புயலிலே ஒரு தோணி
ப.சிங்காரம்
பக்கங்கள் 312
விலை 280
இந்த நாவல் எனக்கு ஒரு பட்டியலில் அறிமுகமானது. அது கவிஞர்
முத்துநிலவன் போட்டித் தேர்வுகளுக்கான ஒரு இலவச பயிற்சி மையத்தில் பங்கேற்பாளர்களுக்குக்
கொடுக்கப்பட்ட தமிழ் படைப்புகளும் அவற்றின் படைப்பாளர்களும் எனும் பட்டியல்.
முருகேசபாண்டியன் போன்றவர்களின் முன்னெடுப்புகளின் மூலம் இந்நாவல்
மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த அலையில் கவிஞர் சூரியா சுரேஷ்ஷோடு
பேசிக்கொண்டிருந்த பொழுது தமிழின் ஆகச் சிறந்த பத்து நாவல்களை பட்டியலிட்டால் அந்த
பத்து தலைப்புகளுக்குள் வரும், சரி வேண்டாம் என்று ஐந்து நாவல்கள் மட்டும் என்று
பட்டியலைக் குறைத்தால் அதற்குள்ளும் வரும் என்று சொல்லவே ஏழு கழுதை வயசாகியும் இந்த
நாவலை படிக்காமல் இருந்ததற்கு வருந்தினேன்.
ரசிகர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்கான விடை வாசிப்பில் புரிந்தது,
கூடவே ஏன் எழுத்தாளர் புறக்கணிக்கப்பட்டார் என்பதற்கான விடைகளையும் கொடுத்தது.
முதலில் ஏன் இது தனித்துவம் கொண்டிருக்கிறது என்று கேட்டால்,
நிச்சயமாக வெளிவந்த காலத்தில் தமிழ் இலக்கிய உலகம் கொண்டாடிய படைப்புகளிடமிருந்து
ஒளியாண்டுகள் உயரே இருந்தது. இதன் உயரமே இதன் பிரச்னை.
மனித மனதின் அலைபாய்தலை, கையாலாகத இயல்பை, மரணம் வசீகரிக்கும் ஆக்ரோஷ இளமையை,
சாகசத்தை, தத்துவத்தை வெகு லாகவமாக கையாண்டிருக்கும் சிங்காரம் அன்றைய இலக்கிய
உலகிற்கு அன்னியமாக போனதில் ஆச்சர்யம் இல்லை.
இவ்வளவு ஆழத்தை சிங்காரம் தன்னுடைய வாசிப்பிலிருந்துதான் பெற்றுக்
கொண்டிருக்கிறார். உலக அளவில் கொண்டாடப்பட்ட இலக்கியங்களை, மேலை இலக்கியங்களை,
தத்துவத்தை நுகர்ந்து கிளர்ந்ததின் வெளிப்பாடே இந்த நாவல். இவற்றோடு தமிழ்
செவ்விலக்கியங்களையும் படைப்பின் நெடுக பயன்படுகிறார், செய்யுள் வரிகளை கதைப்போக்கில்
கையாண்டிருக்கும் வித்தை வியப்பைத்தருகிறது.
நினைவோடையாக பரவும் அயலகத்தில் இருக்கும் பாண்டியனின் சின்னமங்கலம்
எனும் தமிழ்நாட்டு கிராமத்தின் பால்ய அனுபவங்கள், அவன் பால்யத்தில் பாடிய பாடல்கள்,
அவற்றை கனகச்சிதமாய் பயன்படுத்திக்கொண்டிருப்பதெல்லாம்
மிகமிக ரம்யமான வாசிப்பனுபவம்.
இவ்ளவு செய்நேர்த்தியான படைப்பை ஒருமுறையேனும் வாசிக்காமல் மரித்துப்
போவோர் அபாக்யவான்கள். சான்ஸ்லெஸ்.
துவக்கத்தில் வாசிக்க கொஞ்சம் தடை இருக்கலாம். காரணம் கதை மலேசியாவில்
நிகழ்ந்தால் அப்பகுதி வழக்கு மொழியை பயன்படுத்தும் யுக்தி கொஞ்சம் சிக்கலாக
இருக்கலாம். ஆனால் கதையின் நிகழ்வு வேகம் நம்மை இழுத்துக் கொண்டு சென்றுவிடுகிறது.
எனக்கு இந்த நாவலைப் படிக்கும் பொழுது நினைவில் வந்தவர் வாட்டகுடி இரண்னியன்.
பாண்டியனைப் போலவே மரணத்தை பற்றி எந்தப் பயமும் இல்லாமல் சக மனிதர்களுக்காக
ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி உயிரிழந்தவர்.
செம்மை (கிளாஸிக்) தரம் கொண்ட இந்த நாவல் ஏன் அது வெளியிடப்பட்டகாலத்தில்
பெரும் புறக்கணிப்புக்குள்னானது.
காரணம் இல்லாமல் இல்லை. இன்றுவரை தமிழ்பெருமைகள் என்று நாம் எவற்றையெல்லாம்
போற்றிவருகிறோமோ அவற்றையெல்லாம் விமர்சித்தது பாண்டியன் கதாபாத்திரம்.
விமர்சனம் மேன்மைக்கு, அடுத்தகட்ட வளர்சிக்கு, அறிவியல் பூர்வமான சமூக
வழிநடத்தலுக்கு அவசியம் என்ற பக்குவம் அன்றைய இலக்கிய ஆளுமைகளுக்கோ, தமிழ்
ஆர்வலர்களுக்கோ இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
குறிப்பாக அன்றய பதிப்பக உலகில் கோலோச்சிய சமூகப் பிரிவான நகரத்தார்
சமூகக் கதா பாத்திரங்கள் சிலவற்றை எழுத்தாளர் கையாண்டிருக்கும் விதம் அன்றய
தினங்களில் அணுவெடிப்பாகவே கருதப்பட்டிருக்கும்.
தன் படைப்புகளுக்காக அச்சுறுத்தப்பட்ட எண்ணற்ற படைப்பாளிகளை நினைவுபடுத்துகிறது
இந்த சம்பவம்.
எப்படி நாவலின் கதாநாயகன் போராளியாக இறந்து போகிறானோ அதே போல
சிங்காரமும் தன்னுடைய வாழ்நாள் சேமிப்பை (ஏழுலெட்சம், தொண்ணூறுகளில் எங்கள் ஊரில்
நகரின் நடுமத்தியில் இருக்கும் பள்ளியை ஐந்து லெட்சம் ரூபாய்க்கே விற்பனை
செய்தார்கள், புரிதலுக்காக) வழங்கிவிட்டு, தன்னுடைய உருவப் படமோ, சிலையோ, தன்
பெயரில் அறக்கட்டளையோ நிறுவக்கூடாது என்ற நிபந்தனையோடு விடைபெற்றார். பாண்டியனின்
துயரைப் போலவே யாருமற்ற நிலையில் படைப்பாளரின் இறுதியும் நேர்ந்தது தன் நாயகனை
தன்னைக்கொண்டே வரைந்திருக்கிறார் என்பதை புரியவைக்கிறது.. சமூக புறக்கணிப்புகளால்
தொடர்ந்து எழுதாமல் போன ஆகப் பெரும் ஆளுமை ஒன்றை தமிழ் இழந்தது.
அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய படைப்பு அற்புதம் இந்த நாவல்.
தொடர்வோம்.
அன்பன்
மது
அவசியம் வாங்கிப் படிப்பேன் நண்பரே
ReplyDeleteநன்றி
நல்லதொரு அறிமுகம். நன்றி கஸ்தூரி.
ReplyDelete