ஒளியிலே தெரிவது – வண்ணதாசன்


ஒளியிலே தெரிவது – வண்ணதாசன்
தமிழின் எழுத்துப் புத்தர்களில் ஒருவராக இருக்கும் வண்ணதாசன் எழுத்தை ஒளியிலே தெரிவது மூலம் நுகர முடிந்தது.  தமிழ் இலக்கிய உலகின் மிகுந்த தனித்துவம் மிக்க எழுத்துப்பாணி இவருடையது.


ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே இருக்கும் நட்பை, சமயங்களில் அது சமூக வரம்புகளை மீறி உணர்வு பிரவகமாகி கலப்பதை இவ்வளவு கவித்துவமான வார்த்தைகள் கொண்ட வரிகளில் சொல்ல முடியுமா?

அப்படி ஒரு எழுத்தாற்றல், பெண்களை வர்ணிக்கும் பொழுதும் அப்படி ஒரு ரசனை வாய்ப்பே இல்லாத வாசிபனுபவம்.

தொகுப்பின் முதல் கதை ‘சிநேகிதிகள்’ அனுஷா எனும் இளம் பெண் சேது என்கிற அறுபது வயது ஆணுக்குள் எழுப்பும் மென் அதிர்வுகள்,

“அனுஷாவால் காரில் ஆட்டோவில் எல்லாம் மிகச் சாதாரணமாக பக்கத்தில் உட்கார்ந்து வர முடிகிறது” என்று துவங்கும் அந்த பாராவில் இளம் பெண், மகளை பெயர்த்தியை ஒத்த வயதில் இருப்பவள் அறுபது வயது ஆணுக்கு வியப்பைத் தருகிறாள்!

அன்றய கலாச்சாராமும் இன்றய கலாச்சாரமும் சந்திக்கும் புள்ளியை லாகவமாகச் சொல்கிறார்.

அதே போல பல தசாப்தங்களுக்கு முன்னாள் சேது இருந்த தெருவில் வாழ்ந்த நாச்சியார், அவளின் வாடிக்கையாளர்கள், நண்பன் வீட்டில் ஒரு ஒரு வினாடி இவருக்கு தண்ணீர் கொடுத்த நாச்சியார் அணிந்திருந்த ஜாக்கெட் வரை நினைவில் எழுகிறது சேதுவுக்கு.

ஒரு ஆற்றங்கரையில் அனுஷா, கிருஷ்ணம்மாள், நாச்சியார் எனும் மூன்று பெண்களும், சேதுவும்தான் கதை. இவர்கள் பேசிக்கொள்வதை விட சேதுவின் நினைவுகள் பக்கம் பக்கமாக நீள்கின்றன. பெண்களின் உடை, உடல் வனப்பு, அவர்கள் குறித்த ஊர் பேச்சு, அவர்களின் கூந்தலில் இருந்து சொட்டிகொண்டிருக்கும் நீர், அவர்கள் காலில் ஒட்டி காய்த்திருக்கும், உதிரத் துவங்கும் மணற்துகள் என வெகு அடர்வான பார்வை, வர்ணனை அதற்கு பயன்படும் கவித்துவ தமிழ்.
நாச்சியார் அத்துணை ஆண்டுகளுக்கு பிறகும் அவளோடு வாஞ்சையாக இருந்த சுந்தரம் குறித்துக் கேட்பது, அவள் நாணமும் அதை வார்த்தைகளில் சட்டமிட்டு சித்திரப்படுத்தியிருப்பதும் வண்ணதாசன் வித்தை.

இமயமலையும் அரபிக் கடலும் எனும் கதை தங்கம் எனும் சிறு குழந்தை ஒரு முகவரியை தேடி பயணிக்கும் பொழுது அவள் நினைவுகளுள்ளே பயணிக்கும் கதை, அப்பனின் தொடுப்பை, அதன் விளைவை தன் தாயார் குடும்பத்தை நடத்தும் கையறு நிலையை கால் போன போக்கில் நினைவு கூர்கிறாள். முகவரியைத் தப்பவிடும் இடத்தில உதவும் ஒருவரின் சைக்கிளின் பின்னேறி வரும் குழந்தை தேம்பி அழுவதோடு முடிகிறது கதை.

இது மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்துக்கு போனால் உலகத்தரமான கதை ஒன்றை ஐரோப்பா வாசிக்கும்.

மிக மிக மென்மையான உணர்வுகளை நுட்பமாக விவரிப்பதில் வண்ணதாசன் தொட்டிருக்கும் உயரம் அசாத்தியம்.

கொடியில் காயப் போட்டிருந்த தன் கணவனின் உடைகளை வீட்டின் உரிமையாளரின் மனைவி எடுத்துவைக்கிறார். அவரது மடியில் தன் கணவனின் உள்ளாடைகளைப் பார்த்த மனைவி, புழக்கடைக்கோடி வாந்தி எடுக்கிறாள், உடன் வீடு மாற்றச் சொல்கிறாள், அருமையான ஒரு சிநேகிதத்தில் ஒரு சிறு சறுக்கல் வலி நிறைந்த பிரிவை தருகிறது “சுலோச்சனா அத்தை, ஜெகதா மற்றும் ஒரு சுடுமண் காமதேனு” எனும் கதையில்.

இந்த தொகுப்பின் பனிரெண்டு கதைகள் இருக்கின்றன. தொகுப்பின் உணர்வுத் தளம், உறவுகளுக்குள் ஏற்படும் சூறாவளி, இந்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் கடத்த எழுத்தாளர் கையாண்டிருக்கும் வார்த்தைகள், வாக்கியங்கள் அவசியம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியவை.

தமிழ் இலக்கிய உலகில் வண்ணதாசன் தனெக்கென ஒரு லீகசியை வைத்திருப்பவர். இந்த ஞானத்தொடர் அநேக தமிழ் எழுத்தாளர்களுக்கு சாத்தியமில்லா ஒன்று.
யார் ஒருவர் சிஷ்யர்களை உருவாக்குகிறாரோ அவர்களின் வளர்ச்சியை கொண்டாடுகிறாரோ அவரே காலத்தை வென்று நிற்பார். இது எனக்கு தெரிந்தவரை வண்ணதாசன் வட்டத்தில் தான் உயிர்ப்போடு இருக்கிறது.



தொடர்வோம்
அன்பன் 
மது

Comments

  1. வண்ணதாசன் அவர்களின் ஒரு சில புத்தககங்கள் படித்திருக்கிறேன். இந்த தொகுப்பு வாசித்ததில்லை. நல்ல அறிமுகத்திற்கு நன்றி கஸ்தூரிரெங்கன்.

    ReplyDelete
  2. அருமை
    நூலினைப் படிக்கத் தூண்டுகிறது விமர்சனம்
    நன்றி

    ReplyDelete
  3. நூல் அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  4. அருமை வாசிக்க தூண்டும் விமர்சனம்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக