ஏன் அசுரன் மிக ஆபத்தான படம் ?

மிகச் சமீபத்தில் நூறு கோடி வசூல் சாதனை செய்த திரைப்படம் அசுரன். இதுவரை ஐந்து லட்சம் விமர்சனங்கள் வந்திருக்கும்!

என் நெருங்கிய நட்பில் இருவர் படம் குறித்து சொன்னது பார்க்கக் கூடாத படம் !

முதலாமவர் சொன்ன காரணம் அதீத வன்முறை. கணக்கற்ற கொலைகள் என்பது. இயற்கை பேரிடரோ,  ஏழைக் குழந்தைகள் கல்வியோ உடனடியாக கையில் இருக்கும் காசை கொடுப்பவர் இவர்.

இன்னொருவர் ஆசிரியர், அண்ணே இப்படில்லாம் நடந்தது என்று பழைய தழும்பை அதன் காரணத்தை காட்டுவது மீண்டும் அதே நிகழ்வுகள் நடக்கக் காரணமாகிவிடும் என்றார்.

பணிச் சூழலில் கடும் அழுத்தத்தில் இருப்பதால் திரையரங்கம் பக்கமே செல்லவில்லை நான்.

விசாரணையை லைக்கா என்பதால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதே போல அசுரனும் மிஸ் ஆகிடும் என்றே நினைத்தேன்.

ஒரு வழியாக தியேட்டருக்கு சென்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

1857இல் துவங்கிய இந்திய விடுதலைப் போர் ஏன் தொண்ணூறு வருடங்கள் நீண்டு 1947இல் முடிந்தது. ஏன் இந்த நீண்ட போராட்டம் என்கிற கேள்வி நியாயமாகவே எல்லோருக்கும் இருக்கும்.

ஏன் என்றால் வேறு எந்த நாட்டையும் விட இந்தியர்கள் படிநிலைச் சமூக அமைப்பைக் கொண்டவர்கள். இந்தியாவின் கலாச்சாரம் உயர்ந்தது என்று பேசுவோர் வாயால் காத்துவிடுவோர் மட்டுமே.

இங்கே எந்த ஒரு சமூகமும் யாருக்கும் சமமானது இல்லை என்கிற சமூக மனபிறழ்வு உண்டு. விவேகானந்தர் கேரள சாதிய அமைப்புகளைக் குறித்துப் பேசும் பொழுது மிகப் பெரிய மன நோய் மருத்தவமனை கேரளா என்று சொல்லியிருக்கிறார்.

உண்மையில் இந்தியாவே மாபெரும் மனநோயாளிகளின் கூடாரம்தான். சாதிப் பீடும், சாதி குறித்த துணுக்குறும் அச்சமும் இதன் இருவேறு எல்லைகள். பை போலார் டிஸார்டர் போல இவை சமூக மனவியாதிகள்.

இவற்றை புரிந்து கொள்ளவிட்டால் நாம் இந்தியாவைப் புரிந்து கொள்ள முடியாது. இந்த மனநோயாளிகளில் ஒருவர் உங்கள் வீட்டின் நிலைக் கண்ணாடியில் கூட இருக்கக் கூடும், என் வீட்டிலும் கூட.

போற்றிப் பாடடி பொண்ணே....என்ற பாடலை தமிழகமே ரசித்தது அதே போல இன்னொரு படைப்புதானே அசுரன். ஏன் இது பார்க்கக் கூடாத படம் என்று சொல்கிறார்கள்?

சிவாஜியின் நடிப்பைச்  சிலாகித்து பேசிய நண்பர்கள் இப்போது அசுரனுக்கு துணுக்குற்றுப் போவது ஏன்?

நகைப்பு வரவில்லை உங்களுக்கு...

சாதியப் படிநிலைகள்தான் இந்திய விடுதலையை ஒரு நூற்றாண்டுக்கு இழுத்தன, சக மனிதனை மனிதன் என்று விடுதலைக்கு பின்பும் நம் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த ஒரே காரணத்தால்தான் ஊழல் மலிந்த ஆட்சியாளர்கள் இங்கே உல்லாசமாய் திரிய முடிகிறது.

சமூக அடுக்கில் தங்கள் மேலே என்று வன்முறையின் மூலம் தங்களை நிறுவிக் கொண்ட ஒரு பிரிவை போற்றி படம் எடுத்தால் விழுந்து புரண்டு பாராட்டுவார்கள் ஆனால் அவர்களால் வன்முறைக்குட்பட்டு பதில் வினையில் இறங்கும் ஒருவன் பொதுச் சமூகத்தின் சிந்தனையில் அச்சத்தைத் தருகிறான் என்பது பேசப்பட்டுத்தானே ஆகவேண்டும்?

42 என்கிற திரைப்படம் ஒரு  ஆப்ரோ அமெரிக்க பேஸ்பால் வீரனின் பயணம், 12 இயர்ஸ் ஆஸ் எ ஸ்லேவ் ஒரு கறுப்பின இசைகலைஞன் அடிமையாகி பட்டபாட்டைச் சொல்லும். கோஸ்ட் ஆப் மிசிசிபி வேற லெவல் படம். கறுப்பின மக்களை வைட் ட்ராஷ் எப்படி நடத்தினார்கள் என்பதின் திரைவடிவங்கள் இவை. இவை அனைத்திலும் வன்முறை உண்டு ஆனால் ரத்தம் தெறிக்கும் வன்முறைகள் அல்ல! ஒரு பூங்காவில் நடந்துகொண்டிருக்கும் பொழுது இந்த கதாபாத்திரங்கள் நம்முடன் அவர்களின் வேதனைகளைப் பகிர்ந்து கொள்வது போலத்தான் இருக்கும்.

இந்த முறையில் பூமணியின் வெக்கையை வெற்றிமாறன் கையாண்டிருந்தால் நிச்சயம் இந்திய திரையுலகின் அதி முக்கியமான படமாக அசுரன் இருந்திருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக அதுவே அவரது கடைசிப் படமாகவும் இருந்திருக்கும்.

அஞ்ஞாடி நாவலில் இதைவிட  பெரிய தலித் சூப்பர் ஹீரோ இருக்கிறான். அவன் கதையைப் படித்தபிறகு நீண்ட பெருமூச்சுடன் இவன் கதையெல்லாம் எடுக்க தமிழ் திரையுலகம் ஒருபோதும் துணியாது. ("நல்ல" விசயமாக) அந்தக்கதையில் அவனை தந்திரமாக உணவில் விஷம் வைத்துக் கொன்று வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள். இருந்தாலும் அவன் ஒரு சூப்பர் ஹீரோதான். 2015இல் அந்த நாவலைப் படித்தேன் என்று நினைவு ஆனால் அதைவிட ஆக்ரோசமான இன்னொரு சூப்பர் ஹீரோவை வெற்றிமாறன் வெக்கையில் பிடித்து அதைத் திரைப்படமாக்கியதோடு நூறு கோடி வசூலும் செய்துவிட்டார் என்பது உண்மையில் சமத்துவத்தை போற்றும் ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டிய விசயம். 

முகநூல் நண்பர் ஒருவர் எழுதியிருந்தார் படம் நடக்கும் பொழுது திரையைக் கிழித்துக்கொண்டு உள்ளே போய் ஏதேனும் செய்ய முடியாத என்று பதைத்து சிந்திக்க வைத்தார் வெற்றிமாறன் ...அடியேனும் அப்படியே உணர்ந்தேன். இவ்வளவு சக்திவாய்ந்த ஒரு பிணைப்பை சமீபத்தில் அனுபவித்ததே இல்லை. செமையான அனுபவமது!

இந்தியத் திரைப்பட வரலாற்றில் அசுரன் நிச்சயமாக ஒரு மைல் கல் படம். தலைநகரில் வன்புணர்வுக்குட்படும் பெண்ணுக்கு  நீதி கேட்கும் இந்தச் சமூகம் கடைகோடி கிராமத்தில் இருக்கும் ஒரு தலித் பெண்ணுக்கு நிகழும் வன்புணர்வை ஜஸ்ட் லைக்தட் கடக்கிறது. எவ்வளவு கேவலமானவர்கள் நாம்.

கயர்லாஞ்சி சம்பவமெல்லாம் அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதா?
(லிங்க் தந்திருக்கிறேன் படிங்க.)

 இந்திய சமூகத்தின் சாதியச் சிக்கல்களின் பொருளாதார, நிலவுடமைச் சிக்கல்களை, ஒடுக்கப்பட்ட மக்களின் துயரை இவ்வளவு அழுத்தமாக பதிவு செய்த படம் என்கிற முறையில் மட்டுமல்ல இறுதிக் காட்சியில் உனக்கிட்ட படிப்பு இருந்தால் அதை அவனால புடுங்க முடியாது படி என்கிற மெசேஜ் ஆகட்டும் லவ் யூ டா வெற்றிமாறா என்று சொல்ல வைக்கிறது. (மனசில் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், நீட்டும் வந்து தொலைப்பது தனிக்கதை)

ஒரு பயித்தியக்காரன் எப்படி தனக்குப் பையித்தியம் இல்லை என்று சாதிப்பானோ அதே போலத்தான் நாமும், நாம் உன்னத சமூகம் என்று சொல்வதும்.

நம் பைத்தியத்திற்கு மருத்துவம் பார்க்கும் திரைப்படம் அசுரன்.


திகைக்கத்தான் வைக்கும்.

கருவறையில் ஒரு தலித் பூசாரியின் கையிலிருந்து எந்த மனக் கிலேசமும் இல்லாது விபூதியை வாங்கி அணிய இந்தியர்களுக்கு இயன்றால் அவர்களின் நோய் குணமாகிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் புள்ளியை நோக்கிய வெற்றிமாறனின் பயணம்தான் இந்தப்படம்.

இங்கே நாம் இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது வடக்கே ரோட்டில் போகிறவர்களை கோஷமிடச் சொல்லி குற்றுயிரும் குலையுருமாக்கி அவர்களின் மீது ஏறிக்குதித்துக் கொண்டிருகின்றன சில மத ஜோம்பிகள்.

ஆயிரம் ஆண்டு இருளை ஒரு சிறு சுடர் கிழித்தெறியும்தான் ஆனால் அந்தச் சுடரை அணையவிட்டோம் எனில் இன்னும் ஒரு ஆயிரமாண்டு நாம் இழப்புகளை சந்திக்க தயாராக வேண்டும்.

அசுரன் போன்ற படங்கள் அந்த சுடரை நாம் காக்கவேண்டிய அவசியத்தைச் சொல்கின்றன.

மீண்டும்
மீண்டும்

லவ்யூ டா வெற்றிமாறா!

அன்பன்
மது

Comments

  1. வாவ் படத்தில் கரைந்து விட்டீர்கள் என்பதை உணர முடிகிறது.... சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    திரைபடத்தின் வெற்றி என்பது வெறும் வசூலில் அல்ல. அப்படம் பார்ப்போர் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவை பொருத்தது . அசுரன் அருவி போன்ற படங்கள் மக்கள் மனதில் நல்ல தாக்கத்தை வழங்கியிருக்கும் என்று உணர்கிறேன்.

    வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது எனும் சீவக சிந்தாமணியில்
    கல்விக்கு முக்கியதுவம் தரும் பொன்மொழியை அழகாக எடுத்து கூறி சமுதாயத்தை சீர்படுத்தும் கருவி கல்விக்கு உண்டு என்ற பாணியில் வழங்கியிருந்தது என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓவர் ஆக்ஸன் , பஞ்சு டயலாக் இல்லாமல் சமுதாயத்தில் உள்ள நிகழ்வை அப்படியே எடுத்து கூறும் அருமையான படம் அசுரன்.

    கவுரவத்தைவிட குழந்தைகளே முக்கியம் என்ற ஒவ்வொரு தகப்பனின் ஆழ்மனநிலையை இப்படத்தில் தத்ரூபமாக வெளிபட்டதை உணர்ந்தேன்.

    இது படம் மட்டும் அல்ல சமுதாயத்தின் வெளிப்பாடு.

    இதை ஜாதி நோக்கில் பார்ப்பவர்கள் பகுத்தறிவு வேலை செய்யாத மூடர்கள்தான்.

    அசுரன் ஆல்வேய்ஸ் அல்டிமேட்
    ௭ஷுகேசன் இஸ் எ சொலுஷன் ஆஃப் ரிஃபர்மேஷன்

    ReplyDelete
  3. ஆகா! மிக அருமையான திறனாய்வு!

    ‘அசுரன்’ போன்ற படங்கள் வரும்பொழுது படத் திறனாய்வுகள் மட்டும் அவற்றை நிலைபெறச் செய்யப் போதுமானவையாக இருப்பதில்லை. அந்தப் படத்தின் தேவையை வலியுறுத்தும் குமுகத் திறனாய்வுகளும் தேவைப்படுகின்றன. இந்த நிலைமையே கூட இந்தியக் குமுகம் (society) எப்படிப்பட்டது என்பதை உணரப் போதுமானதுதான். ஆனால் என்ன செய்வது? நம் நாட்டில் மனச்சான்றுள்ளவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

    தொடக்கத்தில் நீங்களே குறிப்பிட்டுள்ளது போல் அசுரன் படம் பற்றிப் பல திறனாய்வுகள் இதுவரை வெளிவந்து விட்டன. எனினும் வெறும் கருத்தியல் நோக்கில் மட்டுமே இப்படத்தை அணுகும் வறட்டுச் சிந்தனையாளர்களுக்கும் வெறும் உணர்வு நோக்கில் மட்டுமே அணுகும் பொதுக் குமுகத்துக்கும் இடையில் நின்று நடுத்தரக் குடும்பத்து மனிதர் ஒருவரின் பார்வையில் அணுகும் உங்களுடைய இந்தப் பரிந்துரை வலுவானது. தேவர் மகனைக் கொண்டாடிய நாம் அதன் எதிர்த் தரப்பான இதை ஏன் ஏற்கத் தயங்குகிறோம் என்பது சுருக்கெனத் தைக்கிறது.

    //ஒரு பயித்தியக்காரன் எப்படி தனக்குப் பையித்தியம் இல்லை என்று சாதிப்பானோ அதே போலத்தான் நாமும், நாம் உன்னத சமூகம் என்று சொல்வதும். நம் பைத்தியத்திற்கு மருத்துவம் பார்க்கும் திரைப்படம் அசுரன். திகைக்கத்தான் வைக்கும்// - மிகவும் சுவைத்த வரிகள்!

    இப்படியொரு பதிவுக்காக நன்றி!

    ReplyDelete
  4. நண்பர் மதுவுக்கு,

    தற்பொழுதுதான் எனது கணினி மறுபடி உயிர் பெற்றுள்ளது. அசுரன் குறித்த உங்களின் பார்வை ஆமால்ல என்று சொல்ல வைக்கிறது. வெற்றி மாறன் படங்களை நான் அதிகமாக விரும்புவதில்லை. இருந்தும் நசுக்கப்பட்டவர்கள் கொதித்து எழுந்தால் என்ன ஆகும் என்பதை நினைக்கவே விரும்பாத மக்களுக்கு உங்களின் இந்தக் கருத்து கொஞ்சம் உண்மை ஊசியை செலுத்தும். நன்று. மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete

Post a Comment

வருக வருக