தமிழ் எழுத்தாளுமை அய்யா ராஜசுந்தர்ராஜன் அவர்களின் பார்வை
தானா சேர்ந்த கூட்டம்
_____________________
அது கலைஞர் மு.கருணாநிதிக்கு வரும். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலம்; தூத்துக்குடியில் கருணாநிதி பேசுகிறார்; கூட்டம்கூட்டம் அப்படியொரு கூட்டம்! கருணாநிதியே பேசுகிறார், “பெருங்கூட்டமாய் பேச்சுக்கேட்க வருகிறீர்கள், ஆனால் வாக்களிக்க வரமாட்டோம் என்கிறீர்களே?” என்று.
படத்தில், CBI தேர்வுக்காட்சி ஒன்று உண்டு. தேர்வுக்கு வந்திருக்கிற ஒரு பெண்ணிடம், “CBI officer ஆகி என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்படுகிறது. “ஊழல் பண்ணுகிறவர்களைப் பிடித்து தண்டனைவாங்கித் தருவேன்,” என்கிறாள் அவள். “உங்க பேரு என்னம்மா?” “சசிகலா.”
மொத்த அரங்கமும் சிரிக்கிறது.
‘இமேஜ்’ முக்கியம். சசிகலா கையில் சாதிஜனங்கள் இருக்கலாம்; பணம் இருக்கலாம். ஆனால் வாக்குவாங்குவதற்கு sensational-ஆக ஒன்று தேவை, தினகரனின் சிரிப்பு போல. அந்தச் சிரிப்பும் சசிகலா முன்னுக்கு வந்தால் எடுபடுமா தெரியாது. ஆகவேதான் பேசப்படுகிறது திராவிடக் கொள்கை. எம்.ஜி.ஆராக இருந்தாலும் அவரது வாரிசுக்கு வாரிசாக இருந்தாலும் ‘பெரியார்’ துணையன்றி இங்கே பிழைப்பில்லை. பிறகும், ஒரொரு மரமும் அதனதன் கனிகளால் அறியப்படும்.
நடிகர் சூர்யாவுக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதற்கென்று ஒரு கூட்டம் தானா சேர்கிறது, ஆனால் படத்தில் சொல்லப்படுவது எதுவோ அது sensationnal-ஆக சொல்லப்படாவிட்டால்?
பொலீஸ் உடையில் வழிப்பறி கொள்ளை அடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிடிபடும்போதுதான் நமக்குத் தெரிய வருகிறார்கள். எனவே, ‘குற்றவாளிகள் எல்லாரும் ஒருநாள் மாட்டிக்கொள்வார்கள்’ என்று ஒரு இமேஜ் நம் மூளையில் பதிவாகிவிட்டது. மாட்டிக்கொள்ளாத ஆள்களும் இருப்பார்களாகலாம், ஆனால் அது நமக்குத் தெரியாது. அதாவது அப்படி ஒரு பதிவு நம் மூளையில் இல்லை.
இப்படி, இல்லாத பதிவுகளுக்கு கதைபண்ணி எடுக்கப்பட்ட படம் இது. அரசியல்வாதி வீட்டில் ‘ரெய்டு’ போனால் கறுப்புப்பணம் கிடைக்கலாம். அரசியல்வாதிகள் ஊழல்-ஆசாமிகள் என்று ஒரு இமேஜை உண்டுபண்ணி வைத்திருக்கிறோம். நகைக்கடை வைத்திருப்பவர்கள்? அப்படியோர் ஊழல் இமேஜ் பதிவுபெறவில்லை. படத்தில், ஒரு நகைக்கடையில் ‘ரெய்டு’. கடை உரிமையாளர்கள், தாங்கள் நியாயமான வியாபாரிகள் என்று சொல்கிறார்கள். அவர்களை ஊழல்வாதிகளாய்க் காட்ட ஒரு காட்சியும் வைக்கப்படவில்லை. அந்த ‘ரெய்டு’ நாயகனால் திட்டமிடப்பட்டது என்றால்,
சிரித்துக்கொண்டே செத்துப்போன “பாலு ஜுவல்லர்ஸ்” உரிமையாளர் ஞாபகம் நமக்கு வந்து...
எல்லாக் கதையும் புனையப்படுபவையே. புனையப்படுபவை யதார்த்தம்போலவே இருக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதற்கென்று ஒரு லாஜிக் இருக்க வேண்டும். ஏழு மலை ஏழு கடல் தாண்டி அங்கொரு குகைக்குள் வில்லனின் உயிர்நாடி அல்லது நாயகனின் சாபவிமோசனக்கல் இருக்கிறது என்றால், அது அந்தக் கதைக்கட்டுமானத்திற்குள் உள்ள லாஜிக். யதார்த்தத்தை ஒட்டிவரவேண்டிய தேவையில்லாத புனைவு அது. அது செல்லுபடியாகும். நகைக்கடைக் கொள்ளை ஆனால் யதார்த்தத்துக்கு அப்பால் விலக முடியாது; வெல்லவும் முடியாது.
நடுவில் (இடைப்பகுதியில்) பிரதானம் கொப்பூழ். அதன் அழகுகாட்டி துணைநடிகையர் ஆடுகையில், நாயகி (கீர்த்தி சுரேஷ்) அதற்குப் படுதாப்போட்டால்? ஒன்று, கீர்த்திக்கு அந்தப் பிரதேசம் அழகாயில்லை; அல்லது, அதில் ஏதோ கற்புப்பிரச்சனை இருக்கிறது.
வெளிப்படையாகவும் இல்லை; மறைத்தொழுகுகிற செயல்பாட்டிலும் ஒரு தெளிவு இல்லை. அதனால் ஈர்ப்பும் இல்லை. இதுதான் நல்லநடிகர் சூர்யாவுக்கு விதிக்கப்பட்ட இந்தப் படம்.
Comments
Post a Comment
வருக வருக