கண்ணேநலமா - கண்ணாடி பவர் குறைபாடுகள்





Rohini Krishna
12 hrs ·
#கண்ணேநலமா - கண்ணாடி பவர் குறைபாடுகள்By டாக்டர்.ரோஹிணி கிருஷ்ணா



25 வயதான சத்தியமூர்த்திக்கு கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. வளைகுடா நாடொன்றில், பெரிய தொழில் நிறுவனத்தில், வேலைக்கான நேர்காணல். எல்லாம் வெற்றிகரமாக முடிந்து இறுதியாக மெடிக்கல் செக்கப். உடல், இரத்தப் பரிசோதனைகள் நன்றாகவே முடிந்தன. இறுதியாகக் கண் பரிசோதனை.

முதலில், இடது கண்ணை மூடி, வலது கண்ணால் படிக்கச் சொன்னார்கள். அடுத்ததாக, இன்னொரு கண்ணை மூடிப் படிக்கும் போது தான், சத்தியமூர்த்திக்கு, அதிர்ச்சியாக இருந்தது. பெரிய எழுத்துக்கள் இரண்டு மட்டுமே தெரிந்தன. அடுத்து இருந்த ஐந்து வரிகளும் தெரியவில்லை.
“பரவாயில்லை. எங்கள் தொழிற்சாலையில், கண்ணாடி அணியத் தடையேதும் இல்லை. கண் டாக்டரிடம் பரிசோதித்து, கண்ணாடி அணிந்து வாருங்கள் . ஆனால், கண்ணாடி அணிந்து முழு சார்ட்டையும் படிக்க வேண்டும்”

கண் மருத்துவமனையில், சத்தியமூர்த்திக்கு, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வலது கண் முற்றிலும் நார்மலாக இருந்தது. இடது கண்ணில் ஆஸ்டிக்மாடிசம் பவர், [ஒரு தளப் பார்வை அல்லது சிலின்ட்ரிகல் பவர்] இருந்தது. ஆனால் அதற்குரிய கண்ணாடியைப் போட்டாலும் கடைசி நாலு வரிகள் தெரியவில்லை.

மிகச்சிறு வயதிலிருந்தே ஒரு கண்ணில் பவர் [குறைபாடு] இருந்து, அது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் போது, அந்தக்கண், “சோம்பேறிக்கண்” ஆகி விடுகிறது. பார்வைக்குறைபாடுள்ள கண், உபயோகிக்காமல் இருப்பதாலேயே, பார்வை நரம்பு சுணங்கி விடும்.

“டாக்டர், லேசர் அல்லது ஏதாவது அறுவை சிகிச்சை செய்து குணமாக்க முடியுமா?”

“முடியாது. கண்ணாடியால் தெரிகின்ற பார்வைத்திறனையே லேசர் முறையால் கொடுக்க முடியும். சிறுவயதில் கண்டுபிடித்துப் பயிற்சி அளித்தால் மட்டுமே, சோம்பேறிக்கண்ணில் முன்னேற்றம் தெரியும்.”

எல்லாக் குழந்தைகளுக்குமே மூன்று வயதிலிருந்து, ஒவ்வொரு வருடமும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள், தொலைக்காட்சி அருகில் சென்று பார்ப்பது, ஒரு குறிப்பிட்ட பக்கமாகவே தலையைத் திருப்பி தொலைக்காட்சி பார்ப்பது, கண்ணைச் சுருக்கிப் பார்ப்பது, அடிக்கடி தலைவலி, பள்ளியில் மதிப்பெண் குறைந்து கொண்டே வருவது, படிப்பில் நாட்டமின்மை இவை எல்லாமே, பார்வைக் குறைபாடுகளின் அறிகுறிகளாக இருக்கலாம். முக்கியமாக, சோம்பேறிக்கண் (amblyopia) கண் பரிசோதனையின் போதுமட்டுமே தெரிய வரும்.

கண்ணாடி அணிவது ஒரு குறையில்லை. ஆனால், கண்ணாடி அணிந்தும், முழுப்பார்வை ஒரு குழந்தைக்குக் கிடைக்கவில்லையென்றால், சரியான நேரத்தில், பரிசோதனை செய்யாததே காரணம்.

எல்லாப் பள்ளிகளும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒவ்வொரு வருடமும், மாணவர்களுக்குக் கண் பரிசோதனை நடத்த வேண்டும்.

பள்ளிப் பரிசோதனைக்கு ஆசிரியர்களுக்கே பயிற்சி அளிக்கலாம். மிக எளிமையான பயிற்சி. கண் பரிசோதனைக்கான ஸ்னெல்லன் சார்டுகள் , மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. வருட ஆரம்பத்தில், ஒரேயொரு பீரியடை இதற்காக செலவழித்து, வகுப்பாசிரியையே , கடைசி வரியை, ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து, படிக்காத குழந்தைகளைக் கண்டறிந்து, கண் பரிசோதனை செய்து கொண்டு வர அறிவுறுத்தலாம்.

இது குழந்தைகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட, முக்கியமா விஷயமல்லவா?
கண்ணாடிக் குறைபாடு- refractive error பெரும்பாலும் ஜீன்களின் மூலமாகவே வருகிறது. சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுவது, கிட்டப்பார்வை [myopia], என்னும் மைனஸ் பவர். இதில், பவருக்கேற்ப, சிம்பிள், காம்பவுன்ட், ஆஸ்டிக்மாடிசம் என பல வகைகள் உள்ளன. எட்டப்பார்வை என்னும் hypermetropia, ப்ளஸ் பவர் பொதுவாக ,பெரியவர்களுக்கு, நாற்பது வயதுக்கு மேல் ஏற்படுவது என்றாலும், அரிதாக, குழந்தைகளுக்கும் இருக்கலாம். நாற்பதுகளில், கண்ணில் உள்ள லென்ஸைச் சுற்றியுள்ள, சுருங்கி, விரியும் தன்மையுள்ள, அக்காமடேடிவ் தசைகள் தளர்ச்சியுறும்போது, வெள்ளெழுத்து எனப்படும் ,presbyopia ஏற்படுகிறது. இது இயற்கையான மாற்றம்.

“கொஞ்ச வருடங்கள் வெள்ளெழுத்து கண்ணாடி போட்டிருந்தேன். இப்போது, கண்ணாடி இல்லாமலே எழுத்து மறுபடியும் தெரிகிறது” இப்படிச் சொல்பவர்கள், இந்த இரண்டு விஷயங்களை தயவு செய்து பரிசோதித்துக் கொள்ளவும்.
1.இரத்தச்சர்க்கரை அளவுகள். [டயபடீஸ் ஆரம்பம்]
2.கண்புரை என்னும் காடராக்டின் ஆரம்பம்.

பொதுவாக குழந்தைகளுக்கு பவர் இருக்குமாயின், கண்ணாடி அணிவதே சிறந்தது. முழு நேரம் அணிய வேண்டும். அவ்வப்போது, கண்ணாடிக்கடையில் கொடுத்து, லூசாகிவிட்ட,ஃப்ரேமை டைட் பண்ணிக் கொள்ள வேண்டும். சரியாகப் பொருந்தாத, ஃப்ரேமும் தலைவலியை ஏற்படுத்தும். அவ்வப்போது, கண்ணாடியை சுத்தமான நீரில் கழுவி, வெள்ளைத்துணியால் துடைத்து, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பதினேழு வயதுக்கு மேல், குழந்தைகளுக்கு, கண்ணாடி அணிய விருப்பமில்லாவிட்டால், கான்டாக்ட் லென்ஸ் அணியலாம். இதிலும் வருட, மாத, உபயோகங்களுக்கு, மற்றும் கலர் லென்ஸ் என்று பல வகைகள் உள்ளன. லென்ஸை கிருமித் தொற்றில்லாமல் சுத்தம் செய்து பராமரிப்பது, அத்தியாவசியம்.

குழந்தைகளுக்கு வளர்ச்சி இருக்கும் வரை, அதாவது 18,19 வயது வரை, கண்ணாடி பவர் ஏறிக்கொண்டு தான் இருக்கும்.[ கண்ணின் நீளமும் அதிகரிப்பதால்]. இதில், கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. உணவு மற்றும் மற்ற கட்டுப்பாடுகளால், பவர் ஏறுவதைத் தடுக்க முடியாது. ஒருவருடைய, இறுதி பவர், மரபணுக்களில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.

பவர் நிலையான பிறகு, 18 வயதுக்கு மேல், கண்ணாடி அணிய விருப்பமில்லாதவர்களுக்கு, லேசர் சிகிச்சைகள் மற்றும், அதிக பவருக்கு, வேறுசிகிச்சைகள் உள்ளன. கண்கள் இந்த சிகிச்சைகளுக்கு பொருந்தி வந்தால் மட்டுமே இவற்றை மேற்கொள்ள முடியும்.

பொதுவாக, கண்ணின் விழித்திரை மற்றும் நரம்புகளின் ஆரோகியத்திற்காக, கேரட், பச்சைக் காய்கறிகள், கீரைகள்,[அரைக்கீரை, முளைக்கீரை போன்றவை தவிர, பொன்னாங்கண்ணி, முருங்கை, அகத்திக்கீரை, சண்டிக்கீரை போன்றவை மிகவும் நல்லது ], கொடுக்க வேண்டும். இந்த வைட்டமின் சத்துகளை இரைப்பை உறிந்து கொள்வதற்கு ஏதுவாக, புரதச்சத்துடன் [பருப்பு, பால், முட்டை, தயிர்] ஆகியவற்றுடன் கொடுக்க வேண்டும்.

மூன்று வயது முதலே, எல்லாக் குழந்தைகளுக்கும் வருடமொருமுறை கண் பரிசோதனை செய்து, அவர்கள் எதிகாலத்தைச் சிறக்கச் செய்யுங்கள்.

Dr. Rohini krishna

Comments

  1. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு நண்பரே
    எனது மகனுக்கு, அவர் ஆறாம் வகுப்புப் படிக்கும் பொழுது, பள்ளிக்கு வந்து கண் பரிசோதனை முகாம் நடைபெற்றபோதுதான், என் மகனுக்கு சோம்பலுற்ற கண் என்பதை அறிந்து திகைத்தேன்.
    இன்றும் கண்ணாடி அணிந்து கொண்டுதான் இருக்கிறார்.

    ReplyDelete
  3. நல்ல விடயம்

    ReplyDelete
  4. ஆளும் சோம்பேறி ,கண்ணும் சோம்பலுற்ற கண்ணா:)

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வு!

    கீதா: என் கணவருக்கு அசிட்டிக் மேட்டிஸம் வந்து சரியாகிவிட்டது...

    ReplyDelete

Post a Comment

வருக வருக