பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2017


அப்பாடா

ஒருவழியாகத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. 

ஐம்பத்தேழு பேர் எழுதிய தேர்வில் ஐம்பத்தி நான்கு பேர் தேர்ச்சி. 

வழக்கம் போல பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை நிர்ணயிப்பது எனது பாடத் தேர்ச்சிதான். (ஆங்கிலம்)

அந்த மூன்றுபேர் ..

முதலாமவள் கற்றல் திறன் குறைவுடைய மாணவி. உடல் செயல்பாடுகளே சவால்தான்,  ஆனால் நம்பவே முடியாத அளவு பள்ளிக்கு ஒழுங்காக வருவாள். மொழிப்பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை. வருத்தம்தான்.

இரண்டாவது பையன் 

மற்ற மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களைக் கவர்ந்து சமோசாக் கடையில் போட்ட புண்ணியவான். ஒருநாள் கூட  பேனாவுடன் வரமாட்டார். வாங்கிக் கொடுத்தாலும் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிடுவார். ஆனால் ஒரே நாளில் இவர் பலகாரக் கடையில் செலவிடும் தொகை அறுநூற்றி ஐம்பது ரூபாய். தாயாரை அழைத்து விளக்கம் கேட்ட பொழுது உங்கள் பள்ளி என்ன பெரிய டுமாங்கி பள்ளியா, டி.சி கொடுங்க நான் வேற பள்ளிக்கு போறேன் என்று டி.சி வாங்கிகொண்டு போனவர். பயலின் திறமைக் கண்டு அரண்ட வேறு பள்ளிகள் எதுவும் சேர்க்கை அளிக்கவில்லை. மீண்டும் வந்தார்.  ஆச்சர்யப் படும் விதமாக மற்ற மூன்று பாடங்களிலும் தேர்ச்சி. மொழிப் பாடங்களைத் தவிர. 

மூன்றாமவர் 
பள்ளி என்பது நண்பர்களின் ஒன்றுகூடல், இங்கே போய் இந்தப் பாடு படுத்துரான்களே என்பவர். வேறு வழி, மொழிப்பாடமும் கணிதமும் காலைவாரி விட்டன. 

ஏனைய 
மதில் மேல் பூனைகள் வெற்றிகரமாக கடந்துவிட்டன. எனவே சேதாரம் அதிகமில்லை. 

பொதுவாக தேர்வுக்கு மாணவர்கள் சென்றவுடன் முற்றாக அவர்களைப் பற்றி மறந்துவிடுவது எனது பாணி. 

எனது உழைப்பைக் கொடுத்தாயிற்று எனவே பலன் அதற்குத் தகுந்தார்போலதான் வரும் என்கிற மனப்பான்மைதான் காரணம். 

கல்வித்துறைச் செயலரின் அறிவிப்பையும் மீறி இரவு எட்டு மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தியது தேர்ச்சி விகிதத்திற்கு ஒரு முக்கியக் காரணம். 

மாநிலத்தில் சில பள்ளிகளில் நிகழ்ந்த விரும்பத் தகாத  சம்பவங்களினால்தான் செயலர் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

தேர்வு நேரத்தில் ஏன் சிறப்பு வகுப்பு நடைபெறுவது அவசியம் என்பது பலருக்குப் வியப்பான கேள்வியாக இருக்கலாம். 

எங்கள் மாவட்டத்தில் பெற்றோரிடமும், மாணவரிடமும் கல்வி குறித்த விழிப்புணர்வு இருக்கும் கிராமங்கள் தனித்துத் தெரியும். 

அந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் எப்போதும் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாவே இருக்கும். ஏன் முழுத்தேர்ச்சி பள்ளிகளாக இருக்கும். 

இன்னும் சில கிராமங்கள் கல்வி தரும் சிறகுகளை நம்பவே இல்லை. நாளை முளைக்கும் சிறகுகளை விட இன்று கிடைக்கும் கூலி பெரிது என்கிற கிராமங்கள் இன்றும் இருக்கின்றன. 

ஆறாம் வகுப்பு வரை ஒழுங்காக பள்ளிக்கு வந்த ஒரு மாணவனை அவனது தாயார் அழைத்துச் சென்று விட்டார். 

அவனுக்குத் தரப்பட்ட பணி கிளிகளைப் பிடித்து விற்பது. அவனது தந்தை மொடாக்குடியர். 

நிறை போதையில் பள்ளிக்கு வந்து மகனைப் பார்த்துவிட்டு வகுப்பின் எதிரே இருக்கும் செடியின் அருகே சென்று கைலிக்குள் இருக்கும் மது புட்டியை எடுத்துக் குடித்துவிட்டு அங்கேயே போடுவார். 

யாருமே ஒன்றும் கேள்வி கேட்க முடியாது. நேரிடையாக உயர்த்திப் பிடித்த அரிவாளோடுதான் பேசுவார். 

இப்படி ஒரு அப்பா இருந்தால் பையன் எப்படி பள்ளியில் தொடர முடியும். 

சில நாட்கள் கழித்து பள்ளியில் இருந்து வரும்பொழுது பார்த்தேன் புதிதாகப் பிடிக்கப்பட்ட கிளிகளோடு ராஜா போல நிமிர்த்து நடந்து வந்துகொண்டிருந்தான். உலகின் கர்வம் அனைத்தையும் கோர்த்து என் மீது ஒரு பார்வையை வீசியபடியே பின்னால் சென்றுகொண்டிருந்தார் ராஜா மாதா. 

இவர்களுக்கு கல்வி குறித்து சொல்லி வெட்டுப்பட்டு சாக யாருக்கும் விருப்பம் இல்லை. (பலமுறை பெண் ஆசிரியர்கள் பேசிப்பார்த்தும் நடக்கவில்லை, மேலும் அடிக்கடி அவனது தந்தை சாராய வாசனையுடன் வந்து  அவர்களுக்கு கொலை நடுக்கத்தை தரவும் வேறு வழியே இல்லாமல்தான் கைவிட்டோம்) 

இந்த ஒரு சம்பவமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எந்தமாதிரி சவாலான சூழல்களில் பணியாற்றுகிறார்கள் என்பதை  சொல்லும். 

இருப்பினும் இன்னும் சில சம்பவங்கள்

கறிச்சோறு 

ஒருமுறை சிறப்பு வகுப்பின் பொழுது ஒரு மாணவர் மாயமாக மறைந்துவிட்டார். 

எங்கடா என்றால் பள்ளியின் எதிர்புறம்தான் அவன் வீடு எனவே பயல் அப்ஸ்கான்ட். 

நேரே வீட்டிற்கு போனேன். 

வீட்டில் என்னைப் பார்த்ததும் பேந்த பேந்த விழித்துக் கொண்டு நின்றான் அவன்.

என்னடா, எதுக்கு வந்த?

சார், கறிச்சோறு சார்.... 

வாய் நிறைய சோற்றுடன் நின்றுகொண்டு 

மீண்டும் மீண்டும் சொன்னான் அவன் 

கறிச்சோறு சார், கறிச்சோறு சார் 

வெகுநாட்கள் கழித்து அவனை தொடர்வண்டி நிலையத்தில் பார்த்தேன். 

டேய் கறிச்சோறு என்ன பண்ற?

பல்தொழில்நுட்பக் கல்லூரியில்  பயிற்சி.

 மகிழ்ச்சி. 

சம்பவம் 2 கூத்து 

டேய் எங்கடா மூணுபேர காணோம்?

சார்  பக்கத்து ஸ்கூல்ல ஆண்டுவிழா டான்ஸ் பாக்கப் போயிட்டானுக. 

வேறு வழி, அவ்வளவு கூட்டத்திலும் நான் வருவதைப் பார்த்தவுடன் ஒழுங்காக பள்ளிக்கு வந்தனர். மறுநாள் அரசுத்  தேர்வு. 

2008 என்று நினைக்கிறன், தனி ஒருவனாக நான் துவக்கிய சிறப்பு வகுப்பு நிகழ்வு இது. கட்டிடங்களே இல்லாத நிலையில் நான்கு குழல் விளக்குகளை பெற்றோர்  ஆசிரியர் கழகத் தலைவர் வழங்க, தலைமை ஆசிரியர் திரு.மோகன் அவர்கள் இரண்டு குழல்விளக்குளைத் தந்து ஆரம்பித்துவைத்த நிகழ்வு இது. பெற்றோரின் வற்புறுத்தலால் கைவிட முடியாத  நிலையில்  தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

என் பள்ளி இருக்கும் பகுதியில் மாணவர்களின் மனநிலையை நன்கு உள்வாங்கியதால் முன்னெடுத்த நிகழ்வு இது. 

முதல் ஆண்டே பதினான்கு சதவிகிதம் வித்தியாசத்தில் தேர்ச்சி பெறவே இன்றுவரை தொடர்கிறது. 

என் மாணவர்களின் மனப்பாங்கு நன்றாகத் தெரிந்ததால்தான் இந்த முடிவை எடுத்தேன். 

பள்ளியிலேயே பாதிப் பேர்  புத்தகத்தைத் தொட மாட்டார்கள். இந்த நிலையில் தம்பி ஸ்டெடி லீவ், எல்லாம் வீட்லேயே படியுங்கள் என்றால் ரிசல்ட் பணால் ஆகிவிடும் என்பதும் புரிந்ததால்தான் இந்த முடிவை எடுத்தேன். 

இரண்டாம் ஆண்டு எனது பாணியில் வகுப்பைத் தொடர முடியவில்லையே ஒழிய, சக ஆசிரியர்கள் அனைவரும் கரம் கோர்க்க ஒரு கூட்டு முயற்சியாக மாறி ஆக்கபூர்வமான பணியாக உருப்பெற்றுவிட்டது இந்த இரவு சிறப்பு வகுப்பு. 

என்னுடைய பாடத்தின் தேர்ச்சி விகிதம் எனக்கு மகிழ்வைத் தரவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என்றால், முதல் காரணம் இந்த இரவு வகுப்பும் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். 

உண்மை அதுதான். நான் கொடுக்கிற உழைப்பிற்கு இது ரிசல்ட் அல்ல. ஆயிரம் ரூபாய் செலவழித்து ஐந்து ரூபாய் பொருளை வாங்கினால் மகிழ்வா இருக்கும்? 

சிறப்பு வகுப்பிற்காக   இரண்டு மாதங்களாவது (இரவுகளில்) நான் மாணவர்களிடம் இருக்கிறேன். ஆனால் அதற்குரிய தேர்ச்சி இதுவல்ல. 

மாணவர்களைப் படியுங்கள் என்று சொல்லவதைவிட தேர்வுகளை நடத்துவதுதான் சரியாக இருக்கிறது. இந்த ஆண்டு வந்த ரிசல்டுக்கு பின்னர் இரவு வகுப்புகளில்  வைக்கப்பட்ட முப்பது தேர்வுகள் இருகின்றன. இந்த டரில் அவசியமாகிறது. 

படித்தே ஆக வேண்டுமா அதை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள், இங்கே தேர்வு மட்டுமே என்கிற நிலையில்தான் மாணவர்களை நிர்வகிக்க முடிகிறது. 

மாணவர்கள் மனப்பாங்கும் மாறிக்கொண்டே வருகின்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பண்புகள் பல இன்று இல்லை. 

வெகு எளிதாக பள்ளிப்  பொருட்களை உடைக்கிறார்கள், தீய விசயங்களில் ஈடுபடுகிறார்கள். 

பத்து ஆண்டுகளில் இதைப்போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை திகைக்க வைக்கும் அளவில் பெருகியிருக்கிறது. 

மிக நன்றாகப் படிக்கும் மாணவர்கூட இதைப்போன்ற காரியங்களில் ஈடுபடுவது சோர்வூட்டுகிறது. 

ஸ்மார்ட் போன், மெமரிக்கார்ட், மடிக்கணினி போன்றவற்றின் வருகைக்கு பின்னர் மாணவர் மனநிலையிலும், செயல்பாட்டிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பல்வேறு சவால்கள் இருந்தாலும், பெரும் மன அழுத்தங்கள் ஏற்பட்டாலும் இரவு வகுப்புகள் தொடர்ந்தே ஆகவேண்டிய  கட்டாயம் இருகின்றது. 

மாணவர்களே கைப்பட எழுதியிருக்கிறார்கள், அதைப் பின்னர் பகிர்கிறேன். 

இப்போதைக்கு ஆழ இழுத்து ஒரு பெருமூச்சு போதுமானதாக இருக்கிறது. 

சந்திப்போம்
அன்பன் 
மது 

Comments

  1. நீங்கள் பட்ட பாடு வீண் போகவில்லை !
    உங்களின் சிரமங்களை அரசும் புரிந்து கொண்டு ஒத்துழைத்தால் ,தேர்ச்சி விகிதம் கூடும் !

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்நண்பரே

    ReplyDelete
  3. உங்கள் விரிவான பதிவின் மூலம்
    உங்கள் பணியின் பால் கடமையை
    மீறிய நேசம் உங்களுக்கு இருப்பதை
    தெளிவாய்ப் புரிந்து கொள்ள முடிகிறது
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சேவை தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. அரசு ஆசிரியர் பணி சவாலானது. சமூக அக்கறையுடனும் உண்மையான் ஈடுபாட்டோடு செய்பவர்கள் மிக சிலரே. அந்த வகையில் நீங்கள் செயல்படுவது பாராட்டுக்குரியது.
    தேர்வுப் பயிற்சிக் களமாக மட்டுமே பள்ளிகள் விளங்குகிறது. பல உயர் நிலை மேல் நிலைப் பள்ளிகளை கடந்து செல்லும்போது கவனித்தது என்ன வெனில் எப்போதும் மரத்தடியிலோ வகுப்பறையிலோ தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அல்லது இடைவெளி விட்டு அமர வைத்து மாணவர்களை படிக்க சொல்லி மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கற்பித்தல் நிகழ்வுகள் நடைபெறுவதாகவே என் கண்ணில்படவில்லை.

    ReplyDelete
  6. நாம் பல வருடங்கள் முன்பு பார்த்த விஷயம் எப்படி இருந்ததோ அவ்வாறு தான் இன்றும் இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தேன். மாணவர்களின் இன்றைய நிலையை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

    ReplyDelete
  7. கஸ்தூரி! உங்கள் உழைப்புக்கு முதலில் பெரிய பூங்கொத்து + குடோஸ்!! வாழ்த்துகள்! உங்களைப் போன்று அரசுப்பள்ளிகளில் வேலைபார்க்கும் அனைத்து ஆசிரியர்களும் இருந்துவிட்டால் நம் அரசுப்பள்ளிகள் எங்கோ போய்விடும்!

    நீங்கள் சொல்லியிருக்கும் சவால்கள் மிகப் பெரிய சவால்கள்! கிராமங்களின் நிலைமை புரிகிறது.

    //முதலாமவள் கற்றல் திறன் குறைவுடைய மாணவி. உடல் செயல்பாடுகளே சவால்தான், ஆனால் நம்பவே முடியாத அளவு பள்ளிக்கு ஒழுங்காக வருவாள். மொழிப்பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை. வருத்தம்தான்.// என் மகனை-உங்கள் மருமகப்பிள்ளையை நினைவுப்படுத்தினாள் இந்த மாணவி! மொழிப்பாடம் என்பது அவனுக்குச் சவாலாக மட்டுமில்லை எந்த ஒரு தேர்வையும் எழுதுவது என்பதும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த மாணவிக்கு உங்கள் ஊக்கம், அக்கறை கிடைத்திருக்கிறது. ஆனால் வீட்டில் புரிதல் இல்லாததால் பாவம் தேர்ச்சி பெறவில்லை என்றே தெரிகிறது. மகனுக்குப் பள்ளியில் ஊக்கம் கிடைக்கவில்லை ஆனால் வீட்டில் எங்களது சப்போர்ட் அவனுக்கு இருந்தது அவனும் எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொண்டுவிட்டான்...

    உங்கள் உழைப்பும்சேவையும் பிரமிக்க வைக்கிறது. தொடர வாழ்த்துகள்...

    கீதா

    ReplyDelete
  8. கஸ்தூரி ஒரு சின்ன சஜஷன் நீங்களுமே யோசித்திருப்பீர்கள். இந்தச் சிறப்பு வகுப்புகளைத் தேர்விற்கு முன்பு வைப்பதை விட ஆண்டுத் தொடக்கத்திலிருந்தெ அதாவது ஒரு மாதம் ஆன நிலையில் கொஞ்சம் பாடங்கள் நடந்திருக்கும் இல்லையா அப்போதிருந்தே 8 மணி வரை என்றில்லாமல், வாரத்தில் மூன்று நாட்கள், ஏனென்றால் விளையாட்டுகளில் உள்ள மாணவர்கள் அதிலும் பங்கு பெற வேண்டுமில்லையா அதானல் வகுப்புகள் முடிந்ததும் ஒரு இரண்டு மணி நேரம் என்று வைத்தால் சரியாகாதோ...அன்றன்றைய பாடங்கள் என்று வந்தால் கொஞ்சம் மாணவர்களுக்கும் எளிதாகும் இல்லையோ? ஜஸ்ட் எ சஜஷன். ஆசிரியராகிய உங்களுக்குத்தான் இது பற்றி இன்னும் அனுபவம் அதிகம்...

    கீதா

    ReplyDelete
  9. இவ்வாறான அனுபவங்கள் நம் மனதிற்கு மகிழ்வினைத் தரும் என்பதில் ஐயமில்லை. அதனைப் பகிரும்போது மேலும் சுகமாக இருக்கும் என்பதே உண்மை.

    ReplyDelete
  10. அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மாப்பிள்ளை போல் இருந்த காலம் மலையேறி விட்டது என்பதைஉங்களின் பதிவு காட்டுகிறது. உண்மை. நாம் படித்த காலத்தில் ஆசிரியர்களும் கடுமை காட்டியதில்லை. மாணவர்களும் அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் இப்போது கல்வி என்பது கடினமான விஷயமாக மாணவர்களால் பார்க்கப்படுகிறது. உங்கள் அனுபவத்தை வியப்புக்குரியதாக நான் பார்க்கவில்லை.

    ஏனென்றால் இதை விட மோசமான பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் அனுபவம் நான் அறிவேன். சிறப்பு வகுப்பு எடுத்தும் உழைத்தும் மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள் என்றால் பெற்றோரும் சமூகமும் சரியில்லை என்றுதான் அர்த்தம். யாரை திருத்த? குடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு நம்மை ஆளும் வரை பெற்றோரும் சமூகமும் அப்படிதான் இருப்பார்கள் . எல்லாம் திருந்தினால் மாணவரும் நலமாவார்.

    இருந்தாலும் உங்கள் முயற்சி வீண் போகவில்லை . உங்கள் மாணவர்கள் அதிக பட்சம் வெற்றி அடைந்திருக்கிறார்கள். பாராட்டுகள்.
    உங்களை போன்ற நல்லோர் ஊரில் கொஞ்சம் இருக்கிறார்கள். அவர்களும் உழைத்தால் நல்ல மாணவரை உருவாக்கலாம்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக