இஸ்ரேலின் பரிசு

பெஞ்சமின் நாதன்யா- இஸ்ரேலிய பிரதமர் 
ஆண்டு 1968, ஏதன்ஸ் விமான நிலையம்.

 டெல் அவிவ்லிருந்து வந்திருந்த போயிங் 707 விமானம் ஒன்று ஏதன்ஸில் நின்று இன்னும் நான்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு நியூயார்க் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.



பயணிகள் யாருக்கும் அது மறக்க முடியாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என்பது தெரிந்திருக்கவில்லை.

விமான நிலையத்தில் அதன் துவக்கப் புள்ளி ஒன்று நிகழத்துவங்கியிருந்தது.


அவர்கள் பரபரப்பாக இருந்தார்கள், விமான நிலையத்தின் ஓடுபாதையை அடைவதே அவர்களின் நோக்கம், அது அவர்களுக்கு எளிதாகவே இருந்தது, எல் அல் பிளைட் 253யை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர். அந்த விமானம் டெல் அவிவ்விலிருந்து வந்திருப்பதால் அதில் இஸ்ரேலியர்கள்மட்டுமே இருப்பார்கள். அனைவரையும் போட்டுத்தள்ள வேண்டும். பாலஸ்தீன மண்ணை அபகரித்துக்கொண்ட யூதர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும் எனும் சிந்தனை அவர்களின் மூளைகளின் செல்களை அரித்துக்கொண்டிருந்தது.

காலம் காலமாக அவர்கள் மண்ணாக இருந்ததை விலை கொடுத்து வாங்கி ஒரு நாடு என்று பிரகனப்படுத்தியதோடு இல்லாமல், ஏரியா வஸ்தாது லெவலுக்கு இஸ்ரேலியர்கள் உருவெடுப்பதை அவர்கள் விரும்பவில்லை.

அவர்கள் ?

பாலஸ்தீனிய விடுதலைக்குழு, ஆயுத மொழியில் பேசினால் மட்டுமே விடுதலை என்று நம்பியவர்கள், பாப்புலர் பிரான்ட் பார் தி லிபரேஷன் ஆப் பாலஸ்தீன் என்கிற அமைப்பாக அறியப்பட்டவர்கள். லெபனானில் இருந்து உருவான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைசேர்ந்தவர்கள்.

26, டிசம்பர் 1968இல் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க இஸ்ரேலிய விமானமான எல் அல் பிளைட் 253யை தாக்கினர்.
அவர்கள் நேஹாப் மற்றும் இஸ்ஸா முஹமது, பயனியர் அரங்கிலிருந்து இருநூறு அடிதூரத்தில் புறப்படத்தயாராக இருந்த விமானத்தை நோக்கி ஓடத்துவங்கினார்கள், மூச்சிரைக்க ஓடியவர்கள் விமானத்தை நோக்கி சுடத்துவங்கினார்கள். தன்னுடைய சப்மெஷின்கன்னை இயக்கினான் இஸா முகமது, காட்டுத்தனமாய் இயக்கியதில் விமானத்தின் சுவர்களில் ஆங்காங்கே பொத்தல்கள். நேஹாப் இரண்டு கையெறி குண்டுகளை வீச விமானத்தில் இருந்தவர்கள் அலறத் துவங்கினர்.

இரண்டே நிமிடங்கள், கிரேக்க காவல்துறை சுதாரித்து  தீவிரவாதிகளை மடக்கியது. இந்த தாக்குதலில் லியோன் ஷ்ரைடன் என்கிற இஸ்ரேலிய மரைன் எஞ்சினீர் இறந்துபோனார், இன்னொரு பெண்ணுக்கு குண்டுகள் துளைத்த காயம் இருந்ததே ஒழிய உயிருக்கொன்றும் ஆபத்தில்லை. இன்னொரு பெண் களேபரத்தில் விமானத்தின் கதவு திறக்கப்பட்ட பொழுது கீழே குதித்ததில் எலும்பு முறிவுக்கு ஆளானார்.

தாக்குதல் துவங்கிய இரண்டு நிமிடங்களுக்குள் கிரேக்கப்படை துரிதமாக செயல்பட்டதால் ஐம்பத்தி ஒரு பயணிகளில் (பணியாளர்கள் பத்துபேர் உட்பட) ஐம்பது பேர் பிழைத்தார்கள்.

கைது செய்யப்பட்ட நேஹாபும், இஸ்ஸாவும் விமானத்தில் இருந்த அத்துணை பயணிகளையும் கொல்வதே நோக்கம் என்றார்கள். முகமது இஸ்ஸாவிற்கு பதினேழு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவருமே லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இஸ்ரேலிய மூளைகள் குறித்து சரிவரப் புரிந்து வைத்திருந்தால் பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்களா என்பதே சந்தேகம்தான். இஸ்ரேலியர் தாக்குதலை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை.

அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் இஸ்ரேலுக்கு ஒரு மிரட்டல் விடுக்கவேண்டும். இப்படி ஒவ்வொரு அடியாக அடித்து தங்கள் நிலத்தை, அதன் மீதான தங்கள் உரிமையைப் மீளப்பெறவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.

இஸ்ரேலிய ஐ.டி.எப் பற்றியோ மொசாட் பற்றியோ அல்லது உலகின் துணிகர ராணுவ செயல்பாடுகளுக்கு பெயர்போன சயீரத் மாட்கல் குறித்தோ பாலஸ்தீனியர்கள் முழுதாக புரிந்து வைத்திருந்தால் ஒருவேளை அவர்களின் உரிமைப்போரை யூதர்களைப் போலவே லாபியிஸ்ட்களை கொண்டும் நடத்தியிருப்பார்கள்.

யூதர்கள் உலகை ப்ராக்சியில் ஆளுகிறார்கள் என்கிற பெரிய புரிதல் அன்று யாருக்கும் இல்லை.

இந்த தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொண்டவிதம் அதன் அசுர பலத்தையும், துல்லியதிட்டமிடலையும்  காட்டுகிறது.

மிகச் சரியாக இரண்டு நாட்களுக்கு பிறகு 28 டிசம்பரில் அது ஒரு ராணுவச் செயல்பாட்டை நிகழ்த்தியது. ஆபரேஷன் கிப்ட் என்று பெயரிடப்பட்ட அந்த செயல்பாட்டின் மூலம் லெபனானின்   பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த  பதினான்கு விமானங்களை எரித்தது.

இதில் இன்ட்ரா கார்ப் என்கிற நிறுவனத்தின் விமானங்களும் அடங்கும். இன்ட்ராவில் பல நாடுகள் பணத்தை முதலீடு செய்திருந்தன, அமரிக்கா உட்பட. லெபனான் படைகள் இஸ்ரேலின் விமானத்தை தாக்காத பொழுது எப்படி இஸ்ரேல் இந்த தாக்குதலில் ஈடுபடலாம் என அமேரிக்கா தன்னுடைய கடும் எதிர்ப்பை தெரிவித்தது,

இஸ்ரேலுக்கா  தெரியாது அமெரிக்காவின் எதிர்ப்பை எப்படி  எதிர்கொள்வதென்று!

இந்த தாக்குதலில் ஈடுபட்ட  சயீரத் மாட்கல் என்கிற இஸ்ரேலிய ராணுவ அமைப்பின் அதிரடி செயல்பாட்டுப் படையின் கமாண்டோ ஒருவர்தான் பின்னர் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் பெஞ்சமின் நாதன்யா!

களத்தில் துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு ஜேம்ஸ் பாண்ட் பாணி பணிகளைச் செய்த ஒருவருக்கு நாட்டை ஆளும் தகுதி எப்படி வந்தது?

வியப்பான கேள்விதான்.

அன்பன்
கஸ்தூரி ரெங்கன்.

Comments

Post a Comment

வருக வருக