ஆசிரிய சங்கங்கள் ஒரு பெரும் சுழலில் இருக்கும் தினங்கள் இவை. ஆசிரியர் நலன் குறித்தோ, மக்கள் குறித்தோ கவலைப்பட தேவையே இல்லாத ஒரு அரசியல் நமது சமகால அரசியல்.
வீட்டுக்கு வீடு இரண்டாயிரமும், திருட்டு ஹார்லிக்ஸ் பாட்டில்களும், வேட்டி சேலைகளும் ஆளும்கட்சி எது என்பதை தீர்மானிக்கும் பொழுது அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீதோ, அவர்கள் நலன் குறித்தோ பெரிதாக அக்கறை இருக்கத் தேவையில்லை என்பதை நம் மாநில அரசியல் மிகத் தெளிவாக காட்டிவருகிறது.
சுவாசிக்க காற்றைக் கோரும் மக்களுக்கு அது துப்பாக்கி ரவைகளைப் பரிசளிக்கிறது. அருந்த நீர் கோரினால் வாயில் துப்பாக்கியை வைத்து விசையை இழுக்கிறது.
பேரிடர் காலத்தில் மட்டும் மனிதம் நிறைந்து களத்தில் இறங்கும் அரசு என்று எதிர்பார்ப்பவர்கள் கீழ்பாக்கத்தில்தான் இருக்க வேண்டும்.
அவர்களுக்கு என்ன அவசியம் வந்தது? தேர்தல் யுக்திகளில் தேர்ந்துவிட்டதால் மக்கள் நலன் குறித்தெல்லாம் கவலைகொள்வது அவசியமற்றது அவர்களுக்கு.
இப்படி அரசால் கைவிடப்பட்ட டெல்டா மக்களை அரவணைத்தது முகநூல் ஆளுமைகளும், ஜே.சி., ரோட்டரி போன்ற பன்னாட்டுச் சேவை அமைப்புகளும், கட்செவித் தோழர்களும்தான்.
இப்படி மக்களை மனிதத்தோடு இயங்க விதத்தில் தொழில்நுட்பம் எத்தகு எல்லைகளை தொட்டது என்பதற்கு கேரளப் பேரிடரும், தமிழகப் பேரிடரும் ஒரு வரலாற்று சாட்சி.
இந்த புள்ளியில் நின்று தமிழ்நாடு ஆசிரிய சங்கத்தின் மீட்புப் பணிகளைப் பார்த்தோம் என்றால் அதன் பிரமாண்டம் புரியும்.
தங்கள் சங்கத்தின் ஆசிரியர்கள் மூலம் திரட்டிய நிதியை, நிவாரணப் பொருட்களை அது விநியோகித்த வேகம் உண்மையில் மெச்சத்தக்கது.
ஆற்றல் மிகு தலைவர் திருமிகு.கு.தியாகராஜன் அவர்களின் தலைமையில் மீட்புப் பணிகளில் இறங்கிய இயக்கம் டெல்டாவின் பல பகுதிகளுக்கு விரைந்தது.
அடுத்த தலைமுறை ஆசிரியர்கள் மக்கள் நலன் சார்ந்து களம்புகுவது நம்பிக்கை அளிக்கும் விசயம்.
தலைவர் திருமிகு.தியாகராஜன் அவர்களின் காலக்கோட்டில் இருந்து.
Comments
Post a Comment
வருக வருக