இன்று பல்வேறு பணிகளைத் திட்டமிட்டிருந்தாலும் முதல் நிகழ்வான விதைக்கலாம் நிகழ்விலேயே கலந்து கொள்ள முடியவில்லை. இளையவள் மகிமா கண்விழித்தவுடன் இன்னைக்கு ஏன் போகலை என்று ஒரே அழுகை வேறு.
திட்டமிட்ட பணிகளைத் துவக்கும் பொழுதுதான் நிகில் புலனக் குழுவில் வந்திருந்த அதிர்ச்சி செய்தியை கவனித்தேன்.
அம்மா மலர்க்கொடிநாகலிங்கம் IRS அதிகாலை 5:40க்கு விடைபெற்றுவிட்டார் என்றது செய்தி. இதற்கு முன்னர் அம்மாவின் உடல்நிலை தேற பிரார்த்தனைகள் என்று ஒரு கோச் பகிர்ந்திருந்த பொழுது அப்பா நாகலிங்கம் அவர்களிடம் அலைபேசியில் பேசினேன். ஆன்கோ சிகிச்சை செய்துவந்த வேலையில், காலில் ஒரு சிறு எலும்பு முறிவு ஏற்பட, ஆன்கோ மருந்துகள் ஆர்த்தோ மருந்துகளை செயலிழக்க செய்திருப்பதாகவும், பிரார்த்தனைகள் மூலம் அம்மா திரும்ப வந்துவிடுவார் என்று நம்புவதாகவும் சொன்னார்.
நம்புங்கப்பா, அம்மா நலம்பெற்று வந்துவிடுவார் என்றேன்.
நீண்ட நாட்களாகாவே உடல்நிலை சவால்களை தாண்டி சேவையில் இருந்தவர் அம்மா. மனஉறுதிமிக்கவர் மீண்டுவிடுவார் என்று நம்பினேன்.
இதுவரை இரண்டு லெட்சம் மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சியை வழங்கிவந்த நிகில் நிறுவனத்தின் தலைமகள் விடைபெற்றுவிட்டார்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சு.
நிகில் ?
சோம.நாகலிங்கம், மலர்க்கொடி நாகலிங்கம் அவர்களின் புதல்வன். ஒரு சாலைவிபத்தில் அகாலமாக விடைபெற, அவன் ஆசைப்படி இந்த வாழ்வியல் திறன் வகுப்புகளை மக்கள் பள்ளிகள் தோறும் இலவசமாக செய்துவரும் ஒரு அமைப்பு.
இந்த வகுப்புகளை எடுக்க தனித்த பயிற்சிபெற்ற பயிற்சியாளர்கள் உண்டு. ஜே.சி.ஐ இயக்கத்தால் புடம்போடப்பட்ட பயிற்சியாளர்கள் முதல் அப்பா நாகலிங்கம் அவர்களால் ஹான்ட் பிக் செய்யப்பட்ட பயிற்சியாளர்களும் உண்டு.
இந்த சேவையைச் செய்ய ஆர்வத்துடன் இருக்கும் பெரும் படை .
மக்கள் பள்ளி மாணவர்களை பிள்ளைகள் என்பார் அப்பா, தன் மகன் நிகிலின் ஆசை என்பதால், அதே போல பயிற்சியாளர்களே திருமிகு சோம நாகலிங்கம் அவர்களை அப்பா என்றுதான் அழைப்போம்.
எல்லாக் குடும்பங்களைப் போலவே அப்பா எப்போதும் ஸ்ட்ரிக்ட். அம்மா இதற்கு நேர் மாறு, அரவணைப்பதில், நிகில் இயக்கத்தை முன்னெடுப்பதில் அவர் காட்டிய நேர்த்தி வாய்ப்பே இல்லாதது.
மிகுந்த தொலைவில் இருக்கும் ஒரு மக்கள் பள்ளியில் நிகழ்வு என்றால் கூட தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாது பயிற்சிகளில் கலந்து கொண்டு எங்களை வழிநடத்துவார்.
நிகில் நிறுவனத்தின் சாதனைகள் உரிய அங்கீகாரம் பெறுவதைப் பார்க்கும் முன்பே இயற்கையோடு கலந்துவிட்டார்.
இறுதியாக ஒருமுறை சென்று முகம் பார்த்து வந்தேன். இளவல் சௌந்தரின் கரம் பற்ற முடிந்தது.
ஜே.சி.ஐ எனக்கு பயிற்சியாளன் என்கிற சான்றிதழைக் கொடுத்தது. ஆனால் என்னை தொடர்ந்து பயிற்சியில், களத்தில், தென் மாவட்டங்கள் சிலவற்றின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்றது நிகில் நிறுவனம்தான்.
இடையில் இன்னொரு குருநாதர் ஒரு ஒப்பந்தம் செய்ததால் நிகிலில் தொடர இயலவில்லை.
இதுகுறித்து எந்த வருத்தமும் அப்பாவிற்கு இல்லை, அதே போல அங்கே துவங்கிய நினைவாற்றல் பயிற்சி வகுப்புகளின் தொடர்ச்சியை செவன்த் சென்ஸில் செழுமைப் படுத்திக் கொண்டேன்.
இப்படி ஒரு இடைவெளி வந்த பிறகும் மதுரை செல்லும் பொழுது இவர்களோடு பேசாமல் வந்ததில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் டர்னிங் பாயின்ட் நிகழ்த்திய ஒரே ஒரு ஊர்ல நடத்திய ஓவியப் போட்டி ஒன்றில் பெரியவள் கலந்து கொண்ட பொழுது அழைத்தேன். வீட்டிற்கு வருகிறேன் என்ற பொழுது இப்போ பயிற்சியில் இருக்கேன் கஸ்தூரி. அடடா என்றார் அம்மா.
அடுத்தமுறை மதுரை வரும்பொழுது பார்த்துவிடலாம் என்றார்.
அந்தக் குரலின் வாஞ்சை இன்னும் காதில் இருக்கிறது. இந்த நொடியில் அம்மா இல்லை.
இது நிகில் குடும்பம் சந்திக்கும் மாபெரும் உளவியல் தாக்குதல், அடுத்த தலைமுறையின் ஆளுமையை, ஆன்மாவை வளர்த்தெடுக்கும் திறன்மிகு பயிற்சியாளர்கள் விரைவில் மீள்வார்கள்.
மீண்டும் மக்கள் பள்ளி குழந்தைகளை சந்திப்பார்கள்.
பெண்கள் இழப்பை எளிதில் கடந்துவிடுவார்கள், ஆனால் ஆண்களுக்கு அது பெரும்துயர் என்றார் இன்னொரு குருநாதர் வெங்கடாசலம், அப்பாவை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் இது நம் கடமை என்றார் அங்கே இருந்த கோச் ஒருவர்.
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
என்கிற பாடல் நினைவில் வருகிறது.
இழப்புகள் வலிகள் வாழ்க்கையின் தவிர்க்கவேமுடியாத அங்கங்கள்.
சகிப்போம்
அன்பன்
மது
ஆழ்ந்த இரங்கல்கள்.... அவரது குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைத்திட எனது ப்ரார்த்தனைகள்.
ReplyDelete