பஞ்ச் 75

பஞ்ச் 75


பேரா.பஞ்சநாதன் அவர்களின் பிரியத்திற்குரிய அவரது சீடர்கள் இணைந்து தங்களது மஹா குருவிற்கு செய்த பாராட்டு விழா அவரது பெயராலே பஞ்ச் 75 என பெயர்சூட்டப்பட்டது.



சர்வதேசப் பயிற்சியாளர்  பஞ்சநாதன் யார் என்பதை புரிந்துகொள்ள ஜே.சீஸ் என்றால் என்று தெரியவேண்டும்.

ஒரு அறிமுகம்.

ஜே.சி இயக்கம் குறித்த தகவல்கள் இன்னமும் முழுமையாக பொதுவெளியில் பகிரப்பட்டிருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.

பதினெட்டு வயதுமுதல் நாற்பது வயதுவரை இருக்கும் இளைஞர்கள்தான் உறுப்பினராக முடியும்.

நாற்பதுக்கு பிறகும் தொடரலாம், அதில் சில நடைமுறை சங்கடங்கள் உண்டு.

இந்த இயக்கத்தின் குறிக்கோள்களில் ஒன்று இளைஞர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை திறன் மேம்பாடுபெற்ற குடிமக்களாக்குவது.

உறுப்பினர்களுக்கு இரண்டு வாய்ப்புகள், இயக்கத்தில் முன்னேற, ஒன்று வழமையான அரசியல்சார் வழி. தலைவர், மண்டலத் துணைத்தலைவர், மண்டலத்தலைவர், தேசிய துணைத்தலைவர், தேசியத்தலைவர் இவற்றின் பிறகு சர்வதேச அரசியல் பதவிகள்.

அரசியல் நுணுக்கமும், ஆளுமைத்திறனும் நிறைய பின்புலமும், நிறைய பணமும்  கொண்டோர் மட்டுமே இந்த வழியில் செல்ல முடிவெடுப்பார்கள்.

ஜே.சி  வழங்கும் இன்னொரு வளர்ச்சிவாய்ப்பு, பயிற்சித்துறை.

முதலில் சட்டதிட்டங்கள், பிறகு மேடைப்பேச்சு, அதன் பிறகு இரண்டு அமர்வுகளில் தேர்வுற்றால் மண்டலப் பயிற்சியாளர் சான்றிதழ் கிடைக்கும்.

இதன் தொடர்ச்சியாகவும் தேசிய பயிற்சியாளர், சர்வதேச பயிற்சியாளர் என படிநிலைகள் மேல்நோக்கி போய்க்கொண்டே இருக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை பல துறைகளில் முத்திரை பதித்தவர்கள் ஜேசி இயக்கத்தில் இருந்தவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம்.

குறிப்பாக பயிற்சித்துறை ஆளுமைகள் கொண்டாட்டத்திற்கு உரிய ஆளுமைகளாக மாறிவிடுவார்கள். (வழக்கம் போலவே அரசியல் பிரிவில் இருப்போருக்கு இந்த நிலை கொஞ்சம் புகைச்சலை ஏற்படுத்தும்!, எல்லா இடத்திலும் உள்ளதுதான்!)


எங்கள் மாவட்டத்தில் அனுபவமிக்க முதல் தலைமுறை பயிற்சியாளர்களில் ஒருவர்  ஆர்.ஆர்.கணேசன் அவர்கள். திடுமென அழைத்து பஞ்ச் 75 வரீரா என்றார். குருநாதர்களில் ஒருவர் அழைக்கின்றபொழுது மறுப்பு சொல்லவும் முடியுமா?

உண்மையில் நான் கொடைக்கானலில் மண்டலப் பயிற்சி பணிமனையில் முதல் அமர்வில் இருந்தபொழுது எனக்கு வந்த தேர்வாளர்களில் ஒருவர்.

புதுக்கோட்டையில் இருந்தாலும் தமிழகமெங்கும் பல பயிற்சிகளை எடுத்தவர். தனி ரசிகர் மன்றமே உண்டு இவருக்கு.

இந்த அமர்வில் தலைமை பயிற்சியாளராக எங்களை புடம் போட்டு உருவாக்கியவர் தலைமைப் பயிற்சியாளர்  திரு டென்சிங், அவருடன் நான் பெரிதும் மதிக்கும் பயிற்சியாளர் அய்யா வெங்கடாசலம் அவர்கள்.

ஆக நான் சந்தித்த முன்னோடி பயிற்சியாளர்கள் அனைவருமே முத்திரை பதித்தவர்கள்.

இவர்கள் அனைவரும் அவர்களின் பேச்சினூடே அவர்களை கவர்ந்த சர்வதேசப் பயிற்சியாளர்களை குறித்து சிலாகிப்பார்கள்.

குறிப்பாக டி.கே. சந்திரசேகரன், பாலா மற்றும் பஞ்சநாதன்.

இவர்களில் டி.கே.சி சில ஆண்டுகளுக்கு முன்னரே அமரராகிவிட்டார்.

ஆக களத்தில் இன்னும் முத்திரை பதிக்கும் சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சியாளர்களில் ஒருவர் பேரா.பஞ்சநாதன்.

ஜே. சி இயக்கத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர்.

பயிற்சியாளர்கள் தங்களது ஒவ்வொரு நிகழ்விலும் பல விஷயங்களை பயிற்றுவிப்பார்கள்.

இந்த பஞ்ச் 75 நிகழ்வும் அப்படியே, பல தரவுகளையம், புரிதல்களையும் தரும் நிகழ்வாக இருந்தது.

காலை நிகழ்வு முழுதுமே பஞ்சநாதன் அய்யா அவர்களால் பலன் பெற்ற பயனாளிகளின் அனுபவப்பகிர்வும், அவரது பயிற்சியால் தங்கள் வாழ்வு எப்படி மேம்பட்டது என்பதை குறித்த பேச்சும், நன்றியும் இருந்தது.


பாவை கல்லூரிகளின் தாளாளர் அவரது அனுபவத்தை பகிர்ந்து, இன்று பாவை நிறுவனம் இருக்கும் உயரத்திற்கு காரணம் அய்யா அவர்களின் வழிகாட்டல்தான்.

இதனாலேயே இன்றுவரை அவரது கல்வி நிறுவனங்களில் முதல்வார நிகழ்வாக மனிதவளப் பயிற்சிகளை அளித்துவருவதை குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், ரோட்டரி கவர்னர்கள், பேராசிரியர்கள் என பல்வேறு ஆளுமைகள் நிகழ்வைத் தொடர்ந்தனர்.

மதிய உணவுக்கு முன்னர் பஞ்ச் அவர்கள் வெறும் நான்கே நான்கு எழுத்துக்களை வைத்துக்கொண்டு அவரது வழக்கமான பஞ்ச்சை அடித்தார்.

PASS

If you go somewhere

Prepare and go, if you don't prepare don't go

A
Alert
Need to be alert, respond to the situation, understanding situation is key

S
Smart, think differently, act wisely

S
Sincere
If you not sincere ____ ___  ____  ___


போகும் இடங்களுக்கு முன்தயாரிப்போடு போதல், எப்போதும் விழிப்புடன் இருத்தல், புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ளுதல், இவற்றோடு கூட நேர்மையாக இருந்தோம் என்றால் வெற்றி நமதே என்றார்.

மிக நேர்த்தியான மதிய உணவிற்கு பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பயிற்சித்துறை நண்பர்களை சந்திக்க முடித்து.

குறிப்பாக எனது பயிற்சியாளர் பணிமனையில் தலைமைப் பயிற்சியாளராக இருந்த டென்சிங் அவர்களை சந்திக்க முடிந்தது கூடுதல் மகிழ்வு.

மதுரையில் இருந்து வந்திருந்த வெங்கடாச்சலம் அவர்களையும் சந்தித்தேன்.

இந்த நிகழ்விற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளர் குவிந்துவிட்டார்கள்.


அத்துணை அர்ப்பணிப்புடன் தங்கள் குருவிற்கு அவர்கள் எடுத்த எழுபத்தி ஐந்தாவது பிறந்தநாள் விழா உண்மையிலேயே ஒரு பாகுபலி பிரமாண்டம்.

விழாவை பொறுப்பேற்று நடத்தி அதை பெருவெற்றி நிகழ்வாக மாற்றிய பெருமை ராஜன் அவர்களைத்தான் சாரும்.

பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டாலும் பேரா. பஞ்சநாதன் அவர்கள் நிறுத்தல் புள்ளிகளையும், கமாக்களையும், கேள்விக்குறிகளையும் வைத்து வாழ்வியல் சூழல்களில் என்ன சொலிகின்றன இக்குறிகள் என்று பயிற்சியளித்தார்.

இதே தீமில் இன்னும் பதினோருபேர்கள் பயிற்சியளிக்க இருந்த நிலையில், காலம் கருதி விடைபெற்றோம்.

வீடு வரும் வழி நெடுக நிறுத்தல் புள்ளிகளை வெகு அழுத்தமாக வைத்ததைக் குறித்து வருந்திக்கொண்டே வந்தார் ஆர்.ஆர்.ஜி.

நிறுத்தல் புள்ளிகள் எப்போதும் நிறுத்தல் புள்ளிகள் அல்ல, அவை நம் வேகத்தை மட்டுப்படுத்தி, மடைபடுத்த காலம் நமக்கு வைக்கும் தேர்வு என்ற பஞ்சநாதன் அவர்களின் உரையின் சாரத்தை ரசித்தபடி வீடுவந்து சேர்ந்தோம்.

இவையெல்லாம் நேரடி கற்றல் அனுபவங்கள் என்றால், இன்னொரு புரிதல்தான் நிகழ்வின் ஹைலைட்.

அது

இப்படி ஒரு நிகழ்வை முதல்முதலில் திட்டமிட்டது யாராக இருக்கும் ?

நிகழ்ச்சியை பாங்குற நடத்திய ராஜன் சார் ?

ஒரு ஜேசிஸ் கிளை ?

சர்வதேச பயிற்சியாளர் அமைப்பு ?

யாரும் இல்லை...

இதை முன்மொழிந்தது

பேரா.பஞ்சநாதன் அவர்களேதான்,

நாற்பது வருட உழைப்பும், அர்ப்பணிப்பும், பெரும் புகழும், திறமையும் மட்டுமே இருந்தால் போதாது.

நம்மை நாம் தான் முன்னிறுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது !

இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கற்றல் அனுபவம்.

அன்பன்
மது


Comments

  1. பஞ்ச் 75, திரு பஞ்சநாதன் பற்றியும் நல்லதொரு நிகழ்வு பற்றியும் அறியத் தந்தது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக