மேயாத மான்
______________
“இந்தப்படம் நல்லா இருக்கு” என்று நண்பர் Arun Dir பதிவிட்டிருந்தார். வெளியாகி ஒருவாரம் ஆகியிருந்தது. என்றாலும் பார்க்க முடிவுசெய்தேன். அது ஒரு சாயுங்காலம். “GK சினிமாவில் ஈவ்னிங் ஷோ இருக்கா பார்த்துச்சொல்லேன்” என்று எங்கள் பாப்பாவைக் கேட்டேன். தன் ஃபோனை நொண்டிவிட்டு அவள் சொன்னாள், “காலை 11:30 & மதியம் 02:30 ஆக இரண்டு ஷோதான்; எதுக்குப் பணவிரயம்? நெட்ல கிடைக்குதே?” என்று முகவரியும் தந்தாள். மட்டுமல்ல, “நாயகன், தான் சாகப்போகிறேன் சாகப்போகிறேன் என்று புலம்புகிறான்; தங்கை நாயகனின் நண்பனைக் காதலித்து அதற்கொரு தீர்வு காண்கிறாள்,” என்று கதையையும் சொல்லிவிட்டாள்.
வீட்டில் உள்ளது ‘ஸ்மார்ட் டி.வி.’ என்றாலும் இவளை இவள் அம்மா படம்பார்க்க அனுமதிப்பதில்லை. பின்னே எங்கிருந்து கற்றாள்? பள்ளிக்கூடத்தில் இதைத்தான் பேசுகிறார்கள் போலும்!
எனக்கு ஒரு சந்தேகம். எங்கள் பாப்பா தளபதி விஜய் ரசிகை. (“மெர்சல்” முதல்நாள் முதற்காட்சி பார்க்க ஆயிரக்கணக்கில் செலவுசெய்த கதையெல்லாம் எழுதிவிட்டேன்) அதனால், அதற்குப் போட்டியாக வந்த “மேயாத மான்” பார்க்கவேண்டாம் என்று சொல்கிறாளோ?
இதற்குத் தோதாக ரஜினிகாந்த்தும், “இந்தப் படம், நகைச்சுவையாய், நல்லா இருக்கு” என்று அபிப்பிராயம் உதிர்த்தார்.
“மெர்சல்”, பா.ஜ.க. அரசின் உருப்படாத கொள்கைகளை விமர்சிப்பதால், அதனோடு வெளிவந்த இன்னொரு படத்தை தூக்கிப்பிடிக்கிறார்; அல்லது “மெர்சல்”, ரஜினி படங்களை விஞ்சி வசூல்காட்டிவிட்டது என்னும் பொறாமையால் இப்படி அபிப்பிராயம் உதிர்க்கிறார்.
இப்படித்தான், சத்தியமாக, எண்ணக்கசடுகொண்டேன். ஆனால், ரஜினி மெய்யாலுமே ஒரு சிறந்த ரசிகராக வெளிப்பட்டிருக்கிறார், ஆமாம்.
எல்லா மனத்தடைகளையும் மீறிப் படம்பார்த்துவிட்டேன். சினிமா என்பது உண்மையில் இதுதான்.
“மெர்சல்”போல, ‘வெற்றிமாறன் என்று கொஞ்சமாய் தாடிநரைத்த ஒருவர் இருந்தாராம்’ என்று கதைப்பதெல்லாம் சினிமா வாய்பாடு ஆகாது. அது கதை, அவ்வளவுதான். கதை, சினிமாவுக்கான ஒரு தேவையே இல்லை.
மேயாத மான் ....... !
புள்ளி மேவாத மான் !
மேவும் கான(க)மடைந்து நறு சந்தனமும்
புனுகும் கமழும் கலவங்கள் அணிந்து
சுணங்கு படர்ந்து - புல் மேயாத மான் !
கானக் குறவ கண்மணி என வளர்
கானக் குயிலின் நிகர் குரல் உடையது !
மேயாத மான் !
தேனும் பாகும் தினை மாவும்
தின்பதல்லால் - புல் ஒரு போதும்
மேயாத மான் !
சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும் - அது தலை நிமிர்ந்து
பாயாத மான் !
இது “வள்ளி திருமணம்” நாடகத்தில் வரும் பாடல். உடையப்பா பாடி, அந்த நாடகமும் பார்த்து, இதைக் கேட்டிருக்கிறேன். இதற்கு என்ன அர்த்தம் என்றால், “அவள் கற்புக்குலையாதவள்.”
இந்தப் படத்தின் நாயகி, அவள் வாந்தியெடுத்தாலும், அதனால் கல்யாணம் நின்றுபோனாலும், படத்தலைப்பின் அர்த்தமுணர்ந்த நம்மால் அவளைப்பற்றி எதிர்-ஈவாக சிந்திக்க ஏலாது.
இயக்குநர், உடையப்பாவைப் பார்த்திருக்க மாட்டார்; டி.ஆர்.மகாலிங்கத்தைக் கேட்டிருக்க மாட்டார். ஆனால் கலாச்சாரம் புரிந்தவராக செயல்பட்டிருக்கிறார். கர்நாடகாவிலும் இதே கலாச்சாரம் உண்டுதான் போலும். ரஜினிக்கும் அந்த ரசனை எஞ்சியிருக்கிறது.
நாளை இந்தப்படம் தூக்கப்பட்டுவிடும். இவ்வளவு சுணங்கி இதுபற்றி எழுதுவதற்காக வருந்துகிறேன். மெர்சலாயிட்டேன். மன்னித்துவிடுங்கள்!
Arun Dir
நன்றிங்க!
ReplyDelete