ஒரு கதை
கடவுள் உண்மையைப் பார்க்கிறார், ஆனால் காத்திருக்கிறார்
இவான் டிமிட்ரிச் அக்ஸியானவ் விளாடிமிர் கிராமத்தில் வாழ்ந்து வந்தான்.
செம ஜாலி பேர்வழி.
நல்லவன் கூட. ஆனா ஒரு சின்ன பிரச்சனை. பயல் தண்ணி போட்டால் எல்லாம் தரிசு
தான்.
ரகளை.
ஒரு சுபயோக சுப தினத்தில் ஒரு பிள்ளையைப் பிடித்து கட்டி வைக்க பயல் அப்படியே
திருந்தி விட்டான். அப்பவும் இப்பவுமா குடிச்சானே தவிர வேற எந்த வம்பு
தும்புக்கும் போறது இல்ல.
நம்ம ஆளுக்கு ரெண்டு கடையும் ஒரு சொந்த வீடு அழகான பொண்டாட்டி நண்டும்
சிண்டுமா புள்ளைங்க, மகிழ்ச்சியான
வாழ்க்கை.
இப்படி இருக்கையில் ஒரு நாள் பக்கத்து கிராமத்தில் நடக்கும் சந்தைக்கு
போயிட்டு வரேன் என்று சொல்றான்.
ஆனா இவன் சம்சாரம் போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் ஒன்று நான்
கண்டேன் என்று அழுகிறாள்.
அது என்னடி சொப்பனம் என்று கேட்கிறான்.
ஒன்னும் இல்லைங்க நீங்க இந்த சந்தைக்கு போயிட்டு வர்றீங்க வீட்டுக்கு வந்ததும்
உங்க தொப்பியை கழட்டுறீங்க, முடி முழுசும் சாம்ப நிறத்துல மாறி போச்சுங்க. இந்தக் கனவை பார்த்ததிலிருந்து எனக்கு கையும் ஓடல
காலும் ஓடல. போவாதீங்க என்கிறாள்.
நம்ம ஆளு ஹி ஹி ஹி என்று சிரித்துவிட்டு தெரிஞ்சு போச்சுடி சந்தைக்கு போறேன்னு சொல்லிபுட்டு போய் மொடா குடியா குடிச்சுபுட்டு தகராறு பண்ணுவேன் தானே நினைக்கிறே.
உண்மையில நீ பார்த்த கனவு நல்ல கனவு அது நல்ல சகுனம் உனக்கு தான் புரியல என்று
சொல்லிவிட்டான் அவன்.
கவலையே படாத நான் போய் என் கையில இருக்க அத்தனை சாமானையும் வித்துப்புட்டு வரும்போது உனக்கு நிறைய பரிசு வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு
கிளம்பிட்டான்.
இந்த காலம் மாதிரி அந்த காலத்துல விரைவு வண்டில்லாம் கிடையாது எல்லாம்
குதிரை வண்டி தான்.
ஆக குதிரை தெம்பா ஓடுற வரைக்கும் தான் பயணிக்க முடியும் அப்படி குதிரைக்கு
இழைப்பு ஏற்பட்டுச்சுனா பக்கத்துல இருக்க சத்திரம் சாவடியில் ஒதுங்க வேண்டியதுதான்.
அப்படி ஒரு சாவடிக்கு போற வழியில இவனோட பழைய கூட்டாளி ஒருத்தன பார்த்தான் நம்ம
ஆளு'
அப்புறம் என்ன ரெண்டு பேரும் மகிழ்ச்சியா கட்டிப்பிடிச்சு பேசிகிட்டு சந்தோசமா
இருந்தாங்க.
பக்கத்தில் இருந்த சாவடியில் ஆளுக்கு ஒரு ரூம் போட்டு தூங்குனாங்க.
நம்ம ஆளு வியாபாரத்தில் கெட்டி. வெள்ளன எந்திருச்சு சாவடி முதலாளிக்கு
வாடகை குடுத்துட்டு குதிரையைப் பூட்டி வண்டியை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டான்.
காலங்காத்தால 25 கிலோ மீட்டர்
போய் இன்னொரு சாவடியில குதிரைகளுக்கு தண்ணியும் தவிடு வைக்க சொல்லிட்டு இவனும்
ரெஸ்ட் எடுத்தான்.
நம்மாளுக்கு பாட்டு ஜோரா வரும்.
கையில் இருந்த கிட்டார் வச்சுக்கிட்டு அருமையா ஒரு பாட்ட பாட ஆரம்பிச்சான்.
திடீர்னு பார்த்தா ரொம்ப வேகமா ஒரு வண்டி அங்கனா வருது.
போலீஸ் வண்டி.
கூடவே கொஞ்சம் மிலிட்டரிகாரங்களும்.
வந்தவங்க நேரா இவன் கிட்ட தான் வந்தாங்க.
நீ யாரு எங்கிருந்து வர நேத்து எங்க தங்கி இருந்த என்ன பண்ண ஏன் காலையில்
சீக்கிரம் கிளம்புன இப்படி வரிசையா கேள்வியா கேக்குறாங்க.
நம்ம ஆளுக்கு ஒன்னும் புரியல.
எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொல்றான்.
திரும்பவும் முதல்ல இருந்து கேள்வி.
பயலுக்கு செம்மையா கோவம் வருது.
என்னதான் வேணும் உங்களுக்குன்னு கேட்கிறான்.
நேத்து நீ பேசிகிட்டு இருந்தியே உன் நண்பன் அவனை யாரோ கழுத்தை அறுத்து போட்டு
இருக்காங்க என்று சொல்கிறார்கள்.
இவனுக்கு கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது.
இவன் என் கண்ணு முன்னாடி இவன் சாமான் எல்லாம் எடுத்து சோதனை போட
ஆரம்பிக்கிறாங்க.
இவனோட பைல இருந்து எதையோ எடுத்த அது இரத்தக் கரையோடு இருக்கிற கத்தி.
பயலுக்கு ஆதி அந்தமெல்லாம் நடுங்கி போச்சு.
நாக்கு குளறி உளர ஆரம்பிக்கிறான்.
கத்திய பார்த்த உடனே இவன் கையையும் காலையும் கட்டி நாயை தூக்கி போடுற மாதிரி
போலீஸ் வண்டியில் விட்டு எறிகிறார்கள்.
கர்த்தாவே என்ன காப்பாற்றும்னு சொல்லிக்கிட்டே போய் விழுகிறான்.
வண்டி நேரா பக்கத்து நகரத்தில் இருந்த கோர்ட்டுக்கு போச்சு
விசாரனை
சொந்த ஊருக்கு ஒரு டீம் போய் விசாரிக்குது
அய்யா அவன் கொஞ்சம் கோக்கு மாக்கான ஆளுதா ஆனா அது ரெம்ப முன்னால - இப்போ
திருந்தி நல்லாத்தான் இருக்கான் என்கிறார்கள்.
ஆனாலும் தண்டனை உறுதியாயிட்டு
விஷயம் தெரிந்ததிலிருந்து பதைத்து போயிருந்த அவன் மனைவி, நண்டும் சின்டுமா இருந்த பிள்ளைகளை
கூட்டிக்கிட்டு கைப்புள்ளை ஒன்னை மார்ல அணைச்சிட்டு செயிலுக்கு ஒடிவரா.
வாசல்ல நின்று எம்புருஷன பார்க்கனும்னு கெஞ்சுறா.
டானாக்காரக நாய பத்துற மாறி பத்துறாக ....அனுமதி கிடைக்கலை
எப்படியோ கெஞ்சி கெதறி அனுமதி வாங்கி செயிலுக்குள்ள போய் புருஷன பார்த்தா
கொலைகாரப் பாவிகள், மொள்ளைமாரிகள், அக்சியானோவை ஒரு சங்கிலியை போட்டு கட்டி வச்சிருக்காக
கொடுமையைப் பார்த்த உடனே நினைவிழந்து மயங்கி விழுந்தாள் அவள்.
அந்த அறை முழுக்க இருந்த படுபாதக பயலுவலோட தம்புருஷன பார்த்த அதிர்ச்சில மயங்கிவிழுந்துட்டா. கொஞ்சநேரம் கழிந்த பின்னே அவளுக்கு நினைவு திரும்புச்சு
எதுவும் புரியாம அழுது தேம்பி நின்ன தன்னோட குழந்தைகளை ஒன்னு சேர்த்துகிட்டு
மெல்ல அவன் கிட்ட போனா
என்னையா ஆச்சுன்னு கேட்க நம்ம பய ஒன்று விடாம சொல்றான்.
என்னய்யா இப்படி? என்ன செய்வது என்று புலம்புறா
நம் ஜார் மஹாராஜவிற்கு மனு போடுவோம்னு சொல்றான்
ஏற்கனவே போட்டுட்டேன் மனு தள்ளுபடியாயிருச்சின்றா அவ.
திகைச்சு போறான் அவன்
ஒரு குத்தமும் செய்யாத நமக்கு ஏன்டா இந்த நிலைமைனு தவிச்சுப் போறான்.
இரண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு சத்த நேரம் அமைதியாக நிக்காக.
இரண்டு பேருக்கும் நடுவுல இருக்க கம்பி வழியா தன் புருஷனோட தலைமுடியை
கோதிவிடுறா,
அப்படியே மெல்ல சன்மான குரல்ல ஏய்யா இப்படி செஞ்சன்னு கேட்கிறா
அவனுக்கு ஈரக்குலையே ஆடிப்போச்சு, அடிப்பாதகத்தி நீயே என்னை நம்பலயான்னு வெறுத்துப்போய் பாக்கிறான்
வெடுக்கினு தலையை வெலக்கிட்டு பார்க்கிறான்
அவ புள்ளைகளோட மெல்ல வெளியில போறா.
யாருமே என்னை நம்பாம இருக்கலாம் ஆனா கடவுளுக்கு தெரியும், இனி மனு அவருக்கு மட்டும்தான் போடனும்னு
உறுதியா முடிவெடுக்கிறான்.
தீர்ப்பு வருது
ஊர் பாக்க கட்டி வச்சு சவுக்கால அடிச்சு சைபீரிய பாலைவனத்துக்கு அனுப்புங்க
என்கிறார் நீதிபதி.
ஒரு பொது எடத்தில கையையும் காலையும் கட்டி நிற்க வைத்துவிட்டு சவுக்கில
முடிச்ச போட்டு சும்மா விளாசு விளாசுன்னு விளாசுறாக.
மேல் தோலல்லாம் பிஞ்சு ரத்தம் ஊத்தி மயக்கமாயிடுறான்.
அவன் காயமெல்லாம் ஆறி குணமாகிற வரைக்கும் வைத்தியம் நடக்கு.
எல்லா காயமும் ஆறின பொறவு . பொய்ட்டு வாப்பா சைபீரியாக்குன்னு அனுப்புறாக.
சைபீரியா குலை நடுங்கவைக்கும் தண்டனைப் பகுதி.
ஆயிரம் பேர அனுப்பினா அஞ்சு பேர் பொழச்சா பெரிது.
அங்கே ஒரு பெரிய மதில் சுவருக்குள்ள ஏகப்பட்ட கூடாரங்கள், அது தான் ஜெயில்.
நொந்து வந்த நம்ப ஆளு அவனுக்கு சொல்ற வேலையெல்லாம் செய்றான்.
எந்த வம்பு தும்பும் இல்லை.
எல்லோருக்கும் பிடிச்ச மனுசனா மாறிப்போனான்.
வருஷம் ஓடிச்சி
25 வருடங்கள்
ஜெயில்ல பூட்ஸ் தைக்க கத்துகிட்டான், அதை வித்து வந்த காசில் புனிதர்களின் வாழ்க்கைனு ஒரு புத்தகத்த வாங்கிப் படிக்க
ஆரம்பிச்சான்.
ராப்பகலா அந்த புத்தகத்தை திரும்ப திரும்ப படிச்சான். கொஞ்சூண்டு வெளிச்சம்
இருந்தாப்போதும் அந்த புத்தகத்தை திறந்து படிக்க ஆரம்பித்துவிடுவான்.
ஜெயில்ல எல்லாரும் அவனை தாத்தான்னு கூப்பிட ஆரம்பிச்சாக.
அவனோட வேதன அவனுக்கு சீக்ரமாகவே வயோதிகத்தை கொண்டுவந்தது.
அவன் அழகு இளமை யௌவனமெல்லாம் கரஞ்சு காணமல் போச்சு.
முடியெல்லாம் நரைச்சு, கூண் விழுந்து
மெல்ல நடந்துகிட்டு திரிஞ்சான் அவன்.
சக கைதிகளுக்குள்ள ஏதாவது பிரச்சனைனா பைசல் பண்னுவது தாத்தாதான்
வார்டன் கிட்ட ஏதாவது கோரிக்கை வைக்கனுமா தாத்தா மூலமாத்தான் வைக்கனும்
ஏன்னா ஜெயில் அதிகாரிகளுக்கும் தாத்தாவ ரொம்ப பிடிக்கும்.
எல்லாத்தையும் இழந்தாலும் அவனிடம் மாறாம இருந்த ஒரு விஷயம் அவன் குரல்.
சர்ச் காயிர் குருப்ல அய்யாதான் மெயின்.நல்லா இனிமையா பாடுவான்.
தொடர்ந்த அதிர்ச்சி, செய்யாத
குத்தத்துக்கு சவுக்கடி, சைபீரியா
ஜெயில்னு கொடூரமான அனுபவங்களால நம்ம ஆளு மன உளச்சலுக்கு ஆளாயி பொசுக்குன்னு
கெழவனாயிட்டான்.
நாப்பது வயசிலேயே தொன்னூறு வயசு கிழவனாயிட்டான்
இவ்வளவுக்கு அப்புறமும் அவன் கடவுள்கிட்டே வேண்டுறத மட்டும் நிறுத்தல.
ஒரு ஞாயிறு விடாம சர்ச்சுக்கு போவான், இனிய குரல்ல போற்றி பாடுவான்.
இந்த நிலைமையில ஒரு புது செட்டு கைதிகள் வந்தாங்க.
ஜெயிலுக்கு புதுசா வர கைதிகள வரவேற்க ஒரு வழக்கம் இருந்தது.
சாயங்காலம் பெரிய தீ மூட்டி அதை சுத்தி உட்கார்ந்து அறிமுகம் நடக்கும்.
யாரு யாரு எந்த ஊரு, என்ன சம்பவம்னு
பேசிக்குவாக.
புதுசா வந்த கோஷ்டியில் நல்லா ஒங்கு தாங்கா ஒருத்தன் இருக்கான்.
ஜெயில் என்னமோ ஏதோ அவன் வீட்டு பண்ணைங்கிற மாதிரி நடந்துக்கிறான்.
கொஞ்சம் கூட வருத்தமோ, கூச்சமோ, சங்கடமோ இல்லை.
டூர் வந்த பக்கிமாரி சத்தம் போட்டு சிரிக்கிறதும், எந்த ஜெயிலும் என்னை ரெம்ப நாளுக்கு அடைச்சு வைக்க
முடியாதுன்னு எக்காளம் வேற.
யாரு நீ எந்த ஊருன்னா
மேக்கர் விளாடிமிர் கிராமத்திலிருந்து வரேன், நியாயமா ரெம்ப முன்னாலேயே இங்கே வந்துக்கனும், லேட்டா வந்துட்டேன், ஆனா சீக்கிரம் கிளம்பிருவேன்.
நம்ம கிழவன் மெல்ல நிமிந்து பாத்து ஆமா விளாடிமிர் கிரமம்னா சொன்ன? அங்கே அக்ஸியானோவ் குடும்பத்தை தெரியுமா?
என்று கேட்க
கெழவன் அக்ஸியானவ் குடும்பத்தை தெரியுமா ன்னு கேட்டவுடன் சவுடால் பார்ட்டி ஒரு நிமிசம் ஆடிப்போய்டான்
என்ன பெரிசு கோடீஸ்வர குடும்பத்தை பத்தி கேக்குற, அவனுக அந்த ஊர்ல பெரிய புள்ளிங்க - என்று சொல்லிவிட்டு அதுல நம்ப முடியாத விஷயம் என்னன்னா அந்த பசங்களோட அப்பா ஒரு கொலைகாரனாம் - இங்கதான் சைபீரியாவுல இருக்கானாம் என்று சொல்லிவிட்டு கெக்க கெக்கன்னு சிரிக்கிறான்.
இதைக் கேட்டவுடன் மெல்ல எழுந்து தன்னோட கூடாரத்துக்கு போகப்போறான் கிழவன்.
ஏய் பெரிசு எங்க போறன்னு கேட்கிறான், ஆனா அங்கன இருந்த மத்தவுக யோவ் தாத்தாவ விடுப்பா அவரே செய்யாத கொலைக்கு தண்டண அனுபவச்சிட்டு இருக்காருன்னு சொன்னதுதான் தாமதம்.
தன்னோட முழங்காலில் கையால தட்டி என்ன ஆச்சர்யம் நா உங்கள திருப்பி பார்ப்பேன்னு நினைத்தலன்னு சொல்லிட்டு சிரிச்சிட்டே இருக்கான்.
கெழவனுக்கு ஒரே குழப்பம், யப்பா நீ யாரு? முன்னாடி எப்ப பார்த்திருக்கோம்னு கேட்க அதுக்கும் பதில் சொல்லாம என்ன வாழ்க்கைடா இது! நா ஒன்னை சந்திச்சிட்டேன்னு! நா ஒன்னை சந்திச்சிட்டேன்னு பித்து பிடிச்சமாரி சிரிக்கிறான்.
கெழவனுக்கு ஒன்றும் புரியல மனசுல ஓரத்தில் ஒரு நப்பாசை - இவனுக்கு நம்மளை பற்றி ஏதோ தெரியுது- ஒருவேளை கொலைகாரன் யாருன்னு இவனுக்கு தெரியலாம்- நாளைக்கு கேட்போம்னு நினைச்ச வாக்குல தூங்கிப் போறான்.
மறுநாள் புது பார்ட்டிய புடிச்சு அய்யா ராசா உண்மையான கொலைகாரன உனக்கு தெரியுமான்னு கேட்கிறான்.
கொஞ்சம் மழுப்பலா பேசுறான் அவன்.
கெழவன் திரும்ப திரும்ப கேட்க ஒரு கட்டத்தில செம காண்டுல கத்துறான் உன் தலைக்கு வச்சு தூங்கின பையில் கத்தி இருந்தா நீதானே கொலைகாரன்னு சொல்லிட்டு நக்கலா சிரிக்கிறான்.
பளிச்சுனு தெரிஞ்சு போச்சு
கொலைகாரனே அவன்தான்
சவுடால் பார்ட்டி குற்றவாளிய பற்றி ஏதும் துப்பு தருவான்னு பார்த்தா அவன்தான்
கொலைகாரன்னு தெரிஞ்சுகிட்ட அதிர்ச்சியில் அப்படியே மௌனமா தன்னுடைய கூடாரத்திற்கு
போறான்.
ஏன் கர்த்தாவே ஏன்னு புலம்புறான். உடம்பெல்லாம் ஆத்திரத்தில் நடுங்குது,
உடம்பு முழுதும் சீமண்னைய ஊத்தி பத்த வச்சாப்ல
திகு திகுன்னு எரியுது.
அவன் வாழ்கையை அழிச்சவன் கண்ணு முன்னால
மகிழ்ச்சியா இருக்கான்- ஒரு பாவமும் அறியாத இவன் செத்துட்டு இருக்கான்.
அப்படியே கண்டம் துண்டமா அவன வெட்டுனாத்தான் என்னன்னு தோணுது.
உணர்ச்சி கொந்தளிப்பில் என்ன செய்றதுன்னு தெரியாம மீண்டும் பிரார்த்தனை பண்ண
ஆரம்பிக்கிறான்.
கர்த்தாவே எனக்கு புரியல - என்ன பண்ணட்டும்னு அவரிட்டையே கேட்கிறான்- பாவம்
கர்த்தர் இவன் குரல மட்டும் மியூட்ல போட்டுடாப்ல போல.
இந்த அதிர்ச்சில இவன் உடல்நிலை இன்னும் மோசமாகுது.
ஒரு நாள் இரவு தூக்கம் வராம கூடராத்தில இருந்து வெளில வந்து நடந்துகிட்டு
இருக்கான்.
ஏதோ சத்தம் கேட்குது
ஒரு கூடாரத்திலிருந்து சின்ன மண்ணுருண்டை உருண்டு வருது.
என்னடான்னு குழப்பமா பார்த்தா உள்ள இருந்து திருட்டுத்தனமாக வெளியில் வரான்
மேக்கர்.
கிழவன அங்கன அந்த நேரத்தில எதிர்பார்க்கல
அவன்.
அவனும் பேயடிச்ச மாரி நிக்கான்.
ஆனா சட்டுனு சுதாரிச்சுகிட்டு, யேய் கிழவா
சுரங்கம் தோண்டிட்டு இருக்கம், தோண்டுற மண்னை
பூட்ஸ் குள்ள வச்சிருந்து மறுநாள் காலையில் கிரவுண்டுல உதறிவிட்டிருவோம். இன்னும்
கொஞ்ச நாள்ள சுரங்கம் ரெடியாயிரும், நீயும் வர்ரதுண்னா வா, இல்ல மூடிட்டு
இரு. யாருகிட்டையாது போட்டுக்குடுக்கணும்னு நினைச்ச அறுத்துப் போட்டுறுவேன்
என்கிறான்.
அதுக்கு கெழவன் அமைதியா " நீ என்னைக் கொண்ணு 25 வருஷமாச்சுன்னு " சொல்லிட்டு நடந்து போயிடுறான்.
மறுநாள் பரபரப்பா விடியிது, யாரோ சுரங்கம்
வெட்டீருக்கானுக, ஜெயிலர் கோவமா
இருக்கார்னு சொல்றாங்க.
ஜெயில்ல எல்லா அல்லோலகல்லோலமா இருக்கு
சினங்கொண்ட சிறுத்தை மாதிரி ஜெயிலர், அதை விட ருத்திரமா வார்டன்கள்.
ரோல் கால்
ஜெயிலர் நேரே ஒரு கேள்விதான்
"சுரங்கம் வெட்டுனவன் எவம்ல?"
எல்லோருக்கும் பதில் தெரியும், ஆனா ஒரு புள்ள
வாயத் தொறக்கல.
பாதி பேருக்கு இரக்கம் ஆயிரம்தான் இருந்தாலும் மேக்கரும் நம்மள்ள ஒருத்தன்-
சொன்னம்னா சவுக்குல முடிச்ச போட்டு விளாசு விளாசுன்னு விளாசுவாங்களேன்னு - இரக்கம்
மீதிபேர் ஆத்தி நம்ம சொல்லி இந்தப்பயல புடிச்சு விளாசுனா என்ன ஆகும். நமக்கு
நல்ல நேரம் இருந்தா சனியம் புடிச்சவன் செத்துப்போவான். ஒரு வேள பொழச்சுக்கிட்டான்னா - நம்ம கதி அதோகதி
- அறுத்துல போட்டுருவான்னு பயத்தில் சொல்லல.
இப்படியாப்பட்ட மயான அமைதியில் ஜெயிலர் தன்னோட கடைசி அஸ்திரத்தை இறக்குனார்
நம்ம பெரிசு எங்க?
கொஞ்சம் முன்னால் வாங்க.
அஸ்கியானாவ் மெல்ல நடந்து கூட்டத்திற்கு முன்னால் வந்தான். அவன் மனசுல ஒரே
கேள்வி- ராத்திரி முழுக்க பிரார்த்தனை பண்ணியும் கர்த்தர் ஏதும் சொல்லலை - என்ன
நடக்குதுன்னு புரியலைனு கொழப்பத்தோடு மெல்ல முன்னாடி வந்து நின்னான்.
சொல்லு பெரிசு "யார் பார்த்த வேலை இது?"
மெல்ல நிமிர்ந்து பார்த்த பெரியவர் சொல்றார் . புரியல
ஜெயிலருக்கு பெரிசின் பதில் சரியா கேட்கலை - என்ன சொல்ற பெரிசு"
கடவுள் என்ன நினைக்கிறார் என்ன பண்றார்னு எனக்கு புரியலன்னு சொல்றார்
பெரியவர்.
உண்மையை தெரிந்துகொள்ள இருந்த கடைசி வாய்ப்பும் கரைஞ்சு போச்சுன்னு ஜெயிலர்
உணர்ந்துகிறார்.
இன்னொரு தடவ இப்பிடி ஏதாவது நடந்தா நடக்குறதே வேற ஜாக்கிறதன்னு சொல்லிட்டு
விருவிருன்னு கிளம்பி போயிடுறார்.
அன்னைக்கு ராத்திரி கிழவன் அசந்து தூங்கிட்டு இருக்காப்ல. சரசரன்னு ஏதோ
சத்தம். என்னடான்னு பார்த்தா மேக்கர் நைசா வந்து பெரிசின் தலைமாட்டுல உட்கார்ந்து
வெறிச்சுப் பார்த்துட்டு இருக்கான்.
ஏன்யா என்னை காட்டிக்கொடுக்கலன்னு கேட்கிறான்
கடவுள் என்ன சொல்றார்னு எனக்கு புரியல - குற்றவாளி உன்னை வெளியில் விட்டுட்டு நீ செஞ்ச
குற்றத்திற்கு என்னய 25 வருஷமா உள்ள
வச்சுட்டாரு, என் புள்ளங்க,
பொண்டாட்டி, பணங்காசு, எல்லாம் போச்சு,
ஒரு வேள கடவுள் உன்னைவிட நூறு மடங்கு
மோசமாவைன்னு நான்னு நினைப்பார் போல - அதான் எனக்கு இந்த தண்டனை.
அன்னைக்கு நைட்டு உண்ணயையும் கொல்றதுதான் என் திட்டம், உன் பக்கத்து ரூம்ல இருந்தவன அறுத்துப்போட்டு அவனோட
பணத்தையெல்லாம் எடுத்துகிட்டு உன் ரூமுக்கு வந்தேன். ஆனா யாரோ வர சத்தம் கேட்டது, கத்திய நீ தலைக்கு வச்சு தூங்கின பையில வச்சுட்டு எஸ் ஆயிட்டேன்றான்.
கிழவன் ஏதும் பேசாமல் அவனையே பார்த்திட்டு இருக்கான்
அவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கிறான், நான்தான் கொலைகாரன்னு நாளைக்கு ஜெயிலர்ட்ட செல்லப்போறேன்றான்
தேவையில்லை கடவுளுக்கு விருப்பம் இருந்தா என்னைய வெளிய விட்டுருப்பார் - நீ போ
என்கிறார் கிழவன்.
அழுதுகொண்டே வெளியில் போய்விட்டான் மேக்கர்.
மறுநாள் மேக்கர் ஜெயிலரிடம் சொன்ன ஒப்புதல் வாக்குமூலம் எல்லாராலையும்
பரபரப்பா பேசப்பட்டது.
இந்த விஷயத்தை ஜெயிலர் மேல அனுப்பி உரிய அதிகாரிகள் மூலம் கிழவரை விடுவிக்க
உத்தரவு வந்தது.
ஆன உத்தரவு சைபீரியாவுக்கு வந்தபோது பெரிசு உயிரோட இல்லை.
-----
காந்தியாருக்கு தமிழ், திருக்குறள்
மற்றும் ஆசிரம வாழ்க்கையை அறிமுகம் செய்த லியோ டால்ஸ்டாய் எழுதிய கதை
தொடர்ந்து விவாதிப்போம்.
Comments
Post a Comment
வருக வருக