#13ம்_உலகில்_ஒரு_காதல்

அறிவியல் புதினம் -இ.பு.ஞானப்பிரகாசன் 
அகசிவப்புத் தமிழ் இ.பு என்றால் பதிவர்களுக்குத் தெரியும். ஞானப்பிரகாசன் தமிழ் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டவர், ஊடகவியலாளர், நமதுகளம் என்கிற மின்னிதழை நடத்திவருபவர்.

அமேசன் பென் டு பப்ளிஷ் போட்டியில் கலந்துகொண்டு ஒரு நாவலை எழுதியிருப்பதாகச் சொன்னவுடன் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது.

எனக்கு முன்னே இணையர் படித்துவிட்டு நல்லா இருக்கு என்று சொல்லவே இனியும் படிக்காவிட்டால் இபு ஆள் வைத்து அடிக்க நேரும் என்கிற கிலியிலும் படித்தேன்.

நாவல் இணையருக்கு இலவசமாகக் கிடைத்துவிட்டது, அடியேனுக்கு தள்ளுபடியில் நாற்பத்தி ஒன்பது ரூபாய்க்கு கிடைத்தது.

கோயம்பேட்டிலிருந்து திருச்சி வரும் பேருந்து எப்படி திணறித் திணறி துவங்குமோ அதேபோல துவங்குகிறது நாவல். சில அத்தியாயங்களைப் படித்தவுடன் என்ன செய்து வைத்திருக்கிறார் இபு என்று இணையரை கேட்கவும் செய்தேன்.

ஆனால் தமிழ் பேசும் வேற்றுயுயிர்கள் கதையில் வரத்துவங்கும் அந்த புள்ளியில் இருந்து பற்றிக்கொண்ட வெடியின் திரியை பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வு...

ரகளை விட்டிருக்கிறார் மனிதர்.

தமிழக மக்கள் பேசும் தமிழை புரிந்து கொள்ள தூய தமிழ் பேசும் வெற்றுக்கிரக வாசிகளுக்கு ஒரு மொழிபெயர்ப்புக் கருவி தேவைப்படும் என்று காட்டுகிற இடத்தில் உழுந்து புரண்டுதான் சிரிக்க வேண்டும்.

அறிவியல் புதினங்களை வாசிக்க விரும்புவோர் தவிர்க்கவே கூடாத நாவல் இது.

தமிழ் மொழி குறித்தும், மொழிப்பற்று எப்படி ஒரு இனத்தை, நாட்டை ஒளியாண்டுகள் முன்னே கொண்டு செல்லும் என்பதையும் இபு கதையின் போக்கில் சொல்லிப் போவது எனக்குள் ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்தியது.

வெளிக் கிரகத்தில் நிகழும் காட்சிகள் எல்லாமே உலகத்தரம்.

சுஜாதா விட்டுச் சென்ற வெற்றிடத்தை மட்டுமல்ல அவரையும் கடக்கும் ஆற்றல் இந்த எழுத்துக்காரனுக்குள் இருக்கிறது என்பதை பதியவைத்திருக்கும் நாவல் இது.

இரண்டு மணிக்கூறுக்குள் படித்துவிடலாம், மிஸ் பண்ணாம படிங்க.

கேட்பச்சு முறையில் (பிரிண்ட் ஆண் டிமான்ட்) வந்தால் நிச்சயம் வாங்கிப் பரிசளிக்கலாம்.

குறிப்பாக குழந்தைகள் விரும்பும் பாண்டஸி பல  நாவலின் பல இடங்களில் இருக்கிறது.

ஒரு சிறகு அங்கும் இங்கும் ஆடி தரையிறங்குவதை கதாநாயகி மகிழினிக்கு பயன்படுத்தியிருக்கும் இடம் அற்புதம்.

தொடர்ந்து எழுதவேண்டும் இந்த இ.பு.


அன்பன்
மது

#13ம்_உலகில்_ஒரு_காதல்
#இ.பு.ஞானப்பிரகாசன் 

Comments

  1. ஆகா!... ஆகா!!... ஆகா!!!...

    தோழரே! எப்பேர்ப்பட்ட பாராட்டு!! என்ன ஓர் ஊக்குவிப்பு!!

    இந்த அளவுக்கு நீங்கள் என்னைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நானோ இத்தனை நாள் கழித்து வந்து இதைப் படிக்கிறேன். அதற்காக வெட்கித் தலைகுனிகிறேன்.

    நீங்கள் அளித்திருக்கும் இந்த ஊக்கம் எனக்கு நூறு யானை வலிமையைத் தருகிறது. இப்பொழுது உடனே இன்னொரு புதினம் எழுதச் சூழல் இல்லை என்றாலும் அடுத்த முறை எழுதும்பொழுது உங்களுடைய இந்தப் பதிவை மீண்டும் ஒருமுறை படித்து விட்டுத்தான் எழுதவே தொடங்குவேன். அஃது ஒன்றே போதும்! அந்த அடுத்த கதையும் மிகச் சிறப்பாக அமையும்!

    நன்றி! நன்றி! அகம் குளிர் நன்றி!

    ReplyDelete

Post a Comment

வருக வருக