கஜா நிவாரணக் குழு புதுகை

கஜா நிவாரணக் குழு புதுகை
என் சொந்த வாழ்வின் புயல் ஓய்ந்த பின்னர் வந்தது கஜா.  எனது அன்னை எங்களை விட்டுச் சென்ற இருபத்தி  இரண்டு நாட்களுக்கு பிறகு கஜா சுழன்றடித்தது.



புதுகை முழுதும் மின்தடை. எதுவும் பிடிபடாது நாட்களை நகர்த்தினேன். இதன் காரணமாக நண்பர்கள் என்ன செய்து கொண்டிருகிறார்கள், யார் களத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாமல் போனது.

இரண்டு நாட்களில் மின்சாரம் வந்துவிடும் என்று சொல்லி ஒருவாரம் ஓடிவிட்டது. மின்சாரத்தை காணோம்.

முழு கற்கால வாழ்க்கை.

இந்த தருணத்தில் நண்பர்கள் களத்தில் வீச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

எனது வீட்டை சரி செய்யவே மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட, ஒருவழியாக மின்சாரம் வந்தபின்னர் இணையர் சொன்னார் என்னங்க "கஜா நிவாரணக் குழு" என்று நிலவன் அண்ணா முன்னெடுத்து செய்து கொண்டிருக்கிறார் என்றார்.

இதற்கு முன்பாகவே இளவல் பாலாஜி நாம் ஓணான்குடி செல்லலாம் என்று சொன்னதால் ஓணான்குடி சென்றுவிட்டு மதியம் கஜா நிவாரணக் குழு சென்றோம்.

குழு புதுகையின் புகழ்பெற்ற ஆளுமைகளில் ஒருவரான மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மருத்துவமனையின் அறை ஒன்றில் இயங்கியது.

கணினித் தமிழ்ச்சங்கத்தின் பெருவாரியான உறுப்பினர்கள் களப்பணியில். கவிஞர் கீதா, கவிஞர் மாலதி, கவிஞர் மகா சுந்தர், ஆசிரியர் மஸ்தான், பெரியவர் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, அபிராமி கருப்பையா, யோகா பாண்டியன், ஐடியா பிளஸ் கிருஷ்ண வரதராஜன், அனு வரதராஜன், அவர்களின் இளவல்கள், செல்வி சினேகா மாலதி, செல்வி லக்ஷயா முத்துநிலவன்,  செல்வன் யூஸுப் மஸ்தான், செல்வன் ஜெரால்ட் மற்றும் விதைக்கலாமின் அத்துணை உறுப்பினர்களும் களத்தில் சுழன்று கொண்டிருந்தார்கள்.

ஒருபக்கம் பெருவெள்ளம் போல வந்துகொண்டிருந்த நிவாரணப் பொருட்களை பதிவு செய்வது, பிரிப்பது, இன்னொருபக்கம் அவற்றை  துடிப்பு நிறைந்த தன்னார்வலர்கள் மூலம் அவற்றை விநியோகிப்பது என அனல் பறந்தது.

பத்துக்கு பத்து அறையில், யூஸுப், சினேகா, சுதா மகா சுந்தர், கவிஞர் கீதா என தன்னார்வலர்கள் பொருட்களை எங்கிருந்து வருகின்றன, எவர் மூலம் வருகின்றன என்று பிரித்தனர். வழங்கும் பொழுதும் எந்த ஊருக்கு யார் மூலம் எவ்வளவு பொருட்கள் வழங்கப்பட்டன என்றும் மிகக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டனர்.

குழுவில் எங்கள் அடுத்த தலைமுறை களத்தில் சுழன்றது மகிழ்வு.

நிகழ்வில் ஈடுபட்ட அனைவருமே தங்கள் சொந்த நிதியையும் சேர்த்திருந்தார்கள். குறிப்பாக டாக்டர் ராமதாஸ் மட்டும் மூன்று லெட்சத்துக்கும் அதிகமாக நிதியளிதிருந்தார்.

கவிஞர் தங்கம்மூர்த்தி தன்னுடைய உடல் நிலை காரணமாக ஓய்வில் இருந்தாலும் தன்னுடைய பங்களிப்பாக நிவாரணப் பொருட்களை அபிராமி கருப்பையா மூலம் அனுப்பிவைத்தார்.

புதுகையின் அத்துணை மனித நேயர்களையும் ஒரே குடையில் கொண்டுவந்து, அவர்களின் முழுச் செயல்திறனையும் களத்தில் வெளிப்படுத்த செய்த அமைப்பு கஜா நிவாரணக் குழு, புதுகை.

குறிப்பாக இளவல் மலையப்பன் ஒரு கிராமத்தில் இருந்து வந்த குரலுக்கு நிவாரணப்  பொருட்களை கொண்டு சென்ற பொழுது களம் சோதித்தது. நிவாரணம் கோரியவர்கள் சாலையில் இருந்து நான்கு கி.மி தள்ளி இருக்க, சாலையின் விளிம்பில் இருந்தோர் (எளிதில் அணுகக் கூடிய இடம், பலமுறை நிவாரணப் பொருட்களை பெற்றும்) உள்ளே அனுமதிக்க முடியாது எனச் சொல்ல, மலை குழு வெறும் கையேடு உள்ளே சென்று நிவாரணம் கோரியவர்களை சாலைக்கு வரச் செய்து அவர்களுக்கு வழங்கியது.

கஜா பாதிப்புக்கு நிவாரணம் தந்துவிடலாம், ஆறுதல் தந்துவிடலாம். சாதிய பாதிப்புக்கு?

கவிஞர் நிலவனுக்கோ வேறுமாதிரியான இனிய அனுபவம்.

யோகா பாண்டியன் மூலம் எம்.ஆர்.எஸ். ஏற்றுமதி நிறுவனம் தந்த இரண்டு டன் காய்கறிகளை விநியோகிக்கும் பொழுது எழுந்த அனுபவம் அது.

கீரமங்கலம் பகுதியில் ஒரு கிராமத்தில் காய்கறிகளை வழங்கிய பொழுது அவற்றை பெற்றுக்கொண்ட மக்கள், ஊரின் நடுவே ஒரு கம்பளத்தை விரித்து பெற்றுக்கொண்ட காய்கறிகளை வைகை பிரித்து குவித்து பின்னர் அவற்றை அரிய ஆரம்பித்திருக்கிறார்கள்.

பிறகு ஊரே வரிசையில் நின்று அவற்றை முறைப்படி பிரித்துக்கொண்டிருக்கிறார்கள். நெகிழ்வான அனுபவம் இது.


இந்தக் குழுவின் பிரமாண்டம் காரணமாக கிட்டத்தட்ட முன்னூறு கிராமங்களுக்கு மேல் உதவிகளை செய்ய முடிந்தது.

இந்தக் குழு சந்தித்த பெரிய பிரச்சனைகளில் ஒன்று நிறைவு செய்வது. அய்யா போதும்யா என்று பலமுறை சொல்லியும் நிவாரணப் பொருகள் வந்து கொண்டே இருந்தன. அதேபோல கோரிக்கைகளும் இருந்ததால் வர வர வழங்கிக் கொண்டிருந்தது இக்குழு.

நிவாரணிகள் தொடரும்.

அன்பன்
மது.

Comments