கடந்த வாரம் சக ஆசிரியரின் தந்தையார் ஒருவர் உயிர்நீத்தார். அந்த வாரத்தின் மூன்றாவது விடைபெறல் அது. தகவல் மாலை ஏழுமணிக்கு தெரிந்தது. எட்டரை மணிவாக்கில் அவரது இல்லம் சென்று தந்தையாரின் பெண்ணுடலை வணங்கி அவருடன் அமர்ந்திருந்தேன்.
அவர் தற்போது இருக்கும் வீதியில் மூன்றுவீடுகள், அருகே இருக்கும் ஒரு குடியிருப்பில் ஓர் பெரிய வீடு, பல கனரக வாகனங்கள் அவர்களின் குடும்பச் சொத்தாக இருந்தன. காலம் சென்ற தந்தையாரிடம் சீட்டு விளையாடும் பழக்கம் இருந்தது. இன்று அவரும் இல்லை, அந்த சொத்துக்களும் இல்லை.
ஒரு ஆறுதலுக்காக நண்பரோடு அமர்ந்திருந்தேன். அவரது நண்பர்கள் அவரிடம் டேய் சாப்பிட்டாயா என்று கேட்க, சாப்டேன் என்று இயல்பாக சொன்னார் அவர். அவரது உடல்நிலை எனக்குத் தெரியும் என்பதால் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. வீட்டினுள் முதல் முதல் நுழையும் பெண்கள் மட்டும் பெருங்குரலெடுத்து அழுது ஓய்ந்தார்கள். அவர்களுக்கு முன்னே வந்திருந்து அழுது அட்டடென்ஸ் போட்ட பெண்கள் காபிக்குவளையை கரங்களில் ஏந்தி பேசிக்கொண்டிருந்தனர்.
எண்பத்தி நான்கு வயதில் விடைபெற்ற தந்தை குறித்து தேம்பினாலும் தேற்றிக்கொள்ள முடிகிற துக்கம்தான். தன்வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துவிட்டு, நிறைவாழ்வு வாழ்ந்து மரித்துப்போவது சிறந்த கவிதையொன்றின் முத்தாய்ப்பு வரிகள்போலத்தான்.
தன் சொத்தை அழித்த தந்தை மீது அவரது தமையனார் கொண்டிருந்த மரியாதையும், அவரது இறுதிநாட்களில் அவர் கர்ம சிரத்தையாக அவருக்குச் செய்த பணிவிடைகளையும் எழுத பதிவுகள் போதாது.
இவ்வாறான வாழ்க்கையும், நிறைவையும் மனம் ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் வியக்கவும் செய்கிறது.
சமயங்களில் மரணம் நம்மை சோர்ந்து போகச் செய்கிறது. நம் ஆளுமையைச் சிதைக்கிறது. நம்மை ஓர் ஈரப் போர்வையைப் போல போர்த்திக்கொண்டு வாழ்தலை சிரமப்படுத்துகின்றது.
புத்தகத்திருவிழா அரங்கில் அண்ணன் மகா சுந்தர் அழைத்துச் சொன்னார். அய்யா மனைவி இறந்துட்டதா சொல்றாங்க என்று சொல்லி அவரது மனதில் இருந்த பயங்களை பட்டியலிட அய்யாவின் நெருங்கிய நண்பர் மாரியப்ப பிள்ளையை தொடர்பு கொள்ள அவருக்கே விஷயம் தெரியவில்லை.
மறுநாள் காலை மீண்டும் அழைத்தார் பிள்ளை. திண்டுக்கல் ஜி.ஹச் வந்துடு. உண்மைதான் என்றார்.
ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தன.
ஏன், இவருக்கு இப்படி ? எளிய வார்த்தைகளுக்கே கண்கள் பொசியும் இவர் எப்படி விஷயத்தை தாங்குவார் என்கிற கேள்விகள் நிமிடங்களை நரகமாக்கின.
மீராதான் அழைத்தார், வாங்க புறப்பட்டோம் நிலவன் அண்ணா அழைக்கிறார் என்றார்.
மணிகண்டன் ஆறுமுகத்துடன் வருகிறேன், நீங்கள் முன்னே போய்க்கொண்டு இருங்கள் என்றேன்.
அண்ணன் ஆண்டனியும் எங்களுடன் இணைய பயணத்தை துவக்கினோம்.
நெடிய பயணத்தின் முடிவில் தகன மேடையில் இருந்த அம்மாவை மட்டுமே பார்க்க முடிந்தது. ஏனைய மூவரும் தகனம் செய்யப்பட்டுவிட்டார்கள்.
குழந்தைகள் பெருங்குரலெடுத்து அழுத அந்த நொடியின் பாரம்தாங்காமல் அடுத்த இடத்திற்கு நகர்ந்தேன்.
ஒட்டன்சத்திரம் மின் மயானம் அன்று மீண்டுமொரு ரோம்.
அய்யா அருள்முருகன் பணியாற்றிய இடங்களிலிருந்து ஆசிரியர்கள் பெரும்திரளாக வந்திருந்தனர்.
ஏன் நிகழ வேண்டும் இத்தகு மரணங்கள் என்பதுதான் புரியவில்லை.
கடும் வேகம், பொறுப்பற்ற லாரி ஓட்டுநர் என்று அறிவு சொன்னாலும் மனசு ஏற்கவேவில்லை.
வீதி கலை இலக்கியத் தளம் சந்தித்திருக்கும் மூன்றாவது கொடூரமான இழப்பு இது. வைகறை, குருநாத சுந்தரம், தற்போது நிறுவனரின் வாழ்க்கைத்துணை அம்மா ஜோதிமணி. மூவருமே பிரியக்கூடாத தருணங்களில் பிரிந்து, உயிரோடு இருப்பவர்களை மீளமுடியா துயரில் ஆழ்த்தியவர்கள்.
இன்று அய்யாவின் நண்பர் பிள்ளையிடம் மீண்டும் பேசினேன். ஓரளவு இயல்புக்கு திரும்பியிருக்கிறார்களாம் குழந்தைகளும் அய்யாவும். நாம இருநூறு வருடம் வாழ்கிற வாழ்கையை தங்கச்சி நாற்பது வருடத்தில் வாழ்ந்துவிட்டது என்றார்.
ய்யா அருள்முருகன் போல தமிழ் அறிந்தவர்களை பட்டியலிட்டால் நூறுபேர் தேறுவதே சிரமம். பெருமாள் முருகன் அவர்களின் வழித்தடத்தில்தான் வீதி இலக்கிய களத்தை புதுகையின் இலக்கிய ஆளுமைகளைக்கொண்டு கட்டமைத்தார்.
வீதி அடைந்திருக்கும் உயரம் பல இலக்கிய அமைப்புகள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
இப்படி தன் மொழியிலும், இலக்கிய உலகிலும், தொல்காலச் சின்னங்களைச் தேடுவதிலும் இவர் ஈடுபட முடிந்தது என்றால் அதற்கு பின்னணியில் இருந்தவர் அம்மா ஜோதிமணி.
ஒரு இலக்கிய பேராளுமையின் மனைவியாக இருக்க அவர் தன்னை வெகு கச்சிதமாக மாற்றிக்கொண்டிருந்தார். இல்லம் சார்ந்த எந்த இடர்பாடும் தன் கணவரை பாதிக்கவிட்டதேயில்லை அவர் என்றார் பிள்ளை.
இப்படி ஒரு இழப்பு, சொல்லும் பொழுதே மனசு துடிக்கும் இழப்பு, எப்படி மென்மையின் முகவரியாக இருக்கும் ஐயாவினால் தாங்கமுடியும் என்பதுதான் வலிதரும் கேள்வி.
ஏன் ?
ஆண்கள் எவ்வளவு உயரத்திற்கு போனாலும், அது ஒரு காற்றாடி உயர்வதுபோலதான். கீழே ஒரு வளைக்கரம் நூலின் முனையை பிடித்துக்கொண்டிருக்கும். காற்றாடி கீழே இருக்கும் கரம் அனுமதிக்கும் உயரத்தில்தான் பறக்க முடியும். பல பெண்கள் தங்கள் காற்றாடிகளை தங்கள் வீட்டுப் பரனை தாண்ட அனுமதிப்பதே இல்லை. வெகுசிலர்தான் தங்கள் காற்றாடிகளை உயரப்பறக்க அனுமதிக்கிறார்கள். இன்று பிடியறுந்துபோன வானில் திக்கற்று அலையும் ஒரு காற்றாடி என் மனவானில் வலியுடன் படபடக்கிறது.
வருத்தங்களுடன்
வலிகளுடனும்
மது
சமயங்களில் மரணம் நம்மை சோர்ந்து போகச் செய்கிறது. நம் ஆளுமையைச் சிதைக்கிறது. //
ReplyDeleteஉண்மை கஸ்தூரி.
//ஆண்கள் எவ்வளவு உயரத்திற்கு போனாலும், அது ஒரு காற்றாடி உயர்வதுபோலதான். கீழே ஒரு வளைக்கரம் நூலின் முனையை பிடித்துக்கொண்டிருக்கும். காற்றாடி கீழே இருக்கும் கரம் அனுமதிக்கும் உயரத்தில்தான் பறக்க முடியும். பல பெண்கள் தங்கள் காற்றாடிகளை தங்கள் வீட்டுப் பரனை தாண்ட அனுமதிப்பதே இல்லை. வெகுசிலர்தான் தங்கள் காற்றாடிகளை உயரப்பறக்க அனுமதிக்கிறார்கள். //
இதுவும் டிட்டோ!! சோகம் பிரதிபலிக்க அழகான வரி இழைகள் பின்னப்பட்டுள்ளன
கீதா
ReplyDeleteபுதுவையில் இருந்து எழுதுபவர்களின் பதிவுகளை படிக்கும் போது மனதிற்குள் ஒரு வலி வந்து போகிறது...... எழுத்தில் மன உணர்வை அப்படியே கொட்டி எழுதிவிடுகிறிர்கள்..இறந்தவர்கள் எங்களுக்கு தெரியாதவர்கள் என்றாலும் அந்த செய்தியை உங்கள் மூலம் படிக்கும் போது எங்கல் உறவினர்களே போனது போல உணர்வு படிக்கும் எங்களுக்கும் வருகிறது
வேறு ஒன்றுமில்லை மச்சான்...
Deleteபொதுவாக அதிகாரிகளை அணுகும் பொழுது அவர்களின் அதிகாரம் நம் கண்ணக்கு தெரியாமல் அவர்களை சுற்றி ஒரு நோயாளியின் மலஜலம் போல இருப்பதை உணரலாம்.
இந்த மனுஷன் ஒரு வகுப்புத்தோழரை போல நம்மை நடத்துவார்...
பெரிய வயித்தெரிச்ச மச்சான்.
மனதில் வலி. என்ன சொல்ல.
ReplyDeleteபுதுகைத் தோழரே!
ReplyDelete‘எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்’
எதார்த்தம் இதுதான் என்றாலும் ...மனசு ஏற்பதில்லை.. அய்யா
Delete