பசிபிக் ரிம் அப்ரைசிங்


இரண்டாயிரத்து பதின்மூன்றில் வந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  2018இல் வந்திருக்கிறது.

கில்லார் மோ டெல் டோரோ இயக்கத்தில் வந்த முதல்பாகத்தின் தொடர்ச்சியை ஸ்டிவன் எஸ். டீக்னைட் இயக்கியிருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜான் வூ படங்களை பார்க்கும் பொழுது இருந்த பரபரப்பை உணர்ந்தேன்.



இந்தப்படத்தை அதிபுனைவு, அறிவியல் புனைவு, பேரழிவின் பின்னர் உலகம் என்கிற பிரிவுகளில் வரும்  படம்.

பாக்ஸ் ஆபீசில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் படத்தின் கதை நிறைய சிறு சிறு அறிவியல் தகவல்களால் ஆனது.

கில்லர்மோ இந்த திரைப்படத்தின் கதையை ஜப்பானிய அனிமேஷன் படமான எவாஞ்சலினை அடிப்படையாக கொண்டு எழுதியிருக்கலாம்.

படத்தின் கதைக்களம், பசிபிக் பெருங்கடலின் நடுவே வேறு ஒரு கிரகத்திற்கான வாசல் திறக்கிறது. அதிலிருந்து வெளிவரும் இனம்புரியாத பிரமாண்டமான உயிரினங்கள் பூமியை அழிக்க முயல்கின்றன. பூமியை காலனியாக்க விரும்புகின்றன.

இந்த போராட்டத்தில் மனிதர்கள் பெரும் அழிவை சந்திக்கிறார்கள். பல நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு  திட்டம் ஒன்றை ஏற்படுத்துகிறார்கள்.

இதன்படி வானுயர்ந்த ரோபாட்களை உருவாக்குகிறார்கள். ஏகர்ஸ் என்ற அவற்றை இயக்க இரண்டு பைலட்டுகள் வேண்டும்.

நீங்கள் நினைப்பதுபோல பைலட் கோ பைலட் என அல்ல.

அந்த ரோபாட் ரிஃப்ளெக்சில் இயங்க வேண்டும். முன்னூறு அடி உயரமும், ஏழாயிரத்து எண்பது டன் எடையும் கொண்ட அந்த இயந்திரத்தில் இரண்டு பைலட்டுக்களின் மூளையையும் இணைக்க வேண்டும்.

இருவரும் ஒரேமாதிரி செயல்பட்டால் சிந்தித்தால்தான் போரிட முடியும். இல்லாவிட்டால் நேரே காயலான் கடைக்குதான் போக வேண்டும்.

இப்படி மூளையை இணைப்பதை நியூரல் பிரிட்ஜ்ஜிங் என்று சொல்வார்கள்.

இதைப்பற்றிய நிறைய  எழுதலாம். பைலட்டுகள் தங்கள் மூளைகளை ஒன்றாக இணைக்கும் பொழுது ஒருவர் நினைவுக்குள் ஒருவர் போய்விடுவார்கள்.

ஒருவர் மனதில் இருப்பது இன்னொருவருக்குத் தெரிந்துவிடும். இதைவிட ஹைலைட் அந்த நினைவுகளுக்குள் தாங்களும் பயணித்து கடந்தகால நினைவுக்குள் நிற்பார்கள்.

படத்தில் நான் ரசித்த விஷயம் இது.

இந்த பின்னணி புரிந்தால்தான் படம்  புரியும். இரண்டாம் பாகம் பெரும் யுத்தம் முடிந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு துவங்குகிறது.  எல்லா டிஸ்டோபியன் படங்களைப்  போல இங்கும் ஏழைகள் விளிம்புநிலை வாழ்வும்,  அரசியல்வாதிகள் சொகுசு வாழ்வும் வாழ்கிறார்கள்.

படத்தின் நாயகன் ஒரு ஆப்ரோ அமெரிக்கன். ஜேக் பென்டகோஸ்ட் தனது வாழ்க்கையை பண்டமாற்றில் வாழ்கிறான். அழிந்துபோன கட்டிடங்களில் கிடைக்கும்  பொருட்களை கைப்பற்றி அவற்றை பண்டமாற்று செய்து வாழ்கிறான். கார் ஒன்றை கொடுத்துவிட்டு தக்காளி சாஸ் பாட்டிலை வாங்குவதில் தெரிகிறது அவன் வாழும் உலகின்  பொருளாதாரம்.

சமயத்தில் திருடவும் செய்கிறான். அப்படி ஒரு குழுவிற்காக பழைய  ஏகர் ஒன்றின் பவர் சோர்ஸை திருட முயற்சிக்கிறான். அவனுக்கு முன்னால் இன்னொரு ஆள் ஆட்டையைப்  போட்டுவிடுகிறான்.

ஒரு டிராக்கர் கருவியைக் கொண்டு திருடனின் இடத்துக்கு செல்லும் ஜேக், பவர் சோர்ஸை ஆட்டயைப்போட்டது ஒரு பெண் குழந்தை என்று  தெரிந்துகொள்கிறான்.

அங்கே வரும் இராணுவத்திடம் இருந்து தப்ப அவள் தானே செய்த ஒரு ஏகரில் ஏறி தப்ப முயற்சிக்கிறாள்.

அசாதரணமான ஸ்டண்ட்களை செய்யும் அந்த   ஏகர்,  ஜிப்ஸி டேஞ்சர் ஏகரால் பிடிபடுகிறது.

 இருவரையும் சிறைபிடித்து சைனாவில் இருக்கும் ஏகர் பைலட் பயிற்சி மையத்திற்கு அனுப்புகிறார்கள். தன்னுடன் இருப்பது திருடன் அல்ல ஜேக் பென்டகோஸ்ட், ஒரு யுத்த நாயகன்  என்று சிறுகுழந்தை அமரா அறிகிறாள்.

அவளையொத்த சிறு குழந்தைகள் அங்கே பைலட் பயிற்சியில் இருக்க அவர்களோடு இணைகிறாள் அமாரா. அங்கே சுரேஷ் என்கிற கேடெட் இருக்கிறான்.

சுரேஷ் பாத்திரத்தில் நடித்திருப்பது இரண்டாவது தலைமுறை  இந்திய அமெரிக்கன்.

இப்படி பார்த்து பார்த்து நடிகர்களை ஒன்றிணைப்பதுதான் படத்தின் வசூலுக்கு கியாரண்டி. இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் எனவே இந்திய  முகம் ஒன்று.

இடைவேளைக்கு முன்னரே படம் இரண்டு மூன்று கிளைமாக்ஸ்களை வைத்திருக்கிறது.

ஏகர்கள் அப்சலேட் என்று சொல்லி ரிமோட் ஏகர்களை வடிவமைக்கும் சாகோ நிறுவனத்தின் ரிமோட் ஏகர்களை ஏலியன்கள் தன்வசப்படுத்த ஆரம்பமாகிறது இன்னொரு கிளைமாக்ஸ்.

படத்தில் ஸ்டாக் ஈஸ்ட்உட் இருந்தாலும் ஏதோ கவுரவ தோற்றம்போலவே இருக்கிறது. கிளின்ட் ஈஸ்ட்வுட் என்கிற சூப்பர் ஸ்டாரின் மகனாக இருந்தும் ஸ்காட் மற்ற  நட்சத்திரங்களுக்கு பெரிய இடம் கொடுத்திருக்கிறார். இவ்வளவு அழகான நட்சத்திரத்தை பார்க்கவே பெண்கள் கூட்டம் அள்ளும் என்று நினைக்கிறன்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு பாலியல் தூண்டல்கள் இல்லாத ஆங்கிலப்படம். குறிப்பாக ஜேக் மற்றும் அமோராவிற்கிடையே  எழும்பும் சகோதர பாசம் கிளாஸ்.

அதேபோல ஏகரில் ஏறுவதற்கு முன்னர் முதலில் நேட்டுக்கும், பிறகு ஜேக்கிற்கும் முத்தம் கொடுக்கும் ஜூல்ஸ் ஒரு வாவ். (நியூரல்
இணைப்பின் பொழுது பிரச்சனை வரும் எனவே எமோஷனல் பாலன்ஸுக்காக கொடுத்தாள் என்றாலும்) ஜோரு.

ஒருதபா அவசியம் பாருங்க ...

அன்பன்
மது

Comments

  1. நல்லதொரு அறிமுகம் மது. முடிந்தால் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. திரைப்படத்தை விமர்சித்துள்ள விதம், அதனைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது. நன்றி.

    ReplyDelete
  3. விமர்சனம் அருமை வழக்கம்போல்...வாய்ப்பு கிடைத்தால் பார்க்கணும்..

    கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக