மழைத்துளிகள் கஜா மரமீட்புப் பணிகள்


கஜாசுரனின் நர்த்தனதிற்கு பின் உலகே சக மனிதர்கள் துயர் குறித்து, விழுந்துபோன வீடுகள் குறித்து கலக்கம் கொண்டு உதவித் துடித்த பொழுது ஒரு குழு மட்டும் நிவாரணப் பணிகளில் மட்டுமில்லாமல் மற்றுமொரு முக்கியமான மீட்பில் இருந்தது.




நிகழ்வின் தீவிரத்தின் அழுத்தத்தில் பலர் இவர்களைப் பார்த்துச் சிரித்தனர், உண்மைதானே மக்கள் நிர்கதியாக நிற்கும் பொழுது மரங்களை மீட்கும் ஒரு தொகுதி இளைஞர்களை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.

ஆனால் குருமூர்த்தியின் பசுமை பாசத்தை, வெறியை அறிந்த யாரும் அவரது குழுவினரின் செயல்பாடுகளை குறை சொல்லவே முடியாது.

வாரத்தின் எல்லா நாட்களிலும் புதுகை பகுதிகளில் எங்கோ ஒரு ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் குழு இவரது மழைத்துளிகள் குழு.

இவர்களது தனித்துவம் மரக்கன்றுகள் நடுதல் அல்ல, வனங்களை உற்பத்தி செய்வது.

இவர்கள் மியோவாகி முறையில் அடர் குறு வனங்களை உருவாக்கி வருகிறார்கள். புதுகையின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் அடர் குறுவனங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 கஜா மீட்புப் பணிகளில் மணி பாரோ குழுவின் நூர்முகமது அவர்கள் மூலம் நிவாரணப் பணிகளில் தாங்களே ஈடுபட வேண்டும் என்று சொல்லி திருச்சியில் இருந்து வந்திருந்த சுப்ரமணியன் தம்பதியினரை நாடோடி இலக்கியன் அவர்களின் சகோதரர் மூலம் கிளாங்காடு பகுதிகளில் நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபடச் செய்த குழு இவர்கள்.


இவர்கள் பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டாலும் அதையெல்லாம் விட இவர்கள் செய்த மர மீட்புப் பணிகள் அற்புதம் என்றேதான் சொல்ல வேண்டும்.

கஜாசுரன் பிடுங்கி வீசியிருந்த மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் நிமிர்த்தி மீண்டும் தழைக்க செய்துவிட்டார்கள்.

கடந்த வாரம் புதுகை பெரியார்நகர் ஆவின் வளாகத்தை கடக்கும் பொழுது முகம் நிறைய புன்னகையுடன் அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த கவிஞர் சுரேஷ் அவர்களை கேட்டேன்.

என்ன விஷயம்.

நாங்கள் மீட்ட மரங்கள் மீண்டும் துளிர்துவிட்டன என்றார் புளங்காகித்தோடு.

உண்மையில் இது மிக முக்கியமான விசயம்.

வீழ்ந்த மரங்களை மட்டுமல்ல அதன் அருகே இருக்கும் மரங்களையும் வெட்டி விறகாக்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் மழைத்துளிகளின் பணி அதி முக்கியமானது.

தொடர்வோம்
அன்பன்
மது 

Comments

  1. புயலின் தாக்கத்தை எதிர்கொண்டு, இவர்கள் ஆற்றிய பணி போற்றத்தக்கது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக