ஒரு முதன்மைக் கல்வி அலுவலரும் வெளியில் தெரியா சாதனைகளும்


அரசுப் பணியில் உயர் பதவி என்பது கிட்டத்தட்ட ஒரு குறுநில மன்னர் போலத்தான். பதவி உயர உயர அதிகாரம் அதிகரிக்கும். இதன் மயக்கத்தில் திளைத்து கடும் விமர்சனத்துக்கு ஆளாகி பலபேரின் சாபத்தை வாங்கிக்கொண்டு இவர்கள் விடைபெறுவது வாடிக்கை.


அத்தி பூத்தாற் போல அவப்போது அற்புதமான அதிகாரிகளும் வருவார்கள். அதுவும் தற்போதைய சூழலில் ஒரு முதன்மைக் கல்வி அலுவலரின் பணி வரம்புகள், அதிகார எல்லைகள் விரிவாக்கப்பட்டிருக்கும் நிலையில் குறுநில மன்னர் அல்ல பெரு நில மன்னராகவே மு.க.அலுவலர்கள் தங்களை  உணரலாம். 

புதுகையின் கல்வி பக்கங்களில் திருமிகு.செல்லம், திருமிகு. அருள்முருகன் மற்றும் திருமிகு.சாந்தி அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. 

மாவட்டம் முழுதும் மாணவர் நலன்கருதி சுற்றிவந்த திருமிகு செல்லம் அம்மையார் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். 

தொழில்நுட்பத்தில், பாடப்பொருள் வழங்கல், கற்பித்தல் என பல்வேறு நிலைகளில் சாதனை புரிந்த முனைவர்.அருள்முருகன் குறித்தும் எழுதியாயிற்று. 

பல்வேறு காரணங்களால் திருமிகு.சாந்தி அவர்கள் குறித்து எழுதுவது தள்ளிக்கொண்டே போனது. நான் பணிபுரியும் மாவட்டத்தில் எனக்கு அதிகாரியாக இருக்கும் ஒருவரைப் பற்றி அவர் அதிகாரத்தில் இருக்கும் பொழுது எழுதுவது சரியாக இருக்காது என்பதை என்னுடைய அனுபவம் சொல்ல காத்திருந்தேன். 

எழுதலாம் என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் திருமிகு.சாந்தி அவர்கள் மீண்டும் எமது மாவட்டத்திற்கே வந்துவிட மேலும் தள்ளிப்போனது கட்டுரை. 

இப்போது எழுத ஒரு வாய்ப்பு, முடிப்பதற்குள் மீண்டும் எங்கள் ஊருக்கு வந்தாலும் வியப்பில்லை!

ஒரு மேல்நிலை பள்ளியின் ஆசிரியராக இருந்து போட்டித் தேர்வின் மூலம் மாவட்ட கல்வி அலுவலராகி பிறகு முதன்மைக் கல்வி அலுவலராக பணியேற்றவர்.

மிகச் சரியான புரிதலோடு இயங்கி மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்தியவர். 

இந்தப் பதிவு இவற்றைக் குறித்து அல்ல. 

என் மாணவர் ஒருவர் குறித்து, அவரது வாழ்வு எப்படி முதன்மைக் கல்வி அலுவலரால் மடை மாற்றப்பட்டது என்பது குறித்து.

எல்லைப்பட்டியில் பயின்ற அந்த மாணவர் ஒரு ஏழைக் குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை. அதுவும் அவரது தந்தை கருத்து வேறுபாட்டால் குடும்பத்தை கைவிட்டு சென்றுவிட்டார். போனது தான் போனார் என்னைக்கு இருந்தாலும் தன் மூன்று மகன்களில் ஒருவரை வெட்டுவேன் என்று மிரட்டிவிட்டு தன்னுடைய சகோதரிகளிடம் சென்றுவிட்டார். 

ரொம்ம ஆழமாக விசாரிக்கவில்லை என்றாலும் எப்போதும் மரணத்தின் நிழலில் இருக்கும் அந்த பையன் மீது இயல்பாகவே ஒரு அக்கறை எம் பள்ளி ஆசிரியர்களுக்கு உண்டு.

நல்ல மதிப்பெண்களோடு அருகே இருந்த மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அவனுக்கு ஒரு விடியல் நிகழ்ந்தது. 

திருமிகு.சாந்தி அவர்கள் முதல்வர்கள் முகாம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து, மேல்நிலை இரண்டாம் ஆண்டில் நல்ல மதிப்பெண் பெரும் அரசுப் பள்ளி  மாணவர்களை தூய மரியன்னை பள்ளியில் இரண்டு மாதங்கள் உணவு மற்றும் உறைவிடத்தோடு பயிற்சி எடுத்துக்கொள்ளச் செய்தார். 

இந்த திட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இந்தப் பையனுக்கு சாத்தியமாக்கியது திரு.ராஜ்குமார்(தற்போது இவர் மாவட்ட கல்வி அலுவலராக இருக்கிறார் என்று நினைக்கிறன்) பயல் வாழ்வே மாறிப்போனது. 

மேல்நிலை வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு பயல் தேர்ச்சியுற அடுத்த திருப்புமுனையும் மு.க.அ மூலமே நிகழ்ந்திருக்கிறது.

நடிகர் சூர்யா அவர்களின் அகரம் அமைப்பின் மூலம் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. 

இது எதுவுமே எனக்குத் தெரியாது. 

சார் நான் சென்னை போறேன் என்று சொல்லிவிட்டுப் போக அந்த மாணவர் வந்த பொழுது எப்படி என்ற கேள்விக்கு விடையாகத்தான் இந்த தகவல் கிடைத்தது. 

மனம் நிறைய மகிழ்வோடு அலுவலகத்தில் நெருக்கமாக இருக்கும் ஒரு ஆசிரியரிடம் பேசினேன், சார் அவன் ஒருவனுக்கு மட்டுமல்ல அவனைப் போல முப்பத்தி மூன்று பேருக்கு அகரம் உதவி செய்கிறது. எல்லாம் அம்மா முயற்சிதான் என்றார். 

எனக்கோ கடும் அதிர்ச்சி. 

எதை எதையோ வாட்சப்பில் பகிரும் நம்மவர்கள் இந்த பெரும் சாதனையை ஏன் பகிரவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. 

ஆனால், இன்று நான் ஆசிரியர்களுக்கு எடுத்த புதிய பாடநூல் பயிற்சியில் கூட இந்த தகவலைப் பகிர்ந்துகொண்டேன். 

நல்ல விசயங்களை உடனே பகிர்வதும் நல்ல பழக்கம்தானே. 

முப்பத்தி மூன்று மாணவர்களில் ஒருவர் எனக்கு தெரிந்தவர் என்பதால் மட்டுமே இந்தப் பதிவு சாத்தியமாயிற்று.

தொடர்வோம்
அன்பன் 
மது




Comments

  1. பாராட்டப் படவேண்டிய நெகிழ்ச்சியான செய்தி.

    ReplyDelete
  2. இது போன்ற சிலரால் தான் இன்னமும் உயிர்ப்பு இருக்கிறது. நல்லதொரு அதிகாரி பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி மது.

    ReplyDelete
  3. மிக நல்ல பதிவு! சமூக வலைத்தளங்கள் மூலம் ஊடகம் என்பதும் மக்கள் கையிலேயே வந்து விட்ட நிலையில் இப்படிப்பட்ட மாமனிதர்கள் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டியது சக மனிதர்களின் கடமை. நீங்கள் அதை மிக அழகாக நிறைவேற்றி இருக்கிறீர்கள்!

    ReplyDelete
  4. அகரம் பற்றிய இப்பதிவில் அதை நடத்தி வரும் சூர்யாவின் அண்மைய வேண்டுகோளையும் நினைவூட்டினால் பலருக்கும் அந்த முக்கிய வேண்டுகோள் சென்று சேரும் எனும் நம்பிக்கையில் - http://www.namathukalam.com/2019/07/Suriya-speech-on-NEP.html

    ReplyDelete
  5. சிறப்புப் பதிவு

    ReplyDelete
  6. வணக்கம்
    உண்மையில் மகிழ்ச்சியான சம்பவம் சார் தொடருங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அகரத்தின் சேவை போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
  8. வணக்கம் அண்ணா.
    இப்படிப்பட்ட நல்லவர்களால் தானே பூமி சுழல்கிறது.
    பல நாட்கள் ஆகிவிட்டது, உங்கள் பக்கம் புதுப்பொழிவுடன் இருக்கிறதே, அருமை அண்ணா.

    ReplyDelete

Post a Comment

வருக வருக