மழை மனிதர்கள் RAINMAKERS கனகசபை ராமசாமி அவர்களின் பதிவு

.... ஒரு ரூபாய்க்கு - ஓர் முழு சாப்பாடு .....
கலங்கிப் போய் நின்றாள் அந்த இளம்பெண்
.. அந்தக் கல்லூரி வாசலில் ..!
.

ஆம் ... எப்படியாவது அந்தக் கல்லூரியில் சேர்ந்து படித்து விட வேண்டும் என்று ஏராளமான நம்பிக்கை கனவுகளோடு வந்தவளுக்கு ,
ஏமாற்றமே அங்கு காத்திருந்தது .
.
காரணம் ... காலேஜ் அட்மிஷனுக்காக நிர்வாகம் கேட்ட தொகையை கொடுக்க , அவளது பெற்றோரால் இயலவில்லை .

கூடவே வந்திருந்த பெற்றோர் , ஏமாற்றத்துடன் நின்ற தங்கள் மகளின் கலங்கிய கண்களைப் பார்க்க திராணி இல்லாமல் ,
வேறு எங்கோ பார்ப்பது போல .. ..... ஆனால் குமுறல்களை மனதுக்குள் சுமந்து கொண்டு , கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தார்கள் .
.
விரக்தியோடு வெகு நேரம் அப்படியே அங்கேயே அசையாமல் நின்றிருந்தாள் அந்தப் பெண் .
தன் ஏமாற்றத்தை வெளியே காட்டினால் , பெற்றோர் மனம் சங்கடப்படுமே என நினைத்து .. பொய்யாக புன்னகைத்து தன் அப்பா அம்மாவிடம் சொன்னாள் :
“சரிப்பா .. வாங்க வீட்டுக்குப் போகலாம்.. ”
.
அந்தப் பெண் கல்லூரி வெளி வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்க ... தலை குனிந்தபடி அவளை தொடர்ந்தனர் அந்தப் பெற்றோர்.
அந்தப் பெண்ணின் தாய் கூட , தன் மகளின் சோகத்தை தாங்கிக் கொண்டாள்.
ஆனால் அந்த அப்பாவால் அது முடியாமல் போனது.
மகளுக்கும் , மனைவிக்கும் தெரியாமல் , தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைப்பதற்காக , வேறு பக்கம் திரும்பிய அந்த மனிதரை ...
தற்செயலாக அந்தப் பக்கம் நின்றிருந்த இன்னொரு மனிதர் பார்த்து விட்டார்.
.
“ஹலோ ..நீங்க ஏ.எம்.வி. மெஸ் ஓனர்தானே..?”
“ஆமாம்”
“என்ன விஷயமாக இந்தக் கல்லூரிக்கு ...?”
.
கலங்கிய கண்களுடன் தன் கதையை சொன்னார் வெங்கட்ராமன்.
அதைக் கேட்டு விட்டு , அந்த மனிதர் கல்லூரி நிர்வாகத்திடம் சென்று ஏதோ பேசி விட்டு வந்தார் .
அவ்வளவுதான் !
அடுத்த நொடியிலேயே , அந்த சூழ்நிலையே முற்றிலும் மாறிப் போனது .
அவர் மகளின் கனவு , அன்றைய தினமே நிறைவேறியது.
அந்தப் பெண்ணின் கல்லூரி அட்மிஷன் செலவு முழுவதையும் ராமகிருஷ்ணா மடம் ஏற்றுக் கொண்டது.
ஆம் ... அந்த இளம்பெண் தான் ஆசைப்பட்டபடியே அந்தக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.
.
எப்படி நடந்தது இந்த அதிசயம் ..?
அந்த மாணவியின் அப்பா வெங்கட்ராமன் நடத்தி வரும் ஏ.எம்.வி. மெஸ்ஸில்
அப்படி என்னதான் இருக்கிறது ..?
.
அது இருக்கட்டும்.
எங்கே இருக்கிறது இந்த ஏ.எம்.வி. மெஸ்..?
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில்..!
.
என்ன ஸ்பெஷல் இந்த ஏ.எம்.வி. மெஸ்ஸில்..?
ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு !
.
இதைப் பற்றி சொல்கிறார் வெங்கட்ராமன்:
“”கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மூன்று வேளையும் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகளுக்கு ,
ஒரு ரூபாயில் உணவு வழங்குகிறோம் .
காலையில் மருத்துவமனை உள்ளே சென்று , கஷ்டப்படும் பத்து குடும்பங்களை கண்டு பிடித்து , ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு 10 டோக்கன் கொடுப்பேன் . ஒரு டோக்கனுக்கு 3 தோசைகளும் 2 இட்லிகளும் வாங்கிக் கொள்ளலாம் .
அதே போல் பகலில் 40 டோக்கன்கள் கொடுப்பேன் . இதில் முழு மதிய உணவு அவர்கள் திருப்தியாக சாப்பிடும் அளவுக்கு கட்டி கொடுத்து விடுவோம். அதே போல் இரவு 20 டோக்கன்கள் வழங்குகிறோம் . இரவு நேரத்தில் 3 தோசை 2 சப்பாத்தி இருக்கும். வருங்காலங்களில் இதனை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் ..”
.
“எப்படி வந்தது உங்களுக்கு இப்படி ஒரு ஐடியா..?”
வெங்கட்ராமன் சொன்னார் :
”ஈரோடு அரசு மருத்துவமனயில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் .
அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டாலும் , நோயாளிகளுக்கு துணையாக வந்தவர்கள் சாப்பிட வெளியில்தான் செல்ல வேண்டும். பலருக்கும் இதற்கு கையில் பணம் இருக்காது. அதற்காகத்தான் இந்த திட்டம் .
ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் எல்லாவற்றையும் கொடுத்து விடுவோம் . ஹாஸ்பிடலுக்கு போய் அவர்கள் அதை பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் .
முதலில் இதை இலவசமாக செய்ய நினைத்தேன். ஆனால் எதையும் இலவசமாக கொடுத்தால் , அதன் அருமை நமக்கு தெரிவதில்லை. அதனால்தான் ஒரு ரூபாய் வாங்கிக் கொள்கிறேன்..”
.
“சரிங்க வெங்கட்ராமன் .. இதனால் உங்களுக்கு ...?”
.
புரிந்து கொண்டு பதில் சொன்னார் வெங்கட்ராமன் : “நஷ்டம்தான் ... ஆனால் இப்போது நிறைய பேர் இந்த திட்டத்திற்கு நன்கொடை தருகிறார்கள் . அவர்கள் பெயரையும் என் கடையில் எழுதி வைத்து விடுகிறேன்.”
பேச்சின் இடையே சிறிய இடைவெளி விட்டு விட்டு , வெங்கட்ராமன் தொடர்ந்தார் : “ கல்லூரியில் படிக்கும் என் மகள் மட்டும் நல்ல வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால்...”
“சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால்....?”
“இன்னும் நிறைய பேருக்கு ...ஏன் ..இந்த அரசு மருத்துவமனைக்கு வரும் அத்தனை பேருக்கும் ஒரு ரூபாய் சாப்பாடு கொடுக்க முடியும் . அந்த நல்ல நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ..”
.
அடடா... எப்பேர்ப்பட்ட ஒரு உத்தம மனிதன் ..?
இவரது இந்த உயர்ந்த உள்ளம் பற்றி அறிந்ததால்தான் , ராமகிருஷ்ணா மடம் இவர் மகளின் கல்லூரி செலவுகளை , தானாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டது .
.
சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன் ....
ஊர் பெயர் தெரியாத யார் யாருக்கோ எதையும் எதிர்பார்க்காமல் இந்த மனிதர் செய்த உதவி ...
சரியான நேரத்தில் இவர் மகளுக்கு , ஏதோ ஒரு ரூபத்தில் வந்து எதிர்பாராத மிகப் பெரும் உதவியை செய்து இருக்கிறது .

Comments

  1. ம்னம் நெகிழச் செய்யும் பதிவு
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மனதை நெகிழ்த்திய ஆனால் அதே சமயம் நம்மையும் ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்யலாமே செய்ய முடியும் மனதிருந்தால் என்று நினைக்கவைத்துத் தூண்டிய நிகழ்வு!

    ReplyDelete
  3. இக்காலகட்டத்தில் இப்படியுமா? அவர்களுடைய சேவை சிறக்கவும், பணி தொடரவும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மனம் நெகிழ வைத்த பதிவு .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. உள்ளம் உருகப் படித்தேன்.

    தான் செய்த உதவி
    பிள்ளைக்குப் பிறர் செய்ய
    வழிவிட்டிருக்கு!

    ReplyDelete
  6. தர்மம் தலை காக்கும்.... தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது பழமொழியோ பாடலோ எதுவாயிருந்தாலும் அது சத்தியமான உண்மை. இந்தப் பதிவு அதை நிரூபிக்கிறது.

    ReplyDelete
  7. தேடிச் சென்று உதவியவருக்கு ,தேடி வந்து சேர்ந்திருக்கிறது உதவி என்பதை அறிய மகிழ்ச்சி :)

    ReplyDelete

Post a Comment

வருக வருக