தீரன் அதிகாரம் ஒன்று




நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு அதிரி புதிரியாய், அசுரத்தனமாய் முதல்படத்திலேயே மாஸ் ஹீரோ அப்பீல் கிடைத்தது கார்த்திக்குக்கு மட்டுமே என்று பெருமூச்சுடன் சொல்வார்கள். 

உண்மைதான்.

நெடுநாட்களாக சூர்யாவை சாப்பிடும் ஒரு நடிகர் வருவாரா என்ற கேள்விக்கு அவர் வீட்டிலேயே இருந்து வந்த பதில் வியப்பு.

எரிச்சலூட்டும் கோலிவுட் டெம்ப்லேட் படங்களில் மாட்டிக்கொண்டு கார்த்தி சிதைந்ததை பார்க்கும் கொடுமையும் நடந்தது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு தீரன் கார்த்தியின் தவறுகளை சரிசெய்திருக்கிறான். 

யப்பா மாஸ் பார்பாமன்ஸ். 

இனி இயக்குனர்களின் முதல் தேர்வாக கார்த்தி இருப்பார். 

சான்ஸே இல்லை. மனுசன் பின்னி பெடலெடுத்துவிட்டார். கிடைக்கிற காப்பில் ஆட்டோ இல்லை ஆகாய விமானத்தையே அசால்டாக ஓட்டுகிறார். 

கடந்த தசாப்தத்தில் தமிழகத்தை நடுங்க வைத்த ஈவிரக்கமற்ற கொள்ளைக்கும்பலின் வெறியாட்டம். திரையில் விரிகின்ற பொழுது முதுகுத்தண்டு சில்லிடுகிறது. 

காவல்துறையின் நுட்பங்களை தீரன் ரொம்ப பிரஷ்சாக அணுகியிருக்கிறான். காவல்துறையில் நெளிவு சுழிவு இல்லாமல் நட்டுக்கொண்டு நிற்கும் டி.எஸ்.பி தீரன்.

ஒரு கொள்ளைக் கேஸ் என்று கைவைக்கும் ஒரு இன்வெஸ்டிகேஷன் அப்படியே அவன் வாழ்க்கையே புரட்டிப் போட்டுவிடுகிறது.

படத்தின் முதல் அறிமுகமே வில்லன் ஓமாதான் ...அதுவும் புத்திசாலித்தனம் எனக்குப் பிடிக்காது என்று சொல்லி ஒரு பெரியவரை சுடும் காட்சியில் தமிழ் திரை புதிய வில்லன் ஒருவரை கண்டெடுத்துவிட்டது என்றேதான் நம்பினேன்.

காட்சி அமைப்புகளில் ஓமா பாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் திகில் பின்னணி அதீதம், குறிப்பாக இடைவேளையின் பொழுது மலைக்கு மேலே இருந்து அவர் பார்க்கும் ஷாட் ...சான்ஸே இல்லை. அப்படியே  மிருகம்தான்.

இன்னொரு காட்சியில் மூடப்பட்ட கதவை திறக்கும் முயற்சியின் பொழுது  ஒரு மிருகம் போல திறந்து திறந்து மூடும் கதவினூடே தெரியும் ஓமின் முகமும் கண்களும் சிலநாட்களுக்காவது பாரவையாளனின் மனதில் அச்சத்துடன் படிந்திருக்கும்.

ஓமாக நடித்திருக்கும்  அபிமன்யு சிங், கிடைக்கும் வாய்ப்பில் காட்டுகிற பாவங்களில் ஹீரோக்களை ஓரம்கட்டிவிடுவார் என்பது உண்மைதான்.


படத்தில் இரண்டு கார்த்திகள், ஒருவர் அசட்டுக் காதலர், இன்னொருவர் மிடுக்கு காவலர். காவலர் கார்த்தி செய்திருக்கும் அதகளத்தின் பக்கம்கூட வரமுடியாது காதலர் கார்த்தியால்.

காக்கி உடுப்பை காதலிக்க அவர் அடுக்கும் காரணங்கள், நாம என்ன அதிரகாரத்தில இருக்கவங்களுக்கு அடியாள்தானே என்பதாகட்டும், பொதுமக்களை கொல்கிறபொழுது கண்டுகொள்ளாத அரசாங்கம் குறித்து அவர் பேசி மேலதிகாரி ஒருவரை கலாய்ப்பதாகட்டும் அருமை.

வினோத் எதோ சொல்ல வருகிறார். ஐ.ஜி யாக வரும் நடிகரின் நிறமும், அவரது மொண்ணைத்தனமான அணுகுமுறையும் என்ன காட்சிப்படுத்துகிறது.

கருப்பாக இருப்பவர்கள் உயரதிகாரிகளாக இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்கிறாரா அவர்?  கிட்டத்தட்ட அந்த மேலதிகாரியின்  நிறமும் நடவடிக்கையும் ஒரு இனத்தை பரிகசிப்பது போல தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

சில காட்சிகளில் கார்த்தி காட்டியிருக்கும் முகபாவங்கள் அற்புதம். இறுதிக் காட்சியில் ஓமாவைத் தேடி புறப்படும் பொழுது குளம்கட்டிய கண்களுடன் இறுகிப்போன முகத்துடன் வெளியேறும் ஷாட்டில் அசத்திவிட்டார்.

இன்னொரு காட்சியில் ஓடும் பஸ்ஸில் இருந்து  கீழே விழப்போகும் காவலரை பிடிக்க முடியாமல் பாய்ஸ் என்று கதறி, ரிலீவாகி அடுத்த பஸ்ஸுக்கு தாவி காட்டும் கெத்து மாஸ்.

தமிழுக்கு முக்கியமான படம்தான்.

எத்தனையோ இரவுகள் நான் இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். இப்படி எனக்கு முன்னாள் இத்துணை வாகனங்கள் சென்றதில்லை. கோர்ட் அருகே துவங்கி மன்னர் கல்லூரி வரை இருசக்கர வாகனங்களின் வால்விளக்குகள் ஏதோ சீரியல் செட் போட்டிருக்கிறார்களோ என்று எண்ண வைத்தது.

படம் வசூலிலும் அதிரடிக்கும்.

கிப்ரானின்  இசை, கிளைமாக்சில் பதித்திருக்கும் முத்திரை அருமை.

யாருப்பா அந்த ராகுல் பிரீத்தி சிங். அழகுதான் ஆனால் காதல் காட்சிகளில் இருவருமே நடிக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. என்ன மேன் கார்த்திக்? இன்னாப்பா ஆச்சு உன்க்கு?

படத்தின் டீடைலுக்கு இவ்வளவு மெனக்கெட்டு வடிமைத்த இயக்குனர் எப்படி ரொமான்ஸ் காட்சிகளில் கோட்டைவிட்டார் என்பதுதான் எரிச்சல்.


உண்மைச் சம்பவத்தில் தீரன் ஜாங்கிட் என்று நினைவு. அவர்தான் வட இந்தியாவிற்கு போய் ஒரு கொள்ளைக்கூட்டத்தை பிடித்து வந்தார். ஆனால் ஒரு செய்தியாக கடந்துபோன அந்த நிகழ்வின் அத்துணைப்  புள்ளிகளையும்  கமாக்களையும் விடாமல் டீடைல் செய்திருக்கிறார் வினோத்.

இசை காமிரா, திகில் விளைவிக்கும் ஆக்சன் சீக்வன்ஸ் என்று தெறிக்கவிடும் திரைக்களத்தில் ஒட்டவே ஒட்டாமல் ஒரு காதல்கதை.

இவ்வளவு லூசாக ஹீரோயினை சமீபத்தில் யாரும் பாத்திரப்படுத்தவில்லை. புத்தர் சிலை என பிடிக்கப் போய் பூதச்சிலையாக போன கதை கார்த்தியின் காதல் கதை.

வயசான ஆட்களையெல்லாம் யாருப்பா தியேட்டருக்கு வரச்சொன்னது என்போருக்கு ஹாக்ஸ்சா ரிட்ஜ்தான் பதில். இரண்டு படங்களுமே காதல் + கடமை படங்கள்தான். ஆனால் ஹாக்சாவின் காதல்காட்சிகள் உங்களின் இரத்தத்தில் இளமையைப் பாய்ச்சும். எப்படி ஒரு பையனும் பொண்ணும் காதல்வயப்படுகிறார்கள், காதல் எப்படி அவர்களின் இதயங்களை  கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கி அவர்களை இணைகிறது என்பதற்கு ஹாஃஸா ரிட்ஜ் ஒரு அற்புதமான உதாரணம்.

தீரனின் காதல்காட்சிகள் எல்லாமே போர்பிளேதான், காதல் இல்லை கூடலும் கூடல் நிமித்தமும்தான்  என்று உணரவைத்ததில் சறுக்கிவிட்டார் இயக்குனர். சறுக்கல் என்றுகூட சொல்லக் கூடாது, பெரும் வீழ்ச்சி.

இவ்வளவு நல்ல படத்தை எடுத்த இயக்குனருக்கு காதல் காட்சிகளை கையாள்வதில் என்ன சிரமம் என்று புரியவில்லை. போதாக்குறைக்கு பாடல்கள் வேறு.  படத்தின் வேகத்தைக் குறைத்து ரொம்பவே படுத்துகின்றன. இருப்பினும்

தீரன் அசத்துவான்


அன்பன்
மது


Comments

  1. படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. இப்படம் பார்க்கத் தோன்றுகிறது.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது.

    ReplyDelete
  3. படம் பார்க்கணும். உங்க விமர்சனம் பாக்கலாம்னு சொல்லுதே!

    கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக