காலத்தை உறங்கவிட மாட்டேன்




கவிதைகள் கொஞ்சம் முயன்றால் எல்லோருக்கும் சாத்தியமே.



ஆனால் சில கவிதைகளைப் படிக்கிற பொழுது அவற்றின் மேன்மை, தரம் நம்மை மூர்ச்சையாக்கும்.

காலத்தை உறங்க விட மாட்டேன் அத்தகு தொகுப்புகளில் ஒன்று.

என்.கோபி என்கிற கவிஞர்  தெலுங்கில் வெளியிட்ட 'காலன்னி நித்த பொனிவன்னு' என்ற சாகித்ய அகாதெமி விருது பெற்ற தொகுப்பு.

வானம்பாடிகளில் ஒருவரான சிற்பியால் தமிழுக்கு வந்திருக்கிறது.தமிழ்ப் பதிப்பை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது.



இணையர் இந்த நூலின் தலைப்புக்காக வாங்க என்ன பெரிதாக இருக்கப்போகிறது என்று வாசிக்கத் துவங்கினேன்.

ஏதோ ஒரு மாய சாளரத்தை திறந்து பேரண்டத்திற்குள் நுழைந்த உணர்வு.

நான், என் வாசிப்பு, கவிதைகள் மீதிருத்த என் புரிதல்,  எல்லாம் ஒரு பெருவெடிப்புக்காளானது.

அந்த பிரமாண்ட பேரண்டத்தில் என்னை ஒரு தூசியாக உணர வைத்தது இந்தத் தொகுப்பு.

மொழிபெயர்ப்பே இப்படி எனில் சுந்தரத் தெலுங்கில் இது எப்படி இருந்திருக்கும் என்கிற கையாலாகாத ஏக்கம் வேறு.

கோபியின் எழுத்தை இவ்வளவு நேர்த்தியாக தமிழில் கொணர்ந்ததற்காக சிற்பிக்கு இன்னொரு சாகித்ய அகாதமி விருதே கொடுக்கலாம்.

அவ்வளவு உன்னதம்.

ரொட்டி என்கிற முதல் கவிதையில் "ரொட்டி வானத்திலிருந்து விழுவதல்ல/ ரொட்டி பசித்த கனவு /

என்று துவங்கும் ஜிவ் உணர்வு தொகுப்பின் இறுதிக் கவிதையின் இறுதி வரிகள் வரை தொடர்ந்து வாசகனுக்கு மேன்மையான அனுபவத்தைத் தருகின்றன.

அந்த இறுதி வரிகள்

//உள்ளுக்குள்ளிருந்து ஓயாமல்
பொங்கியெழும் பழைய துக்கம்
கண்ணுக்குப் புலனாகிறது மழையாய்//
(எழுதப்பட்டது 24/06/1997).

இது கவியுலகில் இருப்போர் கட்டாயம் வாசிக்க வேண்டிய தொகுப்பு.

இப்படி ஒரு பேரற்புதம் அரிது.

இரண்டு கிராம் பொன்னை அகழ்ந்தெடுக்க நாம் இரண்டு டன் மண்ணை வெளித்தள்ள வேண்டும்.

இந்த தொகுப்பு இரண்டு கிராம் தங்கம். என் வாசிப்பு இரண்டு டன் மண் என உணர வைத்த தொகுப்பு.

இன்றைய கவிதைகளின் மூதாய் இத்தொகுப்பின் கவிதைகள்.

பதினான்காம் கவிதையின் ஒருவரி

// ஒரு கவிதைக்குள் அடக்க முடியாத
 அத்தனை பெரிய உலகம் இருக்கிறதா என்ன? //

அடுத்த கேள்வியைப் பாருங்கள்

//வைரங்கள் சூடிய கறுத்த இரவு
 கையில் இருக்கும் தீப்பந்ததுக்கு இணையாகுமா?//

//மீண்டும் மீண்டும் இசைத்தட்டைக் கீறும்
 கிராமபோன் ஊசி போன்றது கவிதை//

என கவிதையில் புதிய தரிசனங்கள் தொகுப்பு முழுதும் அடர்வாய்.

மனித  உறவுகள் குறித்து

//வெறுமைப் புன்னகைகளில்
வாழ்வின் ஒளியைப் புகட்டுங்கள்.
வேறு சுகங்கள் இருக்கட்டும்
மனித உறவின் இழைகளை உறுதிப்படுத்துங்கள்
அவைதான் அறுந்துபோகாதவை
அஞ்சி நடுங்கும் விளக்குச்  சுடர்களை
உள்ளங்கை கோட்டைகளால் காப்பாற்றுங்கள்//

கண்ணீர் என்பது வெறும் ஒரு துளி நீர் அல்ல
வாழ்வின் வெற்றி மிளிர் கையில்/ அது விலைமதிக்க முடியாத ரத்தினம்// (11.11.1993)

இதோ இன்னொரு விள்ளல் கவியமுது

"நகர்தலின் இன்மைகள்" கவிதையிலிருந்து

//திரும்பிப் போகும் ஒவ்வொரு அலையும்
பற்பல அலைகளாய்ப் பிறந்து
முன்னே துள்ளிக் கொண்டு வரும்//

இன்னொரு கவிதையான "இரத்தக் கடல்"

// கண்ணீர் பலவீனத்தைக் குறிக்காது
அவை கண்களில் பூக்கும் கண்ணீர்ப் பூக்கள்.
 கண்ணீர்த்துளிகள் தெளிந்த ஓடைகள்
அவை அறியப்படாத ஒரு கரத்தால்
நிறைக்கப்படும் இளநீர் போன்றவை//

"முதல் மழை" கவிதையிலிருந்து

//கோடையின் காயங்களுக்கு
வீசும் காற்று மருத்து தடவுகிறது
நிலத்தடியில் பெருகும் நீரோட்டம்
புற்களின் மொழியில் பேசுகிறது//

இதிலிருக்கும் சில கவிதைகள் சில இளங்கவிஞர்களின் தொகுப்பில் வேறு வடிவத்தில் வந்திருக்கின்றன என்று தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

எது எப்படியோ, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்திற்கு நன்றி. புதுக்கோட்டை நான்காவது புத்தகத் திருவிழாவில் சாகித்திய அகாதெமியின் கடையில் வாங்கிய நூல் இது.

அன்பன்
மது 

Comments

  1. அருமையான கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அய்யா

      Delete
  2. நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அய்யா

      Delete
  3. எடுத்துக் காட்டிய கவிதை வரிகள் வெகு சிறப்பு.

    நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி மது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அய்யா

      Delete
  4. ஆழ்ந்து படித்து எழுதிய அருமையான நூல் விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அய்யா

      Delete

Post a Comment

வருக வருக