மனைவியின் கடிதம்
கடிதங்கள் மூலமே பெரும் நாவல்கள் விரிந்தன ஒரு காலத்தில். ஒரு கடிதம் அதற்கு பதில் கடிதம் என விரியும் கதையின் நிகழ்வுகள். இதே பாணியில் எழுதப்பட்ட ஒரு கதை. ஆனால் ஒரே ஒருவர்தான் கடிதத்தை எழுதுகிறார்.
திருமணத்திற்கு பின் கணவனுடன் பதினைந்து ஆண்டுகள் கழித்துவிட்ட மிருனாள் தன் கணவனுக்கு எழுதும் விடுதலைக் கடிதமிது.
கதையின் நாயகி, கதைசொல்லி மிருனாள் கல்வி மறுக்கப்பட்ட, பால்யவிவாகத்தின் மூலம் இல்லறத்திற்குள் வந்தவள். இவளுக்கு ஒரு சகோதரன் சரத். பெரும் கூட்டுக் குடும்பத்தின் இரண்டாவது மருமகள் மிருனாள். மற்ற பாத்திரங்கள் எல்லாம் நாம் அன்றாம் வாழ்வில் பார்க்கிற கேள்விப்படுகிற பெண்கள் மற்றும் ஆண்கள்.
கதையின் திருப்பத்தை ஏற்படுத்தும் பாத்திரமாக பிந்து.
பொதுவாகவே தாகூர் கதைகள் எனக்கு சிறு சங்கடத்தைதருபவை. இந்த தொகுப்பு குறித்து என் இணையரும், தாயாரும், போதக் குறைக்கு இரா.ஜெயா அம்மாவும் மாறி மாறி ஹைப் கொடுத்து பேசி என்னை படிக்கவைத்துவிட்டார்கள்.
தாகூர் நெஞ்சைக்கீறும் சோக கதைகளை எழுதுபவர், சிறுவயதில் எனக்குச் சொல்லப்பட்ட காபூலி வலா, போஸ்ட்மேன், சந்திரா என்ற கதைகளின் தாக்கம் இன்றும் என்னை ஆட்டுகின்றன. (அப்பா ஆங்கிலத்தில் படித்து மொழிபெயர்த்து சொல்வார்).
எனவே தாகூர் பக்கம் ஒதுங்க தயங்கினேன்.
ஏன் இத்துணைச் சோகம் என்பதற்கு பின்னர் பதில் சொல்கிறேன்.
இப்போது கதையை பார்ப்போம்.
ஒரு பெரும் கூட்டுக் குடும்பத்தில் இரண்டாவது மருமகளாக வரும் மிருனாள் வீட்டின் கட்டுபெட்டியான சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட மறுக்கிறாள். சுயமரியாதை, ஈரம் கசியும் இதயம் எல்லாம் பெரிய வீட்டின் மருமகள்களுக்கு இருக்கலாமா? அதுவும் தன்னைத்தாண்டி யார் குறித்தும் சிந்திக்காத ஒரு குடும்பத்தில் இத்தகு பெண்கள் மூச்சுத்திணறிப் போவது இயல்பே.
சில இடங்களில் பெண்கள் அறை என்று குறிப்பிடப் பட்டுள்ளது அந்தக்கால கேமரா உள்தான் என்று நினைக்கிறன். மிகக் கேவலமான அறையில் வாழ, பிள்ளைப் பெற, அதை பறிகொடுக்க முடிகிறது மிருனாளால். இந்த சோகத்தில் இருக்க்கும் பொழுது தன் ஓரகத்தியின் ஒன்று விட்ட தங்கை அனாதையாக, அவளை தன் வீட்டுக்கு அழைக்க இயலவில்லை ஓரகத்தியால். பிந்து என்கிற அந்தக் குழந்தையை எந்த தயக்கமும் இல்லாமல் மிருனாள் ஆதரிக்கிறாள். ஓரகத்தி இதை விமர்சனம் செய்தாலும், தன் கையாலாகத் தனத்திற்கு மிருனாள் எவ்வளவோ பரவாயில்லை என்பதே அவள் உள் மன எண்ணம்.
மிருனாள் பிந்துவின் ஒரே ஆதரவாகிறாள், இந்த உறவு குடும்பத்தினரால் விமர்சிக்கப்படுகிறது. யாரையும் பொருட்படுத்தவில்லை. குழந்தை பிந்துவை உதறித் தள்ள அவளுக்கு ஒரு திருமண ஏற்பாடு நடக்கிறது. ஒரே வாரத்தில் பிந்து மீண்டும் வந்துவிடுகிறாள்.
நெஞ்சை உடைக்கும் உண்மையைச் சொல்கிறாள், ஒரு பைத்தியத்திற்கு அவளை மனம் செய்து கொடுத்திருகிறார்கள். அவர்கள் வீட்டிலிருந்து அழைத்துப் போக வருகிறார்கள். பிந்துவின் மாமியார் ஒரு கிராதகியாக இருக்கிறாள்.
சில தினங்கள் கழித்து மிருனாள் அவளுடைய தம்பி சரத்தை அழைக்கிறாள். சரத் என்றாலே இந்தக் குடும்பத்திற்கு அலர்ஜி. அவன் விடுதலைப் போராட்டத்தில் இருக்கிறான், சேரிப் பிள்ளைகளுக்கு சேவகம் செய்கிறான், காங்கிரசில் வேறு இருக்கிறான். இதனால் அவன் மிருனாளைப் பார்க்க வந்தால் போலிஸ் பிரச்னை வரும் என்று பஞ்சகச்சத்தை நனைகிறார்கள்.
சரத்திடம் பிந்துவை அழைத்துவரச் சொல்கிறாள் மிருனாள். தொடரும் நாட்களில் ஒரு புனிதயாத்திரைக்கு செல்கிறாள்.
அங்கிருந்துதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறாள்.
அதிர்சிகரமான அந்த உண்மையை கணவனுக்குத் தெரிவிக்கிறாள். பிந்து தனக்கு எரியூட்டிக்கொண்டு இறந்துவிட்டாள். இனி ஒருபோதும் உங்களோடு வாழமாட்டேன் என்கிறாள். மிகுந்த மரியாதையோடு "பாத சரணங்களுக்கு" என்று துவங்கி உங்கள் அடைக்கலத்திலிருந்து வெளியேறிய மிருனாள் என்று முடிகிறது கடிதம்.
இந்தக் கதையில் தாகூர் காட்டியிருக்கும் பெண்களின் வாழ்வு நிலை, அவர்களின் மன எழுச்சிகள், குறிப்பாக பிந்து தன்னை தேடிவந்த கணவர் குடும்பத்தினரிடம் இருந்து தப்ப விரும்பாமல் தானே முன்வந்து அவர்களோடு சென்றது எல்லாமே உளவியல் மேன்மையோடு எழுதப்பட்டிருகின்றன.
பிந்து மாப்பிள்ளை வீட்டாருடன் செல்லாவிட்டால் மிருனாள் ஏசப்படுவாள், உலகில் அவளை நேசிக்கிற ஒரே ஒரு ஜீவன் மிருனாள் மட்டுமே இந்த நிலையில் மிருனாள் திட்டு வாங்கக்கூடாது என்பதற்காவே அவள் வெளியேறி, பின்னர் தீக்குளிக்கிறாள்.
அக்குடும்பத்தினர் மிருனாள் கொணர்ந்த நகைகளின் அளவு, குடும்பப் பின்புலம் மிருனாளின் செய்கைகளை "சகித்துக்கொள்ள" ஒரு காரணியாக இருப்பதையும், மூத்த மருமகளுக்கு அந்த பின்புலங்கள் வலிமை குன்றியிருப்பதால் தன் அநாதைத் தங்கைக்கு அடைக்கலம் கொடுக்கக் கூட இயலவில்லை என்பதைச் சொல்லியிருகிறார் தாகூர்.
அக்கால இந்தியா குறித்தும், பெண்கள் நிலை குறித்தும் உணர்ந்துகொள்ள இந்த கதை அவசியம் படிக்க வேண்டிய கதை.
சிதைந்த கூடு குறித்த கருத்தில் திருமிகு வள்ளிக்கண்ணு 99% இந்தியக் குடும்பங்களின் நிலை இதுதான். பெண்கள் தங்கள் உணர்வுகளை மடைமாற்றி குடும்பத்தில் தொடர்கிறார்கள் என்று சொல்லியிருந்தார்.
அதை கேள்வி கேட்டிருந்த கவிஞர் பரிதி சூர்யா வைரம் என்றாலும் சிறையில் இருத்தல் தகுமோ என்று கேள்வியெழுப்பியிருந்தார். இருவரின் வயதும், பாலும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது. அம்முறையில் பார்க்கப் போனால் திருமிகு வள்ளிக்கண்ணு குடும்ப அமைப்புகள் குறித்த தகவல்கள் அனுபவங்கள் செறிந்தவர், அதே போல இளம் கவிஞர் சூர்யா உலகில் எழும்பியடங்கும் மௌன அலறல்களை இன்னும் கேட்கத்துவங்கவில்லை என்றே கருதுகிறேன்.
எது எப்படியோ கவிஞர் பரிதி சூர்யாவின் விருப்பம் இந்தக் கதையில் நிறைவேறிவிட்டது, மிருனாள் தளையறுத்துக்கொள்கிறாள். தன்னை பக்த மீராவுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார். கருணையற்ற தன் உறவுகளிலிருந்து வெளியேறிப் போகிறாள் அவள். பரிதிக்கு இப்போது மகிழ்வாக இருக்கும் என்றே நினைக்கிறன்.
தொடர்வோம்
அன்பன்
மது
மிருணாலும் பிந்துவும் மனதைவிட்டகல மறுக்கிறார்கள் .உண்மைதான் கபூலிவாலா எங்கள் ஸ்கூல் நாளில் ஆங்கில பாடத்தில் வந்தப்போவே கலங்குச்சு மனசு எனக்கும் .
ReplyDeleteமனம் கணக்கும் படைப்புதான் ஏஞ்சல்
Deleteஇந்தக் கதை படித்திருக்கிறேன் மது. நல்ல கதை.
ReplyDeleteமிருனாள் என்கிற பெயரே அவ்வளவு பிடித்துப் போனது எனக்கு ...ஆனால் ஒரு துன்பியல் பெயராக
Deleteஜெயகாந்தனின் எழுத்தினை நினைவூட்டுகிறது.
ReplyDeleteதாகூரின் படைப்புகள் ஆங்கிலம் வழியே அகிலத்தை அடைந்துவிட்டன
Deleteகவிஞர் பரிதி சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteபரிதி உடன் வருக
Deleteஅக்கால பெண்களின் நிலை...மிருணாலும் பிந்துவும் மனதில் பதிகிறார்கள்.
ReplyDeleteகீதா
வருக கீதா நலம்தானே
Delete