கடந்த 10 ஜனவரி 2025 அன்று டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் நான் பேசிய ஆங்கில உரையின் சுருக்கமான தமிழாக்கம்.
அனைவருக்கும் வணக்கம்.
இந்த மகத்தான கருத்து பட்டறையில் எனக்கு பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். Beyond caste barriers: exploring the inclusion question at workplace என்கிற இந்த அமர்வில் building inclusive economics: overcoming caste barriers in the India என்கிற தலைப்பில் என்னை பேச அழைத்துள்ளனர். பணியிடங்களில் நடைபெறக்கூடிய பல்வேறு சுரண்டல்களில் மிக கொடூரமானது சாதியம். ஆனால் அதுகுறித்து பேசுவதற்கு ஒரு தயக்கம் எப்போதும் சிவில் சமூகத்திடம் உண்டு. ஏனென்றால் சாதியம் என்பது மிகவும் சென்சிடிவான ஒரு பிரச்சனையாக நாம் பார்க்கிறோம். பணியிடங்களில் உழைப்பு சுரண்டல், பாலின பாகுபாடு, வர்க்க பாகுபாடு போன்ற பல கொடுமைகள் குறித்து பல்வேறு தேசிய, சர்வதேசிய அரங்குகளில் பேசப்பட்டு வந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சாதி குறித்து பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை. ஏனென்றால் அதுகுறித்து பேசினால் தேவையில்லாத விவாதம் ஏற்படும். பணியிடங்களில் சாதிய பிளவுகள் ஏற்படும் என்கிற ஒரு பொய்யான மாயை நம்மிடம் உண்டு. அந்த மாயையை உடைத்து சாதி குறித்தும் பேச வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான வாய்ப்பை உருவாக்கிய கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களை மிகவும் பாராட்டுகிறேன்.
சாதியம் மிக கொடூரமான அநீதி என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சாதியம் இருந்தாலே அங்கே பாகுபாடு இருக்கிறது என்று அர்த்தம். பாகுபாடு எங்கே இருக்கிறதோ அங்கே மாண்பு இருக்காது. மாண்பு எங்கே இல்லையோ அங்கு சுதந்திரம் இருக்காது. சுதந்திரம் எங்கே இல்லையோ அங்கே சகோதரத்துவம் இருக்காது. சகோதரத்துவம் எங்கே இல்லையோ அங்கு ஜனநாயகம் இருக்காது. ஆகவே பணித் தளங்களிலல் சாதியம் இருந்தால் மேற்கண்ட மாண்பும் சுதந்திரமும் சகோதரத்துவமும் சிதைந்து விடும். ஆகவே இந்த சாதிய தீண்டாமை கொடுமை பணித்தளங்களில் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
சமூக நீதி, அரசியல் நீதி, குற்றவியல் நீதி எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு பொருளாதார நீதியும் முக்கியமானது. பொருளாதார நீதியும் சமூக நீதியும் பின்னிபிணைந்தவை. சமூகநீதி இருக்கிற இடத்தில் தான் பொருளாதார நீதி இருக்கும். அதே போன்று தான் பொருளாதார நீதி இருக்கிற இடத்தில் தான் சமூக நீதியும் இருக்கும்.
பணி இடங்களில் சாதிய பாகுபாடு, தீண்டாமை கொடுமைகள் நடக்கின்றனவா என்பதை கண்காணிக்கப்பட வேண்டும். சாதிய பாகுபாடு என்றால் நேரடியாக சாதியைச் சொல்லி இழிவாக பேசுவது மட்டுமல்ல, அவர்கள் மீதான வன்கொடுமைகள் மட்டுமல்ல, தலித்துகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிப்பதும் அவர்களுக்கு தகுதி இருந்தும் போதிய பொறுப்பினையும் பதவியையும் வழங்காமல் ஒடுக்குவதும் வன்முறை என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே இரண்டு விதமான செயல்திட்டங்கள் முக்கியமானவை. ஒன்று தொழில் நிறுவனங்களில் சாதி ரீதியான சுரண்டலை பாகுபாடை தடுக்க வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கான உரிய பிரதிநிதித்துவமும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற அதிகார பிரதிநிதித்துவம் தான் பாகுபாட்டினை மெல்ல மெல்ல ஒழிக்கும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தனியார் துறையில் அனைத்து பணி இடங்களிலும் மேல்மட்ட அதிகாரத்திலிருந்து கீழ்மட்ட அதிகாரம் வரை குறைந்தபட்சம் 35 சதவீத பட்டியல் சாதி பட்டியல் பழங்குடியினர் மக்கள் இடம் பெற வேண்டும். அவர்களில் 50 சதவீதத்தினர் பெண்கள் இடம் பெற வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்பு மட்டுமல்ல ஒப்பந்தங்கள், விநியோகங்கள், ஒதுக்கீடுகள், பங்குகள் போன்ற அனைத்து நிலையிலும் 35 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு ஆக்ஸ்பாம் மற்றும் நியூஸ் லாண்டரி ஆகிய அமைப்புகள் சேர்ந்து நடத்திய ஆய்வில் இந்தியாவில் உள்ள ஊடக நிறுவனங்களில் ஒருவர் கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தலைமை பொறுப்பில் இல்லை என்கிற உண்மை தெரிய வந்தது. இதே நிலை தான் இந்தியாவில் உள்ள அனைத்து பெரும் வியாபார தளங்களிலும் நிலவுகின்றன. பொதுவாக உலகமயமாதலை சிவில் சமூக இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்பது உண்டு. அதே நேரத்தில் சில உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமை ஆணையர் மேரி ராபின்சன் அவர்கள், உலகமயமாதலை முற்றிலும் நாம் எதிர்க்க முடியாது. அதே நேரத்தில் விளிம்பு நிலை சமூகங்களுக்கு உலகமயமாதலின் வளர்ச்சி திட்டங்களில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார். அதன் ஒரு முன்னெடுப்பாகத்தான் இந்த கருத்துப்பட்டறையை நான் பார்க்கிறேன்.
கடந்த 1950 ஜனவரி 26ம் தேதியன்று நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையில் நுழைய போகிறோம். அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக பொருளாதர தளத்தில் சமமற்ற தன்மையே நீடிக்கும் என்று பாராளுமன்றத்தில் அம்பேத்கர் பேசினார். அவர் கூறியது போன்றே இப்போதும் சமூக பொருளாதார முரண்பாடுகள், பாடுபாடுகள் இன்னும் ஆழமாக வேர்விட்டு நிற்கிறது.
இன்று inclusive economics குறித்து நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அம்பேத்கர் ஏற்கனவே diversity economic என்கிற கருத்தாக்கத்தை முன் வைத்தார். பொருளாதாரம் என்பது ஜனநாயகபடுத்தப்பட வேண்டும். அவை ஒரே இடத்தில் குவிக்கப்பட்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று வலியுறுத்தி இருந்தார். பொருளாதார குவிப்பு என்பது பேராபத்து என்றும் பொருளாதார பரவலாக்கம் என்பதே ஜனநாயகம் என்பதையும் அவர் ஆழமாக வலியுறுத்தி வந்தார். பொருளாதார பரவலாக்கம் இருந்தால் தான் அமைதியும் வளமும் செழித்து ஓங்கும் என்பதை ஒவ்வொரு நிலையிலும் உறுதிபடுத்திக் கொண்டே வந்தார். அதனால் தான் அமர்த்தியா சென் தன்னுடைய பொருளாதார ஆசான் டாக்டர் அம்பேத்கர் என்றார்.
பொருளாதாரத்தை வெறும் வணிக லாபமாக மட்டுமே நாம் பார்த்து வருவது துயரமானது. வறுமைக்கு எதிர்ப்பதம் செல்வம் என்பார்கள். ஆனால் உண்மையில் செல்வத்தை கொண்டு வறுமையை ஒழிக்க முடியாது. வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் சமூக நீதியால் தான் ஒழிக்க முடியும். சமூக நீதி என்பது விளிம்பு நிலை மக்களுக்கு அனைத்து நிலைகளிலும் அதிகாரம் வழங்கப்படுவதாகும். இதை ஒரு குறிப்பிட்ட மக்களின் வளர்ச்சி என்று குறுக்கி பார்க்காமல் நாட்டின் வளர்ச்சி என்கிற தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில் பார்ப்பது தான் நியாயமானது.
உண்மையில் இன்றைய இந்தியாவில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடுபவர்களில் 70 சதவீதத்திற்கு மேலானவர்கள் தலித்துகளும் ஆதிவாசி மக்களும் என்றும் ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல அமைப்பு ரீதியான தொழில்களில் கூட கீழ்மட்ட பெரும் தொழிலாளர்களில் கணிசமானோர் தலித்துகளும் ஆதிவாசி மக்களும் இடம் பெறுகின்றனர். ஆனால் அவர்களுடைய உழைப்பின் மூலம் பெறுகின்ற வருமானம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமானதாக இருக்கிறதே தவிர வாழ்க்கை தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை.
தலித் மற்றும் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்ப நலன், அவர்களின் குழந்தைகளின் கல்வி, மருத்துவம், குடியிருப்பு, சத்தான உணவு, சுகாதாரமான அடிப்படை வசதிகள் தன்னிறைவாக உள்ளனவா என்று ஆய்வு நடத்தி பார்த்தால் உறுதியாக இவை எல்லாம் அம்மக்களுக்கு உறுதி செய்யப்படாமல் இருப்பது தெரிய வரும்.
உழைப்பு சுரண்டல் என்பது தனி மனித சுரண்டல் மட்டுமல்ல குடும்ப சுரண்டல், சமூக சுரண்டல் போன்றவையோடு இணைத்து பார்க்க வேண்டும். அம்பேத்கர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவச திட்டங்களை கொண்டு வருகிற போது சில அறிவு ஜீவிகள் மானியம் கேட்பது கூட நியாயமானது, இலவசம் என்று கேட்பது நியாயமா என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதில் கூறிய அம்பேத்கர், பல நூறு ஆண்டு காலமாக எம்முடைய மக்கள் பத்து ரூபாய் கூலி வாங்க வேண்டிய இடத்தில் ஒரு ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு வந்துள்ளார்கள். இத்தனை ஆண்டு காலம் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கான தீர்வாகத்தான் இலவசம் என்கிற திட்டம். இந்த இலவசம் என்கிற திட்டம் கூட மக்களுக்கான சலுகைகள் அல்ல உரிமைகள் என்பதை வலியுறுத்தி இருந்தார்.
மக்கள் நல அரசு என்கிற திட்டம் போன்று மக்கள் நல தொழில் நிறுவனங்கள் என்கிற பன்மைதன்மை (pluralism) திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். மக்கள் நல தொழில் நிறுவனங்கள் என்றால் பல்வேறு விளிம்பு நிலை சமூகங்களை உள்ளடக்கிய (inclusive) அவர்களது வளர்ச்சிகளை உரிமைகளை கொண்டதாக இருக்க வேண்டும்.
குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் மேல் மட்ட அதிகாரத்தில் இருந்து கீழ்மட்ட அதிகாரம் வரை எஸ்சிஎஸ்டி மக்களுடைய பிரதிநிதித்துவத்தை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கையாக வெளியிடபட வேண்டும். அதே போன்று விநியோகங்கள், பங்குகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றின் தரவுகளையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
பொருளாதார சமத்துவத்தை (economic equality) சமபங்கீடு (equity) மூலமாகத்தான் உருவாக்க முடியும். அப்படி செய்தால் தான் பொருளாதார நீதி கொண்ட சமூகத்தை உருவாக்க முடியும். அதற்கான செயல்திட்டங்களில் அரசும் அரசுசாரா நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அருமையான வாய்ப்பினை வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
-எவிடன்ஸ் கதிர்
Comments
Post a Comment
வருக வருக