வாழ்த்துகளும் வரவேற்பும்

வேலன்டைன் டே அன்பை நேசத்தைக் கொண்டாடுவது.


காதலர்தினமென நிறுவப்பட்டு விட்டதால் இன்று இளைஞர்களின் இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கும்.

அப்போ இளம் பெண்கள், துடிக்க வைப்பதே அவர்கள்தானே!

கார்கி கல்லூரி கரசேவைக் கும்பல் பூங்காக்கள் தோறும்  தடிகளோடு திரியக் கூடும்.

சற்று நிதானமாக சிந்தித்தால் இதன் பின்னிருக்கும் வணிகம் புரியும்.

ஒவ்வொரு நாளையும் ஒரு நிகழ்வாக்கி அதை வருவாயாக மாற்றத் தெரிந்த வித்தை கைவரப் பெற்றவர்களின் குறுநகை பின்னணியில் விரிகிறது.

எது எப்படியோ நல்ல நிகழ்வுதானே ஆதரிப்போம்.

இந்த காதலர் தினம் புதுகையில் மாவட்டம் கொண்டாடும் மாபெரும் விழாவாக மலர்ந்திருக்கிறது.

ஒரு மாவட்டமே காதலர் தினத்தை கொண்டாகிறதா, என்ன இது என்று நீங்கள் குழம்புவது புரிகிறது.

மாவட்ட ஆட்சியர்தான் விழாவை துவக்கி வைக்கிறார்.

வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் என்று திடுமென முடிவானதால் முதல்  நாள் நிகழ்வுக்கு வரஇயலா நிலையில் மாநிலத்தின் பீடு மிகு அமைச்சர் விஜயபாஸ்கர்.

இன்னும் குழப்பமாக இருக்கிறதா?

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை இன்றய தினம் துவக்குகிறது. த.மு.எ.க.ச, வீதி கலை இலக்கியக் களம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக இளைஞர் சங்கம், இந்திய மாணவ சங்கம், நிகழ் (நவீன கவிதைகளுக்கான இலக்கிய அமைப்பு) ஐடியா பிளஸ், விதைக்கலாம், மழைத்துளிகள், ஆதிவனம் மற்றும் நீர்பறவைகள் போன்ற அமைப்புகள் களத்தில் சுழல்கின்றன.

தன்னர்வலர்களின் களப் பணியும் அர்பணிப்பும் கண்ணில் நீர் சுரக்கச் செய்கிறது.

கீரனூர் துவங்கி கோட்டைப்பட்டினம் கடற்கரைவரை தோழர்கள் உருண்டு புரளாத குறையாக பணியாற்றியிருக்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளாக கவிஞர் தங்கம் மூர்த்தி நிகழ்வின் தலைமையாக இருந்து ஒரு பிரமாண்டத்தை நிகழ்த்திவிட்டார், கிட்டத்தட்ட ஆறு லெட்சத்திற்கும்அதிகமாக இந்த நிகழ்வுக்காக அவர் செலவிட்டிருப்பதை நண்பர்கள் அறிவோம்.  கவிஞர் இப்போது தன் தலைப்பேரனை கொஞ்சுவதை முதற் கடமையாக வைத்திருப்பதால் இரவு நெடுநேரம் அரங்கில் இருக்கப் பணிக்கும் பொறுப்புமிக்க தலைமையை ஏற்க தயங்குவது நியாயம்தான். அவருடைய வழக்கமான ஆதரவு இருக்கும் என்ற உறுதிமொழியோடு இன்றுவரை நிகழ்வின் பங்களிப்புகளில் குறைவின்றி செயல்படுகிறார்.

கவிஞர் தங்கம் மூர்த்தி பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கிய பொழுது 
இம்முறை தலைமையேற்கப் போவதில்லை என்று கடந்த ஆண்டே அறிவித்து, நீங்கள் செய்யுங்கள் என்று நண்பர்களுக்கு வழிவிட்டுவிட்டார்.


துவக்கத்தில் இந்த விசயம் என்போன்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. இருந்தும் சனநாயகபூர்வமாக இயங்கும் ஒரு நிகழ்வில் தலைமை மாறுவது இயல்புதானே.

தலைமையே இல்லாத விழாக்குழு.

சில பிரத்தியோகக் காரணங்களால்  கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமைப்  பொறுப்புக்கு  வரவில்லையென்று உறுதியான பின்னர் அறிவியல் இயக்கத் தோழர்கள் தலைமையே இல்லாமல் வழிகாட்டும் குழு ஒன்றை அமைத்து குழுவாக இயங்குவோம், களத்தில் சுழலும் ஒவ்வொரு தொண்டரும் தலைவர் என்று அறிவித்து செயல்பட்டுவிட்டனர்.

இந்த அறிவிப்பின் பின்னர் அறிவியல் இயக்கத் தொண்டர்களும், த.மு.எ.க.ச, DYFI, AIDWA, எஸ்.எப்.ஐ. தோழர்களும் தீப்பற்றிக் கொண்டது போல பணியாற்றினார்கள்.

எந்த பிரதிபலனையும் எதிர்பாராத களப் பணியார்களை கண்டறிந்திருக்கிறது இந்த ஆண்டின் புத்தகத் திருவிழா.

சபா ரத்தினம், புதுகைப் புதல்வன், நாராயணன், விக்கி, பவுனம்மாள், சலோமி, சாமி கிருஷ், நேசன் மகதி என பெரும் படை களத்தில் காட்டிய வேகம் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

ஒரு புதிய வீச்சை திருவிழாக் குழு அடைந்திருப்பதை மறுக்க முடியாது.

ஆனால் இவர்களின் உழைப்பிற்கான ஏற்பு  உங்கள் வருகையில்தான் இருக்கிறது.

கடந்த  ஆண்டைப் போல இந்த ஆண்டு பிரமாண்ட வெளியரங்க மேடை சாத்தியம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு இது கடும் வருத்தத்தை தந்தது. நேற்று இரவு அரங்கிற்கு சென்றால் கடந்த ஆண்டுகளை விட பிரமாண்டமாக மேடை!

லக்ஷ்மி செராமிக்ஸ் என்று புரவலர் பெயர் மின்னிய உடன் நான் கேட்ட கேள்வி எங்கே கிருஷ்ணவரத ராஜன்! அலட்டிக்கொள்ளாமல் நகர்மன்றத்தில்  அலைபேசியில்  பேசிக்கொண்டிருந்த அவரின் கரம் பற்றி வாழ்த்துத் தெரிவித்தேன்.

இந்தக் காதலர் தினத்தில் நீங்கள் அவசியம் வரவேண்டிய இடத்தில் ஒன்றாக புதுக்கோட்டை நகர் மன்றம் மாறியிருக்கிறது.

அவசியம் வாங்க!

அன்பன்
மது

பத்து நாட்கள் திட்டமிடப்பட்டிருக்கும் விழாவில் ஒருநாளாவது நீங்கள் வருகை தருவது அவசியம். நிகழ்வு குறித்த செய்திகளை தொடர்கிறேன், பின்னணியில் உழைத்த களப்பணியாளர்களை, வழிநடத்திய முதுகண்களை தொடர்ந்து அறிமுகம் செய்கிறேன். தொடர்வோம்

தோழர்கள்
#புதுக்கோட்டை_புத்தகத்_திருவிழா_2020
#Pudukkottai_Book_Fest_2020
என்கிற ஹாஷ் டாக் பயன்படுத்த வேண்டுகிறோம்








Comments

  1. பாராட்டத்தக்க வேண்டிய பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகை அவசியம் முனைவரே

      Delete
  2. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வலைச்சித்தரே

      Delete
  3. புதுக்கோட்டை நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் மது. தமிழகம் இப்போது வருவதற்கு வாய்ப்பில்லை :( அதனால் புதுக்கோட்டைக்கு புத்தகத் திருவிழா சமயத்தில் வருவது இயலாது போகிறது. விழா சிறக்க எனது வாழ்த்துகள்...

    ReplyDelete

Post a Comment

வருக வருக