ஸ்ரீதர் சுப்ரமணியன் |
_____
நேரு பற்றிய பேச்சு வந்ததுமே பெண்கள் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி ஆரம்பித்து விடுகிறார்கள். அவர் ஏறக்குறைய ஒரு ‘ஸ்த்ரீ லோலன்’ போல சித்தரிக்கப்படுகிறார்.
நேரு மிகவும் ரசனைக்கார ஆசாமி. பெண்கள் விஷயத்திலும் அவர் ரசனையானவர்தான். ஆனால் அதற்காக அவர் எந்தப் பெண்ணையும் வல்லுறவு செய்யவில்லை. பாராளுமன்றத்தில் உட்கார்ந்து போர்னோகிராஃபி பார்க்கவில்லை. கட்டிய மனைவியை விட்டு ஓடி வந்து விடவில்லை. எனக்கு மனைவியே இல்லை என்று அஃபிடவிட் கொடுக்கவில்லை.
சொல்லப் போனால் அவருக்கு விருப்பமே இல்லாமல் நடந்த கட்டாயக் கல்யாணத்தைக் கூட அவர் உதறி விடவில்லை. காச நோயால் அவதிப்பட்ட கமலா-வை குணப்படுத்த எல்லாவற்றையும் விட்டு விட்டு ஸ்விட்சர்லாந்து போய் மாதக்கணக்கில் அவருக்கு மருத்துவம் பார்க்க உடனிருந்து கவனித்துக் கொண்டவர். அவரின் இறுதிக்காலங்களில் அவருக்கு பணிவிடைகள் செய்தவர். அவரின் உடல் மோசமாவதைக் குறித்து தன் குடும்பத்துக்கு பெரும் சோக ரசம் சொட்டும் கடிதங்கள் எழுதியவர். கமலா இறக்கும் வரை வேறு பெண்ணை ஏறெடுத்தும் பாராதவர்.
எட்வீனாவையும் அவரையும் குறித்து கூறப்படும் கதைகள் கட்டுக்கதைகள் அல்ல என்று நம்புபவன் நான். அது பற்றி நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். ஆனால் அப்போது நேரு ஒரு விடோயர். மனைவியை இழந்து பல ஆண்டுகள் தனியாக இருந்தவர். எனவே என்னைப் பொறுத்தவரை அதில் நேரு தரப்பில் தவறேதும் இல்லை. நேருவுக்கு முன்பே எட்வீனாவுக்கு ‘தோழர்கள்’ இருந்திருக்கின்றனர். அவை எல்லாவற்றையும் பற்றி மவுண்ட் பேட்டனுக்கு தெரிந்தே இருந்தது. அவர்கள் திருமணம் ஒரு வசதித் திருமணம். Marriage of Convenience. ராஜகுலத்தில் பிறந்திருந்தாலும் ராயல் பட்டத்தை இழந்தவர் மவுண்ட் பேட்டன் (அது தனிக் கதை). எட்வீனாவை திருமணம் புரிவதன் மூலம் அவருக்கு ராஜகுல பட்டம் திரும்பக் கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்தே சுதந்திரப் பறவையாக இருந்த எட்வீனாவுக்கு அந்த சுதந்திரம் தொடர மவுண்ட் பேட்டன் அனுமதித்தார். எனவே அங்கும் தவறு காண (என்னைப் பொறுத்த வரை) இடம் இல்லை. ‘அய்யய்யோ கல்யாணம் பண்ணிக்காமல் காதலா! அபச்சாரம்!’ என்று கத்துபவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் நீங்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் என்பதை கொஞ்சம் காலண்டரைப் பார்த்து தயவு செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
அடுத்தது நேரு ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கு சிகரெட் பற்ற வைக்கும் ஃபோட்டோ. இதனை ஆயிரம் தடவையாவது முகநூலில் பார்த்திருப்பேன். அது எட்வீனா இல்லை. அந்தப்பெண் ஒரு பிபிஸி நிருபர். நேருவின் ராஜரீகப் பயணங்களில் கூடப் பயணித்த ஊடகக் குழுவில் ஒருவர். அவருக்கு நேரு சிகரெட் பற்றவைக்கும் காட்சி எனக்குப் பிடித்த நேரு போட்டோக்களில் ஒன்று. ‘அய்யய்யோ ஒரு பொம்பளை சிகரெட் பிடிக்கலாமா? அபச்சாரம்’ என்பவர்களில் நீங்கள் ஒருவர் என்றால் திரும்பவும் ஒருமுறை காலண்டரைப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெண்ணியத்தில், பெண் விடுதலையில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவர் நேரு. சொல்லப் போனால் எனக்குத் தெரிந்து வெளிப்படையாக பெண்ணியம் பேசிய வேறு பிரதமர் கிடையாது. விவாகரத்து உரிமை, மறுமணம், சொத்துரிமை, தத்தெடுக்கும் உரிமை என்று இன்றைக்கு நாம் பார்க்கும் நிறைய சீர்திருத்தங்கள் அவர் கொண்டு வந்ததுதான். அப்போதைய ஹிந்துத்துவா இயக்கங்களான ஹிந்து மஹா சபா, ஆரஎஸ்எஸ் போன்றவை அவரின் சீர்திருத்த முயற்சிகளை கடுமையாக எதிர்த்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். நேரு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அந்த சட்ட வடிவங்களை நுழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்படி நேரு செய்வதை சகித்துக் கொள்ள முடியாமல், கோபத்தில்தான் அம்பேத்கார் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அம்பேத்கர் போய் சில காலங்களிலேயே நேரு அந்தத் சட்ட வடிவங்களை எல்லாம் கொல்லைப்புற வழியாக கொண்டு வந்து விட்டார் என்பது வேறு விஷயம்.
அந்த அளவுக்கு பெண்கள் பற்றியும் இந்தியாவில் பெண்கள் நிலை பற்றியும், அது சம்பந்தமாக நிலவும் பிற்போக்குத்தனம் பற்றியும் நேரு கவலைப்பட்டு தன்னால் ஆன முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். பெண்கள் பற்றிய அவர் கவலை மிகவும் நவீனமாக, அறிவியல் பூர்வமாகவே இருந்திருக்கிறது.
ஆனால் அப்படி அவரைக் கரித்துக் கொட்டும், எட்வீனா விஷயத்தில் கிண்டல் அடித்துக் கொண்டிருப்பவர்கள் கையில் அப்போது அதிகாரம் இருந்திருந்தால் இன்றைக்கும் கூட விதவைகளை மொட்டை அடித்து காசிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கலாம்.
நல்ல கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது.
ReplyDeleteபெண்கள் விஷயத்தில் நேரு என்று அப்போதிருந்தே எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். குங்குமம் வார இதழில், எம்.ஓ.மத்தாய் எழுதிய 'நேரு காலத்து நினைவுகள்' தமிழில் தொடராக வந்தது. அதில் இந்த பதிவில் சொல்லப்படும் சில தகவல்களையும் படித்ததாக நினைவு. உண்மையிலேயே கருத்து சுதந்திரம் அன்று இருந்தது. இப்போதெல்லாம் அப்படி எழுதினால் அவதூறு சட்டம் பாயும்.
ReplyDeleteஅறிந்த தகவல்கள்! ஆனால் வித்தியாசமான நல்ல பார்வை! சமூகத்திற்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தால் போதும்...திரிபுடை செய்து விடும் வல்லமை படைத்தது...திரித்து வரலாறாகவே ஆக்கிவிடும் சக்தியும் படைத்தது.
ReplyDeleteஅறியாத தகவல்கள் நன்றி தோழர்
ReplyDeleteத,ம,
நல்லவேளை ,இப்போதுஇல்லை ,இருந்திருந்தாள் ...இன்றைய மீடியா உலகம் அவரை "காதல் மன்னன் 'ஆக்கியிருப்பார்கள் :)
ReplyDeleteஒருவரின் இரு பக்கங்களையும் பார்ப்பதே நல்லது. அவ்வகையில் இப்பதிவினை நான் அதிகம் ரசித்தேன்.
ReplyDelete