டெட்பூல் 2 Dead pool 2


இன்னுமொரு சூப்பர்ஹீரோ கதைதான். ஆனால் டெட்பூல் கொஞ்சம் சினிக்கல். வழக்கமான சூப்பர் ஹீரோ படங்களில் இருப்பது போல சண்டைக்காட்சிகள் ஒரு வரையறைக்குள் இருக்காது. ரொம்பவும் சில்லறைத்தனமாக இருக்கும் ஹீரோ(?) நம்ம டெட் பூல்.


தன் காதலி சுடப்பட்டவுடன் இறந்துபோக விரும்பி வீட்டின் கேஸ்
அத்துணையும் திறந்துவிட்டு, ஒரு ஐந்தாறு ட்ரம் எரிபொருளை வாங்கி நடுவீட்டில் வைத்துக்கொண்டு தம் அடிப்பதும், வெடித்துச் சிதறி தன் காதலியை சந்திக்க முனைவதும், அவள் இப்போ உன் நேரமில்லை பிறகுவா என தள்ளிவிடுவதும் புதிதாக டெட்பூல் பார்பவர்களுக்கு தலை ரோதனையாக இருக்கலாம். ஆனால் இவனக்கு  வெறிபிடித்த ரசிகர்கள் உலகெங்கும் உண்டு.

வேட் வில்சன், கேபிள், லக்கி என ஒரு எக்ஸ் போர்ஸ் அதகளம் டெட்பூல் 2. ஏற்கனவே முதல்பாகத்தை பார்த்தவர்களுக்கு டெட்பூலின்  சக்திகள்தெரியும்.

ஏன் டெட்பூல் என்கிற பெயர்?

மனிதர்களை பிடித்து அவர்கள்மீது மரபணு ஆய்வுகளை செய்கிற பொழுது செத்துப்போகும் மனிதர்களின் பட்டியலை டெட்பூல் என்பார்கள் காமிக்ஸ் உலகில். அப்படி சாகப் போகிறவன் என்று பந்தயம் கட்டப்பட்ட ஆய்வுகூட மனிதன் டெட் பூல். அங்கிருந்து தப்பி டெட்பூல் என்கிற பெயரை வைத்துக்கொண்டு அதகளத்தை ஆரம்பிக்கிறான். வோல்வரினின் திடீர்மாற்றம் பெற்ற மரபணுக்களை இவன் உடலில் செலுத்தியதால் இவனக்கு சாவு கிடையாது, இவன் உறுப்புகளை வெட்ட வெட்ட அவை வளரும். ஒரு முறை முழுக்க எரிந்து போன சாம்பலில் இருந்து மீண்டும் வந்தவன் இவன். சுருங்கச் சொன்னால் இவனுக்கு மரணமில்லை, அதாவது இவனது எழுத்தாளர்கள் விரும்பும் வரை.

படத்தின் ஸ்பாயிலர் என்னமோ ஒருவரிதான். நெருப்பை கக்கும் ஒரு எக்ஸ் மேன் பெரும் அழிவு சக்தியாக மாறி குழந்தைகளை கொன்றழிக்க, அப்படி கொல்லப்பட்ட குழந்தையின் தகப்பனான கேபிள் கடந்தகாலத்தில் இருந்து புறப்பட்டு வந்து நெருப்பு மனிதனாக மாற இருக்கும், (தன் குடும்பத்தை அழித்த) எக்ஸ் மேன் சிறுவனை கொன்றுவிட விரும்புகிறான்.

தன் காதலியை இழந்த சோகத்தில் இருக்கும் டெட்பூல் எப்படியாவது சாக விரும்புகிறான். ஒரு சம்பவத்தில் நெருப்புச் சிறுவனுடன் ஒன்றினையும் அவன் அவனைப் பாதுகாக்க விரும்புகிறான். ஒரு கட்டத்தில் சிறுவனை பாதுகாப்பதா சாவதா என்கிற புள்ளியில் சாவை தேர்ந்தெடுக்கிறான் டெட்பூல். எனவே சிறுவனிடம் அவனுடன் சிறையில் இருக்கும் சக்திவாய்ந்த யாரவது ஒரு மியூடென்ட் ஒருவனுடன் நட்பாய் இருந்தால் பிழைக்கலாம் என்று சொல்லிவிடுகிறான். சிறுவன் ஜாகர்நாட்டை நண்பனாக்கிக் கொள்ள பிரச்சனைகள் வேறு எல்லைக்கு செல்கின்றன.

யாருமே எதிர்பாரா திருப்பமாக கேபிள் நேரடியாக டெட்பூலின் உதவியைக் கேட்கிறான். முப்பது வினாடிகளில் நெருப்பு கக்கும் அழிவுசக்தியாக மாற இருக்கும் சிறுவனை மனம்மாற்றினால் அவனை கொல்லாமல் விட்டுவிடுகிறேன் என்கிறான் கேபிள். வழக்கமான அதிரடிதிருப்பங்களோடு, எக்ஸ் மென் பாணி நீர், நெருப்பு, காற்று சக்திகள் யுத்தமிட மனிதம் ததும்பும் ஒரு முடிவு.

ரகளை சாமி.

படம் வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்.

மிக கோரமான எக்ஸ் மென் கதைகளில் ஒன்று இது. எனவே இதற்கெல்லாம் தயார் என்றால் நீங்கள் போகலாம். உடல் பாகங்கள் சிதறுவதை, ஒரு உடலை இரண்டாக கிழித்துப் போடுவதை பார்க்கும் திராணி உங்களுக்கு இருந்தால் தாராளமாகப் பார்க்கலாம். 

Comments