20 ஆண்டுகளுக்குப் பிறகு -ஓ ஹென்றி


அந்தக் காவலர். மிடுகோடு அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்த அந்த தெருவில் நடந்து கொண்டிருந்தார். அந்த மிடுக்கு அவரது நீண்ட நாள் பழக்க வழக்கம், யாராவது பார்ப்பார்களே என்று சீன் போடுவதற்கு அல்ல, ஏனென்றால் அங்கே அவர் நடப்பதை பார்க்க வெகு குறைவானவர்கள்தான் இருந்தார்கள், நேரமோ இரவு 10 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது, வாடைக்காற்றும், மழை வாசமும், தெருக்களை ஆளரவமின்றி செய்து விட்டிருந்தன.
கடைகளின் சாத்தப்பட்ட கதவுகளை சோதித்தவாறு தன்னுடைய போலீஸ் தடியை நளினமாக சுழற்றிக்கொண்டு நிபுணத்துவம் வாய்ந்த தன் விழிகளை இப்போதும் அப்போதுமாக தெரு முழுவதும் படர விட்டுக் கொண்டு, பசிபிக் பிராந்தியத்தை ஒட்டிய அந்த தெருவில், நடந்து கொண்டிருந்தார் அந்த காவலர்.  அவரது நெடிதுயர்ந்த தோற்றமும் மிடுக்கான நடையும் அமைதி தூதுவருக்கான அத்தனை லட்சணங்களையும் பெற்றிருந்தது.  அந்தப் பகுதி சற்று முன்னதாகவே மூடப்படும் பகுதி. இப்பைக்கும் அப்பைக்குமாக ஏதாவது ஒரு சிகரெட் கடையில் விளக்கு எரிவதும், அல்லது முழு இரவு உணவு விடுதி ஒன்றில் விளக்கு எரிவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த தெருவில் இருந்த பெரும்பாலான கடைகள் மூடி பல மணி நேரங்கள் ஆகிவிட்டன. 
ஒரு குறிப்பிட்ட பகுதியில் பாதி தூரத்தை கடந்த காவலர் திடீரென தனது நடை வேகத்தை குறைத்துக் கொண்டார். ஒரு ஹார்டுவேர் கடையின் கதவின் மீது ஒரு உருவம் சாய்ந்து கொண்டு இருந்தது அதன் உதட்டில் பற்ற வைக்கப்படாத ஒரு சிகரெட் இருந்தது. காவலர் அந்த மனிதனை நோக்கி நடக்கத் துவங்கிய பொழுது அவன் வேகமாக பேச துவங்கினான்.

ஒன்னும் இல்ல ஆஃபீசர், என் நண்பன் ஒருவன் வருவான், அவனுக்காக காத்திருக்கிறேன் என்றான்.. 20 வருடங்களுக்கு முன்னால் நாங்கள் அப்படித்தான் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். உங்களுக்கு இது ரொம்ப வேடிக்கையா இருக்கும் இல்லையா. நான் கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றேன், ரொம்ப நாளைக்கு முன்னால இந்த கடை இருக்கிற இடத்துல ஒரு ஓட்டல் இருந்தது ஞாபகம் இருக்கா. பிக் ஜோ ப்ராடி ரெஸ்டாரண்ட்.

ஆமா அஞ்சு வருஷம் வரைக்கும் அது இருந்துச்சு, அப்புறம் அதை இடிச்சு போட்டாங்க.

வாசலில் நின்று கொண்டிருந்த அந்த மனிதன் ஒரு தீக்குச்சியை எடுத்து உரசி  தன்னுடைய சிகரட்டைப் பற்ற வைக்கத் தொடங்கினான்.

சன்னமான அந்த தீக்குச்சி வெளிச்சம் வெளுத்துப்போன, சதுர தாடைகளை, ஆர்வம் மிக்க கண்களை, வலது புற புருவத்தில் இருந்த சிறிய தழும்பை காட்டியது. அவனுடைய ஸ்கார்பின் ஒரு பெரிய வைரம் சற்று கூட பொருத்தமே இல்லாமல்  மின்னிக்கொண்டிருந்தது.
20 ஆண்டுகளுக்கு முன்னால் இதே இடத்தில இருந்த ஜோ பிராடி ஹோட்டலில் என்னுடைய சிறந்த நண்பனும் உலகத்தின் சிறந்த மனிதனுமான, ஜிம்மி வெல்ஸ் உடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவனும் நானும் இதே நியூயார்க்கில் தான் வளர்ந்தோம் உடன் பிறந்த சகோதரர்களைப் போல ஒன்றாக .


எனக்கு 18 வயசு ஜிம்முக்கு 20. மறுநாள் காலையில நான் என்னுடைய அதிர்ஷ்டத்தை தேடி மேற்கு நோக்கி பயணப்பட திட்டமிட்டிருந்தேன். உங்களால ஜிம்மிய நியூயார்க்கை விட்டு வெளியில இழுக்கவே முடியாது, அவன பொறுத்தவரைக்கும் நியூயார்க் மட்டும்தான் உலகமே, அன்னைக்கு நைட்டு நாங்க ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம் 20 வருஷம் கழிச்சு சரியா அதே நேரத்துல அதே இடத்தில என்ன ஆனாலும் எப்படி போனாலும் ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் சந்தித்துக்கொள்வது என.
எங்களுக்கு தெளிவாக தெரியும் 20 வருஷத்துல நாங்க ரெண்டு பேருமே நிறைய சம்பாதிச்சிருப்போம், எங்களுடைய விதி சரியா ஒர்க் பண்ணி இருக்கும் அது என்னவாக இருந்தாலும்.

இது ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு என்று சொன்னார் அந்த காவலர் :சந்திப்பதற்கு இருக்கிற இவ்வளவு பெரிய இடைவெளி மட்டுமல்ல :நடுவுல ஒரு தடவை கூட உன் நண்பனை பற்றி நீ கேள்விப்படலையா.

ஆமா ஒரு தடவை நாங்க பேசிக்கிட்டோம், அப்புறம் ரெண்டு வருஷம் ஆச்சு எங்க தொடர்பு எல்லாம் அத்துப்போச்சு. உங்களுக்கு தெரியும் இல்லையா, மேற்கு ரொம்ப பெரிய இடம், நான் ஓய்வில்லாமல் உழைக்க ஆரம்பிச்சேன். ஆனா, எனக்கு நிச்சயமா தெரியும் ஜிம்மி இன்னைக்கு நைட் இங்கே வருவான் ஏன்னா அவன் இந்த உலகத்திலேயே ரொம்ப உண்மையானவன் நம்பிக்கையானவன் . அவன் மறக்கவே மாட்டான். ஆயிரம் மைல் பயணித்து இன்னைக்கு இந்த வாசல்ல வந்து நிற்கிறேன், என்னோட பழைய பங்காளி வந்து என்னை பார்த்தான்னா அது பயனுடையதா இருக்கும்னு நினைக்கிறேன்.

காத்திருக்கும் அந்த மனிதன் ஒரு கைக்கடிகாரத்தை எடுத்தான், கடிகாரத்தின் மணிகள் தோறும் குட்டி வைரங்கள் பதிக்கப்பட்டு இருந்தன.

10 மணி ஆக இன்னும் மூன்று நிமிஷம் இருக்கு. 20 வருஷம் முன்னால நாங்க பிரிஞ்ச போது மிகச்சரியாக 10 மணி.

○மேற்கால போய் நீ நல்லாவே சம்பாதி இருக்கேன்னு தெரியுது அப்படித்தானே என்றார் அந்த காவலர். 
பந்தயம் கட்டிக் கொள்ளலாம், இதுல பாதியாவது ஜிம்மி சம்பாதிச்சிருப்பான்னு நம்புறேன்.

அவன் ஒரு மாதிரி, ஸ்லோவா உழைப்பான், ஆனா ரொம்ப நல்லவன். ஆனா நான் உலகத்தின் மிகச்சிறந்த மூளைகளிடமிருந்து என் சம்பாத்தியத்தை காப்பாத்திக்கணும். நியூயார்க்ல இருந்தா ஒரு மனுஷன் மிஷின் மாதிரி தான் வாழனும். மேற்கு அப்படி வாழ முடியாது கத்தி முனையில் தான் வாழ்ற மாதிரி இருக்கும். 
அந்த காவலர் தன் தடியை சுழற்றியபடி இரண்டு தப்படிகளை எடுத்து வைத்தார்.

நான் என் வேலைக்கு போறேன், உன் பிரண்டு நல்லபடியா உன்னை வந்து பார்ப்பான்னு நினைக்கிறேன். மிகச் சரியா நேரத்தைக் கடைபிடிப்பீங்களா காத்திருப்பீங்களா என்றார்.

அப்படியெல்லாம் கடைப்பிடிக்க முடியாது, குறைந்தபட்சம் ஒரு அரை மணி நேரம் காத்திருப்பேன். ஜிம்மி உயிரோடு இருந்தான் என்றால் நிச்சயமாக வந்து விடுவான். குட் பை ஆபீசர் என்றான்.

குட் நைட் என்று சொன்னவரே போலீஸ் மேன் அந்த தெருவில் இருந்து மூடப்பட்ட கதவுகளை சோதித்துக் கொண்டு சென்று மறைந்தார்.

இப்போது மிக மென்மையான குளிர்ந்த பனித் துகள்கள் விழ ஆரம்பித்து விட்டன, காற்று அடிப்பேனோ மாட்டேனோ என்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தை எல்லாம் நிறுத்திவிட்டு நின்று நிதானமாக ஊதலைத் துவங்கியது. நடை பாதையில் அங்கேயும் இங்கேயும் தெரிந்த பாதசாரிகள் தங்களுடைய கோர்ட்டின் காலரை காது வரை இழுத்து விட்டுக்கொண்டு கைகளை கோட்பாகெட்டுக்குள் நுழைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடி சென்று கொண்டிருந்தனர். ஆயிரம் மைல்கள் பயணித்து வந்து அந்த ஹார்டுவேர் கடையில் நின்று கொண்டு தன்னுடைய நண்பன் வருவான் என்பதற்கான எந்த உத்தரவாதம் இல்லாத பைத்தியக்காரத்தனத்தை செய்து கொண்டிருந்த அந்த மனிதன் தன் இள வயது நண்பனுக்காக புகைத்துக் கொண்டும் காத்துக் கொண்டும் இருந்தான்.

20 நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பிறகு :  முழு நீள கோட் அணிந்த உயரமான மனிதன் ஒவர் கோட்டின் காவரை காது வரை தூக்கி வைத்துக் கொண்டு எதிர்புறத்திலிருந்து நேரடியாக காத்திருக்கும் மனிதனை நோக்கி விரைந்தான்.

பாப் நீயா அது என்றான் சந்தேகத்துடன், காத்திருந்தவன்.

நீதான ஜிம்மி வெல்ஸ் என்று உரக்க கூறினான் எதிரே வந்தவன். 
என் இதயம் ஆசிர்வதிக்கப்படட்டும் என்ற வாரே காத்திருந்தவன் கைகளை கோர்த்துக் கொண்டான் வந்தவன். நீ பாப்தான், விதியைப் போலவே மாறாமல், எனக்கு உறுதியா தெரியும் உன்னைய நான் இங்க பார்ப்பேன் நீ உயிரோட இருந்தா. நல்லது நல்லது நல்லது 20 வருடம் என்பது மிக நீண்ட காலம், அந்தப் பழைய ரெஸ்டாரன்ட் போயிடுச்சு, இருந்துச்சுன்னா இன்னொரு தடவை நாம அங்கே சேர்ந்து சாப்பிடலாம். மேற்கு உன்னை எப்படி நடத்தியது? 

சரியான முரட்டு பீசு அந்த மேற்கு. நான் கேட்டதெல்லாம் கொடுத்திருச்சு. நீ ரொம்ப மாறிட்ட ஜிம்மி , ரெண்டு மூணு இன்ச் வளத்தி ஆயிட்டே.

ஓ 20 வயசுக்கு அப்புறம் நான் கொஞ்சம் வளந்துட்டேன். 

ஜிம்மி நல்லா இருக்கியாடா நீ நியூயார்கில்.
ஏதோ சுமாரா போயிட்டு இருக்கு, இந்த நகர துறைகள்ல ஒரு வேலை கிடைச்சுச்சு. வா பாப் எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு அங்கே போய் நாம் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கலாம்.

அந்த இரண்டு நண்பர்களும் ஒருவர் தோளை ஒருவர் அனைத்து படி தெருவில் நடக்கத் துவங்கினார்கள், மேற்குக்கு சென்று பெரும் செல்வத்தை ஈட்டிய அந்த நண்பன் தன்னுடைய வெற்றிக் கதைகளை கர்வத்துடன் சொல்ல ஆரம்பித்தான். கேட்டுக் கொண்டிருந்த நண்பனோ காதுவரை இழுத்து விடப்பட்ட ஓவர் கோட்டில் முகத்தை புதைத்து கொண்டு ஆர்வத்துடன் தன் நண்பனின் வெற்றி கதைகளை கேட்டுக் கொண்டிருந்தான்.  

அந்த தெருவின் முத்தத்தில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிபாய்ச்சி கொண்டிருந்தது ஒரு மருந்துக் கடை. வண்ண வெளிச்சங்கள் தொடர நண்பர்கள் இருவரும் மிக இயல்பாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கத் திரும்பினார்கள். மேற்கிலிருந்து வந்த நண்பன் திடுமென நின்று கைகளை விடுவித்து கொண்டான்.

நீ ஜிம்மி வெல்ஸ் இல்ல, 20 வருஷம்ன்றது ரொம்ப நீண்ட காலம் தான் ஆனா அது ஒரு மனுசனோட மூக்கை ரோமன் மூக்கில் இருந்து சப்பை மூக்கா  மாத்தாது.

ஆனா அது சில நேரத்துல நல்ல மனுஷங்களை கெட்டவங்களா மாத்திடும் என்றான் வளர்ந்தவன். உன்ன கைது பண்ணி பத்து நிமிஷம் ஆச்சு சில்க்கி பாப் என்றான் அவன். சிகாகோ எங்களிடம் சொன்னான் நீ எப்படியும் நியூ யார்க்கிட்ட வருவாய் என்று, அவளுக்கு உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்காம். புத்தி இருந்தா அமைதியா வந்துரு, நம்ம ஸ்டேஷனுக்கு போறதுக்கு முன்னால் உன்கிட்ட ஒரு சின்ன செய்தி  உன்கிட்ட குடுக்க சொல்லி என் நண்பன் சொன்னான். இந்த வெளிச்சத்துல நீ அந்த தாளைப் படிக்கலாம், ரோந்துக்கு வந்த வெல்ஸ் உனக்கு கொடுத்து இருக்கான்.

மேற்கிலிருந்து வந்த அந்த மனிதன் மடித்து நீட்டப்பட்ட அந்த தாக்கலை தாளை விரித்து படிக்க ஆரம்பித்தான். அவன் கைகள் உறுதியாக இருந்தன அந்த கடிதத்தை படிப்பதற்கு முன்னர். வரி வரியாக அந்த கடிதத்தை அவன் படித்து முடிக்கும் போது அவன் கரங்கள் நடுங்கத் தொடங்கியிருந்தன. இத்தனைக்கும் அது ரொம்பவே சின்னதொரு குறிப்பு தான்.  

நண்பா நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிட்டேன், ஆனால் நீ சிகரெட் பற்ற வைத்த பொழுது தெரிந்த முகம் சிக்காகோ காவல்துறையால் தேடப்படும் முகம். என்னால் உன்னை கைது செய்ய முடியாது, எனவே நான் ஒரு சீருடை அணியாத காவல் அதிகாரியை அனுப்பி வைத்தேன். 
இப்படிக்கு
ஜிம்மி

Comments