போஷ்டமி


இயல்பு வாழ்வில் நிகழும் சம்பவங்களை தொகுத்தாலே ஆகச் சிறந்த கதை ஒன்று கிடைத்துவிடும்.


ஒரு எழுத்தாளர், ஆனந்தி (போஷ்டமி) எனும் ஒரு பக்தை, அவள் கணவன், ஒரு குருஜி என வெகுசில பாத்திரங்கள்தான். நகரில் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகும் எழுத்தாளர் மன மாற்றத்திற்காக கிராமம் ஒன்றில் தங்குகிறார். அவரைப் பார்த்தாலே பெரும் பணக்காரர் என்று தெரிகிறது. ஆனால் அவரும் யாருடனும் பேசமாட்டார். கிராமத்தினரும் அவருடன் பேச மாட்டார்கள். அப்படி ஒரு நாள் ஒரு குளக்கரையில் நிற்கிற பொழுது ஒரு பெண் இவரை கடவுளாக நினைத்து ஒரு பூவைத் தந்துவிட்டுப் போகிறாள்.

அந்தப் பெண் எழுத்தாளரின் மாளிகைக்கு அடிக்கடி வந்து அவரது செருப்பை எடுத்து வைப்பது, அதை தலையில் சுமப்பது என பல்வேறு பக்திபூர்வமான செயல்களை செய்கிறாள்.

ஒருநாள் அவள் கதையைச் சொல்கிறாள். அதீத அன்பான கணவன் இவர்களின் குழந்தையைப் பார்த்துக் கொள்வதைக்கூட பெரும்பாலும் கணவனே செய்கிறான், இவள் நாடகம் பார்க்க போகவேண்டும் என்றால் அவன் வீட்டிலிருந்து பையனைப் பார்த்துக்கொள்ள இவள் நாடகம் பார்த்துவிட்டு வருகிறாள். அவள் கணவன் அவள் மீது அளவற்ற அன்பு கொண்டிருப்பவன்.

பதினைந்து வயதில் திருமணமாகி, பதினெட்டு வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட போஷ்டமி தன் குழந்தையை ஒரு நீர் விபத்தில் இழக்கிறாள். அவர்கள் ஊரில் ஒரு சமய குரு இருக்கிறார். போஷ்டமியின் திருமணத்தின் பொழுது சமயப் படிப்பிற்காக வெளியூர் சென்றிருந்த அவர் சில காலம் கழித்து திரும்பி வருகிறார். அவருக்கு பணிவிடைகள் செய்வது, உணவு தயாரிப்பது எல்லாம் இந்தப் பெண் "போஷ்டமியின்" பணி. கணவனின் பால்யகால நண்பராக இருந்தாலும் அறிவுக்கடலான அந்தக் குருவை கடவுளாகவே பார்க்கிறாள் அவள்.

அவள் ஒருநாள் குளித்துவிட்டு வரும் பொழுது தொலைவில் வருகிறார் குரு. ஈரச் சேலையோடு எப்படிப் போவது என்கிற தயக்கத்தில் நிற்கும் அவளை நெருக்கி குரு சொல்கிறார் "நீ அழகா இருக்கே".

அன்றோடு குடும்ப வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுச் சன்யாசினியாகிறாள். யார் உன்னை துறவேற்கச் சொன்னது என்றால் குரு என்கிறாள்.

இந்தக் கதையை சொல்லிவிட்டு எழுத்தாளரின் கால்களில் விழுந்து வணங்கி விடைபெறுகிறாள்.

தாகூர் இதில் செய்திருக்கும் சுய எள்ளல் வேற லெவல்.

போஷ்டமி கேட்கிறாள் "ஏன் கடவுள் உன்னிடம் இவ்வளவு வேலை வாங்குகிறார்? நான் வரும் போதெல்லாம் நீ ஏதோ எழுதிக் கொண்டிருகிறாயே?"

தாகூரின் பதில்
"ஒருவேலைக்கும் லாயக்கில்லாதவனைச் சும்மா இருக்க விடுவதில்லை கடவுள். அப்படியேவிட்டால் அவன் வீணாகிவிடுவான். அதனால் எல்லாவிதமான வீண் வேலையும் அவன் தலையில் விழுகிறது!"

ஒரு எழுத்தாளன் ஒரு பக்த்தையை எப்படிப் பார்ப்பான், (அல்லது பார்க்கவேண்டும்!), ஒரு சமய குரு எப்படிப் பார்க்கக் கூடாது என்பதற்கான போதனையாக இந்தக் கதையைக் கொள்ளலாம்.

கல்வியறிவற்ற ஒரு பெண் சைத்தான்யரை குருவாக நினைத்து, அந்த இடத்தில் எழுத்தாளரை வைத்து வழிபட்டு சத்தியத்தை தேடும் கதை இது.

இந்தத் தொகுப்பின் ஏனைய கதைகளில் வரும் கணவர்களுக்கும் போஷ்டமியின் கணவனுக்கும் ஒளியாண்டுகள் இடைவெளி. தன் மனைவியை மிகப் பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் கணவன்.  அவனே சமைப்பது முதல், குழந்தையை பார்த்துக் கொள்வது வரை, மேலும் இரவுகளில் நாடங்கள் பார்க்க செல்ல தன் மனைவிக்கு அனுமதிதருவது முதல், தூக்கத்தில் அழும் மகனுக்கு மனைவியை எழுப்பாமல் தானே தேவையானவற்றை தரும் கணவன் அரிதினும் அரிது. மேலும் அந்தக் குழந்தை விபத்தில் இறந்தவுடன் அதற்காக தன் மனைவியிடம் ஒரு கடும் சொல் கூட சொல்லாத கணவன்! இந்த உணர்வுமும் ஒரு காரணியாகி  போஷ்டமியை இல்வாழ்வை கைவிட்டு துறவு கொள்ள வைக்கிறது.
கதையின் போக்கில் பல தத்துவ விசாரணைகளை நடத்தி கதையின் உயரத்தைக் கூட்டுகிறார் தாகூர்.
தொடர்வோம்

அன்பன்
மது

Comments

  1. ரொம்பவும் வித்தியாசமான கதை என்று தோன்றுகிறது உங்கள் கதை பற்றிய குறிப்பு..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இன்றய இலக்கியவாதிகள் பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப் பட்டு விரும்பியவர்களோடு பால் சுதந்திரத்தை அனுபவிப்பார்கள் என்று எழுதும் வேளையில் தாகூர் பெண்களை மேன்மையாக காட்டியிருப்பது அற்புதம்தானே

      Delete
  2. தொடர்ந்துக்கிட்டு இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆஸியில் நிலைமை கட்டுக்குகுள் இருக்கா ?
      கவனம் தேவை
      தொடர்வதுக்கு நன்றி

      Delete

Post a Comment

வருக வருக