விவேகம் ராஜ சுந்தர்ராஜன் அவர்களின் விமர்சனம் - vivekam raja sunderrajan

விவேகம்
-----------------

என்றால் நல்லது கெட்டதைப் பிரித்தறிதல். தான் இயற்றிய ‘விவேக சூடாமணி” நூலில் ஆதிசங்கரரே சொல்லியிருக்கிறார்.

இப்படித்தானே, என் வழக்கப்படி, தொடங்கியிருக்க வேண்டும்? யுவகிருஷ்ணாவில் ஏன்?

ஏனென்றால் அவர் ஒரு கமர்ஷியல் ஆசாமி. மன்னிக்கவும், ஆளுமை. இரண்டு வணிகப் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருக்கிறார் என்பதால் அல்ல, வணிக மசாலாப் படங்களை ரசிக்கிற குணம் எனக்குப் போலவே அவர்க்கும் உண்டு. இன்னொருவர் “குங்குமம்” எடிட்டர் கே.என்.சிவராமன். எங்கள் டேஸ்ட், பொதுவாக, தெலுங்கு மசாலாப் படங்கள்.

குறிப்புகள் பரிமாறிக்கொள்வோமா? அப்படியெல்லாம் இல்லை, பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்புபோல உள்ளுணர்ந்து கொள்வதுதான்.

“உள்ளுணர்ந்து சொல்கிறேன், AK அப்படிப்பட்டவர் இல்லை, இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது,” என்று அதிகாரிகளில் ஒருவர் நாயகனுக்கு நற்சான்று தருகையில், வில்லன், “வரலாறு முக்கியம்; உள்ளுணர்ந்து சொல்வதற்கு இதென்ன ஜோஷ்யமா?” என்று நக்கல்விட, அதே டயலாக்குகளை அதே கேரக்டர்கள் தலைமாறிப் பேசுவதாக வருகிறதல்லவா, அது ஒரு வணிகச்சுவை.

நண்பர்கள் பகைவராக்கப் படுவதும் அதே. You too Brute? ஆம், ஷேக்ஸ்பியர்கூட. அதைத்தாண்டி கவித்துவம் அவர்க்குள் பிரசன்னமாகிவிட்டது. இயக்குநர் சிவாவுக்கு அப்படியொரு பிரசன்னப் பிரச்சனையும் இல்லை, முழுக்கமுழுக்க மாஸ். மரண-மாஸ்.

“அய்யய்யோ” என்றால் அமங்களமா? மங்களமா? எனக்கு இடப்பக்கம் இருந்தவன், அஜித் வருகிற கட்டமெல்லாம், “அய்யய்யோ” என்று கூவிக்கூவி எழுந்து நின்றான். மரண-மாஸ் என்பது அதுதான் போலும்! நுண்ணறிவு/ உணர்வுகளுக்கு இடமில்லை. லாஜிக்குகளுக்கு? இல்லவே இல்லை. எல்லா வணிக மசாலாக்களுக்கும் இது பொது.

அணைக்கட்டிலிருந்து அஜித் பல்ட்டியடிக்கையில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளால் சுடப்பட்டும் அவர்மேல் ஒரு குண்டும் படாது இல்லையா, ஒரு பாதகமும் இல்லாமல் அவர் கெலிப்பார் என்பதற்கான முன்-சுட்டல் அது. “வருவேன்ம்மா” என்கிற இடைவேளை வசனத்துக்குகூட முன்-நிறுவல் உண்டு. அப்படியே, நாயகிக்கு code message செய்யத்தெரியும் என்று முன்கூட்டியே நிறுவப்படுவதும். அப்படி, திட்டமிட்ட திரைக்கதை.

“வெற்றிபெறுவதற்கு முன் கொண்டாடுகிறவனும் வெற்றிபெற்றபின் ஆடுகிறவனும் இல்லை நான்” என்று வசனம் பேசினாலும் அஜித்ரசிகர்கள் கொண்டாடுவதற்கு என்றே காட்சியமைப்புகள் கொண்டிருக்கிற படம். நமக்கு? நமக்கும் அலுக்கவில்லை. அவ்வளவு வேகம். குடும்பக் காட்சிகளாலும் தொய்வுவரவில்லை. பணி-ஓய்வை நெருங்கிவிட்ட காஜல் அகர்வாலை ஜோடியாக்கியதில் ‘தல’யின் உப்புமிளகுத் தலையும் உறுத்தவில்லை.

அடிதடியும் குடும்பக்காட்சிகளும் இணைந்திருப்பது போல அநிருத் இசையிலும் தாளவாத்தியப் பரபரப்பில் கிடார் இழைவதும் பியானோக்குமுறலில் புல்லாங்குழல் நுழைவதுமாக அர்த்தப்படுத்தியிருக்கிறார். அத்தனை வேகத்திலும், இசையோட்டமும் காட்சிச்சலனமும் தொகுத்தவிதமும் நமக்குப் புலப்படும் எளிமையில் அமைந்திருப்பது ஆச்சரியம்.

அக்ஷராவுக்கு குட்டிரோல். காஜல் ஆடிப்பாடவில்லை. இயக்குநர் தெலுங்குப் படங்களும் எடுப்பவர்தான். இருந்தும் பெண்களே இல்லாத படம்போல ஒரு தோற்றம்! சண்டைக்காட்சிகளை நாட்டியத்துக்கு ஈடாக்கி யிருக்கலாம். ஆனால் குறுகத்தறித்த க்ளோஸ்-ஷாட்ஸ் அதிகம்.

இன்டர்நேஷனல் க்ரைம் பற்றிய தமிழ்ப்படங்களில் இதுவே டாப் என்கலாம். கமலின் “விஸ்வரூபம்” சலிப்பூட்டுயது போல இது இல்லை.

படம் பார்க்கலாமோ?

கலைப்பட நேசர்களைத்தவிர எல்லாரும் பார்க்கலாம். படம் பட்டாசு.

Comments

  1. படத்தைப் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது.

    ReplyDelete
  2. முகநூலில் வாசித்தேன்...
    படம் எனக்கும் பிடித்திருந்தது.. கேமரா ஆட்டலும் தொடர்ச்சியில்லாத காட்சிகளுமே அலுப்பு....

    ReplyDelete
  3. ஒரு படத்தில் நிறைய கைதட்டல் கிடைத்து வைரல் ஆனது என்பதற்காக இப்படி நீட்டி ...நீ ..ட்..டி அஜித் பேசுவது அலுப்பைத் தருகிறது. படம் முழுக்க அஜித் முகத்தைத் தவிர வேறு யாரையும் பார்த்த மாதிரி நினைவில்லை. இந்த மாதிரி ஆங்கிலப் படங்கள் நிறைய பார்த்தாச்சு. ஏதோ tamil dubbed படம் போல பத்தோடு பதினொன்று! போரிங்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக