டுவல்வ் ஆங்கிரி மென்



ஆங்கிலப் படங்கள் என்றால் துப்பாக்கி சண்டைகள், ஜேம்ஸ் பாண்ட் பாணி கிளுகிளு காட்சிகள் என்பதே எண்பதுகளின் பி  மற்றும் சி ஆடியன்ஸ் மைன்ட் செட். (மைனாரிட்டிகள் மன்னிக்க).

இன்றுவரை மலையாளப் படங்கள் என்றால் ஏற இறங்க பார்க்கும் மக்களும் உண்டு.  ஏன் இதுகுறித்து ஒருமுறை மம்மூட்டியிடம் கேட்ட பொழுது அவை தமிழர்களுக்காக தயாரிக்கப்படுபவை என்றார்! (இந்த பேட்டிகொடுத்த சில ஆண்டுகளுக்கு பின்னர் கேரள திரையுலகே திரண்டு ஷகீலா படங்களை தடைசெய்க என்று விழுந்துபுரண்டு அம்மணியை கேரளாவை விட்டு வெளியேற்றியது வேறு கதை!, நினைத்துப்  பார்த்தால்  சிரிப்பாக இருக்கிறது).

உண்மையில் பலதரப்பட்ட கழிவுகளுக்கு இடையே மிக அற்புதமான திரைப்படங்கள் எல்லா மொழிகளிலுமே இருக்கின்றன. தொழில் நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் மிகவும் முன்னேறியிருந்த அமெரிக்க திரையுலகம் எல்லா பிரிவுகளிலும் உயர்தரப்  படங்களை தந்துவந்திருக்கிறது.

கோர்ட் தொடர்பான படங்கள், யுத்தம், குடும்ப உறவுகள், நகைச்சுவை, என அத்துணை பிரிவுகளிலும் உன்னதமான படைப்புகள் விரவிக் கிடக்கின்றன அமரிக்க திரை வரலாற்றில்.  

அப்படிப்பட்ட அற்புதம் ஒன்றை லாக்டவுன் காரணமாக பார்க்க நேர்ந்தது. 

ஒரு முழுநீளத் திரைப்படத்தை ஒரே அறைக்குள்,  உரையாடல்களை மட்டுமே வைத்துக் கொண்டு நகர்த்த முடியுமா? அதுவும் பார்வையாளர்களை ஆகர்சிக்கும் விதத்தில் செய்ய முடியுமா? வெறும் உரையாடல்கள், ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்குமா? குறிப்பாக வசூலில் தூள் கிளப்ப முடியுமா?

இதற்கெல்லாம் பதில் ட்வெல்வ் ஆங்கிரி மென்தான்!

இயக்குனர் சிட்னி லூமெட்டின் இந்த படைப்பு இன்றுவரை கொண்டாடப்படும் வெகு சில கிளாசிக் படங்களில் ஒன்று. 

ஜூரி முறைப்படி தீர்ப்பு வழங்கப்படும் அமெரிக்க கோர்ட் நடவடிக்கைகளின் பின்னால் இருக்கும் நுட்பமான விசயங்களை சமரசமின்றி அம்பலப்படுத்தி, அதே வேளையில்  12பேரில் ஒருவர் நினைத்தால் கூட நீதியை நிலைநாட்ட முடியும் என்பதையும் சொன்னதில் இருக்கிறது படத்தின் வெற்றி.  

மனிதர்களின் மனப்பாங்கை போகிற போக்கில் போட்டுத்தாக்கும் வித்தை படத்தின் பலம். 

ஒரு கொடூரமான கோடை நாளில் மின் விசிறிகூட ஓடாத ஒரு அறையில் அமர்ந்து பனிரெண்டு ஜூரிகள் ஒரு இளைஞனை எலக்ட்ரிக் சேரில் உட்கார வைப்பதா அல்லது அவனை விடுவிக்க நியாயமான காரணங்கள் ஏதும் இருக்கிறதா என்று பேச துவங்குகிறார்கள். 

பதினோரு பெரும் அப்பனையே கத்தியால் குத்தியவன் சேரில் உட்கார வைத்து பொசுக்குவதே சரி என்று வாக்களிக்க, ஒரு ஒருவர் மட்டுமே எதிர் வாக்கு அளிக்கிறார். 

இப்படி பலமுறை வாக்குக்கோர ஒவ்வொரு முறையும் வாக்குகள் ஒன்று ஒன்றாக  கூடி அனைவரும் ஒருமனதாக வாக்களிக்கிறார்கள்.

படத்தை ஸ்பாயில் செய்துவிட்டேன் என்றாலும் எப்படி இந்த வாக்கு ஒன்று ஒன்றாக கூடுகிறது என்பதை படத்தை பார்த்தல்தான் புரிந்து ரசிக்க முடியும். 

உள்ளே எல்லோரும் ஒரு மனிதனின் வாழ்வா சாவா பிரச்னை குறித்துப்  பேசிக் கொண்டிருக்க சிலர் சில்லித்தனமான சில்லறை வேளைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஒருவன் தன்னுடைய நிறுவனத்தின் லோகோவை வரைந்து இது என் கம்பனி என்று அவனுடைய கம்பனியை ப்ரொமோட்செய்துகொண்டிருக்கிறான்.

இன்னொருவன் மின்விசிறியில் பேப்பரை கசக்கி எரிந்து அது இன்னொருவர் மீதுபட்டு சாரி என்று இளிக்கிறான். 

தன் மகனோடு சண்டையிட்டு அதனால் அவன் வீட்டை விட்டு வெளியேற தன்னை மதிக்காமல் அவன் தனியே எங்கோ  இருக்கிறான் என்கிற வெறியில் சம்பந்தமே இல்லாமல் குற்றவாளியை எலக்ட்ரிக் சேருக்கு அனுப்பத்துடிக்கும் ஸ்டாக் புரோக்கர். 

ஒரு சேரியில் வளர்ந்து இன்று ஒரு வங்கியில் இருக்கும் ஒருவன், என பனிரெண்டு மனிதர்களுக்ம் வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

குறிப்பாக ஏழாம் நம்பர் ஜூரி இரவு பேஸ்பால் மாட்சுக்கு டிக்கெட் வாங்கி வைத்திருப்பதால் இந்த விவாத இலுவையிளிருந்து தப்ப விரும்புகிறார்.  

ஒரு மேட்ச்க்காக தனது வாக்கை முன்பின் மாற்றி மாற்றி அளிக்கிறார்!

அமெரிக்க நீதி மன்றங்களில் நீதி என்ன பாடு படுகிறது என்பதை இதைவிட தெளிவாக சொல்ல  முடியாது. 


கூல் பாக்டர்ஸ் சில 

படத்தின் செட்டிங் ஒரே அரை என்பதால் அறையில் இருக்கும் பொருட்கள் கவனத்தைக் கவர்ந்தன. 

குறிப்பாக முழுக்க முழுக்க கண்ணாடியாலான தண்ணீர் கேன்! இன்று வரும் பிளாஸ்டிக் கேன்களை கவிழ்க்கவே கவனம் தேவைப்படுகிறது. அன்றைய தினத்தில் கண்ணாடி பபிள் டாப்களை நினைத்துப் பாருங்கள். அதில் அளவுகள் வேறு பொறிக்கப்பட்டிருகின்றன. பெரிய சைஸ் பீக்கர் போல!

அடுத்தது அந்த தண்ணீர் கோப்பைகள், யூஸ் அண்ட் த்ரோ டம்பளர்களுக்கு பதில் காகிதக் கோன்கள்!

பழங்கால மின்  சுவிட்ச்கள், ஜன்னல்கள், மின் விசிறிகள் என நிறைய டீடைல் கிடைக்கும்!

நிறைய வாசிப்பு பழக்கமும், அமெரிக்க கலாச்சாரத்தின் புரிதலும் இருந்தால் நீங்கள் தவிர்க்கவே கூடாத படம் இது. 

இல்லை எனக்கு ஓர் நிமிடத்தில்  நூற்றி நாற்பது புல்லட்டுகள்  பறக்க வேண்டும் என்றால் அய்யா இது உங்களுக்கான படமல்ல. 

தொடர்வோம்
அன்பன் 
மது 

Comments

  1. சிறப்பானதோர் அறிமுகம். நன்றி கஸ்தூரிரங்கன்.

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. ஆங்கில படமென்தால் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்குமோ????

    ReplyDelete
  4. நல்ல விரிவான விமர்சனம்

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம். பார்க்க வேண்டும் என்று லிஸ்டில் போட்டாச்சு. நன்றி கஸ்தூரி.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக