சகோதரி உமாவிற்கான அஞ்சலி...-அறிவழகன்


2022 டிசம்பரில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பும் பொழுதில் சென்னை வானொலி நிலையம் கண்ணில் பட்டது, சட்டென்று அவரது நினைவு வந்தது, அழைத்தேன்,


"இங்கேதான் உங்கள் வானொலி நிலையத்துக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன், உள்ளே வந்துவிடவா?"


"இருங்க நானே வர்றேன்"


மறுபடி அழைத்தவர், "யாருமே இல்லையே, எங்க இருக்கீங்க அறிவழகன்"


"இந்த கலங்கரை விளக்கத்துக்கு எதிர்புறமா இருக்கே, அந்த அலுவலகம் தானே?"


"அறிவழகன் நான் புதுவை வானொலி நிலையத்தில் அல்லவா வேலை செய்கிறேன்!"


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சென்னை வானொலியில் இருக்கிறார் என்று நான் தவறுதலாகப் புரிந்து கொண்டிருக்கிறேன், நீண்ட நேரம் பேசினார், "பாண்டிச்சேரிக்கு எப்போது வருகிறீர்கள்?" நாம் நிறையப் பேச வேண்டும்" என்றார்.


பேசும்போதெல்லாம் நிறைமொழி குறித்து வாஞ்சையாக அதே பேரன்போடு விசாரிப்பார், அவரை நான் பார்த்ததில்லை, ஆனால், மருதங்குடி வயல்களுக்கு நடுவே அறுவடைக் காலங்களில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து புதுநெல்லுச் சோறு தின்றவர்கள் போல ஒரு நெருக்கம் இருந்தது, "21 மாலை சிற்றரங்கில் நூல் வெளியீடு, வந்துரனும்" என்பார். "காவிரி இலக்கியத் திருவிழாவுக்கு வருகிறீர்களா?".


உண்மையில் நான் ஒரு விழாக்களுக்கும் போனது கிடையாது, ஆனால், நான் எல்லா விழாக்களுக்கும் செல்பவன் என்று அவர் நம்பி இருக்கிறார். அவரது சொற்களைத் தவிர வேறொன்றையும் எனக்குத் தெரியாது...


அவர் எங்கே வாழ்கிறார் என்றுகூடத் தெரியாதவன் நான், ஆனால், கவிஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் சொற்கள்தான் உயிரும், உடலும், சொற்களைப் பிசைந்து உருட்டினால் அதுதான் படைப்பாளியின் இதயம்.


காலையில் இருந்து கவனிக்கிறேன், அவர் மறைந்து விட்டார், மறைந்து விட்டார் என்று பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், ஆனால், நான் உறுதியாக நம்புகிறேன் கவிஞர் உமா இப்போது தான் பிறந்திருக்கிறார், அவரது சொற்கள் இப்போதுதான் திக்கெட்டும் தனது வாழ்வைப் பறைசாற்றத் துவங்கி இருக்கிறது.


மொழியைச் சுமந்து கொண்டே

பூங்காவுக்குப் போனீர்கள்...

மொழியைச் சுமந்துகொண்டே

கடைக்குப் போனீர்கள்...

மொழியைச் சுமந்துகொண்டே

மருத்துவமனை போனீர்கள்...

மொழியைச் சுமந்துகொண்டே

திருமணத்துக்கு, திருவிழாவுக்கு,

ஆலயத்துக்கு, அலுவலுக்கு...


மொழிக்கு

பூ, காற்று, புத்தகம், மருந்து,

புன்னகை, பரிகாசம்,

பரிசு, ஆசி, ஊதியம்

எல்லாம் கிடைக்கிறது

மொழிக்குக் கிடைத்தால்

உங்களுக்குத்தானே...


உங்கள் கவிதைதான், வீட்டுக்குப் பதிலாக மொழியைப் போட்டிருக்கிறேன், கனகச்சிதமாக உங்களுக்குப் பொருந்துகிறது. நீங்கள் இந்தக் கவிதையைப் பகடியாக எழுதி இருந்தீர்கள், நான் எனது ஒவ்வொரு செல்லும் இக்கணத்தில் உணரும் துயரத்தின் வெம்மையில் தோய்ந்த உண்மையாக இதில் மொழியைச் சேர்த்திருக்கிறேன்.


தமிழின் பிரம்மாண்டம் போல நீங்கள் சென்றவிடமெல்லாம் பல்கிப் பெருகி இருக்கிறீர்கள், இலக்கிய வேடந்தாங்கல் போல உங்கள் புன்னகை நிழலின் கீழ் இளைப்பாறும் ஆயிரமாயிரம் பறவைகளின் பெயர்களை என்னால் பட்டியலிட முடியும், வாழ்வாங்கு வாழ்ந்தீர்கள்.


உங்கள் வாழ்வு நிறைவானது, உங்கள் வாழ்வு பொருள் பொதிந்தது, மரணத்தால் நமது உரையாடல்களை அழித்து விட முடியாது, காலம் நிலைத்திருக்கும் வரை, தமிழிருக்கும் வரை உங்கள் சொற்கள் இருக்கும். அதுவரை நீங்கள் வாழ்வீர்கள் உங்கள் சொற்களின் வழியாக...


தமிழ் வணக்கம் தோழர். குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதல்.


கை.அறிவழகன்  

 

Comments