அ.கரீம்
பாரதி புத்தகாலயம்
விலை 140
மொஹள்ளவின் மைய்யத்துகள், மௌத்துகளின் காலமது, வந்தாரை, கூடிழந்த பறவைகளின் சாபம், அன்புள்ள அத்தாவுக்கு, பிலால் என்கிற டேப் பசீர், மொதோ கேள்வி, தாழிடப்பட்ட கதவுகள், வெடிப்புக்குபின் பின்காலம், 144 எனும் பத்து கதைகள் கொண்ட தொகுப்பு.
புதிதாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் இரண்டு இளம் இதயங்கள் எப்படி களப்பலியாகிறார்கள் எனப் பேசும் மொஹள்ளவின் மைய்யத்துகள் மிக கொடூரமான சிறுகதைகளில் ஒன்று. மதவெறி எப்படி தொடர்பே இல்லாத இரண்டு காதல் உயிர்களை பலிபோட்டது என்று சொல்லியிருக்கும் விதம், கதையை செதுக்கியிருக்கும் விதம் நிச்சயம் கவனத்தில் கொள்ளத்தக்கது.
அதுவும் "பாரத் மாதா கி ஜே" சொல்லி காவி வெறியர்கள் செய்கிற தேசபக்த பணி படியுங்கள். அதிர்விலிருந்து வெளிவரவே இரண்டு வாரமாவது ஆகும்.
அதேபோல இரண்டாவது கதையான மௌத்துகளின் காலமது ஒரு காணொளி விவரிப்பு போல எப்படி ஒரு மதக் கலவரம் சமூகத்தில் பரவி அச்சமாக உருவெடுக்கிறது என்பதை திரையில் பார்ப்பதுபோல விவரித்திருக்கும் நேர்த்தி கரீமின் படைப்புத் திறனின் உச்சம்.
வந்தாரை வாழவைக்கும் கேவை என்று கேரளாவிலிருந்து வந்து கோவையில் கடை நடத்திய சலீம், அவனக்கு உதவியாக இருக்கும் சொர்ணம்மாள் என கதை நினைவுகளுக்குள் சுழல்கிறது. விநாயகர் விழாவிற்கு நன்கொடை கொடுத்துவிட்டு பொங்கல் வைத்தால் கொடுங்க என்று கேட்கும் வெகு இயல்பான மனிதன்தான் சலீம். காவிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, வகுப்புகள் எடுத்து சக இந்துக்களை வன்முறையாளர்களாக மாற்றும் செயலை அந்த நகர் சும்மா பார்த்துக் கொண்டிருந்ததின் விலையை ஒரு சபிக்கப்பட்ட நாளில் கொடுத்தது. இப்படி நடக்கும் பயிற்சிகளில் ஈடுபட அமீர் என்கிற சிறுவனும் விரும்புகிறான். வெகு நாட்கள் அழைப்புக்காக காத்திருக்கிறான். இந்த மாதிரியான நுட்பமாக பகடி செய்யும் வித்தையை எங்கே கற்றார் கரீம்?
கலவரத்தில் ரத்தவிளாராக அடிபட்டு எங்கே போனான் என்று தெரியாமலே ஓடிப் போய்விடுகிறான் சலீம்.
கூடிழந்த பறவைகளின் சாபம், எனும் அடுத்த கதையில் பல தலைமுறையாக ஒரு சேரியில் வாழ்ந்துவந்த குடும்பத்தை விரட்டிவிட்டு அவர்களின் வீட்டை எரிக்கிறது காவி கும்பல். அந்தப் பகுதியில் இருக்கும் எல்லா இஸ்லாமிய வீடுகளையும் எரித்துவிட்டுப்போக வீதியில் நின்று புலம்புகிறார்கள் கூடிழந்த பறவைகள்.
கதையின் சிறப்பு ராஜாவுக்கும் ஜாகீரூக்கும் இருக்கும் நட்பு. காவிகள் கும்பலாக இயங்குவதால் ராஜாவால் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத நிலையும் கதை பதிவு செய்கிறது.
அடுத்த கதையான அன்புள்ள அத்தாவுக்கு, அப்துல் ரசாக் ஒரு தொழிலாளி, முன்னொமொரு காலத்தில் சில கவிதைகளை எழுதியவன். ஆனால் வாழ்வின் ஓட்டத்தில் ஒரு தொழிலாளியாக இருக்கிறான். அவன் முகவரிக்கு வரும் கடிதத்தில் வேகம் எடுக்கிறது கதை. இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் நெருக்கமான கதைகளில் ஒன்று இது. கரீமின் படைப்பு நேர்த்தி, உள்ளே பொதிந்திருக்கும் மனிதம், வாசித்து முடிக்கும் பொழுது கண்களில் நீர் ஊற்றெடுத்து, மயிர்கூச்செறிந்தது. அவசியம் படிக்கவேண்டிய கதை. இப்படி மானுடம் பேசும் கதைகள்தான் சீழ் பிடித்த நம் சமூகத்திற்கு அதிகம் தேவை.
பிலால் என்கிற டேப் பசீர், வெறுமே இரத்த வெறிகொண்ட காவிகள் குறித்தே பேசாமல் இந்தக் கதையில் தன்னுடைய மதத்தின் மீது ஒரு விமர்சனப் பார்வையை வைக்கிறார் எழுத்தாளர். இதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பே. அறம்சார் படைப்பாக இந்த தொகுப்பு மிளிர இந்த கதை ஒரு முக்கிய காரணம். இன்று என்னை அலைபேசியில் அழைத்த எல்லோரிடமும் சொன்ன கதைகளில் இதுவும் ஒன்று. (அன்புள்ள அத்தாவுக்கு முதல் கதை)
மொதோ கேள்வி, ஐயோ இப்படி ஒரு பொண்ணா ஒரு பயல் எதுத்துக் கேட்க முடியாது. முஸ்லீம்னா என்ன நீ எப்படி இருக்க முதல்ல ஒங்க வேலைய ஒழுங்கா பாருங்க அப்புறம் என்கிட்ட வாங்க என்று பேசும் சுபைதா ஒரு மறக்கமுடியாத பாத்திரம். ஒரு பெண்ணிடம் மாட்டிகொண்டு ஜமாத்படும் பாட்டை ஒளிவு மறைவு இல்லாமல் நேரிடையாகவே சொல்லியிருப்பார் கரீம். செமை பாத்திரம் சுபைதா.
தாழிடப்பட்ட கதவுகள், கலவரத்தில் கொல்லப்பட குறிவைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் ஐந்து நாள் துயர். இந்திய ஒன்றியம் வெட்கப்பட்டு துக்கப்பட வேண்டும். அவ்வளவு துயர் இந்தக் கதை.
வெடிப்புக்குபின் பின்காலம், கோவை குண்டுவெடிப்பில் முக்காடு பார்ட்டியாக காவல்துறையால் மாட்டிவிடப்பட்டு ஜோடிக்கப்பட்ட குற்றவாளி அஹமது, அவன் சிறையில் இருந்த பதினேழு ஆண்டுகளில் அவனது மனைவி ரோஹையா காவல்துறை மூலம் அனுபவித்த வேதனைகள், இவ்வளவையும் தாண்டி அவர்கள் மகளுக்கு திருமணம், அத்தா, மகள், தாய் என்று மூவரும் கட்டியணைத்து அழுவதில் முடிகிறது கதை.
பதினேழு ஆண்டுகள் ஒரு குற்றமும் செய்யாமலே, வழக்கின் எண்ணிக்கைக்காக இணைக்கப்பட்ட அஹகமது, எவ்வளவு வலி.
144. தொகுப்பின் ஆகச் சிறைந்த கதைகளில் ஒன்று, இன்னும் கொஞ்சம் தீட்டியிருந்தால் உலகத்தரமாக வந்திருக்கும். ஏன் இந்துத்துவம், எப்படிக் கலவரம் என அத்துணை காரணிகளையும் அலசி அதை கதையாக்கியிருக்கும் பாணி அற்புதம் கரீம்.
இஸ்லாமியக் குடும்பங்களில் பயன்படுத்தப்படும் மொழி இந்தப் படைப்பின் மாபெரும் பலம். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் அந்த வார்த்தைகள் அப்படியே ட்ரான்ஸ்லிட்ரெட் செய்வதுதான் முறை.
இந்த தொகுப்பு தவிர்க்கப்படக்கூடாத தொகுப்பு.
ஒரு கலவரத்தின் அத்துணை விளைவுகளையும் அதன் வலியையும் படைப்பில் கடத்தி இலக்கிய உலகத்தில் அறிமுகம் செய்திருக்கும் கரீம் இன்னும் நிறைய நேர்த்தியான படைப்புகளைத் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.
நன்றி
அன்பன்
மது
நன்றி
அன்பன்
மது
விமர்சனம் நூலை அலங்காரப்படுத்தி ஆவலை தூண்டுகிறது நன்றி தோழர்
ReplyDeleteநன்றி தோழர்
Deleteவிமர்சனமே வேதனையைத் தருகிறது நண்பரே
ReplyDeleteதாழிடப்பட்ட கதவுகள் என்பதற்கு தாழிடப்படாத கதவுகள் என்ற தலைப்பு இட்டுள்ளீர்களே
நன்றி அய்யா திருத்திவிட்டேன்
Deleteமிக்க நன்றி.... மனம் தொட்ட நூல் அறிமுகம். வெகு நாட்களுக்கு பிறகு தாழிடப்பட்ட கதவுகள் புத்தகத்தின் அறிமுகம் காண்கிறேன். பேரன்பும்... நன்றியும்.
ReplyDeleteமிக்க நன்றி.. வெகு நாட்களுக்கு பிறகு தாழிடப்பட்ட கதவுகள் புத்தகத்தின் அறிமுகம் காண்கிறேன்... மனம் தொட்ட அறிமுகம்..
ReplyDeleteபேரன்பும் நன்றியும்.
வன்முறையும் வன்மமும் அழிக்கும் அன்பும் அறமும் தான் வழிகின்றன குருதியாகவும் கண்ணீராகவும்.😔😔
ReplyDeleteநல்லதொரு அறிமுகம். நன்றி.
ReplyDelete