வயது வந்தோருக்கு மட்டும் -ஓல்ட் பாய் ஒரு கொரியப் படம்



ஒல்ட்பாய் போன்ற படத்தை எழுத நீண்ட நாட்கள், நீண்ட உரையாடல்கள் தேவை. என் தளத்தை குழந்தகள் படிகிறார்கள் என்பதின் காரணமாகவே இந்த படம் குறித்து எழுத யோசித்தேன். 

பல உரையாடல்களுக்கு பிறகு இந்தப் படம் நிச்சயம் எழுதப்பட வேண்டிய படம்தான் என்பதால் எழுதுகிறேன். 

குழந்தைகளுக்கோ கலாச்சார காவலர்களுக்கோ உரிய பதிவு அல்ல இது. இத்தோடு அப்பீட் ஆகிக் கொள்வது உங்களுக்கு நல்லது.

உலக சினிமாவின் அடையாளமாக அகிரா, ஸ்டான்லி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த தளத்தை சுக்கு நூறாக்கிவிட்டார்கள் கொரியர்கள். இத்துணைக் காலமாக இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று எல்லோரும் அதிர்ச்சியடையும் வண்ணம் படைப்புகள் வெளிவருகின்றன. இந்த நிகழ்வு ஆரம்பித்து ஒரு தசாப்தம் நிறைவுற்று அடுத்த தசாப்தத்தை நோக்கிப் போகிறோம்!

அப்படி என்ன கதை என்கிறீர்களா ?

ஜப்பானிய காமிக் கதையான ஓல்ட் பாயின் திரை வடிவம். ஓல்ட் பாய் ஒரு திகில், அதிரடி, உளவியல் கலந்த கதை. 

ஓடே ஷூ ஒரு முரடன், யாரிடம் வேண்டுமானாலும் தகராறு செய்வான், குடித்துவிட்டு தகராறு செய்கிறான் என்று காவல் நிலையத்தில் அடைத்தால் அங்கும் தகராறு, இப்படி ஒருநாள் தகராறு முடிந்து சாலைக்கு வரும் இவன் தன் மகளுக்கு நான்காம் பிறந்தாநாளுக்கான பரிசோடு போதையில் தடுமாறிக்கொண்டு நிற்கிறான். யாரோ தகராறு செய்து தூக்குகிறார்கள். 

போதை தெளிந்தால் ஒரு ஓட்டல் அறையில் இருக்கிறான். ஒரு திறப்பு வழியே உணவு, என்று அடைத்து வைக்கிறார்கள். அறையில் இருக்கும் டி.வியில் செய்தி ஓடுகிறது, ஓடேஷுவின் மனைவி கொலைசெய்யப்பட்டிருப்பதையும், கொலையாளி ஓடேஷு தேடப்படுகிறான் என்பதையும் சொல்கிறது செய்தி. 

அறையில் புகை பரவுகிறது, நினைவிழக்கிறான். அவனுக்கு சில உளவியல் மருத்துவங்கள் நிகழ்கின்றன. நினைவு திரும்பும் ஓடே ஷு தப்ப முனைகிறான்.   சுவற்றில்   ஒரு சுரங்கத்தை ஏற்படுத்துகிறான். தன்னை அடைத்து வைத்திருப்பவனை கண்டறிந்து போட்டுத் தள்ளும் வெறி ஏறிக்கொண்டே போகிறது. 

பதினைத்து ஆண்டுகள் முடிந்த பின்னர், கோட்டு சூட்டோடு அவர்களே வெளியில் விட்டுவிடுகிறார்கள். மர்மம் தொடர்கிறது. பசிக்கவே பக்கத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் ஒதுங்குகிறான். 

ஒரு குட்டி ஆக்டோபசை அப்படியே முழுங்குகிறான். கடையில் இருக்கும் செப் ஒரு இளம் பெண். ஒரு இசை ஒலிக்கிறது, அவள் இவன் கைமீது கை வைக்கிறாள், நினைவிழக்கிறான் ஒடேஷு.

நினைவு திரும்புகையில் அவள் அறையில் இருக்கிறான், அவள் பெயர் மிடோ என்பதை அறிகிறான், இருவருக்கும் நட்பு முகிழ்க்கிறது, அவனை துரத்தும் ஒரு கும்பல் அவளையும் பிடிக்கிறது. 

ரகளையான காட்சிகள், சண்டைக்காட்சிகள் எல்லாம் ரத்தம் ஸ்க்ரீனைத்தாண்டி நம்மீது தெறிக்கிறது. 

அவளுடைய மார்பை ஒருவன் தொட, அந்தக் கையை வெட்டி ஒடேசுவுக்கு பரிசாக தருகிறது ஒரு தொலைபேசி அழைப்பு.  

சில தனித்த தருணங்களில் அந்த இளம் பெண்  மிடோ இவனுக்கு விருந்தாகிறாள். 

ஒடேஷு தன்னை யார் பிடித்தது, யார் அடைத்து வைத்தது, இந்த நிமிடம் வரை யார் பின்தொடர்வது என்று தெரியாமல் குழம்பி வெறியேறி ஒவ்வொரு தடயமாய் பிடித்து, எதிர்படும் எல்லோரையும் எல்லா விதத்திலும் வெட்டி, கூறிட்டு, சிதைத்து முன்னேறிக் கொண்டே இருக்கிறான். 

ஒருவழியாய் யார் என்பதைக் கண்டு பிடிக்கிறான். 

நகரின் மாபெரும் பணக்கார குடும்பத்தின் இளவல், லீ ஊஜீன்!

அவனது எல்லா காவலர்களையும் அடித்துக் கொன்று அவனை நோக்கி முன்னேறுகிறான். 

அவன் எதைபற்றியும் கவலைப் படாமல் முழு நிர்வாணமாக குளித்துவிட்டு கோட் ஒன்றை எடுத்தப் போட்டுகொண்டு வெகு நேர்த்தியாக கிளம்புகிறான். 

அவன் பாட்டுக்கு ஒருபுறம் இப்படி தயாராக, இவன் ஒவ்வொருவராய் காலி செய்து அவன் முன்னால் போய் நிற்கிறான். 

ஒருபுறம் எலைட் இளைஞன், இன்னொரு புறம் அசுரத்தனமான வெறியோடு அவனை அழிக்க விரும்பும் முரடன், வில்லன் லீ எதைபற்றியும் கவலைபடாமல் நாம ஒரே ஸ்கூலில்தான் படித்தோம் நினைவு இருக்கா என்கிறான்? 

மெல்ல நினைவு மலர, ஓடேஷுவுக்கு இப்போது லீயை நினைவில் வருகிறது குறிப்பாக அந்த நாள், லீ யும் அவன் அக்காவும் பள்ளி வளாகத்தில் சிரித்துக் கொண்டு ஓடுவது நினைவில் வருகிறது. 

அப்புறம் தான் ஒடேஷு அதை நினைவு கூர்கிறான். அப்படி ஓடும் இருவரும் ஒரு ஆளில்லாத அறையில் ஒன்றாக இருப்பதையம், தன் சகோதரியின் மார்பை லீ தொடுவதை, பருகுவதை பார்க்கிறான் ஓடேஷு. 

இவன் பார்ப்பதையும் அவர்கள் பார்த்துவிடுகிறார்கள். ஒடேஷூ இந்த விசயத்தை பரப்பிவிடுகிறான். ஜஸ்ட் லைக்தட் சொல்லிவிட்டு இவன் பாட்டுக்கு கிளம்பி அடுத்த ஊருக்கு வந்து, முரடனாகவே தொடர்ந்து ஒரு சிறுவணிகனாக இருந்த நாள் ஒன்றில்தான் லீ அவனைத் தூக்கி பதினைத்து வருடம் அடைத்து வைத்துவிடுகிறான். 

நான் செய்தது தப்புதான் ஆனால் ஏண்டா என்னை பதினைத்து வருடம் அடைத்து வைத்தாய் என்று கேட்கிறான். 

அப்போதுதான் லீ தன் சகோதரி தற்கொலை செய்துகொண்டு இறந்து போனதைச் சொல்கிறான். 

அவள் தான் கருவடைந்துவிட்டதாக நினைத்தாள், அந்த அச்சத்தில் அவளுக்கு மாதவிடாய் நின்றுவிட்டது, அவள் கருவடைந்தது  என் உறுப்பின் மூலம் அல்ல உன் நாக்கால் என்கிறான் லீ. 

இருந்தாலும் பதினைத்து வருடம் தன்னை அடைத்து வைத்த அவனை மன்னிக்க தயாரில்லை ஒடேசு. 

யாருமே எதிர்பாராமல், ஜீரணிக்க முடியாத அடுத்த குண்டை வீசுகிறான் லீ,

சரி இப்போ உன்னோட ஒருத்தி சுத்திட்டு இருக்காளே அவள் யாருன்னு தெரியுமா என்கிறான் ...

திடுக்கிடும் ஒடேஷு யார் எனக் கேட்க உன் மகள்தான் என்கிறான் லீ. 

அதோடு விடாமல் ஒரு போனை எடுத்து இந்த விசயத்தை உன் மகளிடம் சொல்கிறேன் என்கிறான், நீ அவளுக்கு வாங்கிய பிறந்தநாள் பரிசை இப்போது அவளிடம் கொடுக்கச் சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறேன் இன்னும் இரண்டு நிமிடத்தில் அவர்கள் கொடுப்பார்கள். அவள் பெட்டியைப் பிரித்துப் பார்த்தால் புரிந்துவிடும் என்கிறான். 

முரடன் ஒடேசு, ஐம்பது அறுபது பேரை ஒரே சுத்தியல் கொண்டு நொறுக்கி கொல்லும் கொலைவெறி கொண்ட ஒடேசு படக்கென வில்லனின் காலில் விழுந்து கதற ஆரம்பிக்கிறான். 

மசியவேயில்லை அவன், 

திடுமென என் நாக்குதானே பிரச்சனைக்குக் காரணம் அதை வெட்டி உன் காலடியில் போடுகிறேன் என் மகளிடம் சொல்லாதே என்கிறான்.

நாக்கை இழுத்து அறுத்து வில்லனின் காலில் போடுகிறான். 

லீ போனை எடுத்து திரும்பி வாங்க வேலை முடிஞ்சிருச்சு என்கிறான். 

புல் சூட்டில் மாடலிங்குக்கு கிளம்புவது போல கிளம்பி லிப்ட்டில் ஏறுகிறான். தன் கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைச் சுட்டுக் கொண்டு செத்துப் போகிறான்.

இந்த இடத்தில லீ கதாநாயகன் ஆகிறான், அந்த பெண்ணிடம் அவள் தகப்பன்தான் அவளுடைய காதலன் என்பதை சொல்லாமலே இறந்து போகிறான். அவனும் பழிவாங்கும் உணர்வில்தான் உயிரோடு இருந்திருக்கிறான். அந்த நோக்கம் நிறைவேறியவுடன் அவன் வாழ்வின் அர்த்தம் முடிந்து போகிறது அவனுக்கு.

ஒடேசு, தன்னை ப்ரோக்ராம் செய்த உளவியல் நிபுணியிடம் மிடோ தன்னுடைய மகள் என்னும் நினைவை அழித்துவிடச் சொல்கிறான். 

அவளும் அப்படியே செய்கிறாள். 

ஆனால் படம் முடியும் பொழுது ஒரு பரிதாபமான பழிவாங்கப்பட்ட துயர் மிகுந்த புன்னகையோடு மிடோவை  அணைத்துக் கொள்கிறான் ஒடேஷு. 

பார்வையாளர் ஊகத்திற்கே முடிவு என்கிறார் இயக்குனர்.

மெச்சூர் ஆடியன்ஸ்க்கு இந்தப் படம் ஒரு பெரிய அனுபவமாக இருக்கும். 

ஏனையோருக்கு இது சண்டைப்படம், கிளர்ச்சிப் படம். 

படத்தில்  வரும் விசயங்களை தாண்டி ஏற்படும் உளவியல் அனுபவங்கள் அலாதி. 

ஒடேஷுவிற்கும், மிடோவிற்கும் இடையே ஏற்படும் நெருக்கங்களை ரசிக்கும் பார்வையாளர்கள் பின்னால் லீ அந்த வெடிக்கும் உண்மையைச் சொல்கிற பொழுது அருவருப்படைவது ஒரு திரை மாஜிக். 

குறிப்பாக காஸிப் செய்வோர் இந்தப் படத்தை பார்த்தால் குறைந்தது இரண்டு நாட்களுக்கு வாயை மூடிக் கொள்வார்கள்.

இன்றளவும் கொண்டாடப்படும் படமாக இருக்கும் படம் ஓல்ட் பாய். 
வெறுமனே எலக்ட்ரா காம்ப்ளக்ஸ் என்று சொல்லிவிட்டு போய்விடாமல் நிறய உளவியல் சாத்தியங்களை பேசி நடுங்க வைக்கும்.

தைரியம் இருப்போர் பார்க்கலாம். 

இயக்கம் : பார்க் சான் ஊக்
ஒடேஷு : கொய்மின்சக் 
லீ        : யூ ஜி டே 

Comments

  1. நல்லதொரு விமர்சனம்.... இந்த படத்தை பார்க்க மனம் மெச்சூரிட்டி அடைந்து இருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. கதையைப் பார்த்து அதிர்ந்து நிறயப் படித்தேன், ஒரு மாங்கா கதையில் (காமிக்ஸ்) கதையிலிருந்து பெற்ற மூலம் என்பது இதைவிட அதிர்ச்சி

      Delete
  2. ஏராளமான திருப்பங்கள். இந்திய சூழலில் நினத்தே பார்க்கமுடியாத கதைக் களம். நீங்கள் விவரித்த விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. திகைக்கவைக்கும் கதை

      Delete
  3. "//காஸிப் செய்வோர் இந்தப் படத்தை பார்த்தால் குறைந்தது இரண்டு நாட்களுக்கு வாயை மூடிக் கொள்வார்கள்.//" - அப்படிபட்ட ஒரு படமா!!!
    காஸிப் செய்பவர்களுக்கு தண்டனையாக இந்த படத்தை காண்பிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அந்த நாக்கை வெட்டிப் போட்டு மீண்டும் மீண்டும் கதறும் இடத்தை ரிவைண்ட் செய்து போடவும்

      Delete
  4. அப்பப்பா. எவ்வளவு சிக்கல்கள். எளிமையாகப் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விக்கிப்பீடியரே

      Delete
  5. அருமையான விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வருகைக்கு நன்றி அய்யா

      Delete
  6. நல்லதொரு விமர்சனம். அறிமுகம் செய்தமைக்கு நன்றி மது.

    ReplyDelete
  7. இப்படி அடைத்துவைத்துச் சித்திரவதையா!! செம உளவியல் கதை!! பழிவாங்குதல் சுழற்றி அடிக்கிறது! உங்கள் விமர்சனம் நன்று அண்ணா. இரத்தம் , கொலை என்றாலே நான் அப்பீட்!

    ReplyDelete
    Replies
    1. இளகிய இதயம் கொண்டோருக்கு இந்தப் படம் உகந்ததல்ல

      Delete

Post a Comment

வருக வருக