அவெஞ்மென்ட் என்று ஒரு படம் வந்திருக்கிறது. எல்லோரும் இங்கிலாந்தின் ஜான் விக் என்று சொல்கிறார்கள்.
நூற்றி எழுபத்தி ஐந்து மனிதர்களின் பெயரை உங்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா?
கைதி ஒருவனை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள். கான்சரில் செத்துக்கொண்டிருக்கும் தனது அம்மாவை பார்க்கவேண்டும், ஆனால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு கொடுங்குற்றவாளியான அந்த கைதியை அழைத்துவருவதற்குள் காலம் கடந்துவிட, அவன் அம்மா இறந்து போகிறாள்.
இரண்டே காவலர்கள், கைவிலங்கு, சிறைப்பறவை பறந்துவிடுகிறது. அடுத்த காட்சியில் ஒரு பாரில் ரவுடிக்கூட்டம் ஒன்று பேசிக்கொண்டிருக்கிறது, எவனோ ஒருத்தன் நம்ம ஆள வெட்டினான் என்பதற்காக இப்படி எல்லோரையும் பிடித்து இந்த பாரில் உட்கார வச்சுட்டானுக, என்று அவர்களுக்கு மேல இருக்கும் ஹைட் மற்றும் லிங்கன் என்கிற பெரிய கைகளைத் திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
திடீர் திருப்பமாக அங்கே இருக்கும் கைதி நான்தான் உங்க ஆள போட்டேன் என்கிறான். அதிரடிகள் தொடர்கின்றன, கதையும் விரிகிறது.
ஆக்சன் பட ரசிகர்கள் மிஸ் பண்ணாம பார்க்கவேண்டிய படங்களில் ஒன்றாக வந்திருக்கிறது.
ஆனால், அப்படி சொல்லிவிடவும் முடியாது, கொடூரமான ஆக்சன் காட்சிகள், ஹீரோவை மாடிப்படியை கவ்வ வைத்து பிடரியில் ஏறி மிதித்து அவன் தாடை எலும்புகளை உடைப்பதாகட்டும், ஹீரோ கிடைக்கும் பொருட்களை எடுத்து அடித்து எதிரிகளை நொறுக்குவது ஆகட்டும் அபாயகரமான எல்லையைத் தாண்டியிருக்கிறது. ஒரு காட்சியில் ஹீரோ ஒருவனை கழுத்தில் கடித்தே கொல்கிறான். மிகக் கொடூரமான சண்டைக் காட்சிகள் திரையில் பெருகுவது அடுத்த தலைமுறைக்கான ப்ராக்டிகல் பரிந்துரைகள்.
படத்தை இப்போது நினைத்தாலும், கிழிகின்ற சதையின், உடைகின்ற எலும்புகளின் ஒலிகள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதீத லெவலில் இருக்கும் சண்டைக்காட்சிகள் ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ரசிகர்கள் சா(SAW), பைனல் டெஸ்ட்டிநேஷன் என்று பார்த்து மரத்துப் போயிருந்தால் இந்தப்படம் எளிதாக பார்க்கக் கூடிய படம்தான்.
அய்யா நான் இந்த படங்களை பார்த்ததே இல்லை என்போர் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்துக்கொண்டு அவெஞ்மென்ட் பக்கம் ஒதுங்கலாம்.
ஒருவைகையில் தனக்கு நிகழ்ந்த துரோகத்துக்கு பழிதீர்க்கும் படம்தான். படத்தின் அத்துணை வன்முறையையும் கிளைமாக்சில் சமன் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
கிளைமாக்சில் 175 மனிதர்களின் வாழ்வை, அவர்களின் குடும்பத்தை மீட்கும் திருப்தியோடு குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கிறான் ஹீரோ, கேன் பர்ஜஸ்.
ஹீரோவாக நடித்திருப்பவர் ஸ்காட் அட்கின்ஸ், ஸ்பானிய வம்சாவழியைச் சேர்ந்த இங்கிலாந்து நடிகர். தன் பதினான்கு வயதில் தாக்கப்பட்டு வழிப்பறிசெய்யப்பட்டதால் தற்காப்பு கலைகளை வெறிகொண்டு கற்றுக்கொண்டவர். நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் அத்துணை தற்காப்புகலைகளும் இவருக்கு அத்துப்படி. எக்ஸ் மென் ஆரிஜின் படத்தில் வெப்பன் பதினொன்று இவர்தான். இதுதவிர நீங்கள் ரசித்துப் பார்த்த பல ஆக்சன் காட்சிகளில் ஸ்காட் அட்கின்ஸ் முகத்தை பார்த்திருக்கலாம்.
குலை நடுங்கவைக்கும் ஆக்சன் திரில்லர் இந்தப்படம். அடியா இல்லை இடியா என்கிறமாதிரியான வசனங்கள் இந்தமாதிரி படங்களுக்கென பிரத்யோகமாக உருவானவை என்பதை உணர்வீர்கள்.
படத்தின் அடிதடிக் காட்சிகளை கடந்து நான் ரொம்பவே ரசித்த ஒரு விசயம் இசை, ஷான் முர்ரே, அடிதடிப் படங்களில் டம் டம் என்று அடித்துக் கொண்டிருக்காமல் மெல்லிசையைப் பொருத்தியிருக்கிறார். இதற்கு பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ப்ரூஸ் வில்லிஸ் நடித்த ஜக்கால் படத்தில்தான் கொலைகளுக்கு பின்னணியில் மெல்லிசை இழையும். படத்தின் பெரும் பலம் இசையாக இருக்கிறது.
ஏகப்பட்ட லாஜிக்கல் ஓட்டைகள் இருந்தாலும், திரைக்கதை வேகம் நம்மை ஈர்த்து உட்க்கார வைக்கிறது.
செண்டிமெண்ட் காட்சிகளும் இருப்பதுதான் ஆச்சர்யம். கான்சருக்கு கீமோ தெரப்பி எடுக்க போகும் அம்மாவிடம் தன்னை கொலை செய்ய விரும்பும் டான் குறித்து எதுவுமே சொல்லாமல் ஸ்காட் தோள்களைக் குலுக்குவது, இறுதி காட்சியில் அம்மாவை ஒரு வெள்ளை போர்வைக்குகீழே பார்த்தேன் என்று சொல்வதில் ஸ்காட் ஸ்கோர் செய்துவிடுகிறார்.
ஆனாலும்
மன உறுதி கொண்டோருக்கு மட்டும்
ஆங்கிலத் திரைப்படங்களை நீங்கள் விமர்சிக்கும் விதத்தினை நான் அதிகம் ரசிப்பதுண்டு. அவ்வகையில் இப்பதிவினையும் அதிகம் ரசித்தேன்.
ReplyDelete