரச்சினையை யானையை பார்வையற்றோர் புரிந்து கொள்ளும் நிலையிலேயே உள்ளனர். நன்றாக ஆங்கிலம் பேசும் சில நபர்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டு, அந்த நடிகையிடம் தினந்தோறும் பத்து மணி நேரமாவது குறைந்து ஆங்கிலத்தில் அவர்கள் உரையாடுகிறார்கள். அந்த மொழியோடு கூடவே அதற்கான உடல்மொழி - பாவனை - வட அமெரிக்க உச்சரிப்பு என்று பல அம்சங்கள் அந்த நடிகையிடம் கடத்தப் படுகிறது. பெங்களூருவிற்கு வேலைக்குப் போகும் எனது மாணவனும் ஏறத்தாழ இதே போன்ற பயிற்சிக்கு உட்படுத்தப் படுகிறார்.
அண்மையில், எனது மாணவன் ஒருவன் பெங்களூருவில் தனக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்த பயிற்சியாளர் பெண்ணையே காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறான். "இதுதான் ஒருவேளை உனது வாழ்க்கையின் உச்ச பட்ச சாதனையாக இருக்கக்கூடும்" என்று அவனை நான் உரிமையோடு கிண்டலடித்த போது அவன் சொன்னது என்னை பயமுறுத்தியது: "நல்லவேளையாக நமது பள்ளியில் எந்த டீச்சரும் அவ்வளவு சிறப்பாக எனக்கு ஆங்கிலம் சொல்லித் தரவில்லை".
ஆங்கிலம் சொல்லித் தருவதற்கு முதல் மற்றும் அதி பிரதானமான தகுதி ஆங்கிலம் பேசுவதுதான். TRB மற்றும் TET பாஸ் செய்து விடுவதால் ஒருவர் ஆங்கிலம் சொல்லித் தருவதற்கான தகுதியை அடைந்து விடவே முடியாது. ஆனால் சமூக நீதி பங்கப் படாமல் ஆங்கில ஆசிரியர்களை தெரிந்தெடுக்க அரசிடம் வேறு வழியில்லை என்பது உண்மையாக இருக்கலாம். உண்மையாகவே இருக்கட்டும். தெரிந்தெடுக்கப் பட்ட ஆங்கில ஆசிரியர்களிடையே மொழித் திறனை வளர்க்க வழியே இல்லையா? பெங்களூருவில் BPO நிறுவனங்களில் எமது மாணவர்களுக்கு நடக்கும் பயிற்சியை பள்ளிக் கல்வித் துறையால் தெரிந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதங்கள் என்ற கால அளவில் வழங்க முடியாதா? இந்தப் பயிற்சியை தனியார் நிறுவனங்களிடமே கொடுக்கலாம். A+ அல்லது A தரம் அடையும் வரையில் இத்தகைய பயிற்சி ஆசிரியர்களுக்குத் தொடரும் படிக்கு விதிகள் வகுக்கப் பட முடியாதா?
இதை கண்டுகொள்ளாமல், ஆங்கிலமே பேச / எழுதத் தெரியாத ஆசிரியர்களை மாணவர்களுக்கு ஆங்கிலம் நடத்தச் சொல்வது political indifference to a burning issue என்றுதான் தோன்றுகிறது. பாடப் புத்தகத்தை மாற்றினால் நிலைமை மாறாது. இரண்டாயிரம் ரூபாய்க்கு சந்தையில் மலிவாக கிடைக்கும் multimedia சாதனம் ஒன்றைக் கொடுப்பதால் நிலைமை மாறாது. இதன் ஒப்பந்ததாரர் பயனடைவதைத் தவிர.
நான் அடிக்கடி சொல்லுவேன். கணக்கு வாத்தியார் கணக்கு மொழியைப் பேசுகிறார். அறிவியல் வாத்தியார் அறிவியல் மொழியைப் பேசுகிறார். தமிழ் ஐயா தமிழ் மொழியைப் பேசுகிறார். ஏன் இங்கிலீசு வாத்தி மட்டும் தமிழ் மொழியை மட்டுமே பேசுகிறார்.
சமஸ், இதைப் பற்றி முழுப் பக்க அளவில் தொடர்ந்து முப்பது நாட்கள் நடுப்பக்கத்தில் எழுதுங்கள். முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, பள்ளிக் கல்வித் துறையின் முப்பது பெரியவர்களுக்காவது இத்தகைய முயற்சியின் முக்கியத்துவம் தெரியட்டும்.
இல்லையென்றால், எல்லாம் நாசமாகப் போகட்டும்.
----
கட்டுரை ஆசிரியர் முதுகலை ஆங்கில ஆசிரியர், தேர்ந்த திரை விமர்சகர், நல்ல இலக்கியவாதி,
ஆங்கிலம் கற்றுக் கொள்ள இயலாமையால் தமிழ்வழி மாணவர்களின் அவதி கொள்வது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது. ஆங்கிலவழியில் படிக்கவில்லை என்ற ஏக்கம் பிபிஓ துறையில், மென்பொருள் துறைகளில் இருக்கும் பணியாளர்களுக்கும் இருக்கும்.
ReplyDeleteநல்லதோர் கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteசரிதான் ,கார் ஓட்டத் தெரிந்தவன்தானே அடுத்தவருக்கு கார் ஓட்டச் சொல்லித் தரமுடியும் :)
ReplyDeleteதமிழ் வழியில் பயின்று கல்லூரிக்குள் நுழைந்தபோது தாழ்வு மனப்பான்மையில் கூனிக் குறுகி நின்றேன். ஆங்கில வழியில் பயின்று வந்தவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசியதைக் கண்டு வியப்புடன் பார்த்த நான் கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகு ஆங்கிலம் பேச வேண்டிய ஒரு வேலையில் அமர்ந்த பிறகே கண்டு பிடித்தேன்.... சரளமாக பேசியவர்கள் அனைவரும் தப்பும் தவறுமாக பேசி வந்திருக்கிறார்கள் என்று!
ReplyDeleteபதிவரின் கருத்துரைப்படி ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் பேச கற்றுக் கொடுப்பதே சாலச் சிறந்தது. கல்வி முறையில் மாற்றம் அதனையும் அடக்கியதாகத்தான் இருக்க வேண்டும். பாட முறை மாற்றம் மட்டுமே பலன் கொடுக்காது.
நல்ல பகிர்வு!
ReplyDelete