எய்தவன்


என்பதற்கு இலக்கணம், சரியாக, ’கடவுள்’ என்னும் கற்பிதம்தான். தோற்றுப்போன இயேசுவும் தான் குறித்ததை எய்தினார் என்று அறிவோம். இந்தப் படத்தில் கடைசி ‘ஷாட்’, ஆனால் ஆகாயத்திலிருந்து இல்லை; நாயகனின் முன்வசத்திலிருந்து. நாயகன் + மாணவ நண்பர்கள் சுவராகி மறைக்க, அவர்கள் முதுகுக்குப் பின்னால் அது நேர்கிறது. எய்துதல், ஆகவே திண்மையிலானது இல்லை, தன்மையிலானது.



அது காரணவன் என்று அர்த்தமாகாதா?

||யானை பிழைத்தவேல்|| எறிந்தவனும் காரணவன்தானே? இவ்வாறிருக்க, ||கான முயலெய்த அம்பு|| என்று ஏன் சொல்லப்பட வேண்டும்? ’இயற்கையெய்தினார்’ என்றால் அது விளைவா? வினைமூலமா?

”ஆசையே துன்பத்தின் வினைமூலம்.” இது பழைய ஃபார்முலா. இன்னும் 3 மதிப்பெண் உயிரியலில் பெறுமளவுக்கு தான் படித்திருக்க வேண்டும் என்று அந்தச் சிறுபெண் (நாயகனின் தங்கை) உணர்ந்து சொல்கிறாள். பெற்றிருந்தால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். கிடைக்கவில்லை. அப்புறமும் அவள் மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றாக வேண்டும் என இவர்கள் முயல்வது ‘ஆசை’யைத் துரத்துதல். அப்படித்தானே? அங்கேதான் கல்விவாணிபம் தொடங்குகிறது. இடைத்தரகர்கள் வருகிறார்கள்.
தில்லி AIIMS-இல் சேலம் சரவணன் கொல்லப்பட்டதோ, சென்னை கீழ்ப்பாக்கத்தில் டாக்டர் சத்யா கழுத்தறுபட்டதோ இன்ன காரணத்தால் என்று நிரூபிக்கப்படாத போதும், ஓர் ஊழல் ஒளிந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்க இடமிருக்கிறது. கல்வி, இப்படி, கொலைத்தொழிலுக்குள் வந்துவிட்டது.

ஆசை, பணம்பறித்தல், ஏமாற்று, கொலை இவை நமக்கு, இன்று, அறிந்த நிரந்தரம். அது பற்றியதே இந்தப் படம். எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்சனை என்னவோ உள்ளதுதான், ஆனால் சம்பவங்கள் புனையப்பட்டவை. “கத்தி” போன்ற படங்களிலும் பிரச்சனை இப்படி உள்ளபடி உள்ளதுதான், ஆனால் அதற்கான தீர்வுதனை எய்த இடைப்படும் சம்பவங்கள் அனைத்தும் புனைவுகள். அவ்வளவுக்கு இல்லை இந்த “எய்தவன்” படத்தில், என்றாலும் புனைவுகளே. பயிற்சியற்றவன் துப்பாக்கி பிடிக்கிறான் என்பதே புனைவுதானே?
நாயகனின் தங்கை மடிந்துபோவது கொலையா விபத்தா எனத் தெளிவித்தல் (இடைவேளை) அர்த்தமுள்ளதொரு திருப்பம். த்ரௌபதிக்கு இழிவு நேர்ந்தது கௌரவர்களாலா? தர்மனாலா?

ஆமாம், படத்தில் உள்ள குணவார்ப்புகள் எல்லாம் மகாபாரதக் கேரக்டர்களே: கிருஷ்ணன், தர்மன், கர்ணா, கௌரவ் என. இது, எழுத்தாள இயக்குநர்க்கு, தனது படத்தின் கதைமாந்தர்களை எழுதி உருவாக்க ஓர் எளிய வழி. இதனால், கருணா தற்கொலை செய்துகொள்வான் என்று நமக்கும் யூகிக்க முடிகிறது. (காவியத்தில், க்ருஷ்ணனின் தூண்டுதலால் தன் முன் வந்த குந்திக்கும் இந்திரனுக்கும் கர்ணன் வாக்கு/வரம் தந்தது தற்கொலையல்லாமல் வேறென்ன?) ஆனால், தர்மனை வில்லனாக்கியதுதான் இயக்குநரின் ’மாஸ்ட்டர் ஸ்ட்ரோக்’. எவனால் இத்தனைச் சிக்கலும் வந்ததோ, அவன் வில்லனாகத்தானே இருக்கவேண்டும்? தர்மம் = மதம். இங்கே அது வழிப்பறி, ஆதாயக்கொலை என்று சுட்டப்படுகிறது.

56 லட்சம் கட்டித்தான் மருத்துவக் கல்லூரியில் இடம்பெறவேண்டும் என்னும் கட்டத்தில், காமராஜர் சிலை இருட்டுக்குள் நிற்பதாகக் காண்பிக்கப்படுவது, மெய்யாலுமே, நெஞ்சறுக்கிற காட்சி. (அவர் காலத்திலும் சில சிறுபான்மைத் தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தனதாம், ஆனால் பணம்பறித்தல் இருந்ததில்லை.) அதற்குமேல், நாயகனின் தங்கை விபத்துக்குள்ளாகிற காட்சியில் அவள் ரத்தம் ’காமராஜர் இரு பள்ளிக் குழந்தைகளின் கைபிடித்திருக்கும் படம்’அதில் தெரிப்பது பிரச்சாரம். எதையும் அளவுக்கு அதிகமாகச் செய்தால் பிரச்சாரமே.

”எலேய், நான் மாடுமேய்ச்சுத்தான்டா உன்னைப் படிக்கவெச்சேன்,” என்றார், எங்கள் ஊரில், ஒருவர் தன் மகனிடம். “அதுக்கென்ன, இப்பொ? நான் மாடு மேய்க்கணும்கிறீயளா?” என்பதாக இருந்தது மகனின் பதில். கொடுமைதான் இல்லையா? ஆனால் பழைமைக்குத் திரும்ப முடியாது என்னும் சர்வநிச்சயத்தை அங்கிருந்த எல்லார்க்கும் அறிவிப்பதாக இருந்தது அது. கரந்தபால் முலைபுகா.

இதுதான் பிரச்சனை இங்கே. தனியார்கொள்ளையரை அழித்தொழித்து தனிச்சொத்து இல்லாத தொன்மைக்குத் திரும்பவேண்டும் என்பது நக்ஸலட்டுகளிடம்கூட பழைய நடைமுறை. இப்போது அவர்களும் அதைச் செய்வதில்லை. அதற்காக சுரண்டுவோர் சுரண்டாமல் இருப்பார்களா?

அதற்கு நாம் என்ன செய்வது? நாயகனுக்கு அப்பாவாக வரும் வேல ராம்மூர்த்தி மாதிரி பழைமைக்குத் திரும்புவதா? அல்லது நாயகனாக வரும் கலையரசன் மாதிரி களத்தில் இறங்குவதா? முன்னெடுப்பு என்பது எதிராளியை அழித்தொழிப்பது இல்லை, அவன் நம்மைச் சுரண்டாமல் தற்காத்துக்கொள்வது.

இதை, நாயகனை கடவுளளவுக்கு உயர்த்தாமல், ஒரு மனித சாகசமாகத் தந்திருப்பதால், “எய்தவன்” ரசிக்கக்தக்கதாக இருக்கிறது.

Comments

  1. அப்படி என்றால் பார்க்க வேண்டும்....

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  3. ஓ அப்ப நல்லாருக்கு போல...பார்க்கணும்

    ReplyDelete

Post a Comment

வருக வருக